நாடு முழுவதும் மதவெறியைப் பற்ற வைத்து, கலவரத்தை உருவாக்கிய பாஜகவின் முன்னாள் பேச்சாளர் நுபுர் சர்மா, தேசத்தின் முன்னால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் கண்டிப்பாக கூறியிருக்கிறது. இத்தனை கலவரங்களுக்கும் அந்த ஒரு பெண் தான் காரணம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதோடு, நாட்டில் நடைபெறுகிற வீடுகள் இடிப்பு, தீ வைப்பு கலவரம் என அத்தனைக்கும் காரணம், அவர் ஒருவர்தான் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது.

தன் மீது பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கையையும், உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

ஆனால், உச்சநீதிமன்றம் இவ்வளவு கடுமையான கருத்துக்களை தெரிவித்ததற்குப் பிறகும் கூட, நுபுர் சர்மா மீது பாஜக இதுவரை எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. கைது செய்யவும் இல்லை.

இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், “முஸ்லிம் நாடுகள் இந்தப் பிரச்சனையை எதிர்மறையாக பிரச்சாரம் செய்கின்றன” என்று கூறினாரே தவிர நுபுர் சர்மாவை எதுவும் கண்டித்துக் கூறவில்லை. தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் அஜித் டோவல், “நுபுர் சர்மாவின் பேச்சு உலகளவில் இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும், இஸ்லாமிய நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர் அந்த நாடுகளுக்கு நாம் விளக்கம் தர வேண்டிய அவசியமில்லை. அவர்களை சமாதானப்படுத்தத் தேவையுமில்லை” என்று அவர் கூறியிருக்கிறார். மோடியோ, அமித்ஷாவோ இது குறித்து வாய் திறக்கவே இல்லை.

தீர்ப்புக் கூறிய நீதிபதி சமூக வலைதளங்களில் தான் மிரட்டப்படுவதாகக் கூறுகிறார்.

நுபுர் சர்மா தேசத்தின் முன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற நீதிபதி கருத்தைத் தீர்ப்பிலிருந்து அகற்றக் கோரி மனு போடுகிறது ஒன்றிய அரசு.

***

நீதிமன்றங்களில் தமிழ் வர வேண்டும்!

நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடப்பதை விரைவு படுத்த வேண்டியது ஆட்சியாளர் கடமையாகும். அதற்கு முன்னணி வேலையாக , ஒவ்வொரு சட்டப் புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பொறுப்பையும் செலவையும் ஆட்சியாளர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களாய் உள்ள சட்ட நிபுணர்கள் தமிழ்நாட்டில் பலரிருக்கின்றனர். இவர்களைக் கொண்டு ஆட்சியாளர் இக்காரியத்தைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிக்கலாம்.

இதேபோல் ஆட்சி நிர்வாகத் துறையிலும், இங்கிலீஷ் இன்றுள்ளது, போலவே தமிழும் இயங்க வேண்டுமானால், இங்கிலீஷ் படித்த தமிழ்ப் புலமைப் பட்டதாரிகளையெல்லாம் சர்க்கார் பணிமனைகளிலெல்லாம் ஏராளமாக நியமிக்க வேண்டும். இவர்களுக்குக் கொடுத்தவை போக மீதி இடங்களைத்தான் மற்ற பட்டதாரிகளுக்குக் கொடுக்க வேண்டும். நல்ல இங்கிலீஷ் படிப்புள்ள தமிழாசிரியர்களையும் சர்க்கார் பணிமனைகளில் பொறுப்புள்ள பதவிகளில் அமர்த்த வேண்டும்.

(‘விடுதலை’ 01.09.1956)