ஒரு நாள் வீட்டில் உட்கார்ந்து டிவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். விளம்பர இடைவேளையில் ஒரு ஆணுறை விளம்பரம் வந்தது. அதில் மூன்று பெண்கள், ஒருவர் காவல் அதிகாரியாகவும், மற்றொருவர் அவர் கீழ் பணிபுரிபவராகவும், இவர்கள் இருவரும் சேர்ந்து மூன்றாவது பெண்ணை சோதனை செய்வது போல் ஒரு காட்சி.
அந்தக் காட்சியில் அதிகாரியாக வரும் பெண், தன் கீழ் பணிபுரிவரைச் சோதனை செய்யச் சொல்கிறார். அவரும் சோதனை செய்துவிட்டு, அந்தப் பெண்ணின் கால் சட்டையிலிருந்து ஒரு ஆணுறைப் பாக்கெட்டை எடுக்கிறார். அதைப் பார்த்த அந்த அதிகாரி, இதை ஏன் நீ வைத்திருக்கிறாய் இது ஆண்கள் பயன்படுத்தும் பொருளாச்சே என்று கேட்பார். அதற்கு அந்தப் பெண் இருவரும் சேர்ந்தே தானே பயன்படுத்துவோம் (But we used together) என்று சொல்ல, அந்த அதிகாரியும் சிரித்துவிட்டு அனுப்பிவிடுவார். இதுமாதிரிப் பெண்களை கேவலப்படுத்த பெண்களையே பயன்படுத்தும் அவல நிலையை என்ன சொல்லி போக்குவது.
மேற்கண்ட விளம்பரத்தில் வரும் பொருள்(ஆணுறை) ஒரு ஆண் பயன்படுத்துவது. அதைப் படமெடுக்க முழுக்கப் பெண்களையே பயன் படுத்தியிருப்பது, பெண்களை சுயமரியாதை இல்லாத ஒரு பண்டமாக (Commodity) சித்தரிக்கும் ஒரு கேடு கெட்ட விளம்பரக் கலாச்சாரம் தான். மேலும் ஆண்களுக்கு தேவைப் படும் ஒரு பொருளுக்கு ஆண்களே இல்லாமல் விளம்பரம் எடுப்பதைப் போல், பெண்களின் மிக முக்கிய தேவையான நாப்கின் விளம்பரத்தில் எந்த ஒரு ஆணாவது நடித்து விளம்பரம் வந்ததுண்டா? குறைந்த பட்சம் மனைவிக்கு கணவன் நாப்கின் வாங்குவது போல் விளம்பரங்கள் வந்ததுண்டா? இனி வரும் காலங்களிலாவது அப்படி எடுப்பார்களா? என்பது சந்தேகம் தான்.
இந்த வாசனைத் திரவியங்கள் விளம்பரமிருக்கே, அது படுகேவலம். அதுவும் ஆண்களின் வாசனைத் திரவிய விளம்பரத்திற்குப் பெண்கள் தான் அதிகமாக அரைகுறை ஆடைகளுடன் வருகிறார்கள். வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திய ஆண்களின் படுக்கையறையை இரண்டு அல்லது மூன்று பெண்கள் பகிர்வது போல் தான் காட்சி வருகிறது.
இவர்கள் எடுக்கும் இரண்டு நிமிட விளம்பரக் காட்சிகளில் ஒட்டு மொத்தப் பெண்களின் கேரக்டரையும் சின்னாபின்னப்படுத்தி விடுகிறார்கள். இப்படிப் பெண்களின் உடலைக் காட்சிப் பொருளாகக் காட்டும் விளம்பரங்கள் ஒரு பக்கமிருக்க, பெண்களை மனரீதியாக காயப் படுத்தும் விளம்பரங்களும் உள்ளன, அதையும் ஒரு பார்வை பார்த்துவிடுவோம்..
பெண்களுக்காண முக அழகுக் கிரிம் விளம்பரங்களில் கருப்பாக இருக்கிற பெண்களுக்கு, நல்ல வேலை கிடைக்காது. நல்ல கணவன் கிடைக்கமாட்டான். இந்த ஒன்னுக்குமாகாதா க்ரிமை போடுங்க ஏழே நாட்களில் சிகப்பு அழகு கூடும். அப்புறம் உங்களையே உங்கள் குடும்பத்துக்கு அடையாளம் தெரியாது. அப்படி, இப்படின்னு சொல்லி, கருப்பா இருக்கிற பெண்கள் மத்தியில் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
மேலும் இந்த கிரிமை பயன்படுத்திய அந்தப் பெண்ணைப் பார்த்து “வாவ்” அப்படின்னு சொல்லிட்டு ஒருத்தன் வாயத் துறப்பான் பாருங்க, ஏதோ ஆண்கள் கவர்ந்திழுப்பதாற்காகத்தான் பெண்கள் கீரிம் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு பிம்பத்தை இந்த மாதிரியான் விளம்பரங்கள் உருவாக்குகின்றன. சரி, கிரீம் பயன்படுத்தியப் பெண்ணைப் பார்த்து ஆண்கள் “வாவ்” என்று சொல்வது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் அழகுக் கிரீம் பயன்படுத்திய ஆண்களைப் பார்த்து, பெண்கள் ஓடிப்போய் கட்டிப்பிடிக்கும் விளம்பரங்கள் தான் அதிகம். அதில் கூட ஆண்களை கண்ணியவான் களாகவும், பெண்களை ஏதோ கட்டிபிடிக்க அலைகிறவர்கள் போலவும் காட்சிப்படுத்துகிறார்கள்.
ஒரு விளம்பரத்தில், தந்தை தன் பையனிடம் பாப்பாவுக்கு Snuggy மாட்டிவிடச் சொல்வார். அதற்கு அந்தப் பையன் ‘நோ’ என்று சொல்லிவிடுவான் (அந்தத் தந்தையும் சும்மா தான் இருப்பார்) உடனடியாக அந்தப் பொடியனின் தாய் “அவனை வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, தானே தன் மகளுக்கு மாட்டிவிடுவார். பெண் டாக்டராக இருந்தாலும், சாமானியராக இருந்தாலும், தரையைத் துடைக்கும் விளம்பரத்தில் ஒரு பெண் தான் வருகிறார். பாத்ரூம் கிளீன் பண்ற விளம்பரத்தில் எந்த்வொரு ஆணும் இதுவரை நடித்து அவார்டு வாங்கியதில்லை.
துணி துவைக்கிற விளம்பரத்திலும் பெண்களுக்குத் தான் சேலஞ்சும் அவார்டும். இதை விட ஒரு விளம்பரத்தில் ஒரு பொண்ணு சொல்லும், இந்த வீட்டோட முழுப் பவரும் என்னோட கையில் தான் என்று சொல்வார். அதற்கு இன்னொரு பெண் ‘அப்ப்டியா? என்று கேட்டு வாயைப் பிளந்து, எப்படி என்று கேட்க, ஏன்னா என் கையில் பவர் சோப் இருக்கு என்பார். நம்க்குத் தான் உடம்பு சிலிர்க்க ஆரம்பித்து விடும்.
ஆண்கள் அணியும் உள்ளாடை விளம்பரத்தில் ஒரு பொண்னு, ஆணை கட்டிப்பிடித்துக் கொண்டு கம்பீரமான ஆண்களின் இலக்கணம் பூமக்ஸ் பனியன், ஜட்டிகள் என்று சொல்லும். இந்த வார்த்தையை உள்ளாடையை அணிந்திருக்கும் அந்த ஆணை வைத்தே சொல்லிருக்கலாம். பெண்களுக்கான உடை விளம்பரங்கள் பெரும்பாலும் பெண்களைக் கொண்டே எடுக்கப்படுகிறது. சாக்லேட் விளம்பரத்தில் பக்கத்து வீட்டிற்க்கு அம்மா, பையன் குடி வருவார்கள். அந்தப் பையனைப் பார்த்து மாடியிலிருக்கும் ஒரு பெண் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதாக காட்சி வரும். உடனே அப்பெண்னின் அப்பா, மகளைப் பார்வையாலே முறைத்து விட்டு, அந்தப் பையனின் அம்மாவைப் பார்த்து ஜொள் விடுவார். அப்ப சாக்லேட் திங்க ஆசையான்னு விளம்பரம் முடியும்.
பெண்ணுக்கான புரட்சி பேசுன இந்த நாட்டில் தான் நகைக் கடைக்காரனெல்லாம் புரட்சி பண்ண ஆரம்பிச்சிட்டான். அதக்கூட அவன் தங்கம், அவன் உரிமைன்னு விட்டுறலாம். காலங்காலமா இருக்கிற வரதட்சணைக் கொடுமை, பெண் சமுதாயத்தை மட்டுமல்ல, பெண்களின் குடும்பத்தையும் சேர்த்தே சீரழிக்கிறது, அட இந்த நகைக் கடைக்காரனெல்லாம் சேர்ந்துReverse Osmosis Process மாதிரி பெண்களை வைத்தே, வரதட்சணை வாங்குவது நல்ல விசயம் தான் என்றும் சொல்ல வைக்கிறார்கள்.
இன்னொன்றில் பெண்ணைப் பெத்துட்டீங்கள, இப்பவே நகைகள் சேர்க்க ஆரம்பிச்சிருங்க என்று ஒரு விளம்பரம். தலைக்குப் போடும் சாம்பு விளம்பரத்தில் வரும் பெண் தனக்கு நீளமான கூந்தல் இருப்பதால், ஏர்கோஸ்டஸ், பாடகி, மற்றும் கல்லூரி மாணவி என்று மூன்று விதமான கேரக்டரில் வருகிறார். முடி அதிகமாக இருந்தால் வாழ்க்கை முறையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்று அந்தப் பெண் சொல்வார்.
படிப்பதற்கு மூளை தான் தேவை முடி இல்லை. சோப் விளம்பரத்தில் தனக்கு சோரியாஸிஸ் வியாதி இருப்பதாக ஒரு பெண் சொல்கிறார். ஏன் ஆண்களுக்கு சோரியாஸிஸ் நோய் வராதா? துவைக்கிறது, பாத்திரம் கழுவுறது, பாத்ரூம் கழுவுறது, குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விடுவது, சமையல் பண்ணுவது, இப்படி பெண்ணடிமைத்தனமான வேலைகளில்(விளம்பரங்களில்) நமது பெண்கள் ஈடுபடுவது, வேலைவாய்ப்பு, வசதி என்று எடுத்துக்கொண்டாலும், இது ஒட்டுமொத்தப் பெண் சமுதாயத்தின் சுயமரியாதைக்குக் கேடான விசயமாகத்தான் நாம் கருதவேண்டியிருக்கிறது.
மேற்கண்ட விளம்பரங்களில் எல்லாம் இனி ஆண்களைத் தான் நடிக்கவைக்க வேண்டும். பெண்கள் தங்கள் சுயமரியாதைக்கும், ஒழுக்கத்திற்க்கும் கேடு ஏற்படாத வண்ணம், வருங்காலங்களில் பெண்கள் மீதான நன் மதிப்பு ஏற்படுமாறு உள்ள துறைகளில் கால்பதிக்க வேண்டும்.
“பெண்கள் மதிப்பற்றுப் போவதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள் தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசாமாய்த் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும்.” - தோழர் பெரியார்.
அழகு என்பது வெளித்தோற்றத்தில் இல்லை. இந்தச் சமூக நலனுக்காக வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிறது என்ற யதார்த்த உண்மை எத்தனைப்பேருக்குத் தெரியும். அதற்காக அழகு விசயத்தில் பெண்கள் மெனக்கெடத் தேவையில்லையா? என்றும் கேட்கலாம். அழகியல் விசயத்தில் தங்கள் சுயமரியாதை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், இதற்கான அளவுகோல் அவரவர் கைகளில் தான் உள்ளது.
“ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதன் கருத்தே பெண்களை அடிமையாக்கவும், அடக்கிப் பயன்படுத்தி வைக்கவும் செய்த தந்திரமேயாகும். காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில், ஓட்டைகளைப் போட்டு அவைகளில் உலோகங்களை மாட்டிவைத்ததானது. மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட்டால் அது எப்படி இழுத்துக் கொண்டு ஓடாமல், எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில் மூக்கில் ஓட்டைகளைப் போட்டு ஆணிகள் திருகியிருப்பதால் ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கினால் எதிர்த்து அடிக்க வராமல் எங்கு காது போய் விடுகிறதோ மூக்கறுந்து போய்விடுகிறதோ என்று தலை குனிந்து முதுகை அடிக்கத் தயாராக இருப்பதற்காக அது உதவுகிறது. அன்றியும் நகைகளை மாட்டிவிட்டால் மாடுகளுக்குத் தொழுக்கட்டை கட்டியமாதிரி வீட்டை விட்டு எங்கும் தனியே போக மாட்டார்கள், நகை போய்விடும் என்று வீட்டோடு கிடப்பார்கள்.” - தோழர் பெரியார்