நாள் : 16.09.2013 திங்கள் கிழமை முதல்
இடம் : தமிழ்நாடு உயர்நீதிமன்றம், சென்னை.

நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ சொந்தமானதல்ல. இவர்களுக்கும் மேலான கோடான கோடி மக்களுக்குரியது. எல்லா நாடுகளிலும் அவரவர் தாய் மொழியில்தான் நீதிமன்றங்கள் நடைபெறுகிறது. அந்நிய மொழியில் எந்த நாட்டு நீதிமன்றங்களும் நடைபெறவில்லை. ஆங்கிலேயனின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றதாக 67வது சுதந்திர தின விழாவில் கொடியேற்றினோம். ஆனால் எனக்கு தமிழில் வழக்கு நடத்தத் தெரியாது, ஆங்கிலம்தான் தெரியும் என்று பெருமைப்பட்டுக் கொண்டு அந்நிய மொழியான ஆங்கில மொழிக்கு அடிமையாக இருக்கிறோம்.

அரசியல் அமைப்புச்சட்டத்தின் சரத்து 348(1) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழி ஆங்கிலம் என்று கூறுகிறது. சரத்து 348(2) மாநில ஆளுநர் குடியரசுத்தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தியையோ, அல்லது அந்தந்த மாநிலங்களின் அலுவல் மொழியையோ உயர்நீதிமன்றத்தின் மொழியாக்கலாம் என்று கூறுகிறது. இந்திய ஆட்சிமொழிச்சட்டம் பிரிவு 7 உயர்நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழியில் தீர்ப்பு வழங்கலாம் என்று கூறுகிறது. 1961 முதல் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அலுவல் மொழியான இந்தி உயர்நீதிமன்ற மொழியாக ஆக்கப்பட்டது. இதைப்போலவே தமிழ்நாட்டின் அலுவல் மொழியான தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக ஆக்கக்கோரி 2006ல் சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது. இத்தீர்மானம் சரத்து 348(2)ன் படி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மன்மோகன்சிங் தலைமையில் இருந்த நடுவண் அரசு குடியரசுத்தலைவர் அப்துல்கலாமிடம் அனுப்பாமல் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பியது.

பல வழக்குகளில் “இது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிடமுடியாது” என்று தீர்ப்புரைக்கும் உச்சநீதிமன்றம் சரத்து 348(2)க்கு எதிராக தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு தமிழை நீதிமன்ற மொழியாக்குவதற்கு தடையாக இன்று வரை இருந்து வருகிறது. அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேரளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் “வட்டார மொழிகளை உயர்நீதிமன்ற மொழிகளாக்க முடியாது, இந்தி வளர்ந்து கனியும் வரை ஆங்கிலம் இருக்கும், அதன்பின் ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் மொழியாக இந்தி ஆக்கப்படும்” என்று கூறி தமிழக சட்டமன்றத்தின் தீர்மானத்தை ஏற்க மறுத்தார். இதைக் காரணம் காட்டி மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகத்தின் அலுவல்மொழிப் பிரிவும் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் கோப்பை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் முடக்கி வைத்துள்ளது.

நடுவண் அரசு 1961லேயே உ.பி, ம.பி, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தியை உயர்நீதிமன்ற மொழியாக ஆக்கிவிட்டு தமிழ்நாடு, வங்காளம் ஆகிய மாநிலங்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. எனவே அனைத்து மாநில மக்களும் ஒன்று திரண்டு அரசியலமைப்பின் சரத்து 348(1)ல் மாநில உயர்நீதிமன்றங்களின் மொழி ஆங்கிலம் என்று இருப்பதை திருத்தி அந்தந்த மாநிலங்களின் அலுவல் மொழியே உயர்நீதிமன்றத்தின் மொழியென மாற்றம் செய்ய வைக்க வேண்டும்.

2010ல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரையிலும், சென்னையிலும் 4 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 25 வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய போது அனைத்துக் கட்சிகளும் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடிக்கொள்ளலாம் என்று வாய்மொழியாக அனுமதி அளித்தார். எனவே மதுரை வழக்கறிஞர்கள் முத்துகிருஷ்ணன், அ.க.ராமசாமி, பகத்சிங், செல்வி.முத்துக்கனி, வே.முருகன், சு.அருணாச்சலம், எழிலரசு, இராவணன், ஜோயல்பால்அந்தோணி போன்ற வழக்கறிஞர்களும் சென்னையில் வழக்கறிஞர் பாரி போன்றவர்களும் உயர்நீதிமன்றத்தில் சிறப்பாக தமிழில் வாதாடினார்கள். நீதிபதிகள் திருவாளர்கள் ஏ.செல்வம், ராஜேஸ்வரன், மதிவாணன், ராஜசூர்யா, அரிபரந்தாமன், சி.டி.செல்வம், எம்.எம்சுந்தரேசு, பால்வசந்தகுமார், தேவதாசு, சத்தியநாராயணன், சந்துரு, கிருபாகரன், மாலா, வாசுகி, விமலா, போன்றவர்கள் மகிழ்ச்சியுடன் தமிழில் வாதத்தைக்கேட்டனர்.

ஆனால் நீதிபதி வெங்கட்ராமன் ஒருவார்த்தைகூட ஆங்கிலம் கலக்காமல் பேச முடியுமா என்று நக்கலடித்தும், நீதிபதி சுதந்திரம் வேண்டா வெறுப்பாக கேட்டு, தமிழில் வாதிடும் வழக்கறிஞர்களுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். நீதிபதி சிவக்குமார் உயர்நீதிமன்ற மொழி ஆங்கிலம், தமிழ் அல்ல என்று கூற அதனால் வாக்குவாதம் ஏற்பட்டு வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். நீதிபதி மணிக்குமார் 2010 மார்ச் மாதத்தில் இருந்தே வழக்கறிஞர்கள் தமிழில் வாதிட ஆரம்பித்தவுடனேயே, சரத்து 348ஐம் உச்சநீதிமன்றத்தின் ராஜ்நாராயணன் வழக்கையும் காட்டி தமிழில் வாதிடக் கூடாது எனத் தடுத்து, ஆங்கிலத்தில் கட்டாயமாக வாதிடவைத்தார். 10.07.2013 அன்று W.P. No 10992/2013, 11012/20132 ஆகிய வழக்குகளில் வழக்கறிஞர் பகத்சிங் தமிழில் வாதிட முயன்ற போது நீதிபதி மணிக்குமார் வழக்கம்போல் அனுமதி மறுத்து சரத்து 348ஐம் உச்சநீதிமன்றத்தின் ராஜ்நாராயணன் தீர்ப்பை கட்டாயமாக வாசிக்க வைத்து, ஆங்கிலத்தில்தான் வாதிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். அதற்கு வழக்கறிஞர் பகத்சிங், ராஜநாராயணன் வழக்கில் அரசு தரப்பான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு இந்தி தெரியாது, அமர்ந்திருந்த நீதிபதிகள் சிலருக்கும் இந்தி தெரியாது, எனவே இவர்கள் ராஜ்நாராயணன் இந்தியில் வாதிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இங்கு நீதிபதியான உங்களுக்கும் தமிழ் தெரியும், எனக்கும் தமிழ் தெரியும், பிறகு ஏன் தமிழில் வாதிடக்கூடாது, ஏற்கனவே தலைமை நீதிபதி இக்பால் தமிழில் வாதிட அனுமதி வழங்கியுள்ளார் என்பதை கூறியும், இதை எவற்றையும் ஏற்காமல் பொருந்தாத உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முன்னுதாரணம் காட்டி தமிழில் வாதிட அனுமதி அளிக்க முடியாது என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம், மாவட்ட நீதிமன்றங்கள் வரை அனைத்து நீதிமன்றங்களின் நடவடிக்கைகளும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழில்தான் தீர்ப்பு அளிக்கவேண்டும் என்று கூறுகிறது. அச்சட்டத்தின் பிரிவு 4(gp)(1) சில சூழ்நிலைகளில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத உயர்நீதிமன்றம் அனுமதிக்கலாம் என்று கூறுகிறது. நாம் உயர்நீதிமன்ற மொழியாக தாய்மொழியான தமிழை ஆக்கு என கேட்டுக்கொண்டு இருக்கும் போது 1994ல் அப்போதைய தலைமை நீதிபதி ஆந்திராவை சேர்ந்த கே. ஏ. சாமி தலைமையிலான அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு 1956ஆம் ஆண்டு தமிழ் நாடு ஆட்சிமொழிச் சட்டத்திற்கு விரோதமாக மாவட்ட நீதிமன்றங்களில் தமிழை ஒழித்துக்கட்ட ஒரு தீர்மானம் போட்டது. அது எந்தக் கால எல்லையும் விதிக்காமல் நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதிக்கொள்ளலாம், தமிழில் கட்டாயமில்லை என அனுமதித்தது.

எனவே 1994க்கு முன் தமிழைத் தாய்மொழியாக கொண்டிராத கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ‘ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு” தாங்கள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுத உயர்நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற்றனர். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் தமிழறிவையும் வளர்த்துக்கொண்டனர். ஏனெனில் அந்தக் குறிப்பிட்ட காலம் முடிந்தால் அவர்கள் ஆட்சிமொழிச் சட்டத்தின்படி தமிழில் மட்டும் தீர்ப்பு எழுத வேண்டும். ஆனால் 1994க்குப் பின் தமிழைத் தாய்மொழியாக கொண்டிராத நீதிபதிகள் தமிழில் தீர்ப்பு எழுத தங்கள் தமிழறிவை வளர்த்துக் கொள்ள விரும்பாமலும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீதிபதிகள் ஆங்கில மோகத்திலும், ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதினால்தான் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிசீலிப்பார்கள் என்ற தவறான எண்ணத்திலும் ஆங்கிலத்திலேயே தீர்ப்பு எழுதுகின்றனர். எனவே இந்த 19 ஆண்டுகளில் இந்த தீர்மானம் 1956ல் இயற்றப்பட்ட ஆட்சிமொழிச் சட்டத்தின் முக்கிய நோக்கமான கீழமை நீதிமன்றங்களில் தீர்ப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தையே அழித்துவருகிறது. எனவேதான் இன்றுவரை பல கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பெழுதி தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை மீறி வருகிறார்கள்.

இந்நிலையில் தலைமை நீதிபதி கே. ஏ. சாமி தலைமையிலான நீதிபதிகளின் தீர்மானத்தை எதிர்த்து வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியம் அவர்கள் தாக்கல் செய்த நீதிப்பேராணை வழக்கில் (W.P. No 2394/2010) நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், விமலா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 22.02.2013 அன்று இத்தீர்மானத்தில் குறிப்பிட்ட காலவரையறை குறிப்பிடாமல் இருப்பது சட்டத்திற்கு எதிரானது அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதில் கொடுமையானது என்னவென்றால் 22.02.2013 அன்று வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டுக்கொண்டிருக்கும் போது நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் வழக்கறிஞரைப் பார்த்து சமூகப் போராளியான நீங்களே குறுகிய நோக்கில் தமிழில் தீர்ப்பெழுதக் கேட்கலாமா என்ற தொனியில் கேட்டு தமிழில் தீர்ப்பெழுதக் கேட்பது ஏதோ சமூக விரோத செயல்போல் பேசி, வழக்கறிஞர் லஜபதிராயை மேலே பேசவிடாமல் இவ் வழக்கைத் தள்ளுபடி செய்தார். எனவே 1994ல் உயர்நீதிமன்ற நீதிபதிகளால் உடனடியாக போடப்பட்ட இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.

உயர்நீதிமன்றம் ஏற்கனவே நடத்திய மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில் அனைத்து கேள்வித்தாள்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தது. ஆனால் தற்போது நடந்த தேர்வில் முக்கியமான முதலாவது தாளை ஆங்கிலத்தில் மட்டுமே உருவாக்கி தங்கள் தமிழ் விரோதப் போக்கை காட்டியுள்ளார்கள்.

1857ல் முதல் இந்திய நீதிபதியான மாயூரம் வேதநாயகம் பிள்ளை 150 ஆண்டுகளுக்கு முன்பே “தேச பாசையும் தமிழ், கோர்ட்டில் வழங்கப்படும் பாசையும் தமிழ், நியாயாதிபதியும் தமிழர், வாதிக்கிற வக்கீலும் தமிழர், மற்ற வக்கீல்கள் கட்சிக்காரர் முதலானவர்களும் தமிழர்களே, இப்படியாக எல்லாம் தமிழ் மயமாகி இருக்க, இந்த வக்கீல்கள் யாருக்காக இங்கிலிஸில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை” என்று வருத்தப்பட்டார்(பிரதாப முதலியார் சரித்திரம்). முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.கிருஷ்ணய்யர் அவர்களும் “சாதாரண மனிதர்கள், தொழிலாளிகள், விவசாயிகள் சமூக செயல்பாட்டாளர்கள் போன்றோர் நேரடியாக நீதிமன்றத்தின்முன் தங்கள் வழக்கை தாங்களே வாதாடக்கூடிய வகையில் நீதியமைப்பு இருக்க வேண்டும்” என்று கூறுகிறார். (19.03.2010 இந்து நாளிதழில் அவரது கட்டுரை).

உயர்நீதிமன்றத்தின் முன்னால் தலைமை நீதிபதி திரு. மு.மு. இஸ்மாயில் அவர்கள் 1980ல் வந்த முதல் தீர்ப்பு திரட்டு என்ற புத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் “இந்திய சுதந்திர இயக்கம் அந்நிய அரசியல் ஆதிக்கத்தை விலக்குவதென்ற எதிர்மறையான நோக்கத்தை மாத்திரம் கொண்டதன்று. அப்படி அந்நிய அரசியல் ஆதிக்கத்தை விலக்குவதன் மூலம் இந்திய நாட்டினுடைய அரசியல், பொருளாதார, கலாச்சார, சமுதாய வளர்ச்சி முழுமையடைய வேண்டும் என்பதும் அதன் உடன்பாடான நோக்கமாகும்….. அந்திய அரசியல் ஆதிக்கத்தின் காரணமாக ஆங்கில மொழி உச்ச நிலையை வகித்ததனால் இந்த நாட்டு மொழிகள் தங்களுடைய உரிய இடத்தை பெறாததோடு உரிய வளர்ச்சியையும் அடையமுடியவில்லை… ஒரு மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும், அந்த மொழியையே தங்கள் வாழ்க்கையில் பேசிவருபவர்களும் தங்கள் சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளும் அம்மொழியிலேயே நடைபெற வேண்டும் என்று விரும்புவது தவறில்லை. எனவே அவர்கள் சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் தமிழிலேயே நடைபெறுமேயானால் அவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு தங்கள் உரிமைகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அவற்றை திரும்பப் பெறுவதற்காகவும், நிலைநாட்டவும் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் எப்படி நடைபெறுகிறது என்பதை தாங்கள் நேரிலேயே தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதினார்கள்” என்று கூறியுள்ளார்.

அதேபோல் தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி திரு.இப்ராகிம் கலிபுல்லா அவர்கள் 2011ல் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றபோது அவருக்கு நடந்த வழியனுப்பு விழாவில் மரபுப்படி தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் திரு.பி.எஸ்.ராமன் ஆங்கிலத்தில் வாழ்த்திப் பேசினார். அதன்பின் ஏற்புரை நிகழ்த்திய இப்ராகிம் கலிபுல்லா அவர்கள் “இங்கு வழக்கத்திற்கு மாறாக நான் ஏன் தமிழில் உரையாற்ற விழைகிறேன் என்பதை முதற்கண் தெளிவுபடுத்தக் கடமைபட்டுள்ளேன்… அதில் முக்கியமான முதற்காரணம், தமிழ் என் தாய்மொழி, அடுத்தது எந்த ஒரு சபையிலும் குறிப்பாக தமிழ் நாட்டில், தமிழில் நான் உரையாற்றுகின்றபோது தன்னம்பிக்கையோடும் சகசமாகவும், சொல்லுகின்ற கருத்தை தெளிவாகவும், அழுத்தமாகவும் பேசுகின்ற உணர்வைப் பெறுகிறேன்… எனது நலனில் அக்கறை கொண்ட ஒரு மாபெரும் சபையில் மீண்டும் உரையாற்றக்கூடிய வாய்ப்பு அமையுமா என்கின்ற எண்ணமும் ஒரு காரணம். ஆகவே இந்த ஒரு வாய்ப்பை நான் முழுமையாகப் பயன்படுத்தி எனது எண்ணங்களை உங்கள் முன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று பேச ஆரம்பித்தார் (2011 LAW WEEKLY CRIMINAL, MARCH).

மகாராஷ்டிரத்தை சேர்ந்த முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி சிர்புர்கர் அவர்கள் தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருந்தபோது தமிழ் கற்றுக்கொண்டு தாக்கல் செய்யப்பட்ட தமிழ் ஆவணங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லாமலே படித்துப் புரிந்து கொண்டு தீர்ப்புகளை வழங்கினார். காஷ்மீரைச் சேர்ந்த டோங்ரி மொழியை தாய்மொழியாகக் கொண்டு, பின் உ.பி.யில் படித்து வளர்ந்து நீதிபதியான முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்சு அவர்கள் தமிழ்நாட்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பட்டய படிப்பு படித்து தமிழ் கற்றுக்கொண்டார்.

2010 உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, “வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தைத் திரும்ப பெறவேண்டும் நான் 2011ல் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக ஆக்குவேன்” என்றார் இன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள். இன்றுவரை அவர் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக ஆக்க நடுவண் அரசிடம் கோரிவருகிறார். 2006ல் தமது ஆட்சிக் காலத்தில் சட்ட மன்றத்தில் தீர்மானத்தை கொண்டுவந்தநாளில் இருந்து நடுவண் சட்ட இணையமைச்சர் வேங்கடபதி உட்பட பல அமைச்சர்கள் சுமார் 10 ஆண்டுகளாக நடுவண் அமைச்சரவையில் இருந்த காலத்தில் இருந்து இன்றுவரை முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களும் தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை ஆக்கக் கோரி வருகிறார். அதே போல் அனைத்து இடது சாரி, வலது சாரி, எல்லா திராவிட கட்சிகளும், தமிழ்த் தேசிய, முற்போக்கு இயக்கங்கள் பலவும் இக்கோரிக்கையை ஆதரித்து வருகின்றன. ஆனால் இவர்கள் இன்றுவரை தங்கள் கட்சிகள், இயக்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்களை தமிழில்தான் வாதாட வேண்டும், தமிழில்தான் மனுக்களை தாக்கல் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துவதில்லை.

ஆனால் எந்த அமைப்பையும சாராத, கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ந.தன்ராசு, ம.முருகேசன் போன்ற வழக்கறிஞர்கள் போல பல வழக்கறிஞர்கள் தமிழில் படிவங்களை உருவாக்கி (தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய வேலையை) அனைவருக்கும் அளித்து இன்றுவரை கீழமை நீதிமன்றங்களில் தமிழை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின், முற்போக்கு இயக்கங்களின் புகழ்பெற்ற சமூக போராளிகளான வழக்கறிஞர்கள் கீழமை நீதிமன்றத்தில் கூட தமிழில் வாதிடுவதோ, மனுக்கள் தாக்கல் செய்வதோ இல்லை. முன்னால் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தங்கள் ஆட்சிக்காலத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வாய்ப்பிருந்தும் தங்கள் அரசு வழக்கறிஞர்களை தமிழில் வாதிட வேண்டும் என்று அறிவுறுத்தவில்லை. 1956லேயே தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டத்தை இயற்றி கீழமை நீதிமன்றங்களில் அனைத்து வழக்கு நடவடிக்கைகளும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசின் கொள்கையாக ஏற்றுக்கொண்ட பின்பும் இவர்கள் கீழமை நீதிமன்றங்களில் தங்களது அரசு வழக்கறிஞர்களை தமிழில் தான் மனுக்கள் தாக்கல் செய்து வாதிட வேண்டும் என்று அறிவுறுத்தவில்லை. திருநெல்வேலி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், போன்ற பெருநகரங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் மட்டுமல்லாது சிறு நகரங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களிலும் அரசு வழக்றிஞர்கள் பலர் ஆங்கிலத்தில் மனுத்தாக்கல் செய்து, வாதாடும் அவலம் கடந்த 57 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அன்பார்ந்த மாணவர்களே, தொழிலாளர்களே, விவசாயிகளே, வணிகர்களே, தமிழ் இன உணர்வாளர்களே, தமிழறிஞர்களே, ஆசிரியர்களே, இது வழக்கறிஞர்களின் கோரிக்கை மட்டுமல்ல இது மக்களின் கோரிக்கை. வாழ்க்கையில் தலைகீழ் மாற்றங்களை விளைவிக்கக்கூடிய நம் வழக்குகள் நமக்குப் புரியும் நம் மொழியில் நடப்பதுவே நியாயமானது. எனவே வரும் 16.09.2013 அன்று தொடங்கும் உண்ணாநிலைப் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கப் போராடுவோம்.

கோரிக்கைகள்
 நடுவண் அரசே, தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக்கோரும் 2006 சட்டமன்ற தீர்மானத்திற்கு உடனடியாக குடியரசுத்தலைவரின் ஒப்புதலை வழங்கு.
 
 அரசமைப்பு சட்டத்தின் சரத்து 348(1)ஐ திருத்தி உயர்நீதிமன்றங்களின் மொழி ஆங்கிலம் என்று இருப்பதை, அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழியே உயர்நீதி மன்றங்களின் மொழியென மாற்று.

 மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று உடனடியாக பெயர்மாற்றம் செய்.
 
 தமிழக அரசே!! உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் அனைத்திலும் அரசு வழக்கறிஞர்கள் தமிழில்தான் வாதாட வேண்டுமென உத்தரவிடு.

 தமிழ்நாடு உயர்நீதிமன்றமே!! 1994ல் தலைமை நீதிபதி கே.ஏ.சாமி, அனைத்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பெழுதலாமென தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டத்திற்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தை (ஆர்.ஓ.சி. எண் 3649/92/F1 தேதி 05.01.1994) உடனடியாக ரத்து செய்.

 உச்சநீதிமன்றமே!! தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்திற்கு மறுப்புத் தெரிவித்து தமிழ் உயர்நீதிமன்ற மொழியாவதைத் தடுக்காதே!
 
உயர்நீதிமன்றத்தில் தமிழ் - போராட்டக்குழு, தமிழ்நாடு
அலைபேசி: 9443917588, 9444117722, 9884380922

Pin It