ஈழமண்ணை சாவெனும் சர்ப்பம் முற்று முழுதாக விழுங்கிவிடுமோ என்று ஐயுறும் சூழலில் தீபச்செல்வனின் இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சகல அதிகாரங்களும் கைகோர்த்துநின்று, அப்பாவி சனங்கள் மீது மிகக்கோரமான, மனிதாபிமானமற்ற தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. தனது சொந்த மக்களைச் சூழும் மரணத்தை, கூட்டம் கூட்டமான இடப்பெயர்வை, பசியை, நோயை, மனப்பிறழ்வை பார்க்கவும் கேட்கவும் விதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கையறு நிலைக் கதறலே இந்தக் கவிதைகள். போருக்குள் பிறந்து, அதற்குள்ளே வாழ்ந்து, கொடுங்கொலைக் காலமொன்றிற்குச் சாட்சியாயிருக்கும் தீபச்செல்வன் அவற்றை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். பயமும் பதட்டமும் கோபமும் இயலாமையும் எல்லாக் கவிதைகளிலும் பரவிக்கிடக்கின்றன.

Deepaselvan's bookஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் எப்படி வெறிச்சிட்டுக் கிடக்கும், அங்கு மனித உயிர் எவ்வளவு மலினமானதென்பதை ‘யாழ். நகரம்’ என்ற கவிதை பேசுகிறது.

‘நீங்கள் சாப்பிடும் கொத்துரொட்டி

மேசையில் பரவியிருக்க

எனது பிணம்

பின்னணியாய் தெரியும்’

மனிதர்களது மேன்மைகள் யாவும் துப்பாக்கிகளால் அழிக்கப்பட்டுவிட்டன, எல்லா உன்னதங்களும் இழிவின் காலடியில் சரிந்துவிட்டன என்பதற்கு தீபச்செல்வனின் மேற்கண்ட வரிகளைவிடச் சாட்சியம் வேண்டியதில்லை.

இத்தொகுப்பை வாசித்து முடித்ததும் வெறிச்சோடிப் போன நகரங்களும், கிராமங்களும் அவற்றின் தெருக்களுமே திரும்பத் திரும்ப நினைவில் வந்தன. சூனியம், வெறுமை இன்னபிற சொற்களுக்குள் அடக்கமுடியாத மரணப் பெருவெளியாக, சாம்பல் மேடாக, சாக்காடாக மக்கள் பலவந்தமாக விரட்டப்பட்ட நிலங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ‘மாதா வெளியேற மறுத்தாள்’, ‘கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்’, ‘ஏ-9 வீதி’, ‘எரிந்த நகரத்தின் காட்சிக் குறிப்பு’, ‘பறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்’ போன்ற கவிதைகள் சூனிய நிலத்தைப் பற்றியே பேசுகின்றன. அகதிகளாய் ஓடிக்கொண்டே இருக்கும் நிராதரவான மக்களைத் தொடர்ந்து போகின்றன இவரது வார்த்தைகள்.

‘நாங்கள் கறுப்பு மனிதர்கள்

கறுப்புப் பொதிகளைச் சுமந்தபடி

நிழல் வீடுகளைப் பறிகொடுத்துவிட்டு

சிறுதுண்டு நிழலுக்காக

எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்’

பல இடங்களில் பாலஸ்தீனிய கவிஞராகிய மஹ்மூத் தர்வீஷ்சை தீபச்செல்வனின் கவிதைகள் ஞாபகப்படுத்துகின்றன. அவர் இருப்பிழந்து எங்கெங்கோ அலைந்தபோதிலும் தன் தாய்நிலத்தையே நினைத்துக்கொண்டிருந்தார். பாலஸ்தீனத்தை அவர் காதலித்தார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான அவருடைய கவிதைகள் புகழ்பெற்றவை. அவர் எழுதுகிறார்:

‘அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும்

துரத்தப்பட்டான்

அவனது அன்புக்குரியவளையும்

அவர்கள் தூக்கிச் சென்றனர்

பின்னர் கூறினர்

நீ ஒரு அகதி என்று’

நாடற்று அலையும் எல்லோருக்குள்ளும் துக்கம் நிரம்பி வழிகிறது. அது கவிதைகளாகப் பெருக்கெடுக்கிறது. கண்முன்னால் சொந்தச் சனங்கள் செத்து விழுகின்றனர். மரண பயத்தில் கதறி ஓடுகின்றனர். தேடுதல் வேட்டையில் கைது செய்யப்படுகின்றனர். பெண்கள் வன்கலவி செய்யப்படுகிறார்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு படைப்பு மனத்தின் வெளித்தள்ளலே தீபச்செல்வனின் கவிதைகள். வேறொன்றும் செய்யவியலாது. கவிதை எழுதலாம். ஆனால், எழுதுவதுகூட பாதுகாப்பானதல்ல என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. தனது முன்னுரையிலேயே கூறுகிறார்:

‘எதைப் பற்றியும் பேசமுடியாத மலட்டுச்சூழலில் நான் எழுதிக்கொண்டிருப்பது அம்மாவிலிருந்து நண்பர்கள் வரை தேவையற்ற செயலாகவே கூறப்படுகின்றது’ இருந்தும் அவர் எழுதுகிறார். இல்லையெனில் மூளைக்குள் வெளித்தள்ளப்படாத வலி குந்தியிருக்கும். ஒருநாள் சித்தம் கலங்கிப்போகும். இலங்கை அரசாங்கம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை மிகச்சரியாகப் புரிந்துவைத்திருக்கிறார் தீபச்செல்வன். மக்களை மரணத்தின் மூலம் பணியவைப்பது, கோழைகளாக்கி கும்பிட வைப்பது, ‘ஒன்றும் வேண்டாம் விட்டுவிடுங்கள்’ என்று கையேந்த வைப்பது. ‘நிறைவேற்று அதிகாரம்’ என்ற கவிதையின் வரிகள் இவ்விதம் அமைகின்றன.

‘எங்கள் பாடலைத்

திருக வேண்டும்

நாங்கள் அழுது வடியவேண்டும்

என்ற செய்திக்காகவே

அவர்களது தேசம்

காத்துக் கிடந்தது’

... .. .. .. ..

.... ... ... ...

எங்கள் பாடலை

கொலைசெய்யத் தீர்மானித்தார்கள்

நிறைவேற்று உடைகளை

அணிந்தபடி‘

‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பிலுள்ள அநேகமான கவிதைகள் அரசியலைப் பேசும் கவிதைகள்தான். பொதுவான கவிதைகளையே ‘நன்றாக இருக்கின்றது’ என்று சொல்வது ஒரு சம்பிரதாயம் அன்றேல் வெறுஞ்சொல். கவிதைகளை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர அளவிட முடியாது. ‘நீ பேசாது போன பின்னேரம்’, ‘அம்மாவின் வீடு கட்டும் திட்டம்’ போன்ற சில கவிதைகளைத் தவிர்த்துப் பார்த்தால், மிக முக்கியமான தொகுப்பு. ‘நீ இரத்தம் சிந்திய தெருக்களில்’ வரும் நம்பிக்கை கலந்த வரிகளைப் போல அற்புதங்களுக்காகவே நாங்கள் காத்துக்கிடக்கிறோம்.

‘என்றேனும் ஒருநாள்

நமது நகரின் பிரதான தெருவில்

உனது சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும்’

தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி. நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம். கொலை படுகளத்தைப் பார்க்க விதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கண்ணீர்த் துளிகள்.

கவித்துவம், சொற்கட்டு, செறிவு, படிமம் என்பதற்கப்பாலும் இருக்கிறது கவிதை. அது உண்மையை எழுதுவது. உண்மைக்காய் துடிப்பது. உண்மையைச் சார்ந்திருப்பது. அவ்வகையில் தீபச்செல்வனின் முதற்தொகுப்பே மிக முக்கிய தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. மிக இளைய வயதில் இப்படி எழுத முடிகிறதே என்று வியப்பதா அன்றேல் இப்படி எழுத நேர்ந்ததே என்று துக்கிப்பதா என்று தெரியவில்லை.

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
தீபச்செல்வன்
விலை:ரூ 60
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை
நாகர்கோவில் -629001
தொலைபேசி: 04652278525

தமிழ்நதி

Pin It