பெருந்துறை சிப்காட் பகுதியில் காவேரி ஆற்றில் தினமும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இதை எதிர்த்து கடந்த சில மாதமாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மக்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாகவும், அமெரிக்காவின் கொக்கோ- ஆலையின் கட்டிடப்பணிகளை தடுத்து போரடியதால் , தமிழக அரசு ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதிசு அவர்கள் தலைமையில் கடந்த மாதம் (டிச-11, 2014) பெருந்துறையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களும் கொக்கோ- ஆலை அமைவதற்க்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

coco cola agitation

இதன் பிற்கு இக்கருத்துக் கேட்புக் கூட்டம் தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதிசு அவர்கள், பங்கேற்ற மக்களில் 80 சதவிகித்தினர் மட்டுமே கொக்கோ- ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என தவறாக தெரிவித்தார்..

மாவட்ட நிர்வாகத்தின் இந்த தவறான தகவலைக் கண்டித்தும், கொகோ-கோலா ஆலை அமைக்க அரசு அனுமதித்ததில் உள்ள விதிமீறல்கள், சட்ட விரோத செயல்பாடுகள் பற்றியும் 26-11-2014 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நான்(முகிலன்) கண்டித்துப் பேசினேன். ஆலையின் பாதிப்பு பற்றியும் விரிவான மனுவும் கொடுத்து வந்தேன்.

ஏற்கனவே பெருந்துறை - சென்னிமலை சிப்காட் பகுதியில் 2700 ஏக்கரில் வளர்ச்சி என 2000 ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்பட்ட பல்வேறு தொழிற்சாலைகளால் (சாய, தோல், ஆஸ்பெட்டாஸ், சானிடரிவேர், இரும்பு ஆலை போன்ற...) ஏற்கனவே மிகுந்த சுற்றுசூழல் பாதிப்புக்கும், புற்றுநோய் உட்பட எண்ணற்ற நோய் பாதிப்புக்கு உள்ளாகி மீள முடியாத வேதனையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு குடும்ப வகையில் ஒருவர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். வளர்ச்சி என்று கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகளினால் ஈரோட்டில் உணவகம் உள்ள அளவு மருத்துவமனையும் உள்ளது. கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை ஈரோடு மாவட்டத்தில் மிகுதியாக உள்லது.

இதன் காரணமாகவே இப்பகுதி கிராம மக்கள் சிப்காட் விரிவாக்கத்திற்க்கு என அரசு 1200 ஏக்கர் நிலம் எடுத்த போது 2009- 2010 ஆண்டில் மக்கள் தொடர்ந்து போராடி அரசின் உத்தரவை திரும்ப பெற வைத்தனர். மேலும் சிப்காட்டில் 2010 ஆம் ஆண்டில் எட்டு மாவட்டங்களின் நச்சுக் கழிவுகளை கொண்டு வந்து மேலாண்மை செய்வது என ” நச்சுக் கழிவு மேலாண்மைதிட்டம்” கொண்டு வந்த போது நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், நாங்கள் பல ஆயிரம் மக்களை திரட்டி வந்து பல்வேறு ஆதாரங்களை கூட்டத்தில் முன் வைத்து அத்திட்டதை முறியடிதோம்.

காவேரி விவசாயிகள் குறிப்பாக டெல்டா பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக முறையான நேரத்தில் தண்ணீர் வரத்து இன்றியும், கர்னாடகத்தின் அடாவடியாலும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் விவசாயிகள். இதனால் பலர் நிலத்தை விற்றுவிட்டு ஊரையே காலி செய்து சென்று விட்டனர். காவிரி ஆற்றில் முறையான பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத நிலையில் பெருந்துறை சிப்காட் பகுதியில் சட்டவிரோதமாகவும், மக்களின் ஒப்புதல் இல்லாமலும் காவேரி ஆற்றில் தினமும் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க அமெரிக்காவின் கொக்கோ- ஆலைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவின் கொக்கோ- கோலா ஆலையினால் இப்பகுதி மிகுந்த சுற்றுசூழல் பாதிப்படையும், ஏற்கனவே இங்கு கெட்டுள்ள நீராதாரம் இன்னும் மிகுந்த மாசடையும், இதன் கழிவுநீரால் சென்னிமலை-பெருந்துறை வட்டாரத்தின் நிலத்தடி நீர் வளம் அனைத்தும் முழுக்க அழிந்து விடும். விவசாயம் என்பது எழுத்தில் மட்டுமே இப்பகுதியில் பார்க்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே கொக்கோ- கோலா ஆலைஇயங்கி வந்த கேரளாவின் பிளாச்சிமாடா, உத்திரபிரதேசம் வாரணாசி போண்ற பகுதிகளில் நீராதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயம் அழிந்து போய் மக்கள் பல ஆண்டுகாலம் தொடர்ந்து போராடி கொக்கோ- கோலா ஆலை இழுத்து மூடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் கொக்கோ- கோலா ஆலை தொடங்க முயற்சி செய்யப்பட்டு, மக்கள் போராட்டத்தால் பின்வாங்கி சென்றனர்.

கொக்கோ- கோலாவில் கலக்கப்படும் மெட்டபாலின் மூலம் புற்றுநோய் ஏற்படும் என்பதாலேயே டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் கொக்கோ- கோலா, பெப்சி விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் கொக்கோ- கோலா, பெப்சி விற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது

இப்படிப்பட்ட கொக்கோ- கோலா ஆலை தொடங்கப்படுவதைக் கண்டித்தும், பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்படும் பல்வேறு ஆலைகளினால் ஏற்பட்டு வரும் பாதிப்பை கண்டித்தும், 05-01-2015 திங்கள் அன்று பாதிக்கப்பட்ட கிராம மக்கள் உருவாக்கி உள்ள பெருந்துறை சுற்றுசூழல் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு பேரணியை நடத்த இருந்ததை பெருந்துறையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை [30(2) சட்டம் அமுலில் உள்ளது] இருக்கிறது எனக் கூறி காவல்துறை திடீர் தடை விதித்தது.

பத்து நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு பொறுப்பாளர்கள் கடிதம் கொடுத்த நிலையில், பேரணிக்கு முந்தைய நாள் பேரணிக்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நீதிமன்றம் சென்று கூட அனுமதி வாங்கி விடக் கூடாது என்னும் அரசின் சதியாகவே இருந்தது..

இப்படிப்பட்ட நிலையில்தான் வேறு வழியின்றி மக்கள் தனது எதிர்ப்பை அரசுக்கு காட்ட, 08-02-2015 ஞாயிற்றுக்கிழமை, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமெரிக்காவின் கொக்கோ-கோலா ஆலையை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்திற்க்கு உயர்நீதிமன்றத்தில் (WP.NO.1865/2015) அனுமதி வாங்கி நடத்தினர். இந்த போராட்டம் நடத்திய அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் (WP.NO.1865/2015) அனுமதி வாங்கியுள்ளோம், காவல்துறை பாதுகாப்போடு நடக்கும் போராட்டம் என்று சொல்லியே மக்களை அழைத்திருந்தனர். இது எவ்வளவு தூரம் அரசின் அடக்குமுறையை கண்டு மக்கள் அனைவரும் மிரண்டு உள்ளனர் என்பதையே காட்டுகிறது. மேலும் இப்போரட்டத்தில் ஒலிபெருக்கி வைத்துக் கொள்ளக் கூட தமிழக அரசு அனுமதி தரவில்லை. அதே போல் தானி(ஆட்டோ) பிரச்சாரத்திற்க்கும் அனுமதி தரவில்லை.

எனவே இப்போரட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து மக்களை இணைத்து வந்த பெருந்துறை சுற்றுசூழல் பாதுகாப்பு அறக்கட்டளை அனைத்து அரசியல் கட்சிகளையும்(ஆளும் அ.இ.அ.தி.மு.க. தவிர்த்து), பல்வேறு சமூக நலன் காக்கும் அமைப்புகளையும் இணைத்து கொண்டு அமெரிக்காவின் கொக்கோ- கோலா ஆலையை எதிர்த்து நாளை மறுதினம் (05-03-2015) வியாழக்கிழமை சென்னிமலை-பெருந்துறை நகரத்தில் கடையடைப்பு போராட்டதை அறிவித்து உள்ளது.

மேலும் கொக்கோ-கோலா ஆலை அமையும் பகுதி பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் வருகிறது. இதன் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இப்போது சுற்றுசூழல் அமைச்சராக உள்ள தோப்பு.வெங்கடாசலம் அவர்கள் இங்கு அமைக்கப்படும் கொக்கோ-கோலா ஆலைக்கு எதிராக இதுவரை எதுவும் தெரிவிக்காமல் வாய்மூடி மவுனியாக இருப்பதோடு, கொக்கோ-கோலா ஆலைக்கு எதிராக மக்கள் நடத்தும் அனைத்து போரட்டங்களையும் சீர்குலைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு அடக்குமுறைகளை போராடுபவர்கள் மீது ஏவி வருகிறார்.

சுற்றுசூழல் அமைச்சராக உள்ள தோப்பு.வெங்கடாசலம் அவர்களும், இவர் சார்ந்துள்ள தமிழக அரசும் கொக்கோ-கோலா ஆலைக்கு முழுக்க துணை நின்று வருகிறது. இந்த ஆலை நிர்வாகத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து துணை நிற்பதன் மூலம் இவர்கள் ஆலை நிர்வாகத்திடம் மிகப் பெரிய பயன் பெற்று உள்ளனர் என்பது மிக வெளிப்படையாகவே தெரிகிறது. நம்மிடம் ஓட்டை மட்டும் வாங்கிக் கொண்டு ,மக்கள் நலனில் அக்கரை அற்று செயல்படும் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

சென்னிமலை- பெருந்துறை நகர கடையடைப்பு போரட்டச் செய்தியை இன்று பெருந்துறை பகுதியில் துண்டறிக்கை மூலம் மக்களுக்கு தெரிவிக்க அனைத்து அமைப்புகளும் இணைந்து பெருந்துறை கடைவீதியில் கடை கடையாகச் சென்றனர். அமைதியாக கருத்து பரப்புரை செய்தவர்களை தனது சனநாயகக் கடமையை ஆற்ற விடாமல் பெருந்துறை காவல்துரை துணைக் கண்காணிப்பாளர் பாசுகரன் அவர்கள் அமைச்சரின் தூண்டுதலின் பேரில் தடுத்துள்ளார்.

தமிழகஅரசு மீத்தேன் திட்டம் முதல் கொக்கோ-கோலா, பெப்சி, அணு உலை திட்டம், நியூட்ரினோ என ஒவ்வொன்றிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பது இந்த அரசு தமிழக மக்களுக்கு என இல்லாமல் வெளிநாட்டு கம்பனிக்கு ஆதரவாகவே உள்ளது என்பது மீண்டும், மீண்டும், அம்பலமாகி வருகிறது. நாடு மீண்டும் ஒரு மாபெறும் வெள்ளையனை எதிர்த்துப் மாபெரும் போராட்டம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

coke agitation

இந்த சென்னிமலை-பெருந்துறை நகர கடையடைப்பு போரட்டம் நமது வாழ்வாதாரத்தைக் காக்கும் போராட்டம். நமது எதிர்கால சந்ததியைக் காக்கும் போராட்டம். உலக கொள்ளைக்காரனாக வலம் வரும் அமெரிக்காவின் நீர்வளக் கொள்ளையை எதிர்க்கும் போராட்டம். மீண்டும் நம்மை சுரண்ட வந்துள்ள பன்னாட்டு கம்பனிகளையும், அதன் கொள்ளையைகளையும் எதிர்க்கும் மாபெரும் அறப்போராட்டம்.

ஏற்கனவே வெள்ளையனை எதிர்த்து மாபெரும் ஆயுதம் தாங்கி வீரப் போராட்டம் நடத்திய தீரன் சின்னமைலை உலவிய மண் இது. வெள்ளையனே வெளியேறு என முழங்கி தனது இன்னுயிரை கொடுத்த திருப்பூர் குமரன் பிறந்த மண் இது. 1965- மொழி காக்கும் போரட்டத்தில் ராணுவத்தையே நேரடியாக எதிர்கொண்டு போரடிய வீரம் செறிந்த பூமி இது. இராணுவத்தின் துப்பாக்கிக்கு தனது உயிரைக் கொடுத்த மாணவர் நடராசனின் ஊர் இது. விவசாயிகளின் பிரச்சினைக்காகவும், தொழிலாளர் உரிமைக்காகவும், பல்வேறு சமூக பிரச்சினைக்காகவும், தமிழகத்தின் உரிமைக்காகவும், காவல்துறையின் அத்துமீறலையும் எதிர்த்து நின்று எண்ணற்றோர் சிறை சென்றும் பல்வேறு அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட மண் இது.

ஏற்கனவே 2003-இல் முக்காலியில் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்த போது ரோட்டிற்க்கு திரண்டு வந்து இருபத்திஐந்தாயிரம் மக்கள் போராடி அதை தடுத்து நிறுத்தினோம். இப்பொது அமெரிக்காவின் கொக்கோ- கோலா ஆலை எதிர்த்து நடக்கும் இப்போராட்டதை அனைத்து பொதுமக்களும்- வணிகர்களும் தங்களின் ஒருநாள் பாதிப்பை நமது வருங்கால தலைமுறைகளின் நல்வாழ்வுக்காக மனதார ஏற்றுக் கொண்டு, இப்போராட்டதை வெற்றிபெற செய்ய வைக்கக் வேண்டுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Pin It