kudankulam_fasting_620

கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி கடந்த 7 மாதங்களாக அமைதி வழியில் போராடி வரும் மக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. 6000க்கும் மேற்பட்ட, ஆயுதந் தாங்கிய காவல் துறையினர் கூடங்குளம் பகுதியை முற்றுகையிட்டு, அந்த எளிய மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து வசதி கிடைக்க விடாமல் செய்துள்ளனர். செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, தமிழக மக்களைத் திசைதிருப்பியதோடு மட்டுமல்லாமல், இப்போது அகிம்சை வழியில் போராடி வரும் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கின்றன. கூடங்குளம் பகுதி, முள்வேலி இல்லாத முள்ளிவாய்க்காலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் தென் தமிழகமே பாலைவனமாக மாறிவிடும். எனவே, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் என்பது நம் தமிழ் மண்ணைக் காப்பாற்றும் போராட்டமாகும். போராட்டத்தையும், போராடும் மக்களையும் காக்க வேண்டிய அவசியம், தமிழ் மண்ணின் மீதும், தமிழக மக்களின் மீதும் அக்கறை உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

அதன் ஒரு பகுதியாக, கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை ‘கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கம்’ முன்னெடுத்துள்ளது.

கோரிக்கைகள்:

1. கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினரை திரும்பப் பெறவேண்டும். ஓர் அறவழிப்போரட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு போடப்பட்டிருக்கும் காலவரையற்ற 144 தடையுத்தரவு நீக்கப்படவேண்டும்.

2. குடி நீர், மின்சாரம், சுகாதார வசதிகளை முடக்குவதன் மூலம் ஒரு மக்கள் போராட்டத்தை ஓர் அரசு முடக்க நினைப்பது மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்  செயலாகும். இதேபோல் உணவு, மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு தேவையான பால் போன்ற அத்தியாவசிய தேவைகள்கூட காவல்துறையால் தடுக்கப்படும் நிலை தொடரக்கூடாது.

3. இடிந்தகரையில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் குழந்தைகள் பள்ளித் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. இது குழந்தைகளின் அடிப்படை உரிமையையே மறுப்பதாகும். உரிய பாதுகாப்புடன், குழந்தைகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவேண்டும்.

4. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மீனவ மக்களுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

5. தங்கள் வாழ்வாதாரங்களையும் தங்கள் சந்ததிகளின் வாழ்வுரிமைக்காகவும், ஒட்டுமொத்த தமிழகத்தின் பாதுகாப்புக்காகவும் போராடிவரும் மக்களின் கோரிக்கையை ஆதரிக்காவிட்டாலும் அவர்கள் மேல் ஏவிவிடப்படும் நியாயமற்ற வன்முறை, அரசு ஜனநாயக நியதிகளுக்குப் புறம்பாக நடத்திவரும் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றை எதிர்க்க ஜனநாயக சக்திகள் முன்வரவேண்டும்.

kudankulam_fasting_621

இடம்: தாயகம், மதிமுக தலைமை அலுவலகம், எழும்பூர், சென்னை

-              கூடங்குளம் மக்கள் பாதுகாப்பு இயக்கம்

Pin It