புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் அமோக விற்பனை!
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் இளைஞர்களைக் கவர்ந்து நிற்கின்றது என்று “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 18லிருந்து 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் கூட்டம் பெரியார் நூல் விற்பனைக் கடைகளில் அலைமோதுகிறது. அதே நேரத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பக்தி, ஆன்மீக நூலை வாங்குகிறார்கள் என்றும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. பெரியாரிய – கடவுள் மறுப்புக் கொள்கையில் இளம் வயது முதல் ஈர்க்கப்பட்டேன் என்று தனியார் கல்லூரியில் பணியாற்றும் 27 வயது இளைஞர் சவுமியா நாராயணசாமி கூறுகிறார். மதத்தோடு ஜாதி பிணைந்திருக்கிறது என்று அந்த நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் சமூகம், ஜாதி, மதம், பெண்ணடிமை கருத்துகளில் மூழ்கிக் கிடந்தது. “தமிழ்நாட்டு வரலாற்றில் சமூகத்தை வர்ணாஸ்ரமும், ஜாதியும் ஊடுறுவி சிதைத்தது. இப்போது மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். மாற்றம் தொடங்கி விட்டது” என்கிறார் 19 வயது இளைஞர் கருணாகரன். தமிழ் இலக்கியப் பட்டப் படிப்பில் அவர் முதலாம் ஆண்டு படிக்கிறார். கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் பெரியார் நூல்கள் விற்பனை ஆகின்றன. அண்மைக் காலமாக இளைஞர்கள் பெரியார் கொள்கை மீது மிகுந்த ஈடுபாடு ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று பெரியார் பதிப்பக நிர்வாகி சக்திவேல் கூறுகிறார். 120க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் பெரியார் நூல்கள் விற்பனைக்கு உள்ளன. புராணம், யோகம், மந்திரம் தொடர்பான நூல்களை 50 வயதுக்கு மேற்பட்டோர் வாங்குகிறார்கள் என்கிறார் ‘சின்மயானந்தா நிறுவன’ நிர்வாகி சாய் தேஜா.
தமிழ்நாடு மாணவர் கழக மாணவர்கள் சாதனை
நாசா, ஐஏஎஸ்சி, எஸ்ஐஏயூ இணைந்து நடத்திய பிஎஸ்1 மற்றும் பிஎஸ்2 தொலைநோக்கிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் விண்கற்களை கண்டுபிடிக்கும் போட்டியில் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் துறையிலிருந்து சந்தியா, ஷியாம், பிரபாகர், அகிலேஷ்வரன், பிஎஸ்சி வேதியியல் துறையிலிருந்து கோபாலன் ஆகிய தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களும் இவர்களுடைய ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு.கலைச்செல்வன் அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.இதில் கூடுதல் சிறப்பாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் “3 புதிய” விண்கற்களை கண்டுபிடித்துள்ளதால் அந்த விண்கற்களுக்கு பெயர் சூட்டும் அரிய வாய்ப்பை நமது தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களுக்கு நாசா வழங்கியுள்ளது. 3 விண்கற்களில் ஒன்றுக்கு “பெரியாரியல்” சார்ந்தப் பெயரை நாசாவிடம் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் பரிந்துரைக்க உள்ளனர். இதற்கு நாசா ஒப்புதல் தரும்பட்சத்தில் வானியல் சார்ந்த ஆராய்ச்சியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் பெயர் இடம்பெறும் என்றும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
முடிகொண்டான் சாரங்கபாணி முடிவெய்தினார்.
பெரியாரின் பெரும் தொண்டரும், தமிழ்நாடு அரசின் ‘நல்லாசிரியர்' விருது பெற்றவரும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக, தனது மகள், மகனுடனும், கழகத் தலைவர், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் ஆகியோருடன் தடா வழக்கில் சிறை சென்றவருமான முடி கொண்டான் சா.சாரங்கபாணி, தனது 93ஆவது வயதில் 03.01.2025 அன்று தனது இல்லத்தில் முடிவெய்தினார். அவருக்கு நமது புகழ் வணக்கங்கள்.