school educationஜூலை 29 அன்று மத்திய அமைச்சரவை புதியகல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கல்விக் குழு அனைத்து மாநில அரசுகளை கலந்து அவர்களின் ஆலோசனை, பரிந்துரை, பிரதிநிதிகளோடு உருவாக்கப்படவில்லை. அக்கல்விக் குழுவில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப் படுத்த யாரும் இல்லை.

2019ல் தேசிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்ட பிறகு நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்து அரசியல் கட்சியினர், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர், ஆசிரியர் அமைப்பினர் எனப் பல்வேறு தரப்பினர் அந்த வரைவு அறிக்கையை மறுத்து பல்வேறு மாற்றங்களை முன் வைத்தனர். கிட்டத்தட்ட  2.25 லட்சம் கருத்துகள் வந்துள்ளது.

அப்படிவந்தக் கருத்துகளில் எந்தக் கருத்தையும் விவாதிக்காமல் படித்து முறையாகப் பரிசீலித்து தீர்வுக் காணவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 முன் வைத்து விவாதம் நடத்தி ஒரு சட்ட வடிவம் கொடுப்பதற்குப் பதிலாக பாராளுமன்றத்தை மீறி, கொரோனா தொற்றால் மக்கள் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் அமைச்சரவையே கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது தவறான உள்நோக்கம் கொண்ட ஒரு ஜனநாயகப் படுகொலை.

தவறான சனநாயக விரோத நடைமுறையில் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை 2020 சாரம் என்பது ஒரு பார்ப்பனிய மேலாதிக்க இந்திய சமூகத்தை, செயற்கையான பாரதியர்களை உருவாக்குவது, கல்வியைக் கடைச் சரக்காக மாற்றுவது, கல்வி மீது மாநில அரசுகளுக்கு உள்ளஅதிகாரங்களை, வளங்களை பறிப்பது, ஒடுக்கப் பட்ட தேசிய இனங்கள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைக் கல்வி, வேலை, அதிகாரங்களில் இருந்து வெளியேற்றிப் பார்ப்பனிய ராமராஜ்யத்திற்கான அடிமைகளை உருவாக்குவது என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை 2020 தனக்கு முந்தைய பல்வேறு கல்விக் கொள்கைகளை, கல்விக் குழுக்கள் வழங்கிய அறிக்கைகளை புறந்தள்ளி அதன் வளர்ச்சிகளை எல்லாம் கீழே போட்டு மிதித்துக் காவிகளின் முன்னோர்களான பிரிட்டிஷ் மெக்காலே கல்விக் கொள்கையின் சாரத்தைப் போன்றே தற்போதைய கல்விக் கொள்கையின் சாரம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மெக்காலே கூறியது போல்“ரத்தமும் சதையுமாகத்தான் அவர்கள் இந்நாட்டுமக்களாக இருக்க வேண்டும் சிந்தனையால் அவர்கள் ஆங்கிலேயர்கள் ஆக இருக்க வேண்டும்” என்பதை அடியொற்றி பாரதிய சிந்தனையை தன் சிந்தனையாக கொண்ட மக்களைச் செயற்கையாக உருவாக்கவும் கல்வியை வணிகமயமாக்கவும், பாகுபாட்டை நோக்கமாக கொண்ட தரப்படுத்தலுமே இதன் நோக்கம். இது நன்கு திட்டமிடப்பட்ட இனப் படுகொலைக்கான நிகழ்ச்சி நிரல். இது கல்விக் கொள்கை அல்ல இனப் படுகொலைக்கான கல்வி.

தமிழ்நாட்டு கல்வி வளர்ச்சிக்கும் இக்கல்விக் கொள்கை 2020க்கும் ஏதாவது தொடர்பு உண்டா? தமிழ்நாட்டில் 58,033 அங்கிகாரம் பெற்ற பள்ளிகள் உள்ளது. இதில் அரசு உதவி பெறும் அரசு பள்ளிகள் மட்டும் 49,630 பள்ளிகள் உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள 92,286 குடியிருப்புகளில் 89,995 குடியிருப்புகளுக்கு அருகில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டு தொடக்கக் கல்வியில் ஆண் பெண் மாணவர்ச் சேர்க்கை விகிதம் ஆண் 51.90%, பெண் 48.10 % என்பவையாக உள்ளது.

தொடக்கக் கல்வியில் 99.85% இடை நிலைக் கல்வியில் 95% உயர்க் கல்வியில் 48.5% என்பதைத் தமிழ்நாடு பல ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது. ஆனால் தமிழ்நாடு அடைந்த இந்த வளர்ச்சியை எட்ட 2035 ம் ஆண்டு வரை இலக்கு நிர்ணயித்துள்ளது கல்விக் கொள்கை 2020. கல்வியைக் கணிப்பொறி, இணைய வழி வளர்க்க வேண்டும் என்கிறது கல்விக் கொள்கை 2020. ஆனால் தமிழ்நாட்டில் 11, 12, கல்லூரி மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக இலவசக் கணிப்பொறி வழங்கப்பட்டு வருகிறது. அத்தோடு செறிவூட்டபட்ட இ-பாடப் புத்தகங்கள் ஒலி, ஒளிக்காட்சிகளோடு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. பெண் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. அதேபோல் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான வசதிகளும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சத்துள்ள மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தகப்பை, வண்ணப் பென்சில்கள், கணிதஉபகரணப்பெட்டி, புவியியல்வரைபடப்புத்தகம், கம்பளிச்சட்டை, மழைக்காலஆடை, உறைபனிக் காலுறைகள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள், மாணவர் விடுதிகள், உதவித் தொகை, குழுகாப்பீடு போன்ற பல நலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

13 அரசு பல்கலைக் கழகங்கள், 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், 45 அரசு மருத்துவக் கல்லூரிகள் 12 அரசுப் பொறியியல் கல்லூரிகள் நூற்றுக்கணக்கான தொழில் நுட்பக் கல்லூரிகள், 13 அரசு சட்டக்கல்லூரிகள், 29 தனியார் பல்கலைக்கழகம் 1000 மேற்பட்டத் தனியார்க் கல்லூரிகள் உள்ளன.

கல்விக்கான ஒதுக்கீடு என்பதை தற்போதுள்ள 3.7% என்பதில் இருந்து 6% என்பதை இலக்காக நிர்ணயிக்கிறது இக்கல்விக் கொள்கை. ஆனால் தமிழ்நாடு அரசு 2019-2020ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு 35000 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கியுள்ளது. இது தமிழ்நாட்டுவரவு செலவில் முக்கியமான பங்கு. இவ்வாறுக் கல்வியில் முன்னோடியாகத் திகழ்கிறது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் கல்விச்சிக்கல்கள் வேறு. அதை இக்கல்விக் கொள்கை தீர்க்காது. அதிகப்படுத்தவே செய்யும்.

கல்விக்கொள்கை 2020 தன்னுடைய மூலங்களை வேதங்களிலும் புராணங்களிலும் சமஸ்கிருதத்திலும், பார்ப்பன முதலாளிகளிடம் தேடும் பொழுது தமிழ்நாடு தன்னுடைய கல்விக்கான மூலத்தைத் தமிழ்மரபுகளிலும், ஐக்கிய நாடுகள் சபைத் தன்னுடைய நோக்கமாக அறிவித்துள்ள வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோளை அடைய யாவரையும் உள்ளடக்கிய சமவாய்ப்புள்ள சமத்துவமான தரமானக் கல்வியை உறுதிப்படுத்துதல் என்பதைத் தமிழ்நாடு அரசு தன்னுடைய குறிக்கோளாகக் கொண்டு கல்வியை நடைமுறைப்படுத்தி வருகிறது.

உண்மையில் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ 2035ல் அடைய வேண்டியதாகக் குறிப்பிடப் பட்டுள்ள இலக்குகள் பெரும்பாலனவற்றைத் தமிழ்நாடு ஏற்கனவே அடைந்து அதற்கு மேலான இலக்குகளை நோக்கிப் பயணித்து வருகிறது. தமிழ்நாடு அரசு 2019 முன் சாதித்ததை 2035க்குள் சாதிக்கக் கனவு காணும் மோடி அரசின் கல்விக் கொள்கை 2020 எப்படி தமிழ்நாட்டுக் கல்வியை வழி நடத்த முடியும்?

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தினால் 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள், மும் மொழிக்கல்வி, பள்ளிக் கல்வியிலேயே தொழிற்பயிற்சி, தொடர் மாணவர் திறன் மதிப்பீடு, உயர்க் கல்விக்கான நுழைவுத் தேர்வு, கல்லூரிகளின் தன்னாட்சி, பல்கலைக்கழக இணைப்பு நீக்கம், ஆண்டுதோறும் பல்முனை நுழைவு மற்றும் வெளியேறுதல், ஆண்டுதோறும் சான்றிதழ், தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு, புதிய தேசிய மதீப்பீட்டுமையம், கல்வியில் காவிச் செயல்பாட்டாளர்களை நேரடியாக அனுமதித்தல், காவிமயமான பாடத் திட்டங்கள், சமஸ்கிருதத் திணிப்பு போன்றவற்றால் தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சி அடையும், தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் பன்னாட்டு பார்ப்பன சக்திகளால் கைப்பற்றப்படும்.

சமஸ்கிருத்தைக் கட்டாயமாக்கினால் யார்க்கு அது பயன்படும்? பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என்றால் கூடத் தமிழ்நாட்டில் 58,033 அங்கீகாரம் பெற்றப் பள்ளிகள் அதில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளே 49,630.

அரசு ஆசிரியர் ஆகப்போகும் சமஸ்கிருதம் தெரிந்த அந்த 49630 ஆயிரம் பேர் யார்? இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் பேர் இதன் வழியாகக் கொழுக்க போகிறார்கள். இப்படித்தான் மருத்துவக் கல்விக்கு சமஸ்கிருத்தை தகுதியாக வைத்து 100 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்வியை கைபற்றியது இதே ஆதிக்கக் கும்பல்.

தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சி அடைவதில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ எதிர்ப்பது என்ற நிலை மட்டும் தமிழ்நாட்டிற்கு பயனளிக்காது அதற்கு மாறாக தேசியக் கல்விக் கொள்கை 2020ல் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ செயல்படுத்த மாட்டோம், தமிழ் நாட்டிற்கான கல்வி அதிகாரத்தை பொதுப்பட்டியலில் இருந்து தமிழ் நாட்டுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ஆகியக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெற்றி பெற வேண்டும் எனத் தமிழ்நாடுஅரசை, அரசியல் கட்சிகளை, கல்வியாளர்களை தமிழர் முன்னணி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்மொழி, இனம், நாட்டிற்குக் கேடாக வந்திருக்கும் பார்ப்பன மேலாதிக்க ராமராஜியக் கல்விக் கொள்கை 2020ஐ நிராகரிப்போம்! தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறப் போராடுவோம்! தமிழ்மண்ணின் மக்களின் மரபுகள், மொழி, பண்பாட்டில் வேர்ப்பிடித்து கலை, அறிவியல், வரலாறு, பொருளாதாரம், தொழில்நுட்பம் என தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் சேவைச் செய்யக் கூடிய தமிழ்நாட்டுக் கல்விமுறை அமைக்கப் போராடுவோம்!

புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி

கல்வி, கல்விமுறை குறித்த அனைத்து அதிகாரத்தையும் தமிழ்நாட்டிற்கு மாற்று!

பின்தங்கிய இந்தியா வளர்ந்த தமிழ் நாட்டை வழிநடத்த முடியாது!

ஆரிய மரபு தன் அதிகார துணையுடன் தமிழ் மரபை வீழ்த்த அனுமதியோம்!

- ம. செயப்பிரகாசு நாராயணன்

நிறுவனர் /தலைவர்

தமிழர் முன்னணி

Pin It