மக்கள் இயக்கங்களின் ஒற்றுமையே!

மாற்று அதிகாரத்திற்கான திறவுகோல்!

6-7-2013 சனிக்கிழமை

பேரணி

மாலை 3 மணி

காந்தி பூங்காவில் இருந்து மகாமகக் குளம் வரை

பொதுக்கூட்டம்

மாலை 5 மணி

மகாமகக் குளக்கரை

அன்பார்ந்த தமிழக மக்களே!

தேசிய-சாதியஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் எதிராக நின்று, ஜனநாயகத்திற்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் போராடிவரும் மக்கள் இயக்கங்கள் ஒன்றுபடவேண்டும் என்ற ஆதங்கம் மக்களிடம் எப்போதும் இருந்து வருகிறது. இதற்கு பொறுப்புணர்வுடன் பதிலளிக்க வேண்டிய கடமையும் தேவையும் களமாடி வரும் மக்கள் இயக்கங்களுக்கு உள்ளது. ‘மக்களை ஒன்றுபடச் சொல்லி அறைகூவி அழைக்கும் இயக்கங்கள் தமக்குள் ஒன்றுபட வேண்டும்;இவ்வொற்றுமையே தமிழக மக்களை ஒன்றுபடுத்தி தமிழ்த்தேசத்தைக் காப்பாற்றும்’ என்பதே மக்களின் குரல். 

மக்களின் ஆணையை ஏற்று ஐந்து இயக்கங்களின் ஒன்றிணைவில் உருவான தமிழ்நாடு மக்கள் கட்சியும்,அனைத்துத் தமிழகப் பெண்கள் கழகம்,தமிழக இளைஞர் கழகம், அம்பேத்கர் ஜனநாயக இளைஞர் பேரவை ஆகிய இயக்கங்களும் ஒன்றுபட்டு தமிழ்நாடு மக்கள் கட்சியாக முன்னிலும் பலமாக எழுந்து நிற்கிறது. பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடிவரும் மக்கள் இயக்கங்களும் மக்களும் ஒன்றுபட்டு நிற்க தமிழ்நாடு மக்கள் கட்சி அறைகூவி அழைக்கிறது.

இன்று நம் வாழ்வையும் வளத்தையும் காப்பாற்றப் போராடி வருகிறோம்.நமது கனிம வளங்களும்,கடல்வளங்களும்,உழைப்பின்பலன்களும்நம்மிடமிருந்துகளவாடப்படுகின்றன.நமது சுற்றுச் சூழல் சீரழிக்கப்பட்டு மண்ணும் நீரும் காற்றும் பயிர்களும் நஞ்சாக்கப்பட்டு வருகின்றன.தனியார் முதலாளிகள் கொளுத்தலாபம் ஈட்டுவதற்காக தமிழக -இந்திய அரசின் ஆட்சியாளர்கள் துணைநிற்கின்றனர்.

இந்திய அரசின் ரெண்டகம் சொல்லி மாளாது. பாலாற்றைப் பாலையாக்கிவிட்டு,தமிழகத்தின் ரத்த ஓட்டங்களான முல்லைப் பெரியாறும் காவிரியும் வஞ்சிக்கப்பட்டு,தமிழகம் வறண்டு விரிசல் விடுகிறது.தமிழகத்தின் தலைப்புறத்தில் கல்பாக்கம் அணுகுண்டைக் கட்டியது போதாதென்று,தமிழினத்தைப் பூண்டற்றுப் போகச் செய்யும் சதியாக கூடங்குளம் அணுஉலை என்ற பெயரில் அடிமடியிலும் கட்டப்படுகிறது.நம்மைக் கருவறுக்கும் நஞ்சாலை ஸ்டெர்லைட் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் தரும் தமிழகத்தை, மின்பற்றாக்குறை மாநிலம் என்று அறிவிக்கிறார்கள்.நெய்வேலி மின்சாரம் களவாடப்பட்டு,தமிழகத்தின் நுரையீரலான கடற்கரையெங்கும் மின்னுற்பத்திக்காக அனல் மின்நிலையங்களைத் திணித்து கடலையும் நிலத்தையும்பாழாக்குகின்றனர். தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்ய பணம் கொடுத்து, ரேடார் கொடுத்து, தளபதிகள் கொடுத்து, தளவாடங்கள் கொடுத்து, சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சியும் கொடுத்து,இராஜபக்சேவுக்கு மகுடம் சூட்டிய இந்திய அரசு தமிழின அழிப்புக்குத் துணை நின்றது.

சிங்கள இனவெறி இராணுவத் திடம் எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் காவுகொடுத்துவிட்டுஇலங்கைநட்பு நாடு என்கிறது.சர்வதேச அரங்கில் இனப்படுகொலையன் இராஜபக்சேவைக் காப்பாற்றி வருகிறது.தமிழக சட்டமன்றத் தீர்மானங்களைக் குப்பைத் தொட்டியில் வீசியெறிந்து 7கோடித் தமிழர்களின் உணர்வுகளையும் தமிழ்த்தேசத்தையும் அவமதிக்கிறது.

இந்திய அரசு கூட்டாட்சியைத் தனது தத்துவம் என்று சொல்லிக்கொண்டு தேசங்களின் உரிமைகளைப் பறித்து அவற்றை மாநகராட்சிகளாக மாற்றி வைத்துள்ளது. கல்வி, மின்சாரம், வணிகம்,வெளியுறவுக் கொள்கை,தொழில் மற்றும் இயற்கை ஆதாரங்களின் மீதான அதிகாரங்களை மத்தியில் குவித்து வைத்துள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட தேச அரசுகளைக் கலைக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம்356என்று வகுத்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிவைத்துள்ளது.ஜனநாயக விரோதமான ஒற்றையாட்சியை நடத்திவருகிறது.

தமிழக-இந்திய எஜமான்கள் தமது பச்சைத் துரோகங்கள் போதாதென்று பன்னாட்டு முதலாளிகளையும் கூட்டு வைத்துக்கொண்டு குடலறுக்கின்றனர். ‘அந்நிய முதலீடு! அந்நிய முதலீடு!’ என்று ஆலாய்ப் பறக்கும் வேகத்தில், கட்டிய கோவணத்தை மறந்துவிடுகின்றனர்.

உலகமயம்,தாராளமயம் என்று சொல்லிக்கொண்டு மக்கள் விரோதக் கொள்கைளையும் தனியார் மயத்தையுமே ஏவிவ ருகின்றனர். நமது நாட்டின் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் அவர்களைச் சூறையாட அனுமதிக்கின்றனர்.அவர்களுக்கு வசதியாக தொழிற்சங்கச்சட்டங்கள்உட்படஎல்லாச் சட்டங்களையும் மாற்றியமைத்து கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்றனர்.

இந்தியா வெங்கும் பழங்குடி மக்கள் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர்.எதிர்த்துப் போராடிவரும் அவர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து பன்னாட்டு முதலைகளுக்குச் சேவகம் புரிகின்றனர்.நந்திகிராம்,சிங்கூர் போன்று நாடெங்கும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டு பன்னாட்டுக் கொள்ளையர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

உள்நாட்டு முகவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு ஆட்சி முறையையே தீர்மானிக்கும் அளவுக்கு வல்லாதிக்கக் கொட்டம் நடக்கிறது. தமிழ்த் தேசத்தின் தற்சார்பும் தன்னுரிமையும் பறிக்கப்பட்ட இழிந்த நிலையில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.இந்த தமிழ்நாட்டு -உள்நாட்டு-பன்னாட்டு வல்லாதிக்க வாதிகளிடமிருந்து நமது தமிழ்த்தேசத்தின் தன்னுரிமையைக் காப்பாற்ற வேண்டிய கடமையிலுள்ளோம்.

சாதி-மதப் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் தமிழ்ச் சமூகத்தை ஒரு நோயாகப் பீடித்திருக்கிறது.பெரியார் பிறந்த மண்ணில் மார்க்சிய-அம்பேத்கரிய கருத்தியல்கள் எழுச்சிபெற்ற மண்ணில் அவர்கள் சாதித்த சமூகநீதிச் சிகரங்களை வீழ்த்துகிற காரியங்கள் நடந்தேறி வருகின்றன. தர்மபுரியில் காதல் திருமணங்களுக்கு எதிராகவும், மரக்காணத்தில் சாதியாதிக்க அடாவடிகளும்,சிலைக் கலவரங்களும்,பல்வேறு வகையான சாதிய வன்முறைகளும் தமிழகத்தை இருண்ட காலத்திற்குள் தள்ளுகின்றன.

சாதி அரசியல் பிழைப்பு நடத்தும் சாதியவாத அரசியல் கட்சித் தலைவர்களின் சுயநலவெறிக்கு ஏழை நடுத்தர மக்கள் பலியாகிறார்கள்.இந்த பிற்போக்குத்தனங்களை எதிர்க்கும் அதே சமூகத்தின் இளைஞர்களையும் பெண்களையும் இவர்கள் கொலை செய்யவும் தயங்குவதில்லை.

பெண்களின் திருமண உரிமை, கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை, சொத்துரிமை உட்பட எல்லாவற்றையும் எதிர்க்கிறார்கள்.அடிப்படையில் இவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள். கிராமங்களில் நிலஉரிமையின்றியும், குறைந்தபட்சக் கூலி உத்தரவாதம் இன்றியும்,வளர்ச்சிக்கான போதிய கட்டமைப்புகள் இல்லாமலும் பாதிக்கப்படும் மக்களுக்கு இவர்கள் மென்மேலும் துன்பத்தைக் கூட்டுகிறார்கள்.

வேளாண்மையை ஒழித்துவரும் அரசின் திட்டங்களுக்கு எதிராகவோ மற்ற சீரழிவுகளுக்கு எதிராகவோ இவர்கள் உருப்படியாக எதுவும் செய்வதில்லை.மாறிமாறி ஆட்சிக்கு வரும் திராவிடக் கொழுந்துகள் தமது பங்குக்கு இவற்றைத் தூபம் போட்டு வளர்க்கவே செய்கின்றனர்.தன்மானத்தைப் பேசி ஆட்சிக்கு வந்தவர்களும் அவர்களை அண்டிப் பிழைத்தோரும் சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிராகவுள்ளனர்.

யானை கட்டிப் போரடித்த பெருமைமிகு தமிழ் மக்கள் இலவச அரிசிக்காகக் கையேந்த வைக்கப்பட்டுள்ளனர்.தமிழகமெங்கும் சாராய வெள்ளத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை மூழ்கடித்துவிட்டு விலையில்லாப் பொருள்கள் தருவதாக விளம்பரம் செய்கிறார்கள்.

எவர் வந்தாலும் மாறாத சாபமாய் விலைவாசி மக்களை வாட்டிவதைக்கிறது.பேருந்துக் கட்டண உயர்வு,மக்களைத் தமது சொந்தங்களையே மறக்கச் செய்கிறது.மக்களின் மின்சாரத்தை பெரு முதலாளிகளுக்குத் தாரை  வார்த்துவிட்டு தமிழகத்தை இருட்டாக்குகின்றனர்.கல்லிலே தமிழன்னைக்குச் சிலை நிறுவுவதாகச் சொல்லும் அ.தி.மு.க அரசி,பள்ளியிலே தமிழுக்குச் சிறைகட்டும் செயலாக ஆங்கிலவழிக் கல்வியை புகுத்துகிறார்.

ஆசிரியர் பணி நியமனங்களில் சமூகநீதி பெற்றுத்தந்த தமிழகத்தில் இடஒதுக்கீட்டு முறையை முற்றாக ஒழிக்கிறார். தமிழீழ மக்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும் இவர் தமிழீழ ஆதரவுப் போராளிகள் மீது அடக்குமுறைகளை ஏவுகிறார். ஜனநாயக முறையிலான ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்களுக்குக்கூடத் தடைவிதித்து சட்ட உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் பறிக்கிறார். 

இருக்கும் ஆட்சியாளர்கள் நம்மை இரண்டுவிதமாகக் கையாளுகிறார்கள்.ஒரு கையில் மிட்டாய்;ஒருகையில்சவுக்கு....வஞ்சிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு இலவசங்களையும் சலுகைகளையும் சீர் திருத்தங்களையும் பதிலாகத் தருவதும் சலுகைகளுக்கு மயங்காத மக்களை சவுக்கடியால் வீழ்த்தவும் செய்கிறார்கள். வரலாற்றில், மாற்றத்திற்கான அரசியல், மிட்டாய்க்கும் சவுக்கடிக்கும்மண்டியிட்டுவென்றதில்லை....

மோதிமோதித்தான் மகுடம் சூட்டிக்கொண்டது.தமிழ்நாடு மக்கள் கட்சி இத்திசையில்தான் போர்ப்பறை முழக்கத்துடன் பயணிக்க உறுதிபூண்டுள்ளது.தனிநபர் துதிபாடல்,பந்தா பரிவட்ட அரசியல்,சர்வாதிகாரப் போக்கு போன்ற அரசியல் சீரழிவுகளுக்கு மாற்றாக, தமிழ்நாடு மக்கள் கட்சி ஜனநாயகப் பண்பாட்டை நிலைநாட்டும்.

தமிழக மக்களுக்கு தனிநபர் எதேச்சதிகாரமும் சீர்திருத்த அரசியலும் மாற்று அல்ல. மக்கள் அரசியலில் உருப்பெரும் அதிகாரமே மாற்று என்பதைப் பறைசாற்றும்.நாளைய விடியலுக்கான கலங்கரை விளக்காகத் திகழும் தமிழ்நாடு மக்கள் கட்சியில் அணிதிரள தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறோம்.... வாருங்கள் தோழர்களே, இனி ஒரு விதி செய்வோம்.

எங்கள் நிலம்; எங்கள் கடல், எங்கள் வானம் எங்களுக்கே அதிகாரம்!

தேசிய-சாதி நிலக்கிழாரிய-வல்லாதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்!

தன்மானம் தற்சர்பு தன்னாட்சிக்காகப் போராடுவோம்!

மக்களுக்கான ஜனநாயகம் தேசத்திற்கான அதிகாரம் படைப்போம்!

தமிழ்நாடு மக்கள் கட்சி

9003154128, 8939313369, 9841242100

Pin It