நாள்: 23.03.12, வெள்ளிக்கிழமை         
நேரம்: காலை 10.00 மணிக்கு
இடம்: பாளையங்கோட்டை திடல்
 
வைகோ, தொல்.திருமா, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, பெ.மணியரசன் மற்றும் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
 
சொந்த மக்களை வேட்டையாடும் மத்திய, மாநில அரசுகள்
 
தமிழ்நாட்டு மக்களே! பச்சிளம் குழந்தைகள் குடிக்க பால் இல்லாமல் அழுகின்றன. தண்ணீர் தடுக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொருட்கள் ஏறத்தாழ தீர்ந்து விட்டதால் பட்டினிச் சாவை நோக்கி மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். மின்சாரம், மருந்து, போக்குவரத்து என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் முடக்கிப் போட்டு ஒரு இரக்கமற்ற தாக்குதலை இடிந்தகரை மக்கள் மீது நடத்திக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். சனநாயக உரிமைகளை குழி தோண்டிப் புதைத்து விட்டு மனிதாபிமானமற்ற முறையில் ஒரு மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து பலத்தையும் அறவழியில் போராடிவரும் அப்பாவி மக்கள் மீது ஏவிவிடுகின்றன அரசுகள். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக கப்பற்படை, வான் படை, ராணுவம் ஆகியவற்றை களமிறக்கி 144 தடையுத்தரவு என்ற பெயரில் ஒரு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இரவு நேரங்களில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அகப்பட்டவர்களை  அழைத்துச் செல்கிறது காவல்துறை. பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் கடும் வேதனைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சிங்கள இனவெறி அரசு ஈழ மக்களிடம் நடந்து கொண்டதைப் போல இந்த சனநாயக நாட்டில் இந்த மத்திய, மாநில அரசுகள் கொடூரமாக நடந்து கொள்கின்றன. தங்கள் வாழ்க்கையை பாதுகாக்கப் போராடும் உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு. அதைத் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
 
மக்களே விழித்தெழுங்கள்!

அரசியல் நாடகங்களை முடித்துவிட்டு மூர்க்கத்தனமான அரச வன்முறை முகத்துடன் இரத்த வெறியோடு வந்து விட்டன மத்திய, மாநில அரசுகள். அணு உலைகளிடமிருந்து தம்மை காத்துக் கொள்ளப் போராடும் மக்களை இந்த கொடிய அரசுகளிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும். ஆயுதம் கொண்டோ, பட்டினி போட்டோ நமது மக்களைக் கொன்றொழிக்க அரசுகள் துணிந்து  விட்டன. ரஷ்சிய முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட சொந்த மக்களை பலி கொடுக்கத் தயங்காத மத்திய காங்கிரஸ் அரசும், அதன் அடியாளான மாநில செயலலிதா அரசும் இவர்களிடம் பொறுக்கித் தின்னும் மற்ற அரசியல் கட்சிகளும், ஆளும் வர்க்கமும் எளிய தமிழ் மக்களைக் கொன்று போட நாம் அனுமதிக்கலாமா? அணு உலைகளினால் பாதிக்கப்படப்போகும் அனைத்து மக்களுக்காகவும் சுயநலமின்றி போராடி வரும் இந்த எளிய மக்கள் தயவு தாட்சண்யமின்றி வேட்டையாடப்படும் இந்த சூழ்நிலையில் நாம் பாராமுகம் காட்டினால் நாம் மனிதர்களா?

இதற்கு மேலும் அமைதி காத்தால் ஈழத்தில் நடந்தது போல் இங்கேயும் நடக்கும். முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நம்மால் தடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை, நமது மக்கள் இந்த மத்திய, மாநில அரசுகளால் வேட்டையாடப்படுவதை எந்த வகையிலாவது தடுக்க வேண்டும். யாரோ பாதிக்கப்படுகிறார்கள் என்று இன்று நீங்கள் அமைதியாக இருக்கலாம். ஆனால் இந்த அடக்குமுறைகள் நாளை உங்கள் மீதும் ஏவப்படலாம். உங்கள் வீடுகளும் இடிக்கப்படலாம், உங்கள் நிலங்களும் பறிக்கப்படலாம், உங்கள் பிள்ளைகளின் உயிர்களும் பறிக்கப்படலாம். ஏனென்றால் மத்திய, மாநில அரசுகளின் கைகளில் இது போன்று ஏராளமான மக்கள் விரோதத் திட்டங்கள் இருக்கின்றன. இன்று இந்த மக்களுக்காக நீங்கள் போராடத் தயங்கினால், நாளை உங்களுக்கு இந்த நிலை வரும்போது உங்களுக்காகப் போராட யாரும் வர மாட்டார்கள். மிருகங்கள் கூட தன் இனம் வேட்டையாடப்படும்போது ஒன்று கூடி எதிர்ப்பு காட்டுகின்றன. நீங்களோ மனிதர்கள் ?

அரசுகள் இருப்பது மக்களை காப்பதற்குத்தான். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசே  மக்களை அழிக்கும்போது அதனை எதிர்த்துப் போராட மக்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. அந்த உரிமைதான் சனநாயக உரிமைகளில் மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் தங்களது சனநாயகக் கடமையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளின் கொடும் தாக்குதலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி வரும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம், போராடுவோம். 
 
தொடர்ந்து போராடுவோம்..! போராடும் மக்களை வெற்றி பெறச்செய்வோம்..!

Thamizhnaadu_Makkal_Perayam

- தமிழ்நாடு மக்கள் பேராயம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It