கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

உடுமலையில் தலித் பொறியியல் பட்டதாரி சங்கர் படுகொலையைத் தொடர்ந்து புதுக்கோட்டை ஆலங்குடிப் பகுதியைச் சார்ந்த வினோத் எனும் தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா என்ற இடைநிலைச் சாதியைச் சார்ந்த பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்ய திட்டமிட்டனர். பிரியங்கா அவரது பெற்றோரால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுவரும் செய்தியை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் கார்த்திகேயன், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மணிகண்டன், உடனே முகநூலில் இதைப் பதிவிட்டனர். ‘உடனே இந்தப் பெண்ணை காப்பாற்றுங்கள்’ என்று அவர்கள் பதிவிட்ட செய்தியால் மனிதநேயம் கொண்ட ஏராளமானோர் ‘ஷேர்’ செய்தவுடன் காவல்துறை நடவடிக்கை எடுக்க முன் வந்தது. அந்தப் பெண்ணை மீட்டு திருச்சியில் பெண்கள் விடுதி ஒன்றில் காவல்துறை சேர்த்திருக்கிறது. இந்த செய்தியை ‘ஜூனியர் விகடன்’ ஏடு (30.3.2016) பதிவு செய்துள்ளது. ஜூ.வி. வெளியிட்ட செய்தி:

“மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை எனப் பல ஆக்கப்பூர்வமான விஷயங் களுக்காக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பெற்றோரால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட பிரியங்காவை மீட்பதற்கு சமூக வலைதளம் பயன்பட் டுள்ளது. கடந்த வாரம் ஒரு நாள், ‘அவசரம்... ஆணவப் படுகொலை செய்யப்படவிருக்கும் ஒரு பெண்ணின் உயிரைக் காக்க உதவுங்கள்’ என்று உலா வந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “புதுக் கோட்டை ஆலங்குடிப் பகுதி, பிரியங்கா-வினோத் இருவரும்

5 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். வினோத் ஒரு தலித். இதையறிந்த பிரியங்காவின் பெற்றோர் பிரியங் காவைக் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். பிரியங்கா, அவரின் உறவினர்களால் எந்த நேரத்திலும் கொலை செய்யப்படலாம். அவரைக் காப்பாற்ற முடியாத கையறு நிலையில் வெட்கித் தலைகுனிகிறோம். புதுக்கோட்டைப் பகுதி தோழர்களே, நண்பர்களே, மனித நேயமிக்கோரே வாருங்கள். உதவுங்கள்” என்று புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் கார்த்திகேயனும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் மணிகண்டனும் தகவலை அனுப்ப, அது பல தளங்களில் ஷேர் செய்யப்பட்டது.

இதற்கு மேலும் தாமதித்தால், ஓர் ஆணவக் கொலைக்குத் துணைபோன பழிவந்து சேரும் என்று நினைத்த காவல்துறை, உடனே ஆக்ஷனில் இறங்கியது. காவல்துறையால் மீட்கப் பட்ட பிரியங்கா, திருச்சி பெண்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டார். தங்களின் சாதிவெறிக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை சிலர் பயன்படுத்தி வரும் வேளையில், ஓர் ஆணவக் கொலையைத் தடுத்து நிறுத்துவதற்கு சமூக வலைதளங்கள் பயன்பட்டிருக்கின்றன” என்று ஜூ.வி. செய்தி வெளியிட்டுள்ளது.