கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

காவல் நிலையங்கள் பூசை மடங்களாக மாறி நிற்பதையும், காவல்துறை அதிகாரிகளே கோயிலில் தீ மிதிப்பதையும் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டித்தார்.

15.6.2007 இல் ஈரோடு கருங்கல் பாளையத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் மற்றும் நாத்திகர் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி. அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பல்வேறு ஆழமான செய்திகளைத் தெரிவித்தார். அதில் சில பகுதிகள்...

“தங்களுடைய உடலை வருத்திக் கொண்டு தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் பங்கு பெற்றார்கள். மக்கள் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு விழித்தெழச் செய்வதற்கே இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

இந்த நாட்டின் அரசியல் சட்டம், அறிவியல் மனப்பான்மையைத் தாண்டி, எதையும் ஏன், எப்படி, எதற்கு என்று கேட்கச் சொல்லி வலியுறுத்தி, “To promote Scientific Temper, Sprit of Enquiry - it shall be the duty of every citizen of India ” - என்று ஒவ்வொரு குடிமகனையும் கேட்கச் சொல்கிறது. ஆனால், எதையும் ஏன், எப்படி என்று கேட்டு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்க நினைத்தால் காவல்துறையே தடுக்கிறது.

நம் நாட்டின் காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்தால் இப்படிப்பட்ட ஊர்வலத்திற்கு, போராட்டத்திற்கு தேவையே இருக்காது. இரட்டைக் குவளை எதிர்ப்பு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - இவையெல்லாம் தேவையே இருக்காது. அரசியல் சட்டம் பற்றியும், போராட்ட நோக்கம் பற்றியும் காவல் துறையினருக்கு அறிவே இல்லை என்று கூறிவிட முடியாது. அறிவு இருக்கும். பயன்படுத்துவது இல்லையே என்றுதான் நாங்கள் வருத்தப்படுகிறோம்!

கடந்த காலத்தின் ஒரு தி.மு.க. அமைச்சர் பண்ணாரியம்மன் கோயிலில் தீ மிதித்ததை காட்டுமிராண்டி என்று அன்று முதல்வராக இருந்த கலைஞர் கண்டித்தார். இப்போது இந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் தீச்சட்டி எடுக்கக் கூடாது என்று தடைபோடும் எஸ்.பி., டி.எஸ்.பி. போன்ற உயர் காவல் அதிகாரிகள், அதே பண்ணாரி கோயில் குண்டத்தில் இறங்கி தீ மிதிக்கிறார்களே -அவர்களை காட்டுமிராண்டி காவல்துறை என்று அழைப்பதா? நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

அய்ரோப்பாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்க கடுமையான போராட்டம் தொடங்கப்பட்டது. பிரான்சில்தான் முதலில் தொடங்கியது.

இந்த நாட்டில் என்னவென்றால் மதத்தை அடிப்படையாகக் கொண்டே அரசியல் நடக்கிறது. ஆட்சியும் நடக்கிறது. பாரதிய ஜனதா ஆட்சியில்தான், மத நல்லிணக்கத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அளிக்கப்பட்டது. அதில், அரசு அலுவலகங்களில், செல்லும் வழிகளில் மத சுலோகங்கள் எழுவதே கலவரங்களுக்குக் காரணம் என்பதைக் குறிப்பிட்டு, அரசு அலுவலகங்களில் எந்த வழிபாடும் இருக்கக் கூடாது, வழிபாட்டுத் தலங்களை அமைக்கவோ, விரிவாக்கவோ கூடாது - என்று குறிப்பிட்டது.

கரசேவைக்கு அயோத்திக்கு ஆள் அனுப்பியதாகக் கூறிய ஜெயலலிதா ஆட்சியில் அரிபா°கர் என்ற பார்ப்பனர் உள்துறை செயலாளராக இருந்தார். அவர் 1994 இல் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, அதில் அரசு அலுவலகங்களில் எந்த மத வழிபாடும் கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

அதற்கடுத்து 2005-இல் ‘லத்திகாசரண்’ என்ற காவல் துறை துணைத் தலைவர் காவல் துறைக்காகவே ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, அதில் காவல் துறை அதிகாரிகள் எந்த மதச் சடங்குகளிலும் ஈடுபடக் கூடாது - வளாகங்களில் வழிபாட்டுத் தலங்கள் கூடாது - என்றெல்லாம் குறிப்பிட்டு, அதை மீறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தண்டனை அளிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். காவல் அதிகாரிகள் அதை மதித்தார்களா? மதிக்கிறார்களா?

என்ன நடக்கிறது காவல் நிலையத்தில்? வெள்ளிக் கிழமை தோறும் பூசை! ஆடி மாத பூசை! அறைக்கு மட்டுமல்ல, கை விலங்குக்கும், பூட்டுக்கும் கூடப் பூசைதான்! எதற்கு இன்னும் அதிகம் பேரை கைது செய்யவா? இன்னும் அதிக வசூல் தேவை என்பதற்காகவா? எந்த சட்டத்தை மதித்திருக்கிறது காவல் துறை? இதையெல்லாம் பெரிய இயக்கங்கள் என்று சொல்பவர்கள் கேட்க மாட்டார்கள்.

“எந்த மதமும் ஒலி வைத்து - மேளம் அடித்து வழிபடச் சொன்னதில்லை! நோயாளிகள், மாணவர்களின் உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை! ஒரு நிமிடமாக இருந்தாலும் ஒலி பெருக்கியை வழிபாட்டில் பயன்படுத்தக் கூடாது” என்று இந்த நாட்டில் உச்சநீதி மன்றமே தெளிவாகக் கூறியிருக்கிறது. ஆண்டுத் தேர்வின் போது மாரியம்மன் பண்டிகை! அரையாண்டுத் தேர்வின் போது அய்யப்பன் சீசன்!

உச்சநீதிமன்றத் தீர்ப்பை காவல் துறை மதிக்கிறதா? இந்த ஆண்டிலிருந்து நாங்கள் நீதி மன்ற ஆணையுடன் வருகிறோம்! பார்த்துக் கொள்வோம்!

சட்டம் என்பதே காவல்துறைக்கு ஆகாத செய்தி! சட்டம் பேசினால், “ஏண்டா சட்டமா பேசுகிறாய்?” என்று அடிப்பது அவர்களின் பாணி! அவர்களுக்குப் பிடிக்காத வார்த்தை சட்டம். சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர்களின் நிலை இப்படி இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள்தான் நமது ஊர்வலத்திற்கு சட்டம் பேசி - தடை செய்ய முயற்சிக்கிறார்கள்!

காவல்துறை அடக்குமுறை நமக்குப் புதிதல்ல! தனக்கு ஆகாதவர் மீது பொய் வழக்குப் போடுவது, பொருந்தாத வழக்கில் கைது செய்வது அவர்களுக்கு வாடிக்கை! நெருக்கடி நிலை காலத்தில் தி.மு.க.வை ஆதரித்ததற்காக பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணனை ஒரு ஆண்டு சிறையில் அடைத்தார்கள். இராஜீவ் கொலை சம்பவத்தில் மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. வேலூரில் புலிகள் சுரங்கம் வெட்டித் தப்பினார்கள் என்பதற்காக என்னை ஓராண்டு சிறையில் தள்ளினார்கள். அதற்காக விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில் நாம் பின் வாங்கியது இல்லை.

இப்போது புலிகளின் மீதே ‘பால்ரஸ்’ குண்டுகளை இலங்கைக்குக் கடத்தியதாகக் கூறி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்கிறார்கள். பால்ரஸ் குண்டு என்பது ஆயுதமா? அதை அவன் நாட்டுக்குக் கொண்டு சென்றால், உன் நாட்டுப் பாதுகாப்புக்கு எப்படி பாதிப்பு வரும்? ‘இந்து’ போன்ற ஏடுகள் அந்த பால்ரஸ் குண்டுகளை “எக்ஸ் புளோசிவ் - வெடி பொருள்” என்றுதான் குறிப்பிடுகின்றன. அதைக் கண்டு ஆட்சியாளர் பொய் வழக்குப் போடத் துணிந்து விடுகிறார்கள்.

சீரங்கத்தில், பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தைப் போன்று, முத்துப்பேட்டை என்ற ஊரிலும் பெரியார் சிலையை அண்மையில் உடைத்தார்கள். அதற்கும் எதிர் வினையாக தஞ்சாவூரில் பார்ப்பனரின் பூணூல் அறுக்கப்பட்டது. நெய்வேலியில் பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டது. அவர்கள் மீது எல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்படவில்லை.

கலைஞருக்கு இப்போதாவது புதிய சிந்தனை வந்து அவர்கள் மீது வழக்குப் போடவில்லை என்றால், நாங்கள் வரவேற்போம்! அதைச் செய்தவர்கள் திராவிடர் கழகத்துக்காரர் என்பதால் விட்டுவிட்டார்களா? அப்படி என்றால் கண்டிக்கிறோம்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரைத்தால், அது தற்காலிகமானதுதான் - இரண்டு வாரங்கள் தான் செல்லுபடியாகும். அதன் பிறகு அரசுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அரசு ஏற்றுக் கொண்டால்தான் அந்தச் சட்டம் தொடர முடியும். கழகத் தோழர்கள் மீது போட்ட வழக்கு இப்படித்தான் அரசின் முழு ஆதரவோடு தொடர்ந்தது. அதன் பிறகும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் கொண்ட அறிவுரைக் கழகம் - அப்படி வழக்குப் போட்டது சரிதான் என்று கூறி விட்டனர். அதன் பின்புதான் உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உடைத்து, தோழர்களை வெளிக் கொண்டு வந்தோம்.

எனவே, எப்படிப்பட்ட பொய் வழக்குகளையும், பொருந் தாத வழக்குகளையும், காவல்துறையின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து எதிர்க்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

தஞ்சையில் கடந்த மே 19 ஆம் தேதி சாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தினோம். அரசியல் சட்டத்தை அமுல்படுத்தி அம்பேத்கர் பேசிய போது - “இன்று அரசியல் சமத்துவம் தான் கிடைத்திருக்கிறது. ஆனால், பொருளாதார, சமூக சமத்துவம் - கிட்டவில்லை. அப்படிப்பட்ட சமத்துவம் கிடைக்காவிட்டால் சட்ட அமைப்பே தகர்ந்து போய்விடும். அனைத்தும் வீணாகி விடும்” - என எச்சரித்தார். அந்த நிலை தான் உருவாகியது.

சாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளைக் கொளுத்தப் போவதாக பெரியார் அறிவிக்கிறார். நவம்பர் 3 ஆம் தேதியன்று அதற்காக, தஞ்சையில் மாநாடு நடைபெறும் என முழங்கினார்.

அரசு நடுங்கியது. ஏனென்றால் அரசியல் சட்டத்தை எரித்தால் அதற்கு என்ன தண்டனை என்று அப்போதைக்கு சட்டமே கிடையாது. எனவே பெரியாருக்காகவே, நவம்பர் 11 ஆம் தேதி, காந்தி பட அவமதிப்பு, தேசியக் கொடி எரிப்பு, சட்டப்பிரிவு எரிப்பு ஆகியவைகளுக்கு தண்டனை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. மூன்று ஆண்டுகள் சிறை என்பது உறுதியாகத் தெரிந்த பிறகும், 1949 இல் தி.மு.க. பிரிந்து சென்ற பின்பும் பெரியாரின் அழைப்புக்காக மூன்று லட்சம் பேர் கூடினார்கள். 12,000 பேர் கைது செய்யப்பட்டார்கள். 3000க்கும் மேற்பட்டவர்கள் சிறைச் சென்றார்கள். சிறையில் 5 பேர் இறந்தார்கள். சிறையிலிருந்து வெளிவந்த 13 பேர் அதன் கொடுமை தாங்காமல் ஒரு வாரத்திற்குள் இறந்து விட்டார்கள்.

அதன் 50 ஆவது ஆண்டை நினைவு கூரத்தான் தஞ்சையில் சாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தினோம். அந்த மாநாட்டில், 50 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப் பிரிவைக் கொளுத்தி சிறை சென்ற தோழர்களில் தற்போது உயிருடன் இருப்பவர்களில் சிலரையாவது பெருமைப்படுத்த நினைத்துப் பாராட்டினோம்! அந்த உணர்ச்சிகரமான நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டக் களத்தை நம் இளைஞர்களுக்கு நினைவூட்டி, கொள்கை உரமூட்டும் என்றும் நினைத்துப் போற்றினோம்.

1939 இல் கடலூரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு திருப்பாதிரிப்புலியூர் - ஞானியார் அடிகள் ஆசிரமம் ஒன்று உள்ளது. அந்த அடிகளாரை வைத்துத்தான் பெரியார் தனது முதல் ‘குடி அரசு’ இதழையே வெளியிட்டார். அப்படிப்பட்ட அந்த மடத்தில் இதே கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த வடிவேல் செட்டியார் என்பவரும், அந்த மடத்தின் செயலாளராக இருந்த தங்கப் பெருமாள் பிள்ளை என்பவரும், பெரியாரிடம் கோரிக்கை வைத்து, அந்த மடத்தில் வந்து உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

சாமி மடத்தில் பெரியார் பேச்சு. பேச்சின் தலைப்பு “நம்முன் உள்ள கேள்விகள்” என்பதாகும். அங்கு பேசும் போது பெரியார் குறிப்பிடுகிறார் - “உங்களை வெறுக்கும் பார்ப்பனர்களை எதிர்ப்பதற்காக என்னைப் பேச அழைத் தீர்கள். ஆனால் நீங்கள் நசுக்கும் மக்கள் குறித்து, அவர்களின் தீண்டாமைக் கொடுமை பற்றி என்ன செய்திருக்கிறீர்கள்? தீண்டாமையை வலியுறுத்தும் சாதியை ஒழிக்க நாள் கணக்கில் காத்துக் கொண்டிருக்க முடியாது. நாளைக்கே செய் என்றால் தீர்வு காணப் புறப்பட வேண்டும். உங்களுக்குக் கீழாக இருக்கும் அவர்களைப் பார்த்து பரிவு வந்திருக்கிறதா? அவர்களுக்காகப் போராடியிருக்கிறீர்களா?” என்று சாட்டையடியாக விளாசினார்.

ஏனென்றால் பெரியாரின் அடிப்படை சாதி ஒழிப்பாக இருந்தது. பார்ப்பனர்களைப் பொருத்தவரை அனைத்து சாதியினரும் தீண்டத்தகாதவர்கள் தான். அனைவரும் அவனுக்குக் கீழ்தான்! எல்லாத் தலைவர்களும் கீழ் சாதி தான். உயர்சாதிப் பெரிய தலைவர்கூட கோயிலுக்குள் நுழைய முடியாமைக்கு இந்தத் தீண்டாமையே காரணம் - என்றார் பெரியார்.

அவருடைய நாத்திகம் வெறும் கடவுள் மறுப்புக்காக மட்டும் இல்லை. கடவுள் உண்டா இல்லையா என்னும் விவாதத்தை அறிஞர்கள் ஒரு அறையில் அமர்ந்து பேசிக் கொள்ளட்டும். எங்களுக்கு சமத்துவம் தான் தேவை என்றார்.

சாதியமும், தீண்டாமையும், இந்து மதத்தின் கூறாக இல்லாமல் இருந்திருந்தால், இந்து மதத்தைப் பற்றிக்கூட பெரியார் பேசாது இருந்திருப்பார். அது சமத்துவத்துக்கு எதிராக இருந்ததால் - சமத்துவத்தை நேசித்த பெரியார் அதை எதிர்த்தார்.

இந்துமதத்தைப் பற்றிப் பெரியார் பேசும் போது அது வேதத்தால் எழுதப்பட்டது என்றார்கள். வேதத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன போது, அது கடவுள் எழுதியது என்ற பிறகுதான், பெரியார் கடவுள் சங்கதிக்கே வருகிறார். அப்படியா என்று அதை எதிர்க்கத் தொடங்கினார்.

“நான் சாதியத்தை மட்டும் அழித்து, எரித்து கொளுத்தலாம் என நினைக் கிறேன். அப்போது இந்துமதமும் போகிறது என்று சொல்கிறீர்கள். உங்கள் இந்து மதம் அப்படிப் புனிதமானதாக இருந்தால், இந்து மதத்தை தனியே பிரித்துக் கொள்ளுங்கள், சாதியை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். இல்லை - இந்து மதத்தில் சாதி பிரிக்க முடியாமல், பிணைக்கப்பட்டிருக்கிறது என்றால், நான் அதையும் தான் எதிர்ப்பேன்!” என்றார்.

“இந்து மதத்தைத் தாக்கி அழிக்க நினைக்கும் போது வேதமும் அழிகிறது என்று சொன்னால், வேதம் புனிதமானது என்று நினைத்தால் - வேதத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள், நான் இந்து மதத்தை அழித்துக் கொள்கிறேன். இல்லை, வேதம் பிரிக்க முடியாதது என்றால், வேதத்தையும் சேர்த்துத்தான் எரிப்பேன் - அந்த வேதத்தை எழுதியது கடவுள் என்றால், அப்போது கடவுளையும் பிரிக்கச் சொல்கிறேன், முடியாது என்றால் கடவுளையும் சேர்த்து அழிப்பேன்” என்று பெரியார் தர்க்கவாதம் செய்தார்.

எனவே, பெரியார் பேசிய நாத்திகம் - சாதி ஒழிப்புக்காகப் பேசிய நாத்திகம். இப்போது எல்லா மதத்திற்கும் சாதிய நோய் வந்துவிட்டது. ஆண்டவன் முன் எல்லோரும் சமம் என்று அனைத்து மதங்களும் சொல்கின்றன. நம் “அர்த்தமுள்ள” இந்து மதமோ - சமம் இல்லை என்பதையே தத்துவமாகக் கொண்டுள்ளது. பிற மதங்களில், அந்தந்த மத நூல்களைப் படி... படி... என்று வற்புறுத்துகிறார்கள். இந்து மதத்தில்தான் வேதத்தைப் படிக்காதே, கேட்காதே என்பதை ஒரு விதியாகவே வைத்திருக்கிறார்கள்.

பெரியார் இது பற்றி எளிமையாகவே கேட்டார். “பதிவு செய்வதற்காகப் பத்திரத்தை எழுதிவிட்டு, படிக்காமல் கையெழுத்துப் போடச் சொல்லும் அயோக்கியனுக்கும், உனக்கும் என்ன வேறுபாடு?” என்றார்.

அவரது நோக்கம் வெறும் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமல்ல...

நிறைய பேர் பார்ப்பன எதிர்ப்புக் காட்டுவார்கள். திருநெல்வேலி சைவப் பிள்ளை மார்கள் நம்மைவிடப் பார்ப்பனர்களை கடுமையாக எதிர்ப்பார்கள். ஏனென்றால் பார்ப்பனர்களைவிட நாங்கள் மேல் சாதி என்று காட்டுவதற்காக எதிர்க்கிறார்கள். அண்ணா ஒருமுறை அழகாகச் சொன்னார், “பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே எங்கள் கொள்கை என்றால், எங்கள் தலைமையிடம், ஈரோட்டில் இருக்காது. திருநெல்வேலியில் இருக்கும்” என்றார்.

எனவே, பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே நமது கொள்கை இல்லை. சாதி ஒழிப்புடன் சேர்ந்த பார்ப்பன எதிர்ப்பு, அத்துடன் இருக்கும் நாத்திகமே பெரியாரின் லட்சியமாக இருக்கிறது. கடவுள் பெயரால் கட்டப்பட்டுள்ள மதங்கள் - அது, அது நிலை நிறுத்தும் சாதியம் அதை எதிர்க்க வேண்டும் - அதன் ஒரு கூறாக ஒட்டிக் கொண்டிருக்கும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு.

ஆங்கிலேயன் இந்த நாட்டில் சுரண்டப்படும் மக்கள், பின்தங்கிய மக்களின் நிலையைப் பார்த்து சிந்தித்தான். உயர் சாதி மக்களிடம் நிலம் இருக்கிறது - நிலம் ஒரு உற்பத்திச் சாதனம் - அது தாழ்த்தப்பட்டோரிடம் இல்லாததால் அவர்களது தாழ்வுநிலை தொடர்கிறது. எனவே, பஞ்சமி நிலங்கள் என்று அவர்களுக்கு நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தான். பொதுவுரிமை இல்லாத நாட்டில் பொதுவுடைமை கிடைக்காது என்பதால் இந்த நிலங்களை வேறு யாரும் அபகரித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக - அதை யாருக்கும் விற்கக் கூடாது என்பதற்காக - அவர்களுக்குள் வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம் என்று விதிகளை ஏற்படுத்தி வைத்தான்.

அப்படி சுரண்ட வந்த ஆங்கிலேயர் கொடுத்த உரிமை சுதந்திர இந்தியாவில் பறிபோய் விட்டது. வெள்ளைக்காரன் போய் பார்ப்பனக் கொள்ளைக்காரன் வந்ததும் போய்விட்டது.

பீகாரின் முன்னாள் முதல்வர், வழக்குரைஞர், சோசலிஸ்ட்டான “பிந்தோஸ்வர் பிரசாத் மண்டல்” தலைமையில் அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்கான மண்டல் குழு. இவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் போராட்ட அறிவிப்பிற்காக முதல்வர் பதவியையே தூக்கி எறிந்தவர்.

அவர் 2 ஆண்டுகள் இந்தியா முழு வதும் ஆய்வு செய்தார். 406 மாவட்டங்களில் 405 இல் நேரடியாகச் சென்று பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை குறித்து முழுமையான ஆய்வை மேற்கொண்டார். 1990 இல் அவர் பல்வேறு பரிந்துரைகளைக் கூறினார்.

தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதம், பழங்குடியினருக்கு 7.5 சதம் ஒதுக்கீடு செய்தது போக இந்துக்களில் 44 சதமும், மற்றவைகளில் 8 சதமும் பிற்பட்டோர் உள்ளதாகக் கூறினார் மண்டல். (மொத்தம் 52 சதவீதம்). சட்டச் சிக்கலால் மொத்த இடஒதுக்கீடு 50 சதத்தைத் தாண்டக் கூடாது என்பதற்காக, வேறு வழியின்றி பிற்பட்டோருக்கு 27 சத ஒதுக்கீடு - கல்வி, வேலை வாய்ப்பு, வங்கிக் கடன்களிலும் அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் பெரும்பாலும் உயர்சாதியினரிடம் இருப்பதால், தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்களுக்கு அவர்களின் உற்பத்தி உறவுகளில் புரட்சிகரமான மாறுதல்களை உண்டாக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு நிலங்களை வழங்க வேண்டும் என்றும், மண்டல் குழு பரிந்துரைத்தது. அது பற்றி யாரும் இப்போது பேசுவது கிடையாது.

கிராமக் கோயில்கள் குறித்து தோழமை உணர்வாளர்களின் கருத்துக்களிலிருந்து நாங்கள் மாறுபடுகிறோம். கிராமப் பொதுக் கோயில்கள் - நாட்டார் கோயில்கள் என்பவற்றில் எல்லாம் தோரணம் மறுக்கப்படுகிறது. அறங்காவலர் குழுவில் இருக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட தோழரைக்கூட கிராமங்களில் கோயிலுக்கு உள்ளே விடுவதில்லை. மாவட்ட எஸ்.பி. ஆட்சியரை வைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினாலும், மறுத்து விடும் நிலை இன்று நீடிக்கிறது. கிராமக் கோயில்கள் சாதியைப் பாதுகாக்கும் அரண்களாகவே செயல்படுகின்றன.

அப்படி தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத கிராமக் கோயில்களை சூன் மாதத்திற்குள் பட்டியல் எடுக்கச் சொல்லியுள்ளோம். அரசுக்கு, ஆட்சியாளர்களுக்கு, காவல் துறைக்கு, மனித உரிமை ஆணையத்திற்கு - இது குறித்த விவரங்களைத் தெரிவிப்போம். அப்போதும் நடவடிக்கை இல்லை என்றால், அடுத்தக் கட்டப் போராட்டத்திற்குச் செல்வோம்!

இரட்டைக் குவளை உள்ள தேநீர் கடைகளில் வருகின்ற ஆகஸ்டு 15 இல் தேர்ந்தெடுத்த இடங்களில் சென்று உடைப்பது, நவம்பர் 26 இல் பஞ்சமி நிலங்களில் சென்று உழவுஓட்டுவது, சனவரி 26 இல் அனுமதி அளிக்கப்படாத கோயில்களுக்குள் செல்வது - இப்படி அடுத்தடுத்து, போராட்டத் திட்டத்தை வகுத்துள்ளோம்.

இதில், காந்தியம் பேசி இனிப் பயனில்லை. காந்தியத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியல் மேடைகளில் பஜனையைக் கொண்டு வந்ததே காந்தி தான். இந்துமத ஆதரவு நாடாக இந்தியாவை ஆக்கியதில் காந்திக்குப் பெரும்பங்கு உண்டு. காந்தி மீது கடும் விமர்சனம் எங்களுக்கு உண்டு.

அம்பேத்கர், “காந்தியும் - காங்கிரசும் தீண்டத் தகாதவர்களுக்குச் செய்தது என்ன?” என்ற புகழ் பெற்ற நூலில் “Beware of Dogs” என்று வீடுகளில் எழுதுவார்களே அது போன்று “Beware of Gandhi” என்று கடுமையாக எழுதினார். காந்தி பேசிய அகிம்சையை அம்பேத்கர் வேறுவிதமாகப் பார்த்தார். எதிர்ச் சிக்கலை அகிம்சை என்றார். காந்தியின் அகிம்சை கோழைத்தனமானது. அம்பேத்கர் கூறியது புரட்சிகரமானது - நமக்குத் தேவையானது. இது புத்தரின் அகிம்சை - அது சமணரின் அகிம்சை.

அகிம்சைப் போராட்டம் நடந்த அந்தக் காலத்தில் கேரளாவில் ‘அய்யன் காளி’ என்பவர், தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக வெகுண்டு போராடினார். கள்ளுக்கடைகளில் தேனீர்க் கடைகளில் விட மறுத்த போது, அங்குச் சென்று உடைத்தார். வீதிகளில் உரிமை மறுக்கப்பட்டபோது, சலங்கை பூட்டிய மாட்டுவண்டிகளில் வண்டியைச் செலுத்தி, ஆதிக்கவாதிகளை வெகுண்டு ஓடச் செய்தார்.

அமெரிக்காவில் இன அடிப்படையில் பிரச்சினைகள் எழுந்த போது, “Nation of Islam” என்ற அமைப்பை “மால்கம் எக்ஸ்” என்பவர் தோற்றுவித்தார். எங்கெல்லாம் கறுப்பர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கு குழுவாகச் சென்று அடித்து உதைத்தார்கள். வெள்ளையர் இறங்கி வந்தார்கள். அது அமெரிக்க வரலாறு. எனவே, தோழர்களே தேநீர் கடை - கோயில் நுழைவு பஞ்சமி நிலப் போராட்டங்களில் திரண்டு வந்து கலந்து கொள்ளுங்கள். தோழமை அமைப்புகளை உடன் இணைத்துக் கொள்ளுங்கள். பெரியாரியலையும், சாதி ஒழிப்புப் போரையும் முன்னெடுத்துப் பாய்ந்து வரும் பெரியார் திராவிடர் கழகப் பணிகளுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்... தாருங்கள்!”

இவ்வாறு கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

தொகுப்பு : “தமிழ்த் தேனி”