மற்றுமொரு பாராளுமன்றத் தேர்தல்கள் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன. மக்களுடைய வாழ்க்கைத் தரம் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு வீழ்ச்சியடைந்து வரும் சூழ்நிலையிலும், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்களுடைய அடிப்படை உரிமைகளும், மனித உரிமைகளும், தேசிய உரிமைகளும் மீறப்பட்டு நசுக்கப்பட்டு வரும் ஒரு நிலையிலும் இந்தத் தேர்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ மூலதனத்திற்கு வழிவகுப்பதும், முதலாளிகளுடைய இலாபத்தை உறுதிசெய்வதும் தான் தன்னுடைய கடமையென இந்திய அரசாங்கம் மீண்டும் மீண்டும் ஒப்புக் கொண்டிருக்கிறது. பெரு முதலாளி வர்க்கத்தின் தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் காங்கிரசும், பா.ஜ.க-வும், அதிமுக, திமுக போன்ற கட்சிகளும் மக்களுக்கு எதிரான கட்சிகள் என்பதைக் கடந்தகாலம் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

இந்தியாவில் தற்போதுள்ள சனநாயகம், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களுடைய நலன்களைக் காலில் போட்டு நசுக்கிவிட்டு, பெரும் பணக்கார தொழிற் குடும்பங்களுடைய தேவைகளை நிறைவேற்றும் கட்சிகளை ஒன்றை மாற்றி மற்றொன்றை ஆட்சிக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது என்பதை கடந்த 65 ஆண்டுகால அனுபவம் உறுதிப்படுத்துகிறது. இந்த அடிப்படையில் தான் பல்வேறு இயக்கங்களும் கட்சிகளும், இந்த அமைப்பு முறையையே மாற்ற வேண்டுமெனக் கோரிப் போராடி வருகின்றனர். நாம் பாஜக-வை இந்துத்துவ கட்சியென்றும் மதவாத கட்சியென்றும் கூறி, "மதச்சார்பற்ற" காங்கிரசு கட்சியை ஆதரிப்பதாலோ, காங்கிரசு - பாஜக-வை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு பிற முதலாளித்துவ கட்சிகளோடு "மூன்றாவது முன்னணியை" அமைப்பதாலோ தொழிலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் எவ்வித பயனும் இல்லையென்பதை கடந்த ஆண்டுகளில் நாம் பலமுறையும் பார்த்திருக்கிறோம். முக்கிய கேள்வியானது, எந்த முதலாளி வர்க்கக் கட்சியின் பின்னால் ஓடுவது, கூட்டணி அமைப்பது என்பதல்ல, மாறாக தொழிலாளி வர்க்கத்தை ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டுவர முதலாளி வர்க்கத்தையும், அதன் கட்சிகளையும் தனிமைப்படுத்த நாம் என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.

எனவே தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயிகளையும் மையப்படுத்தி, இன்றைய நிலைமைக்கு ஒரு தெளிவான மாற்றையும், அமைப்பையே மாற்ற வேண்டிய உடனடித் தேவையையும் தொழிலாளர்களிடையிலும், உழைக்கும் பிற மக்களுக்கும் விளக்க நல்ல வாய்ப்பாக இந்தத் தேர்தலை நாங்கள் கருதுகிறோம். இதில் தொழிலாளர், விவசாயி, உழைக்கும் மக்களின் முன்னேற்றத்தை விரும்பும் எல்லா கட்சிகளும், தொழிற் சங்கங்களும், பிற அமைப்புக்களும் ஓரணியாகத் திரண்டு நின்று தொழிலாளி வர்க்கத்தின் விழிப்புணர்வை உயர்த்தவும், முதலாளி வர்க்கம் மற்றும் முதலாளி வர்க்கக் கட்சிகளுடைய நிலைப்பாடுகளை வெட்ட வெளிச்சமாக்கவும் வேண்டுமென நாங்கள் கருதுகிறோம். தொழிலாளி வர்க்கக் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் குறுங்குழுவாத நிலைகளைக் கடந்து, ஒன்றுபட்டு வர்க்கத்தை ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டு வரக் கூடிய வழிமுறைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும். இது பற்றி விவாதிக்கவும், உங்களுடைய கருத்துக்களை அறியவும், உங்கள் கட்சி/அமைப்பை நாங்கள் தோழமை உணர்வோடு வரவேற்கிறோம். நன்றி.

கலந்தாலோசனைக் கூட்டம்

நாள்  - ஆகஸ்டு, 24, 2013. சனிக்கிழமை. நேரம் - காலை 10 மணி
இடம்  - 4/795, அண்ணா நகர், கொட்டிவாக்கம், சென்னை 600041

- தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்

Pin It