‘கலகக்காரர் தோழர் பெரியார்’ எனும் நாடகத்தை உருவாக்கி, பெரியாருக்குச் சிவப்புச் சட்டையை அணிவித்து பல தரப்பினருக்கும் அதிர் வலைகளை ஏற்படுத்தி, நாடகத்தை இயக்கியும், பெரியாராகவே நடித்தும் பெரும் வரவேற்பைப் பெற்றவர் இவர். ‘திராவிட இயக்கமும் கலைத் துறையும்’ என்ற ஆய்வு நூலை எழுதியவர். 

தேசிய அளவில் இவரது நாடகங்கள், பல விழாக்களில் பங்கு பெற்றுப் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று, தன் நடிப்பால் அவற்றுக்கு மெருகூட்டியவர்.

பொதுவுடைமைப் பேராசான் காரல் மார்க்ஸ், சமூக விஞ்ஞானிகளான தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரைத் தனது வழிகாட்டிகளாகக் கொண்டு பாடாற்றி வரும் இவர், நடித்து அண்மையில் வெளி வந்துள்ள ‘கே.டி. (எ) கருப்புதுரை’ எனும் திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்று, திரையுலகில் கடந்தாண்டு வெளி வந்த சிறந்த படங்களில் ஒன்றாக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இன உணர்வாளரான இந்த ‘முதுபெரும் இளைஞர்’ பேராசிரியர், முனைவர் மு. இராமசாமி அவர்களை, ‘நிமிர்வோம்’ இதழுக்காகப் பேட்டி கண்டோம். பேட்டி கண்டவர் தோழர் ‘தடா’ ஒ. சுந்தரம்.

கேள்வி : உங்கள் நாடகக் கலையின் தொடர் பயணம் பற்றி கூறுங்கள்.

பதில் :  எனது முதல் நாடகமான, ‘பண்டிதர் மூவரும் மாண்டதொரு சிங்கமும்’ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜி. சங்கரப்பிள்ளை எழுதி, மலையாளத்திலிருந்து இராமா னுஜம், தமிழுக்கு மொழி பெயர்த்துத் தந்த, ‘ஆஸ்தான மூடர்கள்’ எனும் நாடகத்தை இயக்கி, நடித்தோம். அதுவும் வெற்றி பெற்றது. பிறகு, ‘நல் வாழ்வை நோக்கிப் பீ....டு நடைபோடுகிறது நாடு’ எனும் நாடகத்தைத் தயாரித்தோம்.

இது மௌன மொழி (Mime Play) எனும் முறையில், இசை நாற்காலிப் போட்டி (Musical Chair) பற்றிப் பேசிக் கொண்டிருந்ததை வைத்து சங்கரப் பிள்ளை எழுதியது.

இந்த நாடகக் ‘கரு’ என்பது, வேலை இல்லாத் திண்டாட்டம் நிலவிய சூழலில், அந்த வேலைகள் ஏழைகளுக்குக் கிட்டாது, பணக்காரர்களுக்குத் தான் கிடைக்கிறது என்பதாக வும், எனவே இந்த சமூக அமைப்பு முறையை உடைத்துத் தகர்க்க வேண்டும் என்பதாகவும் அமைத்திருந்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் உற்சாகமடைந்து, ‘விழிகள்’ இதழில் தொடர்ந்து பல நாடகங்களை எழுதினேன். இதில், ‘ஆனை’, ‘வெத்து வேட்டு’ நாடகங்கள் முக்கிய மானவை. ‘வெத்துவேட்டு’ பின்னர் அரங்கேற்றம் செய்யப் பட்டது.

பிறகு, காந்தி கிராமத்தில், டெல்லி தேசிய நாடகப் பள்ளி (National School of Drama) சார்பாக 70 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற (01.11.1978 முதல்) பயிலரங்கில் பங்கேற்றேன். 

அதில் ‘பிணந்தின்னும் சாத்திரங்கள்’ நாடகம் நடத்தப் பட்டு, நான் துரியோதணனாக வேடமிட்டு நடித்தேன். அதோடு, சங்கரப் பிள்ளையின், ‘கிராதம்’ மலையாள நாடகமும் நடைபெற்றது. அதிலும் சிறு வேடம் தாங்கி நடித்தேன்.

இப்படியாக, எனது நாடகப் பயணம் சென்னை, டில்லி எனத் தொடர்ந்தது.

இந்த அனுபவங்களைக் கொண்டு, எனது ‘நிஜ நாடக இயக்கம்’ சார்பாக சில நண்பர்களின் துணையோடு, 1988இல் மதுரையிலே 3 நாட்கள், ‘நாடகக் கலை விழா’ நடத்தி னோம். தொடர்ந்து 90, 92களிலும் இந்த ‘நாடகக் கலை விழா’ நடத்தியபோது பல்வேறு இடங் களில் இருந்தும் நாடகக் குழுக்கள் வருகை தந்து, தங்கள் நாடகங்களைப் போட்டுப் பங்கேற்றுச் சிறப்பித்தன.

கேள்வி : இந்த நாடக விழாக்களில் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் ஏற்பட்டதுண்டா?

பதில் : இனி நாடகமே வேண்டாம் என்ற முடிவுக்கு வரும்படியான ஒரு சம்பவம் 1992இல் நடைபெற்றுவிட்டது. எழுத்தாளர் சாருநிவேதிதாவும்,  அவரது கூட்டாளிகளுமாக அடித்த ‘கூத்து’ அது. ‘Post Modernism’ எனும் பெயரால் 28 ஆண்டுகளுக்கு முன் மேடையேறி நடத்தப்பட்ட அந்த அருவெறுக்கத்தக்க ‘நிகழ்ச்சி’,  அப்போதே பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டு, கண்டிக்கப்பட்டது. திரும்பவும் அது பற்றி பேச வேண்டியதில்லை என நினைக்கிறேன்; மறக்கப்பட வேண்டியது அது. அந்த நேரத்தில் நடந்த பல சம்பவங்கள் என் மன அமைதியைக் குலைத்ததால் நாடகத்திலிருந்தே விலகியிருக்க விரும்பினேன். 

கேள்வி : இந்தச் சூழலிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள்?

பதில் : எனது நாடகப் பயணம் மீண்டும் தொடர, அப்போது காரணமானவர் கோமல் சுவாமிநாதன். அவர் தான் என்னை அணுகி, ‘என்ன இது? இதற்குப் போய் முடங்க லாமா? இராமசாமி என்றாலே எங்களுக்கு நாடகம்தான் நினைவுக்கு வரும். நீங்கள் இப்படி சோர்ந்துவிடக் கூடாது. சென்னையிலே நான் நடத்துகிற சுபமங்களா நாடக விழாவிற்கு  நீங்கள், ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடகத்தைக் கொண்டு வந்து நடத்துகிறீர்கள்’ என அன்புக் கட்டளையிட்டு விட்டுப் போய் விட்டார்.

அதனை மீற இயலாமல், மீண்டும் ‘ஸ்பார்ட்டகஸ்’ நாடகத்தை உருவாக்கினேன்.

இந்த நாடகத்தை 1989 இலேயே, திருச்சியில் நடை பெற்ற ஃபாதல் சர்க்கார் நாடக விழாவில் போட்டிருந்தோம். வங்க மொழியில் ஃபாதல் சர்க்கார் எழுதியிருந்ததை, தோழர் இராஜாராம் மொழி பெயர்த்துத் தந்திருந்தார்.

கோமல் சுவாமிநாதன் நடத்திய நாடக விழாவில், சென்னை கிருஷ்ண கான சபாவின் வெளியிலே மேடை அமைத்து நடத்தினோம். இதிலே சிறப்பு என்னவென்றால், அன்றைக்கு ஃபாதல் சர்க்காரே நேரில் வருகை தந்து, பார்வையிட்டு வாழ்த்திய போது, ‘என்னுடைய இந்த நாடகத்தைப் பலரும் போட்டிருக்கிறார்கள். ஆனால், இது மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. You are an Young and Energetic actor எனக் கூறி என்னைப் பாராட்டினார். 

கேள்வி : உங்கள் நாட கங்களில் எதை நீங்கள் சிறப்பானதாகச் சொல்வீர்கள்?

பதில் : நான் எழுதி, இயக்கி, நடித்த அனைத்து நாடகங்களுமே எனக்கு சிறப் பானவைகள்தான். எனினும் 1984இல் டெல்லியிலுள்ள மைய சங்கீத நாடக அகாடமியில், ‘அன்டிக்னி’ என்ற கிரேக்க நாடகத்தைப் போட்டோம். இது சோஃபோக்ளஸ் (Sophocles) என்பாரால் எழுதப்பட்டது. இந்த நாடகத்தைத் ‘துர்கிர அவலம்’ எனும் பெயரில் எனது இணைவி பேராசிரியர் செண்பகம் தமிழில் மொழி பெயர்த்திருந்தார்கள் என்பது ஒரு சிறப்பு.

இந்த நாடகம் முதலில், பெங்களூரில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டி யில் கலந்து கொண்டு, தேர்வாகி, டெல்லியில் நடைபெற்ற 8 நாள் நாடக விழாவில் முதல் நாடகமாகப் போடப்பட்டது. அப்போது நான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழ் நாடகத் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றிய வேளை அது. டெல்லி நாடக விழாவில் பலரது பாராட்டை யும் இந்த நாடகம் பெற்றது.

கேள்வி : கிரேக்க நாடகங்கள் மீது என்ன ஈர்ப்பு உங்களுக்கு?

பதில் : உலகின் மிகப் பழமையான நாடகக்காரர்கள் கிரேக்கர்களாகத்தான் இருக் கிறார்கள். கி.மு. 450ஆம் ஆண்டுகளிலேயே ஏதன்ஸ், ஸ்பார்ட்டா நகரங்களில் நாடக விழாக்களை நடத்தி, சிறந்த நாடகங்களைத் தேர்வு செய்யும் முறையைக் கொண்டிருந்தார் கள். சோஃபோக்ளஸ், அரிஸ் டோபென்ஸ், ஈஸ்க்கிளியஸ், யூரிபிட்டிஸ் போன்றவர்கள் உலகப் புகழ்பெற்ற நாடகக் காரர்களாகத் தெரிய வந்தது இந்த நாடகப் போட்டிகளின் மூலம்தான். 

கேள்வி : ‘ஆண்டிக்னி’ நாடகக் கதை என்ன? உங்களின் மற்ற நாடகங்களைப் பற்றியும் சொல்லுங்கள்! 

பதில் : இது ஒரு துன்பியல் நாடகம். எதேச்சதிகாரி கிரியான் என்பவனின் தன்னிரக்க சோக முடிவைப் பேசுவதாகும். கிரியானின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடி உயிர் துறந்த பெண்தான் ‘ஆன்டிக்னி’.

வேறு நாடகங்கள் எனப் பார்த்தால், 1995இல் ‘இருள் யுகம்’ எனும் தரம்வீர் பாரதியின் நாடகம். மதுரையில் பெரிய அரங்கு அமைத்து நடத்திய தாகும்.

1998இல், சென்னை மியூசியம் தியேட்டரில், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட நாடகம், ‘கலிலியோ கலிலி’! ஜெர்மனி நாட்டு மார்க்சியவாத சிந்தனை கொண்ட பெர்டோல்ட் பிரக்ட் (Pertolt brecht) என்பாரால் எழுதப்பட்ட நாடகமிது.

நவீன வானியலின் தந்தை எனக் கருதப்படும் கலிலியோ வின் கருத்துகள், கிறித்துவ மதத்திற்கு எதிரானவை என வாடிகன் குற்றம்சாட்டி, தண்டனை விதித்து வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

‘பூமி தான் மையம். சூரியன் சந்திரன் ஆகியவை பூமிக்கு ஒளியூட்டுபவை’ என்பதாகக் கருத்தைச் சொல்ல அவரை வற்புறுத்தியபோது, ‘உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள் கிறேன்; தயவுசெய்து அந்த பூமியைச் சுழல விடுங்கள்’ எனக் குரல் எழுப்பியவர். மத வாதிகளை கண்களைத் திறந்து பார்க்கச் சொல்லி அறிவியல் பூர்வ உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டினார். ஆனால், வாடிகன் மறுத்து விட்டது.

1992இல், கலிலியோவிற்கு கொடுத்த தண்டனைக்காக, 350 ஆண்டுகள் கழித்து வாடிகன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

இதைத்தான், அறிவியலின் முன் மதம் மண்டியிட்டதாக நாடகத்தில் பதிவு செய் திருந்தேன். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்நாடகத்தைப் பல இடங்களில் போட வைத்தது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நாடகமாகும் இது. 

1999இல்‘மேஜிக் இலண்டன்’ குழு சார்பாக, சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் போடப்பட்டது. அதிலே, பெரிய பழுவேட்டரையர் பாத்திரமேற்று நடித்தேன். 

இதுவரை போடப்பட்ட 46 நிகழ்வுகளிலும் நானே பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ளேன். கடல் கடந்து, சிங்கப்பூரிலும் இந்த நாடகம் சிறப்பாகப் போடப்பட்டது.

2001இல் ஈஸ்க் ஐலஸ் (Eschailes) என்பார் எழுதிய கிரேக்க நாடகம், ‘கட்டுண்ட பிரமிதீயஸ்’, இதையும் என் இணைவி பேராசிரியர் செண்பகம் தான் மொழி பெயர்த்துத் தந்தார்கள். மதுரை பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டு, சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

கேள்வி : உங்கள் மனைவிக்கு கிரேக்க மொழி தெரியுமா? உங்கள் திருமண வாழ்க்கை எப்படி அமைந்தது? 

பதில் : எனது இணைவி,  செண்பகம் அவர்கள் முனைவர் பட்ட ஆய்விற்காக எடுத்துக் கொண்ட தலைப்பு, ‘கிரேக்க லிரிக் கவிதைகளும், சங்க இலக்கியக் கவிதைகளும் - ஓர் ஒப்பீடு’ என்பதுதான். 

இதற்காகவே, கிரேக்க மொழியை மதுரை இறையியற் கல்லூரி கிரேக்கப் பேராசிரியரிடம் முறையாகக் கற்றுத்  தேர்ந்தார். மதுரை பாத்திமா கல்லூரிப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். பொதுவுடமை - பெரியாரியல் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ‘தாமரை’, ‘கணையாழி’ இதழ்களில் அவரது கதைகள் வெளி வந்துள்ளன. இலக்கியத் திறனாய்வு விவாதங்களில் ஆர்வமுடன் பங்கேற்று வாதிடுவார். அவரது இந்தப் பண்புதான் எங்களுக்குள் நட்பாகி, காதல் மலர்ந்தது. செண்பகம், என்னைவிட வயதிலும், கலை இலக்கிய ஆற்றலிலும் சிறந்தவராக விளங்கியவர்.

1974ஆம் ஆண்டு, மதுரைப் பல்கலைக்கழகத்தில் அகிலனின் படைப்புகள் பற்றி 4 நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் நான், ‘அகிலனின் வரலாற்று நாவல்களும் அவரின் வாழ்வியல் பார்வையும்’ என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன். அதில், யாழ் பேராசிரியர் கைலாசபதியின் வரலாற்று நாவல்கள் பற்றிய கருத்தினை மேற்கோள் காட்டிப் பேசியதால், கோபம் கொண்ட அகிலன், கைலாசபதியைக் கடுமையாக விமர்சித்தார்.

ஏனெனில், கைலாசபதி, ‘வரலாற்று நாவல்கள் என்பவை மக்களின் வாழ்வியல் போராட்டங்களை மையமாகக் கொண்டிருக்க வேண்டுமேயன்றி, ஒரு மன்னன் வந்தான், சென்றான் என்றெல்லாம் கற்பனையாகப் படைத்திடக் கூடாது’ என்று தெரிவித்த கருத்தை, நான் மேற்கோள் காட்டி, அகிலனின் படைப்புகளை விமர்சித்ததே அவரது கோபத்துக்குக் காரணமாகும்.

‘மதுரைப் பல்கலைக்கழகத்தில் மார்க்சியக் கண்ணாடியா? இதை அனுமதிக்க முடியாது’ என்று ஆவேசப்பட்டார் அகிலன்!

இவருக்கு வக்காலத்து வாங்கிய ‘தீபம்’ நா. பார்த்தசாரதி, ‘இவரைப் போன்றவர்கள் கையில் இலக்கியத்தைக் கொடுத்தால் என்னாகும்? செருப்புக்குத் தக்கபடி காலை வெட்டிக் கொள்கிறவர்கள்’ என்றார்.

இவர்களுக்கு ஆதரவாக வந்த கி.வா. ஜகந்நாதன், ‘குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் என்னாகுமோ, அவ்வாறு இவர்கள் கையில் இலக்கியத்தைக் கொடுத்தால் ஆகி விடும்’ என்று என்னைத் தாக்கியே பேசினார்.

அந்த நேரத்தில் கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த பேராசிரியர் செண்பகம் துணிவாக முன் வந்து, எனக்கு ஆதரவாகப் பேசியது மனதிற்கு இதமாக இருந்தது.

பிறகு, ‘திராவிட மொழியியல் கழக மாநாடு’ மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடந்த போது, நான் ஆண்டிப்பட்டித் தேவராட்டக் கலைக் குழுவை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தினேன். அதைப் பார்த்த செண்பகம், அக்குழுவினரைப் பாராட்டி, சன்மானம்  அளித்து வாழ்த்தினார்.

இப்படித் தொடர்ந்து எங்களுக்குள் ஏற்பட்ட சந்திப்பும், புரிதலும் நிறைவாகித் திருமணத்தில் முடிந்தது (1980). நீரோடை போல் சென்ற எங்கள் மண வாழ்வில், இணைவியாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, 18 ஆண்டுகள் இல்லற வாழ்க்கைக்குப் பிறகு (1998), அவர் மறைய நேரிட்டது.

(சற்றே இறுக்கமாகி அமைதியாகிறார்) தொடர்ந்து... 

“இன்று அவர் இருந்திருந்தால் சிறந்த கலை இலக்கியவாதியாகத் தமிழகத்தில் திகழ்ந்திருப்பார். பன்முக ஆற்றல் வாய்ந்தவர். பிறருக்கு உதவும் குணம் படைத்தவர்.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவும் பொருட்டு, நாங்கள் இணைந்து, ‘தெம்மாங்கு’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். அவர்தான் புரவலர். தேவராட்டம், வில்லுப் பாட்டு, தெருக்கூத்து இப்படியான நிகழ்ச்சிகளை மாதந்தோறும் நடத்தி, அந்தக் கலைஞர்களுக்கு உதவிகளைச் செய்து வந்தார் அவர்.

இணைவியார் செண்பகத்தின் இழப்பு, எனக்கு மட்டுமின்றி கலை இலக்கியத் துறைக்கும் பேரிழப்பு! அவரது நினைவு நாளான மார்ச் 14இல் ஆண்டுதோறும் ஒரு நாடகம், ஒரு நூல் வெளியீடு என தொடர்ந்து நடத்தி வருகிறேன் அவருக்கு நினைவஞ்சலியாக!

கேள்வி : நீங்கள் பல நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்துள்ளீர்கள். இதிலே பல முறை மேடை ஏறிய நாடகமாக, வெகு மக்கள் ஆதரவு பெற்ற நாடகமாக எதைச் சொல்வீர்கள்? 

பதில் : ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் தான் அந்தப் பெருமைக்கு உரியது. 2003ஆம் ஆண்டு நான் எழுதி இயக்கி, நடித்த நாடகம். தமிழ்நாட்டில், ஒரே நாளில் இரண்டு காட்சிகள்  எல்லாம் நடத்தப்பட்ட நாடகம். 48 மேடைகளில் இந்த நாடகம் போடப்பட்டு, மக்களின் பேராதரவைப் பெற்றதாகும்.

கேள்வி : பெரியாரைப் பற்றி நாடகம் எழுதிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? 

பதில் : நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஒரு முறை அளித்த பேட்டியில், பல வேடங்களில் இதுவரை நடித்தும், இன்னும் பெரியார் வேடமிட்டு நடிக்கவில்லையே என்ற குறை இருப்பதாகத் தெரிவித்து இருந்தார். அது என் மனதில் நெருடலாகவே இருந்து வந்தது; நாம்கூட இன்னும் நடிக்க வில்லையே என்ற எண்ணத்தில்!

அதோடு, 1999களில் என்று நினைக்கிறேன்.  தோழர் இரவிக்குமார், அவரது இயக்க ஏடான ‘தாய் மண்ணில்’ பெரியார் குறித்து எழுதி வந்த கடுமையான விமர்சனங்களை என்னால் ஏற்க முடியவில்லை. மன வலியைத் தந்தது.

பெரியாரின் பேச்சுகள், எழுத்துகளில் இருந்து ஆங்காங்கு கருத்துகளை எடுத்து வைத்துக் கொண்டு, அதன் முழுப் பரிமாணத்தையும் கணக்கில் எடுக்காமல் செய்யப்பட்ட தவறான விமர்சனங்கள் அவை. 

அவர்களது பெரியார் குறித்த எதிர் விமர்சனங்கள் வெளி வந்த போது அம்பேத்கரின் நூற்றாண்டு நிகழ்வுகள் தொடங்கிய நேரம் அது என நினைக்கிறேன்.

தந்தை பெரியார் தமிழ் நாட்டில் பெரும்வீச்சாக இருந்ததால் அதனை மட்டுப்படுத்தி, அண்ணல் அம்பேத்கரை நோக்கி பார்வையைத் திருப்ப வேண்டும் என்ற முயற்சியாக இருக்கலாம் என்பதே அப்போது நான் புரிந்து கொண்டதாக இருந்தது. எனது புரிதல் தவறாக இருக்கலாம்; ஆனால், பெரியார்  தவறாக விமர்சிக்கப் பட்டார் என்பது வரலாறு.

ஆனால், இப்போது பெரியாரை முழுவதுமாகப் புரிந்து கொண்டு எல்லோரும் இணங்கி ஏற்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; வரவேற்கக் கூடியது.

சமூகத்தை நேசித்தவர்கள் என்பதிலே பெரியார், அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோர் ஒரே நேர்க்கோட்டில் வரக் கூடியவர்கள்.

மார்க்ஸ், ‘உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்!’ என்றார். ‘சூத்திரப் பட்டத்தை அழிப்பது தான் என் முதல்  வேலை’ என்று பெரியாரும், ‘சாதியை ஒழிப்போம்’ என அம்பேத்கரும் முழங்கியவர்கள்.

இந்தச் சூழலிலே, நான் பெரியாரைப் படித்தபோது, எந்தவித சுயநலமும் இல்லாமல், பெரியாரே வெளியிட்டுள்ள தன்னைப் பற்றிய பிரகடனத்திலே, “திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயங்களுக்கு இணையாக மேன்மையாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு செய்து வருகிறேன். இதைச் செய்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறதோ இல்லையோ, வேறு எவரும் முன் வராத காரணத்தால், அந்தப் பணியை என் மேற்போட்டுக் கொண்டு செய்து வருகிறேன்’ என்பதோடு, இதைத் தவிர வேறு பற்று எனக்கு எதுவுமில்லை” என்று அறிவித்திருப்பது எவ்வளவு பெரிய சமூகப் பற்றாளர் என்பதை எனக்கு உணர்த்தியது.

மேலும், ‘பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நான் பின்பற்றுவதால், பொது வாழ்வில் ஈடுபடும் ஒருவனுக்கு இது போதும்’ என்கிறார் பெரியார்.

இப்படிப் பெரியாரை உணர்ந்து கொண்டபோது, நாடகமாக இதனைப் போடுவது என்று தீர்மானித்தேன். இந்தக் கருத்தை நண்பர் ஒருவரிடம் சொன்னதும், அவர், தானே எழுதுவதாகக் கூறி, எழுதித் தந்தார். ஆனால், அதில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. இப்படியே ஓராண்டு கடந்து விட்டது.

பிறகு, என்னைச் சந்திக்க தோழர்கள் மருதையனும், கோவனும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு வந்த போது, எனது பெரியார் நாடகத் திட்டம் பற்றி தெரிவித்தேன். உடனே தோழர் கோவன், தனது பையிலிருந்து தோழர் ஏ.எஸ்.கே. ஐயங்கார் எழுதிய பெரியார் பற்றிய சிறிய வெளியீடு ஒன்றை எனக்குக் கொடுத்து, இதைப் படித்துப் பாருங்கள் என்றார்.

அதைப் படித்ததும், பெரியாரைப் புதிய கோணத்தில், ஏ.எஸ்.கே. வெளிப்படுத்தியிருந்தது அறிந்தேன்.  அந்த நிமிடமே எனக்குள் பெரியார், கருப்புச் சட்டையோடு, சிவப்புச் சட்டைக்காரராக, பிரம்மாண்டமாக உருவெடுத்து நின்றார். இப்படித்தான், பெரியாருக்கு சிவப்புச் சட்டை அணிவித்து, அவரைக் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ ஆக்கினேன்.

கேள்வி : நாடகத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

பதில் : பெரியாரை கருப்புச் சட்டையிலேயே பார்த்திருந்த தோழர்களுக்கு, அவருக்கு சிவப்புச் சட்டை அணிவித்தது முதலில் மிரட்சியாகவும், வியப்பாகவும் இருந்தது.

கடந்த 2003 மார்ச்சு 14இல் இணைவியார் நினைவுநாளில் மதுரை யாதவர் கல்லூரியில் அரங்கேற்றம் செய்தோம். அதே ஆண்டு, ஆகஸ்டு 8இல் சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சி.பி.அய். (எம்) அமைப்பின் சார்பாக நடத்தியபோது, அரங்கம் நிறைந்து வழிந்தது மக்கள் கூட்டம். ஏராளமான பத்திரிகைகள், சரியாகச் சொல்வதானால், உயர்சாதி மனோபாவம் கொண்ட பத்திரிக்கைகள் ஒன்றிரண்டைத் தவிர 39 இதழ்கள், கலகக்காரர் தோழர் பெரியார் நாடகத்தை வரவேற்றுப் பாராட்டி விமர்சனங்களை வெளியிட்டன.

அந்த நேரத்தில், அரசு ஊழியர்களை ‘டெஸ்மா’ சட்டத்தில் தமிழக அரசு வேலை நீக்கம் செய்திருந்ததால், அவர்களுக்கு நிதி உதவி செய்வதற்காக இந்த நாடகத்தை, தற்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒருங்கிணைப்பில், மதுரை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, காரைக்குடி என பல்வேறு இடங்களில் நடத்தினோம்.

சென்னை, காமராசர் அரங்கில் ஒன்றுபட்டிருந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக நடத்தப்பட்டதுடன், அதற்கான விளம்பர துண்டறிக்கையிலேயே எந்தெந்த பத்திரிகைகள் எப்படிப் பாராட்டியுள்ளன என்பதை வெளியிட்டிருந்தனர். மேலும் கோவையிலும்  சேலம், மேட்டூர்  போன்ற இடங்களில் ஒன்றுபட்ட பெரியார் தி.க. தோழர்களோடு, சிபிஅய்(எம்) தோழர்களும், காரைக்குடி போன்ற இடங்களில் சிபிஅய் உள்ளிட்ட தோழர்களும் இணைந்து பெரியார் நாடகத்தை நடத்தியது சிறப்பாக இருந்தது.

மயிலாடுதுறையில் நாடகம் முடியும் வரை காத்திருந்து, எங்களைப் பாராட்டிய பக்தர் ஒருவர், “பெரியாரை பார்ப்பன எதிர்ப்பாளர், கடவுள் மறுப்பாளர் என மட்டுமே அறிந்திருந்த எனக்கு, அவரது சமூக நீதி, சமத்துவ கொள்கைகளை அறிவதற்கு இந்த நாடகம் அருமையான வாய்ப்பை வழங்கியது” என்றார். அந்தளவிற்கு மக்கள் ஆதரவைப் பெற்றது.

பிறகு நாடகத்தை கேமிராமேன் எம்.எம். ரங்கசாமியைக் கொண்டு, பல்கலைக்கழக அரங்கில் முழு நாடகத்தை படமாக எடுத்து விட்டோம். இந்தப் படத் தட்டுகளை (சி.டி.) சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் வைத்து மாநிலங்களவை உறுப்பினராக அப்போது இருந்த கனிமொழி வெளியிட, பரிதி இளம்வழுதி பெற்றுக் கொண்டார். தோழர் கொளத்தூர் மணி, 300 சி.டி.களைப் பெற்று, மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளிக்காக வழங்கினார்கள். இப்படி பெரும் வெற்றி பெற்றது இந்த நாடகம்.

கேள்வி : இந்த நாடகம் ஒரு பிரச்சார நாடகமாக கருதப் பட்டதா?  

பதில் : இருக்கட்டுமே, அதில் என்ன தவறு? இதற்கு நாடகத்திலேயே பதில் சொல்லியிருக்கிறேன். “95 வயது வரைக்கும் தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டு, சுற்றிச் சூழன்று வந்த தேனீ பெரியார்! அவரைப் பற்றி பேசுவது உங்களுக்குப் பிரச்சாரமாக இருந்தால், இது பிரச்சாரம் தான்” என்று நாடகத்தில் நான் சொன்னவுடன் அரங்கில் பலத்த கை தட்டி மக்கள் வரவேற்றார்கள். பெரியார் பிரச்சாரம் செய்து சமூக மாற்றத்திற்கு உழைத்தார். அவரைப் பற்றிப் பேசி, அவரது சமூக நீதி - சாதி ஒழிப்புக் கொள்கைக்கு நாம் துணையிருப்போமே!

கேள்வி : இதுவரை எவ்வளவு நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்திருப்பீர்கள்? நாடகக் கலை இலக்கியம் தொடர்பாக நூல்கள் எழுதியிருக்கிறீர்களா? 

பதில் : ஏறத்தாழ 40 நாடகங்கள் இயக்கி, எழுதி நடித்துள்ளேன். 37 நூல்கள் எழுதியுள்ளேன். அவையாவும் நாடகம், திரைப்படம் தொடர் பானவை. ‘தமிழ் நாடகம் நேற்று இன்று நாளை’, ‘நாடகம்-இன்னுமே பேச இருக்கிறது’, ‘திருநெல்வேலியில் திரௌபதி மானபங்கப்படுத்தப்பட்டபோது, ‘திரை வளர்த்த நான் - நான் வளர்க்கும் திரை’ எனும் திரைப்பட விமர்சனங்கள் பற்றிய நூல் என்னுடைய திரைப்பட - நாடக நடிப்பு தொடர்பான செய்திகள் அடங்கியது. ‘திராவிட இயக்கமும் கலைத் துறையும் - நாடகத் துறை எதிர்கொண்ட கலகங்கள்’ என்ற நூல் ‘குடிஅரசு’ ஏட்டுச் செய்திகளை ஆய்வு செய்து எழுதியுள்ளேன். 

பிறகு, பல்கலைக்கழக மானியத் திட்டத்தின் கீழ் மூன்றாண்டு செயல் திட்டமாக, ‘நாடகக் கலைச் சொற்களஞ்சிய அகராதி’ தொகுத்து எழுதியுள்ளேன். அது நிறைவடைந்து பல்கலைக் கழகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அது ‘அ’ முதல் ‘ன’ வரையான வரிசை எழுத்துக்களில் உள்ள நாடகச் சொற்கள் தொடர்பான வேர்ச் சொல் அகராதி எனலாம். இதை பல சிறு நூல்களாக்கித் தான் வெளியிட முடியும். அந்த முயற்சி செய்யப்படவுள்ளது.

கேள்வி : தங்கள் இணைவியார் செண்பகம் நினைவு நாளில் ஒரு நாடகம் - நூல் வெளியீடு செய்து வரும் தாங்கள் இந்த ஆண்டு என்ன செய்யவிருக்கிறீர்கள்? 

பதில் : எதிர்வரும் மார்ச் 14இல் ஒரு நூல் வெளியிடுகிறேன். அது, ‘1954 இராதா நாடகத் தடையும் - இராதா நாடக மசோதாவும்’ எனும் பெயரில் எழுதி வருகிறேன். இந்த நூலில் எம்.ஆர். இராதா நாடகத்திற்கு அரசு தடை விதித்தது. அதை எதிர்த்து நடந்த வழக்கு, மதுரையில் இராதா நாடகத்தில் கலவரம் போன்ற செய்திகளை ஆவணங்களாகத் தொகுத்துள்ளேன். அதோடு, ‘வகுப்(பறை)’ என்று ஒரு நாடகம் - இது கல்வி கற்கும் வகுப்பறை என்பது கலகலப்பாக, மாணவர்களோடு ஆசிரியர்கள் கலந்துரையாடி, இறுக்கமின்றிக் கல்வி கற்பிக்கப் பட வேண்டும் என்பதைக் ‘கரு’வாகக் கொண்டது.

கேள்வி : உங்கள் திரைப்பட அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்!  

பதில் : இசையமைப்பாளர் எம்.டி. இராமநாதனின் இசையை மையமாக வைத்து எடுத்த படம் - ‘பித்ருச்சாயா’, ‘மூதாதையர்களின் நிழல்’ என்று பொருள். இதில் எனது, ‘நிஜ நாடகக் குழுக்கார னாகவே’ நடித்துள்ளேன். நாசரின் ‘தேவதை’, ‘மாயன்’, ‘கிடாரி’, ‘பிதாமகன்’, ‘ஜோக்கர்’ அண்மையில் கே.டி. (எ) கருப்புதுரை, ஏகாளி, சீமராஜா இப்படி 20க்கும் மேற்பட்ட படங்கள் நடித்தாச்சு. உடல்நிலை காரணமாக நடிக்கப் போவதில் ஆர்வமில்லை. ஆனால், ‘நாடக நடிகன்’ என்பது தான் எனக்குப் பெருமை.

கேள்வி: எதிர்காலத் திட்டம்...! 

பதில் : நாடகப் பயிற்சிப் பள்ளி உருவாக்கிப் பள்ளி இடைநிற்றல் சிறார்களுக்கான விடுதி கட்டி, பல நாடகக் கலை இலக்கியவாதிகளை உருவாக்க வேண்டும் என்பதே என் நோக்கமாகும்!   

நேர்காணல் : ‘தடா’ ஒ. சுந்தரம்

நிறைவு

Pin It