sellaatha panam bookபடைப்பிலக்கியம் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதில் புதினத்திற்குத் தனியிடம் உண்டு. உலகில் பெரும்பான்மையோரால் படிக்கப் பெறும் இலக்கியங்களுள் புதினமும் ஒன்று. உரைநடை வடிவத்தில் காலம், கருத்து, கற்பனை, சமூகத்தின் நிகழ்வு இவற்றை வெளிப்படுத்தக் கூடிய கருவூலம் புதினம்.

மனிதனின் எல்லையற்ற வாழ்வுப் பொருண்மைகளையும், செயல் வெளிப்பாடுகளையும், எதிர்கால விழைவுகளையும் புதினம் என்ற கலை வடிவு உணர்த்திக் காட்டுகிறது. சமூகக் குற்றங்களைச் சாடும் எத்தனையோ புதினங்களுள் எழுத்தாளர் இமையத்தின் ‘செல்லாத பணம்’ என்ற புதினம் குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம்

பொறியியல் பட்டம் பெற்ற ரேவதி தன் பெயரை உடம்பில் பச்சை குத்திக் கொண்டதற்காகவும், கத்தியால் கிழித்துக் கொண்டதற்காகவும் இரக்கப்பட்டு ரவியையே கல்யாணம் செய்ய துணிகிறாள்.

பர்மாவிலிருந்து அகதிகளாக வந்த ரவி என்ற ஆட்டோகாரன் மீது பரிதாபப்பட்டு ஏதோ வயது கோளாறு காரணமாகத் தலைமையாசிரியரான தந்தையை எதிர்த்து அன்புமயமான தாயின் சொல்லையும் கேளாமல், சென்னையில் பொறியாளர் பணியில் இருக்கும் அண்ணனின் கோபத்திற்கு ஆளாகி மணக்கிறாள்.

தற்கொலை முடிவெடுத்த ரேவதிக்கு வேண்டா வெறுப்பாக அவள் விரும்பிய வண்ணம் படித்துப் பட்டம் பெறாத, ஏழ்மை நிலையில் குடித்து விட்டு வரும் ரவிக்கு மணமுடித்து வைத்துத் தங்கள் கடமையை முடித்துவிட்டதாகப் பிறந்து வீடு நினைத்துக் கொள்கிறது.

ரேவதியின் முதல் பிரசவத்துக்குக்கூட மருத்துவம் பார்க்க முடியாத ரவி அவளை அடித்துத் துன்புறுத்த அது பொறுக்காமல் தாயாரான அமராவதி பிரசவம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். இரண்டாவது குழந்தைக்கும் இதே நிலைமை நீடிக்கிறது. ரேவதியின் அண்ணன் முருகனுக்கும் அருண்மொழிக்கும் நடந்த திருமணமும் காதல் திருமணம்தான்.

ரேவதிக்கு அடியும், உதையும், வறுமையும், கணவனின் சந்தேகக் குணமும், குடிப்பழக்கமும் வாழ்க்கையின் மீது பெரிய வெறுப்பை உண்டாக்குகின்றன. திடீரென ஒருநாள் தீக்குளித்துவிட்டதாகத் தொலைபேசி வழி தகவல் சொல்லப்படுகிறது.

கரிக்கட்டை போன்ற எரிந்த நிலையில் இருக்கும் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரை விடுகிறாள். அவளை எப்படியாவது பிழைக்க வைத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் கையில் பத்து லட்சத்துடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டு வருகிறார் அப்பா நடேசன்.

இறுதியில் அந்தப் பணத்தால் எந்தப் பயனும் இல்லாத நிலையில் அதை ‘செல்லாத பணம்’ என்றே மருத்துவர்கள் குறிப்பிடுவதாக எழுத்தாளர் இமையம் சொல்வது நம் உணர்வுகளைப் பிழிகிறது. மேலும் மகள் இறக்கும் தருவாயிலும் மற்றவர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பு வருகிறது அந்தத் தந்தைக்கு என்று முடித்திருப்பது இந்தச் சமூகத்தின் மனசாட்சி என்னவாக இருக்கிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைகிறது.

குழந்தை வளர்ப்புக்கு ஒரு பாதுகாப்பான அமைப்பு குடும்பம். ஆணும் – பெண்ணும் ஒத்த சிந்தனையுடையவராய்த் தேவையான இடங்களில் விட்டுக் கொடுத்து வாழ்க்கை நடத்தும் போது எந்தச் சிக்கலும் எழுவது இல்லை. மனம் ஒன்றி இல்லற வாழ்வு நடத்துவதற்கு ஏற்றது காதல் வாழ்க்கை என்கின்றனர்.

சாதி சமயம் தோன்றாத காலத்தில் காதல் வாழ்வுக்கு எந்தத் தடையும் இருந்திருக்காது என்று தோன்றுகிறது. ஆனால் சாதியும் சமயமும் வேரூன்றிப் போன காலகட்டத்தில் காதல் மணத்தைப் பெரும்பான்மை சமுதாயம் மறுத்துப் பேசுகிறது. அதையும் மீறித் திருமணங்கள் நிகழும் போது அந்தத் திருமணத்தில் உயிரிழப்பை உண்டாக்கிக் காதல் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி விடுகிறது சமூகம். ‘கௌரவக் கொலை’ என்று பெயர் சூட்டப்பட்ட இக்கொலைகள் அந்தந்தக் காலத்தின் அவலத்தைக் காட்டி விடுகின்றன.

கௌரவக் கொலைகளை இருவகையாகவும் சொல்லிக் கொள்ளலாம். முதல் வகை நேருக்கு நேராகக் கண்ணுக்குத் தெரிந்த நிலையில் கொலை செய்து தம்பதியினரின் எதிர்காலத்தை இருட்டில் ஆழ்த்துவது. மற்றொரு வகையிலும் இக்கொலை நிகழ்கிறது. அதாவது விருப்பப்பட்டு மணந்து கொள்ளும் தம்பதியினரைப் புறக்கணிப்பது மூலம் மறைமுகமாகக் கொலை சாத்தியப்பட்டு விடுகிறது. எழுத்தாளர் இமையம் இரண்டாவது வகையான கொலையை இப்புதினத்தில் காண்பிக்கிறார். படிப்பும் வசதியும் உள்ள ரேவதி அதற்குத் தொடர்பே இல்லாத ரவியை விரும்புகிறாள். பர்மாவிலிருந்து அகதியாக வந்த ரவி துரத்தித் துரத்தித் தான் காதலிப்பதாகக் கூறுகிறான்.

பொறியியல் பட்டதாரியான ரேவதி கடனில் எடுத்த ஆட்டோ ஓட்டுநரான ஒருவனை நேசிப்பதாகக் கூறுவதில் வீட்டில் பெரிய பூகம்பம் வெடிக்கிறது. அண்ணனுக்கு மனைவியாக வரவிருக்கும் தோழி அருண்மொழியிடம் மனந்திறந்து பேச வேண்டும் என்று நினைக்கிறாள்.

ஆனால் அருண்மொழி ரேவதியின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுப்பதாகத் தெரியவில்லை. “அவள் உட்கார்ந்திருந்த விதம் அனாதைக் குழந்தை ஒன்று பிச்சை எடுப்பதற்காக உட்கார்ந்திருப்பது போல இருந்தது,” என்ற வரிகள் ரேவதியின் நிலையைப் படம்பிடிக்கின்றன. ரேவதி ரவியைக் கல்யாணம் செய்து கொண்டால் தான் அந்தக் கல்யாணத்திற்கு வரமாட்டேன் என்றும் திட்டவட்டமாகவே சொல்லிவிட்டாள்.

அப்பாவும் அண்ணனும் ஏதோ கடமைக்காக மணமுடித்து வைத்தனரே தவிர அதன் பிறகு அவளிடம் பேசவும் இல்லை. புத்தியில்லாத படிப்பு படித்ததாக ரேவதியின் தாயார் அமராவதியும் புலம்புகிறாள். எல்லாம் முடிந்த பின் மகள் இறந்த பின் தன் கணவனும் மகனும் அவளைக் கைவிட்டதாகவே கருதி வருந்துகிறாள். “இனி எந்த நாயும் ஒம் மூஞ்சியில காறித் துப்பாது,” என்று கூறி அழுகிறாள்.

“ஒரு ஈய விரட்டி விடுற மாதிரிதான் கல்யாணத்த முடிச்சிங்க. இருந்தாலும் அது பெருசுதான். கல்யாணத்தில் நீங்க எவ்வளவு கூசிப்போயி நின்னீங்கன்னு எனக்குத் தெரியும்,” என்று ரேவதியே உணர்ந்து கொள்வதாக எழுதியிருக்கும் பகுதி தகுதி இல்லாத காதல் திருமணத்தின் மீதான அவநம்பிக்கையை வளர்க்கிறது.

கல்யாணத்திற்குப் பிறகு அருண்மொழியும் அலைபேசியில் பல முறை பேசியிருக்கிறாள். ஆனால் பணத்தைப் பற்றி ஒன்றும் கேட்டதில்லை. கல்யாணத்திற்கு முன்பு கல்யாணம் முடிந்தவுடன் தானும் ரவியும் சென்னைக்குச் சென்று ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட்டுக் கிடைக்கும் நல்ல சம்பளத்தில் ஒரு மகிழுந்தை அவனுக்கு வாங்கிக் கொடுத்து ஓட்டச்சொல்லி வாழ்க்கையை நடத்தலாம் என்று நினைத்திருந்தாள்.

ஆனால் அதற்கு அவளின் காதல் கணவன் கொஞ்சமும் செவிசாய்க்கவில்லை. போதாததற்கு ரவியின் தாயாரும் மருமகளை வேலைக்கு அனுப்புவதில் எதிர்ப்பு தெரிவித்தாள். ரவிக்கும் ரேவதியின் மேல் தீராத சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

சில வேளைகளில் காதல் என்ற மென்னுணர்வு வெறும் இனக்கவர்ச்சியாக நிலைபெறுவதையும் பலருடைய வாழ்க்கைச்சூழல் சான்றாக உரைக்கிறது. “காதலிக்கிறப்ப பணம் வேணும், வீடு வேணும், சொந்தக்காரங்க வேணும்னு தோணமாட்டங்குது. கல்யாணமான மறு நிமிஷமே வீடு, பணம், சொந்தம் வேணுமின்னு தோணுது. பணம்தான் எல்லாரயும் சேத்து வைக்குது. பிரிக்கவும் செய்யுது. நான் வேலக்கிப் போயிட்டா அவன வுட்டுடுவன்னு நெனச்சிக்கிட்டான்.

ஒரு பொம்பள அழகா இருக்கிறது எவ்வளவு கஷ்டமானது தெரியுமா? அதனால அவ படுற கஷ்டத்த வெளியில சொல்ல முடியாது. பக்கத்தில் இருக்கும் கடைக்குச் சென்று ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் சத்தம் போடுவான், அடிப்பான். பிறந்த வீட்டிற்குச் சென்று கொஞ்சம் தாமதமானாலும் இதே அணுகுமுறைதான்.” இப்படிப்பட்ட ஒருவனையா உங்கள் மகள் பிடித்தாள் என்று பார்ப்பவர் கேட்கும் போது கூனிக்குறுகிப் போனார் நடேசன்.

ஆண்மகனைப் பெற்றவர்கள் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நடப்பது போல மகளைப் பெற்றவர்கள் நடக்க முடிவதில்லை. ஒரு பெண் மகளைப் பெற்றவுடன் சீக்கிரம் சேமிக்கப் பழகிவிடுங்கள் என்று வலியுறுத்துகிறது சமூகம்.

மருமகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்ற எழுதப்படாத விதி பல ஆண்டுகளாக இங்கு நிலவி வருகிறது. ஆனால் மருமகனைக் கௌரவம் குறையாமல் மதிக்க வேண்டும் என்று விதிமுறையில் என்ன நியாயம் இருக்கிறது? மருமகன் தவறு செய்துவிட்டாலும் அதைப் பக்குவமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லாத் தரப்பினரிடையிலும் நிலவி வருகிறது.

மகளை மருத்துவமனையில் பார்த்த பொழுது மிகவும் மனமுடைந்து போன அமராவதி தன் கணவனிடம் மருமகனைக் கூப்பிட்டுக் கண்டித்திருக்கலாமே என்று வேதனை கொள்கிறாள். ஒரு முறையாவது ரவியை ஒழுங்காக இருக்கும்படி மிரட்டியிருந்தால் ரேவதி தீயில் இறங்க வேண்டிய அவலம் நடந்திருக்காதே என்று இயலாமையை வெளிப்படுத்துகிறாள்.

ஆறு ஆண்டு காலமாக மகளின் செயல்பாட்டால் தலை குனிந்து நிற்கும் நடேசன் மனைவியின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாமல் மயங்கினார். “காசக் கொடுத்திங்க. பொருளக் கொடுத்திங்க.

நான் எதக் கொடுத்தாலும் எத செஞ்சாலும் ஏன்னு கேக்காம இருந்திங்க. எல்லாம் செஞ்சி என்னாத்துக்கு ஆச்சி? நேருல கூப்புட்டு அந்த நாய மெரட்டல. மெரட்டியிருந்தா அவனுக்குப் பயம் வந்திருக்கும். அடங்கியிருப்பான். ‘தெருப் பொறுக்கி நாய்க்கிட்ட என்னாப் பேசுறது’ன்னு இருந்திங்க. ‘மானம் போயிடும் மானம் போயிடும்’ன்னு ஒதுங்கிப் போனிங்க.” என்று நெஞ்சு வெடித்துப் பேசும் மனைவிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்தார்.

நடேசன் பேசத் தொடங்கியதும் அமராவதிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தான் மருமகனிடத்தில் அவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தைக் கூறியது அமராவதிக்குப் பெரிய விநோதமாக இருந்தது. ஓரிரு வார்த்தைகளில் உரையாடலை முடித்து விடும் நடேசன் அன்று நீண்ட நேரம் தன் தரப்பு நியாயத்தை விவாதித்தார்.

“நான் கேட்டா, கண்டிச்சா நம்ப பொண்ணப் போட்டு அடிப்பான், ஒதைப்பான்னுதான் கேக்கல. போலீசுக்கும் போவல. ஒரு முற பயம் போயிட்டா அடுத்த முற அவனுக்குப் பயம் தெளிஞ்சிடும். அப்புறம் பயப்பட மாட்டான். விலகி இருந்தா கொஞ்சம் பயத்தோட இருப்பான்னுதான் வுட்டு வச்சன். நான் இத்தினி வருசமா ஒதுங்கிப் போனதுக்குக் காரணம் எம் பொண்ணு தொந்தரவு இல்லாம இருக்கணும், உசுரோட இருக்கணும்னுதான்.

நான் ஒண்ணு சொல்ல, அவன் சொல்ல, பேச்சு முத்திப்போயி அசிங்கமாயிட்டா, ஒங்கிட்ட பேசுறதும் நின்னுபோயிடும். நீ கொடுக்கிற காசும் இல்லன்னா இன்னும் கஷ்டப்படுவான்னு தான் விலகிப் போனேன்,” என்று சொன்ன நடேசன் அதற்கு மேல் பேச முடியாமல் கண்களில் கண்ணீர் நிறைய தலையைக் கவிழ்த்துக் கொண்டார். படித்துப் பெரிய பதவி வகிக்கும் ஒரு தந்தையால் தன் மகளின் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வந்துவிடக்கூடாது என்று மட்டும் யோசிக்க முடிகிறதே ஒழிய வேறு மாதிரி சிந்திக்க முடியவில்லை என்பது பெரிய சோகம்.

ரேவதியின் தீக்குளிப்புக்காகச் சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது எல்லோருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே ரேவதியின் பெற்றோரும் உடன்பிறப்பும் மருத்துவரிடம் நோயாளி உயிர் பிழைப்பாளா என்று வினவினர்.

மருத்துவ அறிக்கையைப் படித்தவுடன் மருத்துவரின் முகம் மாறிவிட்டது. சிகிச்சையைப் பற்றி எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிழைப்பது பெரிய அதிசயம் என்ற சூழலில் மருத்துவரால் எந்த உத்தரவாதமும் தரமுடியவில்லை. அமராவதி தன் நகைகளை மேசை மீது குவித்துக் கும்பிட்டபடி அழுது கொண்டே “ஒரு பெரிய வீடு இருக்கு. மூணுகாலி மன இருக்கு. வீட்டுல முப்பது நாப்பது பவுன் நக இருக்கு. எல்லாத்தயும் வித்துத் தர்றன்.

எம் பொண்ண உசுரோட கொடுங்க சார்,” என்றாள். அருகில் இருந்த கணவனும் கைப்பையில் இருந்த பணத்தை எடுத்து மேசைமீது வைத்தார். மருத்துவரோ “இந்த மருத்துவமனையில் இவை எதுவும் தேவைப்படாது. இது எல்லாத்தயும் எடுத்து உள்ள வைங்க. இதுக்கெல்லாம் இங்க அவசியமில்ல. காசுக்காக இங்க வைத்தியம் செய்றதில்லை. ட்ரீட்மண்டுல எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஆள் பாத்து வைத்தியம் செய்யமாட்டாங்க,” என்று சொன்னார்.

சகோதரன் முருகன் வேறு மருத்துவமனை அதாவது தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வைத்தியம் பார்க்கலாமா என்று கேட்டதற்குக் கோபப்பபட்ட மருத்துவர் பணம் வாங்காமல் பார்க்கும் வைத்தியம் தரமற்றதாக இருக்குமா” என்று எதிர் கேள்வி கேட்டுத் “தீக்குளித்த நோயாளிகளுக்கு ஜிப்மர்தான் சிறந்த சிகிச்சை தரும் மருத்துவமனை” என்று சொல்லிவிட்டுக் கடைசியாக மேசை மீதிருந்த பணத்தைப் பார்த்து இந்தப் பணம் ‘செல்லாது’ என்று முடித்துக் கொண்டார்.

குடும்பத் தகராறில் தீக்குளிக்கும் பெண்கள் சாகும் நிலையிலும் தங்கள் இறப்புக்கான உண்மைக் காரணத்தை வெளியிடுவதில்லை. சட்டரீதியாக வாக்குமூலம் பெறுவதற்காக நீதிபதியும் காவலர்களும் வந்த பொழுதும் தீக்குளித்த உண்மை நிலவரத்தை ரேவதி சொல்லவில்லை. மருத்துவமனையில் உதவியாளராக வந்திருந்த பெண்களில் சிலர் நோயாளிகள் நெருப்பில் இறங்கியதற்கான உண்மையைச் சொல்வதே இல்லை என்று பேசுகின்றனர்.

அமராவதி கொடுத்த ஆட்டோ கடனுக்குத் தர வேண்டிய பணத்தில் ஐந்நூறு ரூபாய் எடுத்துக் குடித்துவிட்டான். இதனால் மனமுடைந்த ரேவதி வண்டிக்காக வைத்திருந்த டீசல் எடுத்து ஊற்றிக் கொண்டு பற்றவைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

கதாசிரியர் தீப்பிடித்ததற்கான காரணத்தை நேரில் பார்த்தது போலப் புதினத்தில் பகிர்ந்து கொள்கிறார். தீக்குளிப்புக்கான உண்மை நிலவரத்தைப் பெரும்பான்மையோரும் மறைத்து விடுகின்றனர். “நாம்பளே சாவப்போறம், எதுக்குப் பெத்தவங்களுக்குத் தொல்லயக் கொடுத்திட்டுச் சாவணுமின்னு நெனைக்கிறாளுவ. அதனாலதான், ‘தானா நடந்து போச்சி, சோறு ஆக்கும்போது சீலயில நெருப்புப் புடிச்சிக்கிச்சி’ன்னு போலீசுக்கிட்ட சொல்றாளுவ,” என்பதாகவும் மருத்துவமனைக்கு வந்திருந்த தங்கம்மாள் பேசிய வார்த்தைகள் எல்லோரையும் உறுத்தின.

ரேவதிக்கு உடலின் மொத்த பாகங்களும் வெந்து விட்டன. 40, 50 சதவிகிதம் எரிந்து விட்டாலே பிழைப்பது அரிது. ரேவதியோ கிட்டத்தட்ட முற்றிலுமாக எரிந்துவிட்டாள். உடல் முழுக்க கொழ கொழன்னு ஆகிவிட்டது. தோல் உரிந்து கொப்பளமாக ரத்தம் வருகிறது. சதை வெடித்துக் கொண்டிருந்தது. அவளின் பெற்றோரும், உடன்பிறப்பும், அண்ணியும் கேட்க நினைத்த எந்தக் கேள்வியையும் அவர்களால் கேட்க முடியவில்லை. அவர்களுக்கு வாய் வரவில்லை.

இவ்வளவு பிரச்சினைக்கு நடுவிலும் மருத்துவமனையில் வந்திருந்த ஒருவன் வாயிலிருந்து எச்சிலை ஒரு டிரம்மில் துப்பினான். அதில் நோயாளிகளின் படுக்கையிலிருந்த எல்லாவற்றையும் ஒரு சிறு மூட்டையாக்கிக் கட்டிப் போடுவது வழக்கம்.

இதைத் துப்புரவுத் தொழிலாளர்கள் கைகளால் சுத்தம் செய்கின்றனர். இப்படி எச்சில் துப்பினால் எப்படி அவர்கள் சுத்தம் செய்வார்கள். அரசு மருத்துவமனை என்ற உணர்வு இல்லாதபடி தூய்மையாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. எச்சில் துப்புபவனை அடித்துக் கொல்ல வேண்டும் போலத் தோன்றியது முருகனுக்கு.

பணம் இருந்தால் நல்ல விதமாகவும் மனைவியை நன்கு கவனித்துக் கொண்டும் பணம் இல்லை என்றால் பைத்தியம் போல மனைவியை அடித்துக் கொல்லும் இயல்புடையவனாகவும் இருந்தான் ரவி.

ரவியைக் கண்டு ரேவதியின் குடும்பத்தார் ஒதுங்கிப் போவது அவனுக்குக் கோபம் தந்தது. படிக்கவில்லை என்றால் வாழத் தகுதி இல்லாதவனா? அவன் இறந்து போக வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு எந்தப் பதிலும் இல்லை.

ஓர் ஆடவனை ஆசையாக விரும்பித் திருமணம் செய்து கொண்டு அவனோடு மகிழ்ச்சியாக வாழ முடியாமல் போகும் வாழ்க்கையில் காணும் காட்சிகளை எழுத்தாளர் தத்ரூபமாக வடித்திருக்கிறார். தொடக்கத்திலிருந்து முடிவுவரை தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகம் புதினத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் துளிர்க்கவே செய்கிறது.

எவ்வளவு வசதி இருந்தபோதும் ரேவதியைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் கதை முழுக்க பரவிக் கிடக்கிறது. தான் இருக்கும் போது தன் பிள்ளைகளின் மரணம் எத்தகைய சோகம் நிறைந்தது என்பதை அழுத்தமாகக் காண்பிக்கிறது புதினம். வாழ்க்கையையே வென்றுவிடலாம் என்று விரும்பிய ஒரு பெண்ணுக்கு மரணத்தைப் பரிசாக்கிய இந்தச் சமூகத்தின் மீது கோபமும் உண்டாகிறது.

- முனைவர் சி.ஆர்.மஞ்சுளா

Pin It