ஃபுகுஷிமா, ஹிரோஷிமா எனும் ஜப்பானிய நகரங்களுக்குச் சென்று விட்டு ஊர் வந்து சேர்ந்ததும், எனது தந்தையார் தினகரன் செய்தி ஒன்றைக் காண்பித்தார்கள். அணு உலை விபத்து நிகழ்ந்தால், மக்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்ளலாம் என்று விவரித்தது அந்த கட்டுரை.

நாகர்கோவில் பதிப்பில் வந்த அந்த செய்தி தங்கள் நெல்லைப் பதிப்பில் வராததைக் கண்டு கூடங் குளம் மக்கள் சிந்தித்தார்கள், கூடிப் பேசினார்கள். பாரதியார் சொன்னது போல “வெடித்தது பார் யுக புரட்சி!

 யாருக்குத் தகவல் தர வேண்டுமோ, அவர்களுக்குத் தராமல் இது என்ன சித்து விளையாட்டு என வெகுண்டெழுந்தனர். பத்தாயிரம் பேருக்கு வேலை, பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர், மேல் நாட்டுக்கு நிகரான வளர்ச்சி என்றெல்லாம் வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாந்து, ஊரும்,உறவும் கூட கைவிட்டுப் போகுமோ என கவலைப்பட்டுக் கிடந்த கூடங்குளம் மக்கள், இனியும் ஏமாறத் தயாராக இல்லை என்றனர்.

அணு உலை விபத்து நிகழ்ந்தால் வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டு, அருகிலுள்ள கட்டிடத்துக்குள் போய் கதவை சாத்திக் கொள்ளுங்கள் என்றது பத்திரிகை செய்தி. வாயையும், மூக்கையும் பொத்திக் கொள்வது வாழ்வதற்கு உகந்ததல்லவே? கண்டவர் வீட்டுக்குள் சென்று கதவை சாத்துவதற்குக் கலாச்சாரம் இடம் தராதே? இப்படியெல்லாம் பேசிக்கொண்டவர்கள் இனியும் தாமதிப்பது இயலாது, கூடாது என்ற முடிவுக்கு வந்தனர்

கூடங்குளம் மாதா கோவிலின் முன்னே கூடினர். கோதாவில் இறங்கி நின்றனர்.

தோட்டத்தில் புதிதாக நட்டிருக்கும் ரப்பர் கன்றுகளைப் பார்த்து வருவோம் என்று புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, நண்பர் வழக்கறிஞர் சிவசுப் பிரமணியன் கைப்பேசியில் அழைத்தார். “உடனே புறப்பட்டு வாருங்கள்” என்று பணித்தார். என்னவோ, ஏதோ என்ற பதைபதைப்போடு விரைந்தேன்.  

கூடங்குளம் ஒன்று சேர்ந்த போது ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டு நின்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்த்து. ஜூலை 1, 2011 அன்று உண்ணாவிரதம் ஒன்றினை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக நடத்தி, இப்படி ஒரு கூட்டத்தை எதிர்பார்த்து, ஏமாந்துப்போன எனக்கும், நண்பர்களுக்கும் உள்ளம் பூரித்தது.

இன்றைய கூட்டம் எங்கள் இயக்கத்தால் கூட்டப்பட்டதல்ல. நாங்கள் எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. தலைமை எதுவும் இன்றி, எங்கே போகிறோம் என்ற இலக்கு எதுவும் இன்றி அந்த ஜனத்திரள் திமிறிக் கொண்டிருந்தது. எனது ஜப்பானிய பயணத்தைப் பற்றிப் பேசச் சொன்னார்கள். 1990களில் எங்களோடு போராடிய நண்பர் பாண்டியனும், இன்று உடன் நிற்கும் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியனும். சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினோம். கூடங்குளம் அருகேயுள்ள கடலோர கிராமங்களில் இருந்து ஆட்கள் வந்துசேர்ந்துக் கொண்டிருப்பதை கவனித்தேன். அனைவரும் நான் பேசுவதை உன்னிப்பாக கேட்பதையும் கவனித்தேன். பெண்கள் அனைவரும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருக்க, ஒரு சில ஆண்கள் பந்தல் போட்டார்கள், தண்ணீர் கொண்டு வந்தார்கள், அடுத்து யார் பேச வேண்டும் என விவாதித்தார்கள்.

ஒரு பிரளயத்தின் நடுவே நின்று பேசிக் கொண்டே இவை அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தேன். ஒரு புறம் மகிழ்ச்சி, மறுபுறம் கொஞ்சம் பயம் கலந்த கவலை. வன்முறை நிகழ்ந்து விடக்கூடாது. அசம்பாவிதம் எதுவும் நடந்து விட கூடாது. முகிழ்த்திருக்கும் புரட்சிப்பூ முளையிலேயே கிள்ளி எறிந்துவிடப்படக் கூடாது. தமிழ் குடிமகன்கள் சிலர் நான்கு கால்களில் நின்றதும், போலீஸ் பட்டாளம் குவிந்து கொண்டிருந்ததும், எத்தனையோ எட்டப்பர்கள் எமக்குள் தலைவர்களாய் உலாவந்ததும், என்னை அச்சுறுத்தின.

கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு காந்திய அறவழியில் போராட மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு எனது பேச்சினை முடித்தேன். பலர் பேசினர். தொடர் ஓட்டத்தில் ஓடுபவர்கள் கைத்தடியை ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வது போல, போராட்டத்தின் தலைமை கைமாறிக்கொண்டே இருந்தது. கூடங் குளம் இளைஞர்கள் சிலரையும், பின்னர் நான்கைந்து பெண்களை முன்னுக்குத் தள்ளியும் பெரிய பலன் கிடைக்கவில்லை.

இதற்கிடையே அருகேயுள்ள இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் மக்கள் தேவாலய மணியை அடித்து திரண்டுக் கொண்டிருப்பதாகவும், உடனே வாருங்கள் என்றும் அழைப்பு வந்தது. உண்ணா விரதம் இருக்க முன்வந்த சில தோழர்களை அமரச்செய்து, அவர்கள் கைகளிலே பொறுப்பை ஒப்படைத்து விட்டு, சிவசுப்பிரமணியன், போஸ், ரவி, நான் மற்றும் சிலர் இடிந்தகரைக்கு விரைந்தோம்.

பங்குத்தந்தை வீடு அந்திக்கடை போல ஆரவாமாயிருந்தது. நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தனர். கொந்தளித்தனர், ஒரே நேரத்தில் அனைவரும் பேசினர். அவர்களை அமைதிப்படுத்தி ஆலோசனை செய்த போது அட்டகாசமான திட்டங்கள் அடுக்கடுக்காய் வந்தன. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை,பள்ளிக்கூடங்களுக்குக் குழந்தைகளை அனுப்புவதில்லை, கடைகளைத் திறப்பதில்லை, கறுப்புக்கொடி ஏற்றுவது, ரேஷன் கார்டுகளை திருப்பி தருவது, கிராமங்களில் கூடங்குளம் அணு உலையை மூடச்சொல்லி தீர்மானம் போடுவது என பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சுதந்திர தினம் கழிந்த உடனேயே ஆகஸ்டு 16 அன்று இடிந்த கரையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.

கூடங்குளத்துக்கு திரும்பிவந்து உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் கலந்தாலோசித்து, இடிந்தகரை முடிவுகளை சொல்லி அன்றையதின போராட்டத்தை முடித்துக்கொண்டோம்.

ஆகஸ்டு 13ம் தேதி நாகர்கோவிலில் உள்ள எனது வீட்டில் வைத்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த அசுந்தா, உஷா, லிட்வின், கிளாரட், அருள்ராஜ், சரவணன், போஸ், கிருஷ்ண மூர்த்தி, வில்சன், ஸ்டீபன் தமிழ்செல்வன், சரவணபவன், புஷ்பராயன், நான் அனைவரும் கலந்தாலோசித்தோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூடு எனும் கோரிக்கையைத்தான் எங்கள் ஒரே கோரிக்கை என்றும், பேரணி, ஊர்வலம் போன்றவற்றை தவிர்த்து விட்டு உண்ணாவிரதம் ஒன்றே போராட்ட உத்தியாக இருக்கட்டும் என்றும், அடுத்தகட்டம் பற்றி ஆகஸ்டு 16 அன்று இடிந்தகரையில் முடிவு செய்யலாம் என்றும் தீர்மானித்தோம்.

ஆகஸ்டு 14 அன்று எங்களிடம் சிலர் கூடங்குளம் நண்பர்களோடு கூத்தங்குழி,கூடங்குளம், இடிந்தகரை கிராமங்களுக்குச் சென்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினோம். சுதந்திர தினத்தன்று கூடங்குளம், விஜயாபதி, கூத்தங்குழி, லெவிஞ்சிபுரம் கிராம பஞ்சாயத்துக்கள், கிராம சபை கூட்டங்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே மூடக் கோரி தீர்மானங்கள் இயற்றினர். இந்த பரபரப்பான செய்தி காட்டுத்தீ போன்று பரவி கொண்டிருந்த அடுத்த நாளே ஆகஸ்டு 16 அன்று பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டோம்.

ஊருக்கு நடுவே, கடலுக்கு அருகே பிரம்மாண்டமான பந்தலமைத்து, எழுச்சிமிகு உரைகளோடும், வீர முழக்கங்களோடும், வெறும் தண்ணீர் மட்டுமே குடித்து உண்ணா நோன்பிருந்தோம். எண்ணற்ற இளம் பிஞ்சுகளும் எங்களோடு அமர்ந்திருந்து ஆபத்தான தங்கள் எதிர்காலத்தைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தனர்.

உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த போதே, எங்களில் பலர் கூடிப்பேசி போராட்டத்தை தொடர்ந்து நடத்த ஒரு நிர்வாக குழுவையும், சட்ட ஆலோசகர் குழுவையும், நிதிக்குழுவையும் தேர்ந்தெடுத்தோம். எங்களது உடனடி கோரிக்கைகளை விண்ணப்பமாக எழுதி தயாரித்து, உண்ணாவிரத பந்தலுக்கு வந்திருந்த ராதாபுரம் வட்டாட்சியாளர் அவர்களிடம் சமர்ப்பித்துவிட்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டோம்.

ஆகஸ்டு 17 அன்று தொடங்கி மூன்று நாட்கள் கூடங்குளம் கிராமத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்க எத்தனித்த போது, நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக போலீஸ் அறிவித்தது. அதையும் மீறி பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருந்தோம். இந்த நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோதே, காவல் துறையினர் பெரும் திரளாகக்கூடி கண்ணீர் புகை வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்து எங்களை கலைக்கப் போவதாக தகவல் கசிந்தது. ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதிகாரிகளை எச்சரித்த போது, எங்களை கூடங்குளம் காவல் நிலையத்துக்குப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். சேரன்மகாதேவி கோட்டாட்சியரும் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளரும் எங்களோடு பேசி, பேரிடர் ஒத்திகையை தள்ளிவைப்பதாகவும், நாங்கள் எங்கள் போராட்டத்தை ஆகஸ்டு 31 வரை ஒத்திவைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்கள். பத்து பேர் கொண்ட குழு ஒன்றை தேர்ந்தெடுத்து தருமாறும், அணு உலைகளை ஏன் எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களையும் எழுதித் தருமாறும் கோரினார்கள். இதற்கு ஒத்துக்கொண்ட எங்களை போலீஸ் கமிஷ்னர், மாவட்ட கண்காணிப்பாளரிடம் அழைத்துச் சென்று பேசினார்கள்.

நாங்கள் வெளியே வந்த பிறகு ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் வருவதால் போராட்டங்களை செப்டம்பர் 7ம் தேதி வரை ஒத்திவைக்க கேட்டுக்கொண்டார் கூடுதல் கண்காணிப்பாளர். எங்கள் பேச்சுவார்த்தை விவரங்களை மக்களிடம் தெரிவித்து, இந்த கால அவகாசத்தை அவரவர் ஊர்களில் போராட்டக் குழுக்கள் அமைக்கவும், பிரச்சாரங்கள் செய்யவும் உபயோகிக்கும் படி கேட்டுக்கொண்டோம்.

ஆகஸ்டு23 அன்று நாகர்கோவிலில் நடத்தவிருந்த ஆர்பாட்டத்துக்கு நள்ளிரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்த போலீசார் அனுமதி மறுப்புக் கடிதம் தந்து நிறுத்தினர். ஆகஸ்டு 27 அன்று தூத்துக்குடியில் தமிழர் களம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோம். இந்நிலையில் ஆகஸ்டு 28 தேதியிட்ட ஹிந்து பத்திரிக்கையில் அணுசக்திதுறை தலைவர் சிறீகுமார் பானர்ஜி கூடங்குளம் முதல் உலை செப்டம்பர் மாதம் இயங்க துவங்கும் என அறிவித்ததால் உடனடியாக ஆகஸ்டு 30ம் தேதி இடிந்த கரையில் நிர்வாகக் குழுவை கூட்டி, ஆலோசித்து, செப்டம்பர் 11 அன்று இடிந்தகரை உண்ணாவிரதத்தோடு போராட்டத்தை மீண்டும் துவங்குவது என தீர்மானித்தோம்

இடது கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்ட தலைவர் பிருந்தாகாரட், புகழ்பெற்ற எழுத்தாளர் செயல்பாட்டாளர் அருந்த்தி ராய், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் லட்லாம் என பலர் கூடங்குளம் போராட்டத்தை ஆதரித்துப் பேசியிருக்கின்றனர்.

செப்டம்பர் 25 அன்று தமிழகமெங்கும் செயல்படும் முக்கிய செயல்பாட்டாளர்களை மதுரைக்கு அழைத்து தமிழ் சமூகம் கூடங்குளத்திலும், கல்பாக்கத்திலும், தேனி மாவட்டம் தேவாரத்திலும் எதிர்கொண்டு நிற்கும் பேராபத்துக்களை அலசி ஆராய்ந்து ஆவன செய்திட பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனும், மக்களாட்சி இயக்கம் பாஸ்கரனும், நானும் திட்டமிட்டிருக்கிறோம். தயவுசெய்து நீங்களும் வாருங்கள்.

Pin It