ஐயா சுபவீயைக் கூண்டில் ஏற்றுகிறோம்! (2)
திராவிட வல்லுநர் மன்றம் நடத்திய இணைய வழிக் கருத்தரங்கில் சுபவீ அவர்கள் ஆற்றிய உரை 21.05.2021 நாளிட்ட முரசொலியில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில்தான் தோழர் தியாகு குறித்துப் பேசினார் சுபவீ அவர்கள். அதற்குத் தோழர் தியாகு மறுவினையாற்றினார். அதற்குப் பிறகே வலையொளி நேர்காணலில் தோழர் தியாகு குறித்த அந்தச் சொற்களைப் பேசியிருந்தார் சுபவீ. அச்சொற்களுக்குரிய மறுப்பைக் கடந்து கோட்பாட்டு மறுப்பையும் மாறுபாட்டையும் முன்வைக்கிறேன்.
திராவிட வல்லுநர் மன்றக் கருத்தரங்கில், திராவிடம் இனமோ நாடோ அல்ல திராவிடம் ஒரு கருத்தியல் என்பதை நிறுவ முற்படுகிறார் சுபவீ. கருத்தியலுக்குரிய வரையறையையும் முன்வைத்துள்ளார். அவை குறித்துக் கருத்தாடுவதற்கு முன் சுபவீ அவர்களின் வரலாற்று மறைப்பு குறித்த நமது மறுப்பை முதலில் முன்வைத்திட வேண்டும். சுபவீ அவர்கள் போகிற போக்கில் பெரியாரும் திராவிடத்தைக் கருத்தியலாகவே முன்வைத்ததான தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அதற்காகவே அண்ணாவின் மாநிலங்களவைக் கன்னிப் பேச்சில் அண்ணா திராவிடத்தைக் கருத்தியலாகவே கையாண்டார் என நிறுவ மேற்கோள் காட்டுகிறார். திராவிடம் ஒரு கருத்தியல் என சுபவீ கருதுவதில் மாறுபாடு இல்லை. ஆனால் பெரியாரும் அண்ணாவும் திராவிடத்தை இனமென்றும் நாடென்றும் பேசிவந்த வரலாற்றை மறைக்காது முன்வைக்க சுபவீ அவர்களை எது தடுக்கிறது?
பெரியார் திராவிடத்தை நாடாகவும் திராவிட இனத்தவராகவும் குறிப்பிட்டு வந்ததை யாரும் மறுக்க முடியாது. திராவிட நாடு திராவிடருக்கே என்கிற முழக்கம் திராவிடக் கருத்தியலுக்கான நேரடி முழக்கமன்று. நாடு இனம் தொடர்பான முழக்கமே அது. பெரியாரின் இரண்டு கட்டுரைகளில் உள்ளவற்றை மட்டும் எடுத்துக்காட்டினால் போதும் :
"தமிழ்நாடு ஒரு தனி நேஷனாக இருந்தது. இன்றும் இருக்கிறது. அதுதான் திராவிடம்"
"இங்கிலாந்து ஸ்காட்லாந்து அயர்லாந்து ஆகிய மாகாணங்கள் பெரிதும் மொழிவாரியாக இருப்பது போலும் மற்றும் பல மேல்நாடுகளில் இருக்கும் உள்மாகாணப் பிரிவுகள் போலும் திராவிடம் என்ற தலைத்தேசத்தில் மொழிவாரி மாகாணங்கள் இருக்கும்"
"திராவிடர் அல்லாத வெளிநாட்டார் திராவிடத்தில் அரசியல் சமுதாயம் பொருளாதாரம் முதலியவற்றில் ஆதிக்கம் செலுத்தாமலும் திராவிடச் செல்வத்தைச் சுரண்டிக் கொண்டு போகாமலும் பார்த்துக் கொண்டு நேசதேசமாய் இருந்து வரும்."
"தமிழர் அல்லது திராவிடர்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கொள்கை இல்லாதவர்களாயிருப்பதும் திராவிடத்தில் புகுந்து குடியேறி ஆதிக்கம் கொண்ட ஆரியர் பிறவியில் உயர்வு தாழ்வு என்பதையே அடிப்படையான கொள்கையாகக் கொண்ட சமய சமூகத்தவராயிருப்பதும் ஆகும்."
இவ்விரு கட்டுரைகளின் தலைப்பு : இந்தியா ஒரு நேஷனா? சுதந்திரத் தமிழ்நாடு, தமிழ்நாடு விடுதலைக்காக எழுதுகிற போது கூட திராவிடத்தை இனம் நாடு எனக் கையாள்கிறார் பெரியார். சுதந்திரத் தமிழ்நாடு என்ற பிறகு திராவிட நாடு தேசம் எனத் தமிழ்நாட்டை அழைப்பது ஏற்கத்தக்கதல்ல. அது திறனாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் பெரியார் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்ற அடிப்படையில் நின்றே இவற்றைப் பேசுகிறார் எழுதுகிறார். தோழர் தியாகு திராவிடத்தின் உள்ளடக்கம் தமிழ்த் தேசியம் என நேர்நிறையாகக் காண்பதை இங்கு குறிப்பிடுவது பொருந்தும்.
மேற்சொன்ன சுபவீ அவர்களது கட்டுரையில் அண்ணாவின் மாநிலங்களவைப் பேச்சிலிருந்து மேற்கோள் காட்டி அந்த மேற்கோளைக் கொண்டு அண்ணாவும் திராவிடத்தைக் கருத்தியலென்றே குறித்திருப்பதாக வாதிடுகிறார். அந்த மேற்கோள் :
"உலகத்தவர்க்குக் கொடுப்பதற்கு மிக உறுதியான மிகத் தெளிவான மிக வேறுபட்டவை திராவிடரிடம் இருப்பதாலேயே நான் அப்படி அழைத்துக் கொள்கிறேன்."
எப்படி அழைத்துக் கொள்கிறார்? "நான் திராவிடக் கூட்டத்தை அல்லது இனத்தைச் சார்ந்தவன்." இதைக் குறிப்பிட்டு ஐயா சுபவீ திராவிடத்தைக் கருத்தியலாகவே அண்ணா காண்கிறார் என்கிறார்.
அண்ணா மிக உறுதியான மிகத் தெளிவான மிக வேறுபட்டவை திராவிடரிடம் இருப்பதாலேயே என்கிறாரே தவிர இருப்பவர்கள் திராவிடர்கள் என்று குறிப்பிடவில்லை. மிக உறுதியான மிகத் தெளிவான மிக வேறுபட்டவை திராவிடரிடம் இருப்பதாலேயே நான் திராவிடக் கூட்டத்தை அல்லது இனத்தைச் சார்ந்தவன் எனச் சேர்த்துப் புரிந்து கொண்டால் அண்ணா திராவிடர் என்பதை இனத்தின் பேராலேயே குறிப்பிடுகிறார் என எளிதில் புரிந்து கொள்ளலாம். இதைக் கூட அவரவர் கருத்துக்கேற்ப பொருள் புரிந்து கொள்வதில் உள்ள மாறுபாடு எனலாம்.
அண்ணாவின் அதே உரையின் முற்பகுதியில் உள்ளதைத் தோழர் தியாகு தனது மறுப்பில் எடுத்துக்காட்டியதை இங்கு மீண்டும் குறிப்பிட வேண்டும் :
"நான் ஒரு நாட்டிலிருந்து வருகிறேன். அது இப்போது இந்தியாவின் பகுதியாக உள்ளது. ஆனால் அது வேறு கூட்டத்துக்குரிய நாடெனக் கருதுகிறேன், அது பகைமை கொண்டதாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நான் திராவிடக் கூட்டத்தைச் சேர்ந்தவன். என்னைத் திராவிடன் என அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்."
சுபவீ அவர்களே எடுத்துக்காட்டும் இன்னொரு பகுதி:
"நாங்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள் இல்லை. ஒரே உலகம், ஒரே அரசு என்பதைக் கூட நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அதற்காக எங்கள் தேசிய இன வரையறைகளை மறந்துவிட முடியாது."
இவையெல்லாம் அண்ணா திராவிடத்தைக் கருத்தியலாக அல்ல, இனம் நாடென்றே குறித்ததற்கான சான்றுகள். இதனையும் கூட தோழர் தியாகு அறிஞர் அண்ணா திராவிடம் எனச் சொன்னதை மட்டும் விட்டுவிட்டு அண்ணா தமிழினத்தையும் தமிழ்நாட்டையுமே குறித்ததாகப் போற்றுவேன் என்றே சுபவீக்கான மறுப்பில் சொல்லியிருந்தார். எல்லாவற்றையும் விட மாநிலங்களவையின் கன்னிப்பேச்சில் அண்ணா திராவிட இனத்தின் தன்தீர்வு அல்லது சுயநிர்ணயத்தை வலியுறுத்துகிறார்.
எல்லாம் இருக்கட்டும். தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் திராவிடத்தை இனமென்றும் நாடென்றும் குறித்தவர்களே. நாங்கள் சொல்லும் திராவிடர் என்பது யாது எனக் குறிக்க வரும்போது வெளிப்படும் விளக்கத்தை மறுக்கவில்லை. அதிலும் சுபவீ அவர்களின் பங்களிப்பும் அவர் தரும் அழுத்தமும் கூடுதலானது. சுபவீ திராவிடம் என்பது கருத்தியல் என வழங்குவதில் நமக்கு மாறுபாடில்லை. ஆனால் பெரியாரையும், குறிப்பாக அண்ணாவையும் தனது நிலைப்பாட்டுக்குத் துணைக்கழைத்து அவர்கள் திராவிடத்தை இனமென நாடெனக் குறித்ததில்லை (அல்லது குறித்ததாக ஒருவரி கூடக் குறிப்பிடவில்லை) எனக் கடப்பது நியாயமில்லையே!
திராவிடத்தை இனமில்லை, நாடில்லை எனக் குறித்து அதனை இறுதியில் கருத்தியலாக சுபவீ முன்வைக்க முற்படுகிறார். திராவிடக் கருத்தியலை ஏற்றுக் கொண்டுள்ள தமிழர் திராவிடத் தமிழர் ஆகிறார். அதாவது திராவிடர் ஆகிறார். திராவிடர் என்பதை சுபவீ இப்படி நிலைப்படுத்தினாலும் திராவிட இயக்கத்தின் இருபெரும் தூண்களான பெரியாரும் அண்ணாவும் திராவிடத்தை இனம் நாடெனக் குறித்து வந்ததை வரலாற்றில் அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது. சுபவீயே அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்:
"தமிழ் என்பது நம் மொழியின் பெயர். தமிழர் என்பது நம் இனத்தின் பெயர். தமிழ்நாடு என்பது நிலத்தின் பெயர். நூற்றுக்கு நூறு உண்மை."
தமிழ்நாடு என்றும் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நமது இலக்கியங்களே குறித்து நிற்க, தமிழர் நம் இன அடையாளத்தைத் திராவிடர் என்றும், தமிழ்நாடு எனும் நம் நிலத்தின் அடையாளத்தை திராவிடநாடு என்றும் குறித்தது பிழையானதே. ஒரு தேசிய இனத்தின் முதன்மை அடையாளங்களை --- மாற்ற முடியா அடையாளங்களை --- மாற்றுவதுக் குறித்து கேள்வி எழுப்பித்தான் ஆக வேண்டும். பெரியார் அண்ணா மீது உள்ள பெருமதிப்பைக் குறைக்காமலேயே இந்தக் கேள்வியை முன்வைக்கத்தான் வேண்டும். சுபவீ அவர்கள் திராவிடம் கருத்தியலே எனக் குறிப்பது ஒருவகையில் நன்று. ஆனால் நமது வரலாற்றின் பின்புலத்திலிருந்து பார்க்கும் போது நமது தமிழின அடையாளம் திராவிட இன அடையாளமென்றே நிலைப்படுத்தப்படுமோ எனக் கவலையோடு எண்ண வேண்டியுள்ளது. நல்வாய்ப்பாக சுபவீ அவர்கள் திராவிடம் கருத்தியல்தான் என நிறுவும் முன்னேற்றத்துக்குரிய அரும்பணியைச் செய்கிறார். என்றாலும் திராவிடம் இனமல்ல, நாடல்ல என்ற முடிவுக்கு வந்த பிறகும் கருத்தியலென திராவிடத்தை நிறுவிக்காட்ட முற்படுகிறார். அதுவும் இருக்கட்டும்! திராவிடக் கருத்தியல் என்கிற சுபவீயின் வரையறுப்பில் ஒன்றுமட்டும் எப்போதும் விடுபட்டுப் போகிறதே! விடுபட்டுப் போவது எது?
தந்தை பெரியார் அடிப்படையில் இந்தியாவைத் தேசம் எனக் கோட்பாட்டளவில் ஏற்றதில்லை. திராவிடம் திராவிட இனம் எனப் பேசிய போதும் மொத்தத்தில் பெரியார் தமிழரை தமிழினத்தையே குறித்தார். தமிழ்நாடு இந்தியாவுக்குரியதல்ல என முன்வைக்கும் தெளிவும் துணிவும் பெரியார் ஒருவருக்கே இருந்தது. இந்தியா நமது தேசமல்ல என்பதை பெரியார் ஒருசேர இரண்டு நிலைப்பாடுகளில் நின்று அறிவுறுத்தினார். ஒன்று சாதியம் அதாவது பார்ப்பனீயம்! மற்றது வடவர் சுரண்டல் அதாவது பனியாக்களின் முற்றுரிமை! அதனால்தான் பெரியார் இந்தியக் கட்டமைப்பு பார்ப்பன பனியாக் கட்டமைப்பு என வரையறுத்தார். இப்படி ஓரு வரையறுப்பைச் செய்தது அன்று பெரியார் ஒருவரே! பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரப் பட்டம் ஒழியாது என்ற பெரியார்தான் இந்தியா ஒழியாமல் சாதி ஒழியாது என்று அறுதியிட்டுரைத்தார். தமிழ்நாடு தமிழருக்கே எனும் முழக்கம் சாதியத்திற்கெதிரான முழக்கம். வடவர் ஆதிக்கத்திற்கெதிரான முழக்கம். அது தமிழர்களின் விடுதலை முழக்கம்!
சுபவீ அவர்கள் குறிப்பிடுகிற அண்ணாவின் மாநிலங்களவை உரையில் சுபவீயே எடுத்துக்காட்டுகிறார். அதில் அண்ணா இப்படிக் கேள்வி எழுப்புகிறார்:
"கன்னியாகுமரியிலிருந்து இமாலயம் வரையில் இங்கே ராமரையும் கிருஷ்ணரையும் வணங்குவதால் இதனை ஒரே தேசம் என்று சிலர் கூறுகின்றனர். அப்படிப் பார்க்க முடியாது. அவ்வாறாயின் ஐரோப்பா முழுவதும் யேசுநாதரை வணங்குகின்றனர். அதனால் அது ஒரு தேசம் ஆகிவிடுமா?"
அண்ணா அதே உரையில் எங்கள் தேசிய இன வரையறைகளை மறந்து விட முடியாது என்கிறார். தேசிய இனத் தன்தீர்வுரிமையை (சுயநிர்ணய உரிமையை) வலியுறுத்துகிறார். இது எல்லாம் அண்ணாவின் மாநிலங்களவைப் பேச்சுகளில் மட்டுமல்ல, வேறுபல பேச்சுகளிலும் எழுத்துகளிலும் தமிழ்த் தேசியமாக மிளிர்ந்து வெளிப்படக் காணலாம். இந்திய வல்லாதிக்கத்தைத் தோலுரித்ததில் அண்ணாவின் பங்கு எண்ணத்தக்கது. விரிவஞ்சிச் சான்றுகளை விடுவோம்.
திராவிடம் எனும் கருத்தியலுக்கு சுபவீ குறிப்பிடும் வரையறைகளில் விடுபடுவது எது என இப்போது விளங்கியிருக்கும். நான் இந்தியனல்ல... இந்தியா எனது தேசமல்ல... தமிழ்நாடு விடுதலை என்கிற கருத்துகளும் அடங்கியதே திராவிடம் என முன்வைப்பதற்கு எது சுபவீ அவர்களைத் தடுக்கிறது? ஏன் அதனை மட்டும் விட்டுவிடுகிறார்? அவரே விடை சொல்லட்டும்.
அண்ணா அவர் காலத்திலேயே திராவிட விடுதலையைக் காரணங்கள் அப்படியே இருந்தும் கைவிட்டார். மாநில சுயாட்சி என்றார். இன்று இந்தியக் கொடி ஏற்றும் 'உரிமை' பெற்றும் இந்திய விடுதலையை ஏற்ற அண்ணா வழியில் இந்தியக் குடியரசுக்குச் சலாம் போடும் கட்சியாகியுள்ளது திராவிட முன்னேற்ற கழகம். இந்திய மறுப்பு தமிழ்நாடு விடுதலை மரபைத் தவறியும் திராவிடத்துள் சேர்க்காமல் விடுவது திமுக ஆதரவுக்காகத்தானே! அல்லது திமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அம்மரபைக் கைவிடுவதாகப் பொருள். விடுதலைச் சிந்தையை மறைப்பதும் ஒழிப்பதும்தான் உங்கள் திராவிடம் என்றால், விடுதலை அரசியலை ஒழிப்பதுதான் இந்தியம் என்றால், இரண்டுமே ஒரே நேர்கோட்டில் நிற்கின்றன. இந்தத் திராவிடத்தை முன்னிறுத்தத்தான் திராவிடம் ஒரு கருத்தியல் என்று திராவிடத்தைச் சுபவீ உயர்த்திப் பிடிக்கிறாரோ?
திராவிடம் ஒரு கருத்தியல் என்பதற்குரிய குறிப்பான இரு வரையறைகளை இனி எடுத்துக் கொள்வோம். சாதிபேதமற்ற பாலின சமத்துவத்தை ஏற்றவர்கள் திராவிடர்கள். பார்ப்பனரல்லாத தமிழர்கள் திராவிடர்கள்.
சாதி, பாலின பேதத்தை விட்டொழித்து சமத்துவத்தை ஏற்ற பார்ப்பனர்களை என்னவென்று வரையறுப்பது? அவர்கள் தமிழர்களா திராவிடர்களா? சுபவீ அவர்களின் கூற்றுப்படி அவர்கள் திராவிடர்கள். தமிழர் என்றால் பார்ப்பனர்களும் தம்மைத் தமிழர்கள் எனச் சொல்லிக் கொள்வர். திராவிடர் என்றால் அவர்கள் வர மாட்டார்கள் என்பதைக் கொண்டே திராவிடர் என்பதை திராவிட இயக்கத்தினர் முன்வைத்து வருவதை அறிவோம். அதாவது திராவிடர் என்றால் ஒரு பார்ப்பனக் குஞ்சுகூட நுழைய முடியாது என்பர். நமது கேள்வி : சாதி ஒழிப்பையும் பாலின சமத்துவத்தையும் கொள்கையாக ஏற்ற பார்ப்பனர்களை நாம் எற்கிறோமா மறுக்கிறோமா?
பூணூல் அறுத்தெறிந்து சாதி மறுப்பு மணம் புரிந்து சாதி ஒழிப்பு இலட்சியமேந்தி தம் சாதியினருக்கு எதிரான கலகக் குரல் எழுப்பும் பார்ப்பனர்கள் இங்கே உண்டு. ஒரே ஒரு சான்றைப் பேசினால் போதும். நமக்குச் சின்னக்கூத்தூசியாரைத் தெரியும். பிறப்பால் பார்ப்பனர் எனினும் சாதி ஒழிப்புக்காரர்! பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் கோட்பாட்டளவில் நிறுவுவதை தன் பெருங்கடமையெனக் கருதிச் செயல்பட்டவர். திராவிட இயக்கத்தைத் தன் இறுதி மூச்சுவரை ஆதரித்து நின்றவர். ஏன் திராவிட இயக்கத்தின் மீதான பிடிப்பு திமுக ஆதரவாகத் தொடர்ந்து கலைஞரைத் தம் தலைவரெனக் கருதியவர். பெரியாரின் பேருழைப்பாலும் சமத்துவ அரசியல் ஏற்படுத்திய தாக்கத்தாலும் பார்ப்பனராய் பிறந்தோர் சிலர் பெரியாரியர்களாக இருந்து வருவதை நாம் காண்கிறோம்.
பார்ப்பனராகப் பிறந்தவர்களில் சாதி ஒழிப்பையும் பாலின சமத்துவத்தையும் கொள்கையாகக் கொண்டோர் நம்மிடையே உண்டு. அது குறைந்த எண்ணிக்கையாகக் கூட இருக்கட்டும். ஏன் ஓரே ஒருவராகக் கூட இருக்கட்டும். அது பார்ப்பனராய்ப் பிறந்தாலே அவர் பார்ப்பனியத்தின் பக்கமே நிற்பார் என்ற நிலைப்பாடு பிழையானது என்பதை எடுத்துக்காட்டப் போதுமானது. பார்ப்பனர்களும் பார்ப்பனியத்திலிருந்து விடுபடுவதே சமூகநீதியின் மெய்யான வெற்றியாகும். மாறாகப் பார்ப்பனர்கள் எல்லோரையும் கட்டம்கட்டி இன ஓர்மையிலிருந்து விலக்கி வைப்பது அந்தச் சமூகத்திலிருந்து வெளிவரும் சமூகநீதிக் கொள்கையாளர்களை நாமே அணைகட்டித் தடுப்பதாகும். அது சமூகநீதியின் இறுதி வெற்றியை நாமே தடுப்பதாகும். இவ்வகையில் அது சமூக அநீதியாகும்.
பார்ப்பனரில் நமது கொள்கையாளர்கள் வெளிவர மாட்டார்கள் எனக் கருதுவதற்கு எது அடிப்படை? அவர் பார்ப்பனராய் பிறந்திருப்பதே அடிப்படை? அப்படியானால் பிறப்பைக் கொண்டு ஒரு மனிதரைத் தீர்மானிக்கிறோம் என்று பொருள். பார்ப்பன மேலாண்மையை நிலைப்படுத்த பார்ப்பனர்கள் வகுத்த கருத்தியலையே பார்ப்பனியம் என்கிறோம். பார்ப்பனியம் என்பது சாதியமே! அதன்படி பிறப்பின் அடிப்படையில் ஒருவரைத் தீர்மானிப்பதே பார்ப்பனியம். திராவிடத்துள்ளும் பார்ப்பனியம் நிலைபெறுவதும் திராவிடமே பார்ப்பனியத்தைக் கைக்கொள்வதும் தகுமா?
பார்ப்பனர்களில் பலர் புரட்சிகர இயக்கங்களில் இருந்து செயல்படுகின்றனர். பெரியாரின் தொண்டர்களாக இருந்து சமூகநீதிக் களத்தில் நிற்கின்றனர். தமது பிள்ளைகளைச் சாதியற்றோராக வளர்க்கின்றனர். பெரும்பான்மையாக இல்லையெனினும் இப்படி ஒரு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது, நிகழ்ந்து கொண்டுமிருக்கிறது என்பதைப் பார்க்கத் தவறுவது இயங்கியல் மறுப்பாகும். பிறப்பைக் கொண்டு மொத்தமாகவே ஒரு மக்கள் சமூகத்தையே புறக்கணித்தல் ஒருவகைப் பாசிசமே ஆகும். நாம் பார்ப்பனியத்தை எதிர்ப்போம். பார்ப்பனியத்தின் ஆளுருவமான பார்ப்பனர்களையும் எதிர்ப்போமே தவிர, பார்ப்பனியத்தை எதிர்க்கும் பார்ப்பனர்களை அல்ல.
தந்தை பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்தார். பார்ப்பனர்களையும் எதிர்த்தார். ஆனால் பார்ப்பனிரிடையே மாற்றம் வரும் என்கிற நம்பிக்கையை அவர் இழந்து விடவில்லை. பகவத் கீதையை விட்டுவிட்டுத் திருக்குறளை ஏற்கும் பார்ப்பனர்கள் ---- சமற்கிருதத்தை விட்டுவிட்டுத் தமிழை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர்கள் --- நம் எதிரிகள் அல்ல. அவர்களை ஏற்பதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று பெரியார் குறிப்பிட்டதை அண்மையில் உடுமலையில் நடைபெற்ற பெரியார்-143 நிகழ்வில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் சுட்டிக்காட்டினார். பார்ப்பனத் தோழர்களுக்கு... என்றே பெரியார் எழுதியதை நாம் அறிவோம்.
"பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத்தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும் மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்துள்ளார்கள்.
”சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்."
"ஆகவே உள்ள பேதங்கள் மாறி நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். நம்மிடையில் பேத உணர்ச்சி வளரக் கூடாது என்பதில் எனக்குக் கவலை உண்டு.” (விடுதலை, 8.1.1953)
இவை எல்லாம் தந்தை பெரியாரின் வரிகள். பெரியாரில் தேங்கிப் போகாமல் பெரியாரை வளர்த்தெடுத்தலே நமது பொறுப்பும் கடமையும் ஆகும். பார்ப்பனர்களில் உள்ள சமூகநீதி ஆற்றல்களைத் தள்ளி நிறுத்துதல் குடியாட்சிய மறுப்பாகும். பார்ப்பனர்களில் சாதி ஒழிப்பாளர் இருக்க முடியுமெனில் பார்ப்பனர்களை விலக்கி வைக்கவென்றே நமது இன அடையாளத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. திராவிடம் ஒரு மக்கள் கூட்டத்தையே பிறப்பினடிப்படையில் புறக்கணிக்கும் என்றால், தமிழம் அவர்களில் உள்ள சமூகநீதியர்களை ஏற்கும் என்றால், தமிழர் எனும் அடையாளமே சாதி ஒழிக்கும் என்பது எங்கள் நிலைப்பாடு.
திராவிடத்துக்கு வரலாற்று வழி நின்று ஒரு வரையறையை முடிவு செய்து விட்டால் இன்னும் திறனாய்வைத் துல்லியமாக்கலாம். சென்ற மறுப்பிலேயே குறிப்பட்டதுதான். இங்கே அது இன்னும் அழுத்தம் பெறத்தக்கது என்பதால் மீண்டும் ஒருமுறை முன்வைக்கிறேன். சாதி ஒழிப்பு, பார்ப்பனிய ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, இந்துமத ஒழிப்பு, இந்தியத் தேசிய மறுப்பு, தமிழ்நாடு தமிழருக்கே இவைதான் திராவிடத்துக்குரிய வரையறை! தமிழ்நாடு தமிழருக்கே திராவிட நாடு திராவிடருக்கே என மாறியது. மீண்டும் தமிழ்நாடு தமிழருக்கே என 1956க்குப் பிறகு மாறியது. அதன்பின் பெரியார் தனது இறுதிக் காலம் வரை அந்த முழக்கத்தை கைவிடவே இல்லை.
இந்த வரையறையில் ஒன்றிரண்டு இல்லாத இயக்கத்தையோ கட்சியையோ திராவிட இயக்கம் என்றோ திராவிடக் கருத்தியல் கொண்டது என்றோ கருத இடமில்லை. இந்த வரையறையில் உள்ளதில் எது இடம்பெறத்தக்கதல்ல என சுபவீ அவர்களே குறிப்பிடலாம். இயக்கங்களில் தாய்க் கழகமாக உள்ள திராவிடர் கழகம் தப்பித் தவறியும் இந்தியத் தேசியத்தை மறுத்தோ தமிழ்நாடு விடுதலையை முன்வைத்தோ செயல்படுவதில்லை. திமுகவுக்கு வாய்ப்பே இல்லை.
திராவிடத்தின் வரையறையில் உள்ள மற்ற நோக்கங்கள், குறிப்பாக சமூகநீதியும் பெண் விடுதலையும் வெல்லத் தேவையான அரசியல் என்பதே தமிழ்நாடு தமிழருக்கேதான். இதில் மையம் கொள்ளாது போனால் மற்ற நோக்கங்கள் பெயரளவிலேயே நின்று போகும். பெயரளவில் என ஆகும் போது அதன் நோக்கத்தில் அது முழுமையடைவதில்லை. முழுமையடையாது எனில் எதிரிக்கு (இந்திய ஆளும் வர்க்கத்துக்கு) துணை போவது தவிர்க்க முடியாததாகும்.
திராவிடத்தை உயர்த்திப் பிடிப்போர் முன்வைக்கும், செயல்படுத்தும் பல கருத்துகள் திராவிடக் கருத்துகள்தான். ஆனால் இந்தியத் தேசிய மறுப்பைக் கைவிட்டு அதனோடு கூடிக் குலாவுவது எப்படி முழுப்பொருளில் திராவிடமாகும் எனக் கேட்கிறோம். தமிழ்நாடு தமிழருக்கே எனும் அரசியல் முழக்கத்தை உயிர்ப்போடு கொண்டு செல்லாதது எப்படி திராவிடமாகும் எனக் கேட்கிறோம். இந்த முரண்பாட்டைத்தான் எங்கள் இயக்கம் குற்றாய்வு செய்கிறது, இந்த முரண்பாட்டை நாங்கள் திறந்த மனதுடன் பேச மாட்டோம், முரண்பாட்டை நீக்கிக் கொள்ள மாட்டோம், முரண்பாட்டை மூடிமறைப்போம், முரண்பாட்டுக்குப் பழகி விட்டோம் அல்லது அது இன்று எங்கள் நிலைப்பாடே அன்று என்றால்... இதுதான் இன்று திராவிடம் என்றால் அதன் மண்டை மீது சம்மட்டி கொண்டு அடிப்போம். இந்த முரண்பாட்டை நீக்க முற்பட்டால் அதன் பெயர் பிறகு திராவிடமாக இருக்காது. அதுதான் தமிழ்த் தேசியம்.
சுபவீ அவ்வப்போது சொல்வதுண்டு. நாங்கள் தமிழ்த் தேசியத்தை எதிரே நிறுத்தவில்லை. உண்மையில் திராவிடம்தான் அதற்கு இணக்கமானது. திராவிடம் தமிழ்த் தேசியம் வளருவதையே விரும்புகிறது என்று. அப்படியானால் தமிழ்த்தேசியம் காலத்தின் தேவை என்பதை சுபவீ அவர்கள் மறுக்கவில்லை. தமிழ்த் தேசியம் என்பது தமிழ்த் தேச விடுதலையை அரசியல் கொள்கையாகக் கொண்டிருப்பதாகும். கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியிடுகிற வாலாசா வல்லவன் அவர்களின் உரைக்குத் தந்திருக்கிற தலைப்பு திராவிடத் தமிழ்த் தேசியம். தலைப்பாக மட்டும் இல்லாமல் திராவிடத் தமிழ்த் தேசியம் என்பதை சுபவீ அவர்கள் கருத்தியலாகச் சொல்லிப் பறைசாற்றிக் கொள்ளலாமே! திராவிட இயக்கத் தமிழர் பேரவை இருக்கும் போது திராவிடத் தமிழ்த் தேசியம் என்பதை கொள்கை நிலைப்பாடாக அறிவிக்கக் கூடாதா என்ன! இப்படி ஒரு நிலைப்பாட்டுக்கு சுபவீ நேர்மையோடு வருவாரா?
நாம் தமிழர் கட்சி நடத்திய திராவிடரா? தமிழரா? கருத்தரங்கு குறித்தும் அதனை எதிர்த்தும் பேசும் போது திராவிடம் என்பது கருத்தியல் என நிறுவுகிறார் சுபவீ. திராவிடத்துக்கு தனது விளக்கத்தையும் தருகிறார். அந்தக் கருத்தரங்கின் முதன்மைத் தலைப்பான திராவிடரா? தமிழரா? என்பதனை எடுத்து வைத்துப் பேசும் சுபவீ அவர்கள் அந்தத் தலைப்புக்கு இரண்டடி கீழே விடுதலை அரசியல் கருத்தரங்கம் எனக் குறித்திருந்தது குறித்து ஏன் ஒருநாளும் விமர்சித்ததில்லை. நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு விடுதலையை முன்னெடுக்கும் கட்சியல்ல எனத் தோலுரிக்க என்ன தயக்கம்! இந்திய அரசமைப்பை ஆரத் தழுவிக் கொண்டு இந்திய இறையாண்மையைக் காப்பேன் என சத்தியம் செய்து விட்டு செய்வதெதுவும் விடுதலை அரசியல் ஆகாது. சீமான் பேசுவது தமிழ்த் தேசியமே அன்று என சுபவீ அவர்கள் சீமானை அம்பலப்படுத்தலாமே! அப்படி ஒருநாளும் விரல்நீட்டிக் கேள்வி கேட்டதில்லை சுபவீ. கேட்டால் அந்த விரல் அவர் கண்ணையே குத்தும். திராவிடம் தமிழ்த் தேசியம் வளருவதை விரும்புகிறது என்றால் விரும்புகிற ஒன்றை வளர்க்க என்ன தடை! அதுவாக வளர்ந்தால் ஆதரிப்பீர்கள், நீங்கள் வளர்க்க மாட்டீர்கள் என்பது கொள்கை நேர்மையாகாது.
தந்தை பெரியார் தமிழ்த் தேசியத்தை வளர்க்கும் இடத்தில் மட்டும் இல்லை. தமிழ்நாடு தமிழருக்கே என்பதை இலட்சிய முழக்கமாகக் கொண்டு இறுதி வரை பாடாற்றினார். தந்தை பெரியாரைத் தவிர்த்து விட்டு திராவிடம் இருக்க முடியாது என்றால் திராவிடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றல்லவா முழங்க வேண்டும். அதை நோக்கி அல்லவா செயற்பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும்? அப்படி அல்லாமல் முதல்வர் பதவியில் மு.க.ஸ்டாலின் அவர்களை அமர்த்துவதும் இந்தியத்துக்குக் கங்காணியைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதுமே திராவிடமாகும் என்றால் அப்படிச் செய்யாதவரெல்லாம் பார்ப்பனக் கைக்கூலிகள் என்று இலக்கணம் வகுப்பது திராவிடமாகும் என்றால், அந்தத் திராவிடம் எதிர்க்கத்தக்கதே!
எல்லாப் பட்டறிவுகளையும் கொண்டுதான் நாங்கள் தமிழர், தமிழர் மட்டுமே என்கிறோம். சாதி ஒழிப்பும் தமிழ்நாடு விடுதலையும் எமதிரு கண்கள் என்கிறோம். தமிழ்நாடு தமிழருக்கே எனும் தந்தை பெரியார் கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறோம். தமிழ் மரபையும் திராவிட இயக்கத்தின் பங்கேற்பையும் உள்வாங்கிக் கிளைத்ததே எமது தமிழ்த்தேசியம். திராவிடத்திடம் கழிவன கழித்து கொள்வன கொண்ட விடுதலை அரசியலே தமிழ்த் தேசியம். எமது இயக்கத்தின் அரசியல் முழக்கத்தோடு நிறைவு செய்வது பொருந்தும்.
"தமிழர் விடுதலைப் போர் முழக்கம் சமூகநீதித் தமிழ்த் தேசம்”
- வே.பாரதி