கீற்றில் தேட...

non veg...“இயற்கையின் தத்துவம் எப்படி இருந்தாலும் உற்பத்திப் பொருள்கள், ஜீவன்கள் எல்லாம் மனிதனுடைய உணவுக்குத்தான் பயன்படுகின்றன. மனிதன் ஒருவனைத்தவிர அநேகமாக எல்லா ஜீவராசிகளும் உணவுக்குத்தான் பயன்படுகின்றன. ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன.”

...“மனிதனுக்கு கிரமமான உணவு மாமிசம் தான். அதை விட்டுவிட்டுப் பழக்க வழக்கத்தை உத்தேசித்துச் சும்மா அதனை ஒதுக்குகின்றார்கள். இதனால் மக்கள் பலவீனர்களாகத்தான் ஆகின்றார்கள். மக்கள் விவசாயப்பண்ணை வைத்துக் கொண்டு தானியங்களை உற்பத்தி பண்ணுவது போல மாட்டுப் பண்ணைகள் வைத்து, நல்ல வண்ணம் வளர்த்துப் பெருக்க வேண்டும். பசுவைப் பாலுக்கு வைத்துக்கொண்டு காளை மாடுகளை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”

...“நாமும் காய்கறி அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மாட்டு மாமிச உணவைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும். மலிவு விலையில் கிடைக்கப் பெரிய பெரிய மாட்டுப்பண்ணைகள் ஏற்படுத்த வேண்டும். மாடு தின்பது பாவம் அல்ல. அப்படியே பாவம் என்றாலும் கோழி தின்பதில் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் தான் மாடு தின்றாலும் ஆகும். நமது சாமிக்கே மாடு, எருமை, கோழி, பன்றி முதலியன காவு கொடுத்துதானே வருகின்றார்கள்.”

...“மேல்நாட்டவர் மனஉறுதியுடனும் சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு அவர்களின் உணவு முறைதான் காரணமாகும். நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும் மனஉறுதி அற்றவர்களாகவும் இருக்கக் காரணம் நமது சத்தில்லா உணவு முறை தான் ஆகும்.”

....“நாம் சக்தி குறைந்தவர்களாகவும், மன உறுதியற்றவர்களாகவும் ,சோம்பேறிகளாகவும் இருக்கக் காரணம் நமது அரிசி உணவு தான். அரிசி மனிதனைச் சாகாமல் வைத்திருக்குமே ஒழிய வலிவு உடையவனாக இருக்க உதவாது. அதில் சத்து இருக்காது. மற்ற காய்கறிகளிலும் அவ்வளவாகச் சத்து அதிகம் இராது. அரிசியும் காய்கறியும் சோம்பேறியாக ஊரார் உழைப்பை உண்டு வாழக் கூடியவர்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே ஒழிய உழைப்பாளிகளுக்கு ஏற்றதல்ல.”

பெரியார் - விடுதலை 03.02.1964

நம் மக்களுக்கு அரிசிச்சோறு தேவையற்றது:பயனற்றது. மாமிசம் சாப்பிடுவதை விட்டுக் காய்கறிகளை மட்டும் உண்பது நமக்குக் கேடாக வந்த பழக்க மாகும். மாட்டு இறைச்சியை ஒதுக்கியதும், மூடத்தனமாகும். வடநாட்டாருக்கு நம்மைவிட உடல் வளர்ச்சி, வலிவு, துணிவு அதிகமாகக் காணப்படுவது அவர்களின் உணவு முறையால் தான்

பெரியார் - விடுதலை 03.07.1964

மாமிசம் உண்பது உலகெங்கும் மக்களுக்கு இயல்பாகி விட்டது. ஒரு சிறு கூட்டத்தினரே மாமிசம் உண்பதில்லை. ஆனால் அவர்களே வஞ்சம், கொடுமை மிக்கவராயுள்ளனர். வாயினால் மட்டும் ஜீவகாருண்யம் பேசுவது மோசடியே.

பெரியார் - விடுதலை 30.05.1968

காய்கறிகள் சாப்பிடுவதை விட மாமிசம் சாப்பிடுவது தான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால், உயிர் இருப்பதால் தான் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது. ஆகவே ஒரு செடியின் தழைகளைக் கிள்ளிப் பிடுங்கும் போதும் அவைகள் படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது .என்று ‘போசு’ சொல்கிறார். எனவே ஒரு ஜீவனைத் தினம் பல தடவை வதை செய்து அதைத் துன்புறுத்துகிறோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும் அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது. ஆனால் மாமிசம் அப்படியல்ல. ஒரு ஜீவனைச் சாப்பிடுவதனால் ஒரு தடவைக்கு மேல் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். .அதுவும் நொடியில் முடிந்து போகும். ஆதலால்தான் கிழங்கு, கீரை, காய்கறிகளை விட மாமிசம் சாப்பிடுவது ஜீவகாருண்யம் ஆகும்.

  பெரியார் - விடுதலை 23.02.1969

பன்றி, மாடு சாப்பிடக்கூடாது என்று எந்த ஆதாரத்தில் உள்ளது? பழக்க வழக்கத்தின் காரணமாக, சுற்றுச் சார்பு காரணமாகவே சாப்பிடுவது கூடாது என்று உள்ளதே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

பெரியார் – விடுதலை 14. 11. 1972

(தொகுப்பு: பழ.பிரபு, ஊற்றங்கரை)