1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம், ஈழத்தில் தமிழர்களை கொன்றொழித்துக் கொண்டிருந்த காலகட்டம். அப்போது மேதகு பிரபாகரன், இந்திய இராணுவத்தின் தீவிரத் தேடுதலில் இருந்தார். தமிழீழக் காடு ஒன்றில் தலைமறைவாக இருந்த பிரபாகரன், அங்கிருந்து தான் முதன்முதலாக ‘மாவீரர் நாள்’ திட்டத்தை அறிவித்தார்.
“இந்த வருடத்திலிருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக ஒரு வருடத்தில் நினைவு கூர்ந்த அந்த நாளையே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி உள்ளோம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவது வீரச்சாவு அடைந்த சங்கரின் நினைவு தினமான இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள் இப்படிப் பட்டவர்களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலை காலத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்துப் பார்த்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லா போராளிகளும் சமம் என்னும் ஒரு நோக்கத்துடனும் இந்த நாளை கொண்டாட நாம் முடிவு செய்துள்ளோம்”
- என்று அறிவித்தார்.
ஈழத் தமிழர் பிரச்சினை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு புதிய பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது. அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் இதில் தலையிட் டுள்ளது. அரசியல் முன்னெடுப்புகள் குறித்து அய்.நா.வுக்கு விளக்கம் அளிக்கும் கட்டாயத் துக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய இக்கட்டான அரசியல் சூழல்களில் ஈழ விடுதலையை முன்னெடுக்கும் அணுகு முறைகளை ஆண்டுதோறும் மேதகு பிரபாகரன் நிகழ்த்தி வந்த மாவீரர் நாள் உரைகளில் நாம் பார்க்க முடியும்.
விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் போர் நிறுத்தம் செய்த காலத்தில் “இடைக்கால தன்னாட்சி அதிகார சபை”க்கான வரைவுத் திட்டத்தை சர்வதேச சட்ட நிபுணர்களைக் கொண்டு உருவாக்கியது. சர்வதேச சட்ட நிபுணர்களில் பாராட்டுதல்களைப் பெற்ற வரைவுத் திட்டம் அது. அத்திட்டம் அன்றைய இரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஊடகங்களுக்கும் விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தினார்கள். திட்டத்தை இரணில் ஆட்சி புறந்தள்ள வில்லை. இது வரை சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களிலேயே வித்தியாசமானது என்று கூறி பேச்சு வார்த்தைகளைத் தொடங்கவும் தயாராகியது. ஆனால் அப்போது அதிபராக இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் சந்திரிகா குமாரதுங்கா. இரணிலிட மிருந்து பாதுகாப்புத் துறை உள்பட மூன்று துறைகளை ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி பறித்துக் கொண்டு, இந்தத் தீர்வுத் திட்டத்தை முடக்கினார். தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே முக்கியம். இடைக்காலத் தீர்வு அல்ல என்றார் சந்திரிகா. அந்தச் சூழலில் 2004ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் மேதகு பிரபாகரன் முன்வைத்த கருத்துகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருந்தி வருவதாகும். அவரது உரையிலிருந்து ஒரு பகுதி:
“இரணில் விக்ரமசிங்கா அரசங்கத் துடன் நாம் நிகழ்த்திய பேச்சு வார்த்தை யின் தொடர்ச்சியாக, அதன் இறுதிக் கட்டத்திலேயே எமது இடைக்கால நிர்வாக யோசனைகளை முன் வைத் தோம். அந்த யோசனைகளை அடிப் படையாக வைத்து உடன்பேச்சுக்களைத் தொடங்கலாம் என்ற எமது நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஆதரிக்கிறது. ஆனால், எமது நிலைப்பாட்டிற்கு மாறாக, சந்திரிகாவின் அரசு ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அதாவது, எந்த வகையான இடைக்கால நிர்வாக அமைப்பும் ஒரு நிரந்தரமான தீர்வுத் திட்டத்தின் இணை பிரியாத அங்கமாக அமைய வேண்டும் என வலியுறுத்துகிறது. நாம் ஓர் இடைக்கால நிர்வாக ஒழுங்கை வேண்டி நிற்க, சந்திரிகாவின் அரசு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பற்றி பேச விரும்புகிறது.
கால தாமதமின்றி, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு தமிழர் தாயகத்தில் அமையப்பெற வேண்டுமென நாம் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நீண்ட காலமாகத் தொடர்ந்த கொடிய போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளை யும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினை களையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
போரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர் வாழ்வும் வழங்கு வதற்கு உதவி வழங்கும் நாடுகள் பெருந் தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளன. துன்பப்படும் எமது மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கவும் அழிவுற்ற தமிழர் தேசத்தை மீளக் கட்டி யமைக்கவும் தகுந்த அதிகாரங்களுடன் வடகிழக்கில் ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.
போர் நிறுத்தம் செய்து, மூன்று ஆண்டு காலமாக அமைதி பேணி, ஆறு மாதங்கள்வரை பேச்சுக்களை நடத்திய போதும் சமாதானத்தின் பலாபலன்கள் இன்னும் எமது மக்களைச் சென்றடையவில்லை. தாங்க முடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எமது மக்களை நசுக்கி வருகிறது. முதலில், உடனடியாகத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்ட வேண்டுமென்பதையே எமது மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவேதான், நாம் முன் வைத்த யோசனைகளின் அடிப்படை யில் பேச்சுக்களை ஆரம்பித்து வெகு சீக்கிரமாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ வேண்டுமென நாம் விரும்புகின்றோம்”
- என்று மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் கூறினார்.
ஆயுதம் தாங்கி போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே ஈழத் தமிழர் விடுதலையை முன்னெடுத்து பிரபாகரன் மேற்கொண்ட தெளிவான அணுகுமுறையாக ‘இடைக்கால நிர்வாகச் சபை’ திட்டத்தை முன் வைத்ததாகும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு, மக்கள் வாழ்வாதாரம் இழந்து, இராணுவ முற்றுகைப் பிடியில் தவிக்கும் சூழலில் மேதகு பிரபாகரன், 2004ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுகுமுறை, தெளிவான வெளிச்சத்தைக் காட்டுகிறது.
மாவீரர் நாளில் அந்த மகத்தான வீரர்களின் தியாகத்துக்கு நாம் காட்டும் மரியாதை என்பது, அவர்கள் வரித்துக் கொண்ட இலட்சியத்தை முன் நகர்த்தலேயாகும்.
உணர்ச்சிகர மொழிகளிலும் சொல்லாடல் களிலும் மூழ்கி நிற்பதில் பயன் இல்லை.
அரசியல் களத்தை விடுதலைக்கான களத்தை நோக்கி நகர்த்துவதே இப்போதுள்ள முதன்மைப் பணி.
மாவீரர்களை வணங்கி பயணத்தைத் தொடருவோம்!