சமூக வளர்ச்சி வரலாற்றில் மொழியின் பங்கு முக்கியமானது. அது மனிதகுலத்துக்கு விழியாக ஒளியூட்டி நிற்கிறது. மட்டுமன்றி இதயமாகவும் உணர்வூட்டி தொழிற்படுகிறது. எனவேதான் மொழியைப் பண்பாட்டின் வேர் எனக் கருதவேண்டி இருக்கிறது.
மொழியின் வரலாறும் நீண்டதுதான். இன்றைய எழுத்து மரபுக்கு அடித்தளமாக அமைவது வாய்மொழி மரபு. உடல் மொழி, சைகைமொழியின் வளர்வில் வாய்மொழி உருவானது. இன்றும் பல சமூகங்கள் எழுத்து மொழி இல்லாதபோதும் நிலைத்து நிற்பதற்கு வாய்மொழியே அடிப்படை.
தமிழ் போன்ற தொன்மைமிக்கப் பண்பாட்டுத் தொடர்ச்சிமிக்க மொழியின் வாய்மொழிக்கொடைகள் ஏராளம். செவ்விலக்கியங்கள், இதிகாசங்கள் பலவும் வாய்மொழியாக வழங்கி எழுத்துரு பெற்றவைதான். தமிழின் செய்யுள் மரபு மேட்டிமை மரபாகவும், பேச்சு மரபு மக்கள் மரபாகவும் இனங்காணத்தக்கவை. அவ்வகையில் நவீன உரைநடையின் தொடக்கத்தை வாய்மொழியாக வழங்கிய கதைகளில் அடையாளங்காண இயலும்.
கதைகள் சொல்லி, கதைகள் கேட்டு வளர்ந்தது தமிழ்ச்சமூகம். கதைகள் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்தன. இன்னும் வாழ்க்கையையே ஒரு சங்கதியாக கதையாகக் கருதியது தமிழ்ச்சமூகம். ஊர்ப்புறங்களில் இறப்பை ‘கதை முடிந்தது’ என்பர். எனவே வாய்மொழிக் கதைகள் மக்கள் வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கமாக அமைந்தன. இன்று நவீன அவசர வாழ்க்கை முறை எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது என்றாலும் ‘கதை’க்கான தேவை அப்படியே இருக்கிறது. வேறு வேறு வகைகளில் கதைத்தன்மை தொடர்கிறது.
தமிழ்ச் சமூக வரலாற்றுக்கும் நாட்டார் பண்பாட்டியலுக்கும் நாளும் புதியன தந்துவரும் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் ‘வாய்மொழிக் கதைகள் (வகைமை - சேகரிப்பு - பனுவலாக்கல்)’ என்ற நூலை எழுதியுள்ளார்.
‘வாய்மொழிக் கதை’ எனும் முதல் இயல் வாய்மொழிக் கதை என்பதன் தோற்றம், வளர்ச்சி, அதன் வரையறை, வகைமைகள், சொல்பவர், கேட்பவர், கதைத் தோன்றும், நிகழும் களம் ஆகியவற்றைச் சுருக்கமாக முன்வைக்கிறது. “வேட்டையாடி வாழ்ந்த ஆதி மனிதர்கள் தம் அன்றாட வேட்டையனுபவங்களை உரையாடல் வடிவில் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தியபோதே வாய்மொழிக் கதையின் தோற்றம் உருப்பெற்று விட்டது.”
“இனக்குழு வாழ்க்கையில் இருந்து மாறி, ஒரு நாகரிக சமூகமாக உருப்பெற்ற பின்னர் பெற்ற மொழியறிவு, ஏற்பட்ட வேலைப்பிரிவினை, பொருளியல் வளர்ச்சி என்பன ஏற்படுத்திய தாக்கங்களினால் வாய்மொழிக் கதைகளின் உள்ளடக்கம் விரிவடைந்தது” என மிகச்சரியாக வாய்மொழிக் கதைகளின் வளர்ச்சியைச் சுட்டுகிறார்.
வாய்மொழிக் கதைகள் புராணக்கதைகள், பழமரபுக்கதைகள், நாட்டார் கதைகள் எனப்பகுப்பதைச் சொல்லி தமிழில் இவற்றின் தன்மையை இனம் காட்டுகிறார். மேலும், “வாய்மொழிக் கதை ஆய்வில் கூறப்படும் கதைக்கு வழங்கும் முக்கியத்துவத்தைக் கதை கூறுவோருக்கும், கூறும் முறைக்கும் வழங்க வேண்டியது அவசியமாகிறது” என்பது சரியான கருத்து.
அடுத்து ‘புராணக்கதைகள்’ என்ற இயலில் வாய்மொழிப் புராணக் கதைகள் பற்றி விளக்கப்படுகிறது. தெய்வங்களைக் குறித்த கதைகள் புராணக்கதைகள். “நீண்ட உரைநடை அல்லது செய்யுள்; வடிவில் அல்லாமல், ஒரு சிறு நிகழ்ச்சியை மட்டும் மையமாகக் கொண்டு இவை உருவாகின்றன. இவை வட்டாரத் தன்மை கொண்டவை. அத்துடன் எழுத்து வடிவம் பெறாது வாய்மொழியாக வழங்கி வருபவை” என வாய்மொழிப் புராணங்கள், தோற்றப்புராணங்கள் என வகைப்படுத்துகிறார்.
புராணங்கள், புராணம் தொடர்பான இலக்கியங்கள் ஆகியவற்றை வாய்மொழி வழக்காறுகளுடன் ஒப்பிட்டு விவாதிப்பது ஆய்வு முறையியலாக விரிவதைக் காணலாம். சைவம், வைணவம், கிறித்தவம்சார் வாய்மொழிப் புராணக் கதைகள் பலவற்றை எடுத்துக்காட்டி அவற்றுள் தொழில்படும் சமூகம்சார் கூறுகளை சாறுபிழிந்து காட்டுவது பேராசிரியரின் அனுபவச்சாரமாக அமைகிறது.
வாய்மொழிப் புராணக் கதைகளை ஆராயும்போது மக்கள் வழக்காறுகள், எழுத்துச் சான்றுகள், கல்வெட்டுக்கள், பிற ஆவணங்களையும் ஒப்புநோக்கி முடிவுக்கு வரும் முறையியல் கவனிக்கத்தக்கது. மேலும் வாய்மொழிப் புராணக் கதைகளாக வழங்கப்பெற்ற சாதிகள் தொடர்பான கதைகளை அரசு ஆவணங்கள், ஆய்வு நூல்களில் எழுத்துப் பதிவுகளாக்கும் போது எழும் சிக்கல்கள் “நடுநிலை தவறியும் போதிய ஆய்வின்றியும்” அமைந்து வரலாற்று வடுக்களாக நிற்பதையும் ஆசிரியர் துல்லியமாக உணர்த்துகிறார்.
அடுத்த இயல் ‘பழமரபுக் கதைகள்’ பற்றியதாக அமைகிறது. “அண்மைப் பழங்காலங்களில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சிகளையோ, கற்பனையான நிகழ்ச்சிகளையோ கருப்பொருளாகக் கொண்டு, மக்கள் கூறும் கதைகளே பழமரபுக் கதைகளாகும்” என வரையறை தருகிறார். பழமரபுக் கதைகளைச் சமயப்பழமரபுக் கதை, தல பழமரபுக்கதை, தனிமனிதன் குறித்த பழமரபுக்கதை என மூன்றாக வகைப்படுத்துகிறார்.
“தமிழ்ச்சமுதாயத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் நிலவிய சமூக மதிப்புகள், விலக்குகள், நிலவுடைமைக் கொடுமைகள் சாதிய மற்றும் மதங்களைக் கடந்து நின்ற காதலும், மனித நேயமும் எனப் பல செய்திகளைக் கொலையில் உதித்த தெய்வங்கள் தொடர்பான சமயப் பழமரபுக் கதைகள் வெளிப்படுத்துகின்றன” என்றும், “ஒரு குறிப்பிட்ட தலம் அல்லது ஊர் எவ்வாறு உருவானது.
அதன் பெயர்க்காரணம், அங்கு முதலில் குடியேறிய மக்கள் அங்கு உருவான வழிபாட்டுத் தலம். அந்த ஊரில் காணப்படும் முக்கிய கட்டடங்கள், நீர்நிலைகள் என்பன குறித்துக் கூறப்படும் கதைகள் தலபழமரபுக் கதைகள்” என்றும் “குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், பெருநிலக்கிழார்கள் ஆகியோர் செய்த பொதுப்பணிகள், நிகழ்த்திய கொடுமைகள், கொள்ளைக்காரர்கள், வீரதீரச் செயல்களைப் புரிந்தோர், குறிப்பிட்ட துறைகளில் சாதனை புரிந்தோர் ஆகியோரைக் குறித்த கதைகள் தனி மனிதர் குறித்த பழமரபுக்கதைகள்” என்றும் வரையறைகளைத் தந்து உரிய சான்றுகளுடன் விளக்குவது அருமை. மக்கள் இடப் பெயர்ச்சியும் அதன் பொருட்டு தெய்வங்களின் பெயர்வும் பல கதைகள் வழி வழங்கப்படுவதை இப்பகுதியில் எடுத்துக்காட்டுகிறார்.
அடுத்து ‘நாட்டார் கதைகள்’ பற்றிய விவரங்கள் தரப்படுகின்றன. “முற்றிலும் கற்பனையான நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கதைகள் நாட்டார் கதைகள் எனப்படுகின்றன.
இக்கதைகளில் மனிதர்களே முக்கியப் பாத்திரமாக இடம் பெறுவர் என்றாலும் விலங்குகள், தெய்வங்கள், ஆவிகள் ஆகியனவும் பாத்திரங்களாக இடம் பெறும். நினைவிற்கெட்டா நெடுங்காலம், அண்மைப் பழங்காலம், நிகழ்காலம் என எல்லாக் காலங்களும், பண்டைய உலகம் மறுஉலகம் இவ்வுலகம் என எல்லா இடங்களும் நாட்டார் கதைகளில் இடம்பெறும்” என வரையறை தருவது சிறப்பு.
நோன்பு அல்லது விரதக் கதைகள், தேவதைக் கதைகள், தன்னனுபவக் கதைகள், பழமொழிக் கதைகள், நொடிக் கதைகள் அல்லது துணுக்குச் செய்திகள், விலங்குக் கதைகள், சங்கிலித் தொடர் கதைகள்... என நாட்டார் கதை வகைகளையும் அறிமுகம் செய்வதும், சான்று தந்து விளக்குவதும் அற்புதம்.
‘மாடு வாங்கங்குள்ளயும் புள்ள குறுக்க
ஒடு(டி)ச்ச கதையாப் போச்சு’ என்ற சொலவடையில் பின்வரும் கதை அடங்கி உள்ளது.
“ஒரு குடும்பத்தில் பொஞ்சாதி உண்டியலுல பத்து ரூபா சே(ர்)த்திருக்கா. அவ புருசன்ட்ட மாடு வாங்கலாம்னு சொல்லியிருக்கா, அவ புருசனும் மாடு வாங்கலாம்னு சொல்லிட்டான்.
உடனே பொண்டாட்டி, மாடு குட்டிப்போட்ட உடனே எங்க ஆத்தா வீட்டுக்கு ஒரு கலயம் பால் குடுக்கனும்னு சொல்றா. எங்காத்தா வீட்டுக்கு ஒரு கலையம் கொடுக்கனும்னு அவ புருசனும் சொல்றான்.
இவங்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
அவம்(ன்) எப்பா. எப்பா நா கண்ணுக்குட்டி பிறந்த உடனே முதுகில் சவாரி ஏறுவேனு சொன்னான்.
அதுக்கு அவம் அப்பன் ‘ஏ’ கன்னுக்குட்டி குறுக்கு ஒடஞ்சிர போகுது. ஏறக்கூடாதுன்னு சொன்னான். மகம்(ன்) அதக் கேக்காம திரும்பத் திரும்பச் சொன்னான். உடனே தடிக்கம்பெடுத்து மகன் குறுக்க ஒடச்சிட்டான்.
மாடும் புடிக்கல. பாலுங் கறக்கல. புள்ள குறுக்க ஒடச்சு, உண்டியல் துட்ட எடுத்து வைத்தியஞ் செஞ்சான் (கதை சொல்லி சொ. ஜோதி (46), உமாப்பட்டி.)” எப்படிக் கதை?
‘சூழலும் பயன்பாடும்’ எனும் இயலில் வாய்மொழிக் கதைகளின் செயற்பாடுகளை விளக்குகிறார். “எந்த ஒரு வாய்மொழி வழக்காற்றிற்கும் சூழல் (context) பயன்பாடு (function) என்ற இரண்டு நிலைகள் உண்டு. ஒரு வழக்காற்றைச் சேகரிக்கும்போதும், அதை ஆய்வு செய்யும்போதும் அது வழங்கப்படும் சூழலையும் அதன் பயன்பாட்டையும் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.” என்ற அடிப்படையில் வாய்மொழிக்கதை உருவாகும், பயன்படும் சூழல், அதன் பயன்பாடு விளக்கப்படுகின்றது. தமிழ்ச் சூழலில் வாய்மொழிக் கதைகள் உருவாகும் பத்து சூழல்களைச் சுட்டிக் காட்டுகிறார். அதேபோல,
“குழந்தைககளை மகிழ்விக்க
பொழுதுபோக்க
வேலைப்பளு மற்றும்
வேலைக் களைப்பு தெரியாமலிருக்க
ஒரு கருத்தை வலியுறுத்த அல்லது விளக்க”
வாய்மொழிக் கதைகள் பயன்படும் விதத்தை விளக்குகிறார்.
அடித்தளமக்களின் எதிர்க்குரலையும், சமூக விமர்சனங்களையும் வாய்மொழிக்கதைகள் வெளிப்படுத்துவதையும் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
அடுத்து, ‘வாய்மொழிக் கதை சேகரிப்பு’ பற்றி விளக்குகிறார். வாய்மொழிக் கதைகளைச் சேகரிக்கும் முறையில் கதை கூறல் ஒரு நிகழ்த்துதலாக அமைவது, கதையைக் கேட்டு எழுதுவது, ஒலிப்பதிவு செய்தல், கூறக்கூற எழுதுதல், கதையை எழுதி வாங்குதல் ஆகிய முறைகளைச் சுட்டுகிறார். கதைக்கூறலை காணொளியாகப் (வீடியோ) பதிவு செய்வது சிறப்பு என்கிறார். ஒரு குறிப்பிட்ட கதையின் பல்வேறு வடிவங்களையும் ஒப்புநோக்கி ஆய்வு செய்வது சிறப்பானதாக அமையும் எனக் கூறுவதுடன் வாய்மொழிக் கதைகளுடன் தொடர்புடைய சடங்குகள், வழிபாட்டு முறைகள், பிற சான்றுகளையும் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
அடுத்த, இயல் ‘பனுவலாக்கல்’ பற்றியதாக அமைகிறது. “ஒளிப்பதிவு செய்த கதையை எழுத்து வடிவிற்கு மாற்றவேண்டும். இக்கதை அச்சிடப்படாவிட்டாலும், கையெழுத்துப்படி, தட்டச்சுப்படி, கணினிப்படி என ஏதேனும் ஒரு வகையில் அது எழுத்து வடிவில் இருக்கும்போது, அக்கதைக்குப் பனுவல் (text) என்ற தகுதி கிட்டும். எனவே பனுவலாக்கம் என்பது ஒரு வாய்மொழிக் கதையை எழுத்துவடிவிற்கு மாற்றுவதாகும்” என வரையறை தருகிறார்.
பனுவல், வெகுசனத் தன்மை உடையது, அறிவியல் தன்மை உடையது என இருவகையில் அமையும். பனுவலின் வகைகள், இழைக்கூறு, சொற்களைத் திருத்தி அமைத்தல், வகைப்படுத்துதல், எண் வழங்கல் ஆகிய நிலைகளில் வாய்மொழியிலிருந்து எழுத்துப் பனுவல் உருவாகும் நிலைகளை விளக்குகிறார். இவ்வியலில் சுட்டப்படும் செய்திகள் கள ஆய்வில் சேகரிக்கப்பட்டவற்றை ஆவணமாக்கும் நுட்பங்கள் சார்ந்ததாக அமைகின்றன. வாய்மொழிக் கதைகளுக்கு மட்டுமல்ல, பிற வழக்காறுகளைப் பதிவு செய்யும்போதும் இவற்றைப் பின்பற்றலாம்.
இறுதியாக ‘வாய்மொழிக் கதை ஆய்வு’ எனும் இயலில் வாய்மொழிக் கதைகளை ஆய்வுசெய்யும்போது பின்பற்ற வேண்டிய நெறிகளை விளக்குகிறார். வாய்மொழிக் கதைகளில் பொதிந்துள்ள உட்பொருளை வெளிக்கொணர்வதே ஆய்வு எனக் குறிப்பிடும் பேராசிரியர், “உட்பொருள் என்பது வரலாறு, சமூகவியல், இனவரைவியல், குறியீட்டியல், அரசியல், உளவியல் சார்ந்ததாக இருக்கலாம்.
அவனது (ஆய்வாளரது) நோக்கத்திற்கேற்ப வரலாறு, சமூகவியல், மானிடவியல், உளவியல், மொழியியல், அமைப்பியல், மார்க்சியம் போன்ற அறிவுத்துறை சார்ந்த கோட்பாடு ஒன்றைத் தேர்வு செய்து அதன் துணையுடன் ஆய்வாளன் தன் ஆய்வை நடத்திச் செல்கிறான்” என்பதன் வழியாக வாய்மொழிக்கதை ஆய்வு எப்படி நிகழ வேண்டும் என வழிகாட்டுகிறார். அதே நேரத்தில் ஒரு எச்சரிக்கையையும் தருகிறார். “எந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்தினாலும், அதை ஓர் இறுக்கமான சட்டகமாக அமைத்துக் கொள்ளாமல், நம் வழக்காறுகளின் வாயிலாக வெளிப்படும் நமது ‘திணை சார் மாதிரி வகை’ என்ன என்பதைக் கண்டறிய உதவும் துணைவனாகப் பார்க்க வேண்டும்.”
பின்னிணைப்பில் தரப்பட்டுள்ள ‘சாமியாடும் மனைவி’ எனும் கட்டுரை இந்நூல் நுவலும் கருத்துக்களுக்கு மேலும் விளக்கம் தருவதாக அமைந்துள்ளது.
தமிழ்ச் சூழலில் மக்கள் சார் பண்பாட்டு நடவடிக்கைகள் முன்னுக்கு வந்துள்ள நிலையில் இதுபோன்ற நூல்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களுக்கு கைவிளக்காகப் பயன் நல்கும். வாய்மொழிக் கதைகளை வரையறை செய்தல், சேகரித்தல், வகைப்படுத்துதல், ஆய்வு செய்தல் ஆகியன பற்றி மேலைச்சூழலில் பல்வேறு ஆய்வுகள் வந்துள்ளன.
அறிஞர்களின் கருத்துக்களும் உள்ளன. பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் இவற்றை நன்கு அறிந்தவர். உள்வாங்கியவர். அதே வேளை, தமிழ்ச் சூழலில் கழிந்த ஐம்பதாண்டுகளாக களப்பணி, ஆய்வுப்பணி மேற்கொண்டு வரும் தன் அனுபவத்தால், நம் மண், மக்கள், சூழல் சார்ந்த முன்வைப்பை இந்நூலில் தருகிறார். இது ஒரு வகையில் கல்விப்புல ஆய்வாளர்களுக்கு கையேடு போல அமைந்துள்ளது. பேராசிரியர் வகுப்பு எடுப்பது போல எளிமையாக, நுட்பமாக கருத்துக்களை விளக்குகிறார்.
வாய்மொழிக் கதைகளை வெறும் பிரதியாக அணுகாமல் அதற்குப்பின் உள்ள சமூகப் பின்புலத்தைக் கண்டறிய தொடர்புடைய பிற சான்றுகளுடன் ஒப்பிட்டு, மதிப்பிட்டு முடிவுகளுக்கு வருவது ஒருவித முழுமைத் தன்மையை அளிக்கிறது. நூல் முழுக்க வெளிப்படும் பேராசிரியரின் ஆய்வு முறையியல் இளம் ஆய்வாளர்களுக்கு அரிய கற்கை நெறியாக அமையும். நாட்டாரியல் ஆய்வாளர்களுக்கு புதிய வெளிச்சத்தை நிச்சயம் தரும்.
- இரா.காமராசு