ஆணையிட்டவனுக்குத்தான் அறிவில்லை
சுட்டவனுக்குமா சுயமில்லை

மணல் கொள்ளைக்காரனை நோக்கி
பாயாத தோட்டாக்கள்
மானக் கொள்கைக்காரன் மீது பாய்வதில்
களைகிறது அரச ஒப்பனை
முளைக்கிறது காவி சொப்பனம்

குறி பார்த்து நகர்ந்து நகர்ந்து
பதுங்கி முன்னேறுவது
ஆகச் சிறந்த நகைச்சுவை
அத்தனை பயங்கரவாதிகளா நாங்கள்
இல்லை
அத்தனை பயம் தருகிறதா எங்கள் தமிழ்

கோடி கோடியாய் சுருட்டிக் கொண்டு
ஓடியவனை விட்டு
உரிமைக்கு குரல் கொடுத்த குருவிக் கூட்டை
சுட்டது தான் சட்டமெனில்
அது முட்டுச்சந்து இருட்டறைதான்

குடி கெட்டாலும் குடை சாயாது
நீவீர் சுட்டாலும் நிஜம் தீயாது

மண்ணுக்காக மனிதம் காக்க
போராடுவதுகூட புரியவில்லையெனில்
மானங்கெட்ட தத்துவங்களை
வைத்து கொண்டு
மாலையிட்டுக் கொள்ளுங்கள்
உயிருள்ள பிணங்கள் நீங்கள்

இன்னும் மெழுகுவர்த்தி ஏந்தி
வீதியில் நிற்போம் என்று நினைத்தால்
உங்கள் சிக்குண்ட கற்பனை அது

தோட்டாக்கள் விளைவிக்கும்
காலத்துள் தள்ளி விட்டீர்கள்
துப்பாக்கிகள் குடிசைத் தொழிலாகும்
ஜாக்கிரதை

நீங்கள் எம்மக்களை சுட்டீர்கள்
உங்களுக்கும் சேர்த்தே அவர்கள்
செத்தார்கள்
நீங்கள் எம்மக்களை சுட்டீர்கள்
உங்களுக்கும் சேர்த்தே அவர்கள்
உயிர்த்தெழுவார்கள்

செத்தவன் குடும்பம் அழுது கொண்டே
சொல்லட்டும்
செத்த பிள்ளைகள் வீரர்கள் என்று

சுட்டவன் குடும்பம் காலத்துக்கும்
அழுகட்டும்
சுட்ட பிள்ளைகள் துரோகிகள் என்று

தவம் கலைந்த பின் வரம் பிறழ்ந்த
வனத்தில் போதி என்ன செய்யும்
கிளை பரப்பி புது விதி செய்யும்.......!

- கவிஜி

Pin It