"ஆம்பிரம் பதிப்பகத் துவக்கவிழா மற்றும் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா" கடந்த 28.12.2014 ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு கரூரில், "திருக்குறள் சமுதாய மையம்" ஆர்த்தி கண் மருத்துவமனை இரண்டாம் தளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

pattali bookவிழாவின் முதல் நிகழ்வாக, ஆம்பிரம் பதிப்பகம் துவக்கவிழா நடைபெற்றது. நாடறிந்த நற்றமிழ்ப் பாவலர் கடவூர் மணிமாறன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்க, ஆம்பிரம் பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் பாட்டாளி வரவேற்புரைக்க, ஆம்பிரம் பதிப்பகத்தின் இலச்சினையை "தமிழக மக்கள் பண்பாட்டுக் கழக"த்தின் மாநிலத் தலைவர். தோழர் மீ.த. பாண்டியன் அவர்கள் வெளியிட்டுத் துவக்கிவைக்க, "நடுகல்" பதிப்பகத்தின் சார்பில் எழுத்தாளர் வா.மு. கோமு அவர்களும், "மேலையார் பதிப்பகம்" சார்பில் திரு. மேலை பழனியப்பன் அவர்களும், கரூர் மாவட்ட மைய நூலகத்தின் "வாசகர் வட்ட"த்தின் துணைத்தலைவர் திரு. விமலாதித்தன் அவர்களும் வாழ்த்துரைத்தனர்.

அடுத்து நான்கு நூல்கள் வெளியீட்டு விழா துவங்கியது. கவிஞர் அருமன் பாரதியின் "தின்னத் தெரிந்த காடு" என்கிற கவிதை நூலினை வழக்குரைஞர் திரு. மு. தமிழ்வாணன் அவர்கள் வெளியிட, திரு. மூங்கில் ராஜா அவர்கள் பெற்றுக்கொள்ள, கவிஞர் திருச்சி சி. சிவா அவர்கள் நூல் அறிமுகவுரை நிகழ்த்த, கவிஞர் அருமன் பாரதி ஏற்புரை நிகழ்த்தினார்.

அடுத்ததாக புலியூர் முருகேசனின் "பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு" என்கிற சிறுகதை நூலை. "குறி" இதழ் ஆசிரியர் திரு. மணிகண்டன் அவர்கள் வெளியிட, எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்கள் பெற்றுக்கொண்டு அறிமுகவுரை நிகழ்த்த, நூலாசிரியர் புலியூர் முருகேசன் ஏற்புரை நிகழ்த்தினார்.

அடுத்த நூல் கவிஞர் மாகாவின் "பெவிலியனில் காத்திருக்கும் தலைகள்" என்கிற கவிதை நூலை மருத்துவர் ரமேஷ் அவர்கள் வெளியிட, கரூர் மாவட்ட மைய நூலகத்தின் "வாசகர் வட்ட"த்தின் தலைவர் திரு. தீபம் சங்கர் பெற்றுக்கொள்ள, கவிஞர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அறிமுகவுரை ஆற்ற, கவிஞர் மாகா ஏற்புரையாற்றினார்.

அடுத்ததாக பாட்டாளியின், "திராவிடநாடும் தேசிய இன விடுதலையும்" என்கிற ஆய்வு நூலினை "ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பின்" மாநிலத் தலைவர், தோழர் வே.பூ. இராமராஜூ அவர்கள் வெளியிட, "தமிழ்த் தேசப் பேரியக்கத்தின்" திருச்சி மாநகரச் செயலாளர், தோழர் கவித்துவன் அவர்கள் பெற்றுக்கொள்ள, திருச்சி மாவட்ட, "தமிழ்க் கலை இலக்கியப் பேரவை"யின் செயலாளர், பாவலர் இராசா ரகுநாதன் அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்த, நூலாசிரியர் பாட்டாளி ஏற்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கவிஞர் சிற்பிமகன் தொகுத்தளிக்க, "ஆம்பிரம்" பதிப்பகத்தின் சார்பில் திரு. புலியூர் முருகேசன் அவர்கள் நன்றியுரைக்க, விழா கரூர் மாவட்டத்தில் அரங்கு நிறைந்த கூட்டமாக நடைபெற்றது என்பது கரூர் இலக்கிய அன்பர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளித்தது.

செய்தித் தொகுப்பு : பாட்டாளி

Pin It