punai paavai novelஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தின் மூலம் பரவலாக அறியப் பட்டவர் தோழர் முருகவேள். முகிலினி, செம்புலம் என அடுத்தடுத்து வந்த அவரது நாவல்களைத் தொடர்ந்து புனைபாவை வெளிவந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் உலகப் புகழ் பெற்ற உருக்கு உருவானது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான இந்த உருக்கால் செய்யப்பட்ட டமாஸ்கஸ் வாட்களைக் கொண்டு தமிழ்நாட்டின் மன்னன் எப்படி வீழ்த்தப்பட்டான் என்பதை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது என படித்ததும் அறியாத அந்த வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட்டது.

அந்த தொழில்நுட்ப மேன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் நாவலை புரட்ட அது வெறும் தொழில்நுட்பம் அல்ல; அந்த அறிவியல் வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது என்பதை சொல்லும் ஒரு திரைக்  காவியமாக கண் முன்னால் விரிய ஆரம்பித்தது. 

இந்த சமூகத்தை நேசிக்கும் எவருக்கும் ‘நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?’ என்ற கேள்வி எழுந்தாலும் சிலரே அதற்கான காரணங்களை தேடிச் செல்கிறோம். அப்படி தேடிக் கண்டடைந்த காரணங்களை அறிவியல் பார்வையில் அதற்குரிய மொழியில் முன்வைப்பதுதான் இந்த சிலரின் பொதுவான வழக்கம்.

பொதுவாக அது சிறிய அறிவியல் கூட்டத்துடன் அப்படியே நின்று போகும். அப்படி அல்லாமல் எல்லோருக்குமான இனிய மொழியில் அழகியல் ரசனையோடும், அறிவியல் பார்வையோடும் தான் தேடிக் கண்டடைந்தவற்றை புனைவாக முன்வைக்திருக்கிறார் தோழர் முருகவேள். 

பொருளும் வாழ்வும் 

நாம் எல்லோரும் எதோ ஒரு தருணத்தில் எனது வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கிறது? என்று எண்ணாமல் இருந்திருக்க மாட்டோம். ‘எல்லாம் அவன் செயல்’ என்று சொல்லி பலரும் கடக்க முயன்றாலும் இந்த பணமும் செல்வமும் நம்மை பாடாய் படுத்துகிறதே என்று உண்மையை சொல்லி புலம்பாமல் இருப்பதில்லை.

இந்த அனைவருக்கும் தெரிந்த ஒற்றை வரி பதில் உண்மை என்றாலும் இது மட்டுமே எல்லாவற்றையும் விளக்கி விடுவதில்லை. பல்வேறு நாடுகளை சேர்ந்த மனிதர்கள், காடு, கிராமம், நகரம் என பல்வேறு இடங்களைப் பொறுத்து மாறுபடும் வாழ்க்கை அன்பு, காதல், குடும்பம், வேலை என வேறுபாடும் அதன் பரிமாணங்கள் எல்லாம் ‘செல்வம்’ என்ற ஒற்றை புள்ளியில் எப்படி இணைகிறது என்பதையும், அதில் பங்கேற்கும் பாத்திரத்தைப் பொறுத்து எப்படி மாறுபடுகிறது என்பதை பொறுத்திக் காட்ட முனைந்திருக்கிறது இந்த புனைபாவை. 

இலக்கிய வாசமற்றவனின் இனிய இலக்கிய அனுபவம் 

வளர்ந்த மனிதர்களின் குணங்களை அவர்கள் வாழ்ந்த, வளர்ந்த சூழலை கொண்டு புரிந்து கொள்வதைப் போல, காட்டிலும் கழனியிலும் வாழும் மக்களின் வாழ்வை கற்பனை கண் கொண்டு நாம் கடந்து வந்த பாதையை காண முயல்கிறது.

பலம் பொருந்திய சோழர் படையும் அதன் பரிவாரங்களும் கொங்கு சோழனின் மீது தொடுக்கும் போரில் தொடங்குகிறது இந்த புனைவு. அதன் நோக்கத்தை விளக்க விடங்கசெட்டி பொன்பொருளுடன் அறிமுகமாகிறான்.

அதற்கான அடிப்படையாக அவரது குழுவின் வாணிப பின்புலம் விரிகிறது. அதன் விரிவாக்கத்தின தேவைக்கு இருளர் பழங்குடிகளை இதில் இணைக்க கோருகிறது. இதனை தக்கவைக்க முற்படும் செட்டியின் தேடல் சோனகனிடம் கொண்டுபோய் அவனை நிறுத்துகிறது.  

இப்படி ஒன்றின் தேவைக்கு இன்னொன்று இயல்பாக இணையும் இந்த புனைவில் மனம் மெல்ல இணைந்து அது எடுத்தியம்பும் மொழியின் இனிமையில் லயிக்க தொடங்குகிறது. இந்த கதாபாத்திரங்களும், அவர்கள் சார்ந்த வாழ்வும், கட்டமைக்கப்படும் விதமும் நுட்பமானது.

இருவேறு சமூக வளர்ச்சி நிலையில் உள்ள பழங்குடிகள் மற்றும் பணக்கார செட்டிகளின் சித்தரிப்பு உண்மைக்கு நெருக்கத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. அவர்களின் வீடுகள், சமத்துவமும் ஆதிக்கமும் நிலவும் இருவேறு குடும்ப அமைப்பு, சிறுவர்களின் விளையாட்டு கூட எப்படி இருவருக்கும் வேறுபடுகிறது என்பதை நுட்பமாக பதிவு செய்கிறது.

இருவரும் பயன்படுத்தும் பொருட்கள், ஆயுதங்கள், தினசரி நடவடிக்கைகள், கண்ணாமூச்சி விளையாட்டுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கிறதா என வியக்க வைக்கும் அளவான விளக்கங்கள் என நூலாசிரியர் ஒவ்வொரு காட்சியையும் கவனமாக சித்தரிக்கும் விதத்தை சொல்லிக் கொண்டே போகலாம். 

துள்ளி விளையாடும் மல்லி வளர்ந்து பருவமெய்தும் அந்த அழகை வர்ணிக்கும் இடத்தில் தன்னையும் மீறி ஒரு தகப்பனாக மிளிர்கிறார். படிப்பவரின் மனமும் ஒரு தகப்பனின் இடத்தில் இருந்து அவளை ரசிக்க வைப்பது அவரின் எழுத்தின் வெற்றி என்றே சொல்லலாம்.

அதே போல ஒவ்வொரு வாழக்கை முறையிலும் உள்ள கட்டுப்பாடுகளை கவனமாக சுட்டவும் தவறவில்லை. மல்லிக்கும் ரேசனுக்குமான இயல்பான காதலை ஏற்கும் பழங்குடி வாழக்கைமுறை, அனுமதிக்கப்பட்ட உறவை மீறி உடலுறவு கொள்பவர்களை தண்டிப்பதில் காட்டும் கடுமையையும் புனைவு பதிவு செய்கிறது.

செட்டியை சிவப்பாகவும், பழங்குடிகளை கருப்பாகவும் கவனமாக வர்ணிக்கிறார். தற்போது ஏழைகள் சாதிக்குள் மணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தாலும் அம்பானி போன்ற பெரும் பணக்கார்கள் அந்தஸ்த்தின் அடிப்படையில் சாதி மாறி மணம் செய்து கொள்வதைப்போல அந்தகால பணக்காரனான சோழ அரசன் அந்த அக மணமுறையை மீறி ஒன்று கலந்ததன் அடையாளமாக கலப்பு நிறத்தில் இருப்பதாக வர்ணிக்கப்படுகிறான்.

புனைவில் பல கதாபாத்திரங்கள் வந்தாலும் செல்வ உருவாக்கத்துக்கும், அதன் பெருக்கத்துக்கும், தக்க வைத்து பாதுகாக்கவும் அடிப்படையான உருக்கு தொழில்நுட்பமே இந்த புனைவின் கதாநாயகன். இதனை கண்டறிந்து உருவாக்கும் செட்டியின் முயற்சியும் அந்த ஆயுதத்தைக் கொண்டே மல்லியால் அவன் வீழ்த்தப்பட்ட பிறகு அந்த நுட்பமும் சோழ பேரரசும் ஒன்றாக மறைந்து போகிறது.

கடல் கடந்து சென்ற அந்த உருக்கில் செய்யப்பட்ட வாட்கள் சோழர்களுக்கு பின்பு தமிழ்நாட்டில் எழுச்சி கண்ட பாண்டியர்களை வீழ்த்துகிறது. மதிநுட்பமும் தொழில்நுட்பமும் மேம்பட்ட முகமதிய அரசனின் படை பாண்டிய நாட்டைக் கைப்பற்றுகிறது. 

விரிந்த தேடல் 

வரலாறு, தொழில்நுட்பம், வாழ்க்கை என பயணிக்கும் இந்த புனைவில் பல கதாபாத்திரங்கள் வந்து மறைந்து எப்படி மக்களின் வாழ்வும் அவரவர் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சியும் மாறுபடுகிறது என்பதை சுட்டுகிறார்கள்.

அவரவருக்குறிய பின்னணி அத்தனை நுணுக்கமான தகவல்களை சேகரித்துக் கொண்டு பின்னப்பட்டு இருக்கிறது. கொங்கில் தொடங்கி மத்திய கிழக்கு வரை இந்த வரலாற்றுப் பார்வை விரிகிறது.

அதன் தொன்மை மாறாமல் அந்த காலத்துக்குரிய பெயர்களுடன் பதிந்திருப்பதன் மூலம் இந்த தேடலின் ஆழத்தை புரிந்து கொள்ளலாம். ஒரு பொன்மாலை நேர வர்ணிப்பில் இந்த பகுதிக்கு தொலைவில் உள்ள சுமத்திராவின் கால நிலை மாற்றம் இங்கே காற்றாக எப்படி எதிரொலிக்கிறது என்பதை கால நிலை அறிவியலோடு வர்ணிப்பது இந்த அழகியல் வர்ணிப்பின் புதிய அம்சம் என்று கூறலாம்.

விலகும் வாசகன் 

ஆனால் கதையோட்டத்தில் வரும் கதாபாத்திரங்களின் வரவும், மறைவும் மைய ஆற்றில் வந்து கலக்கும் சிற்றோடைகளைப் போல் இணைந்து பயணிக்காமல் அந்த ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் பல கிளை ஆறுகலாக சென்று படிக்கும் வாசகனை பல இடங்களுக்கு இட்டு சென்று மீண்டும் மைய கதைக்கு கொண்டு வருவதாக இருக்கிறது.

இப்படி தொடர்ந்து ஏற்படும் விலக்கம் கதையில் ஒன்றிச் செல்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆங்காங்கே காணப்படும் சில அறிவியல் பூர்வமான பார்வைகள், விளக்கங்கள் கதையின் ஒரு பாகமாகவோ, வாசகனின் மனதோடு உறவாடுவதாகவோ அல்லாமல் அவனுக்கு மேல் நின்று பேசுகிறது. 

இதனை ஒரு உதாரணம் கொண்டு விளக்க வேண்டுமானால் தாய் நாவலில் பிற்போக்கு சிந்தனையுடன் இளைஞர்களுடன் பயணிக்க புறப்படும் தாய் கதாபாத்திரம் பல தயக்கங்களுடனும், கேள்விகளுடனும், அரைகுறை புரிதலுடனும், நட்புடனும் பயணிக்கும்.

அதனை எதிர் கொள்ளும் இளைஞர்கள் தர்க்க பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் அவளிடம் தொடர்ந்து உரையாடுவார்கள். அந்த உண்மைகளை எதிர் கொள்ள முடியாமலும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் அந்த தாய் தடுமாறுவாள்.

தன்னுடன் தனது சிந்தனையுடன் தொடர்ந்து போராடுவாள். அந்த போராட்டம் தாயின் போராட்டமாக மட்டும் இருக்காது. படிக்கும் வாசகனின் போராட்டமாகவும் இருக்கும். தவிர்க்க இயலாமல் உண்மை தேடி அலையும், மாற்றத்திற்காக போராடும் அந்த இளைஞர்களுடன் தாய் மட்டுமல்ல படிக்கும் வாசகனும் கதையின் போக்கில் இணைவான். 

என்ன காரணம்?     

இந்த சிக்கல் எழுத்தாளரின் புனைவில் இருப்பதாக கருத இடமில்லை. அவரின் கூர்மையான பார்வை, கவனமுடன் கட்டமைக்கப்படும் காட்சிகள் அதனை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவு. அது புரிதல் சார்ந்தாகவே தோன்றுகிறது.

ஆசிரியரின் சித்தரிப்பின்படி பழங்குடி மக்கள் வேட்டையாடும் விலங்குகளையும், விளைவித்த பொருட்களையும் பொதுவில் வைத்தே உண்கிறார்கள். சொத்து என்ற ஒன்று இல்லாத நிலையில் ஆணை மையமாக கொண்ட கற்பு நெறிக்கான தேவை எழவில்லை. எனில், அந்த சமூகத்தில் தாயே முக்கியத்துவம் பெற்று இருப்பாள்.

சமூக தலைவனான மூப்பனின் பதவி தகப்பனுக்கு பின் தனையன் என்பதாக அல்லாமல் தகுதி உள்ளவனை தேர்ந்தேடுப்பதாகவே இருக்கும். எனில் தனது குழந்தைகளுக்கு தனிச்சலுகை அளிப்பதோ, வலுக்கட்டாயமாக இனக்குழுவை அழைத்து செல்வதோ சாத்தியமற்றது.

அப்படி முயலும் பட்சத்தில் மக்கள் அவனை உடனே தூக்கி எறிந்து வேறு தலைவனை தேர்ந்தெடுப்பார்கள். அவனுடைய பதவி பரம்பரையாக வரும் ஆதிக்கம் சார்ந்தது அல்ல; மக்களை காத்து வழிநடத்தும் மதிப்பு வாய்ந்தது.

அதனை கல்லுக்கும் நெய் சோற்றுக்கும் அவன் பலியிட துணிய மாட்டான். தனியுடைமை இல்லாத இடத்தில் தன் பிள்ளைக்கு என சிந்திக்கும் அடித்தளம் இல்லாத அவன் தனது இனத்துக்காக சண்டையிட்டு மடியவே முற்படுவான்.

உருக்கு உற்பத்தியை பெருக்க சாதியாக மாறிவிட்டவர்களை விட பழங்குடிகளே பொருத்தமானவர்கள் என செட்டி முடிவு செய்கிறான். ஏன் என்ற கேள்விக்குள் செல்லாமல் ஒரு இடத்தில் அவர்களை கொல்லர்கள் தமது சாதியில் இணைத்துக் கொள்வதாகவும், மற்றொரு இடத்தில் இருளர்கள் மற்றுமொரு சாதியாக மாறுவதாகவும் வருகிறது.

தனியுடைமை இல்லாத பழங்குடி இருளர்கள் இப்படி மற்றவர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் பிறப்பின் அடிப்படையிலான சாதிய கட்டமைப்பில் இருக்கும் கொல்லர்கள் அவர்களை இப்படி இணைத்துக் கொள்ளும் சாத்தியமில்லை. அப்படியே தேவையின் பொருட்டு இருவரும் சேர்ந்தாலும் இருக்கும் சாதியின் கீழ் மற்றுமொரு சாதியாகவே இது வளரும். 

முரண்படும் அடிமை குறித்த பார்வை 

பறையடிமைகள் என்ற அடிமை வர்க்கம் எங்கெல்லாம் உழைப்புக்கு ஆட்கள் வேண்டுமோ அங்கெல்லாம் கொண்டு சென்று குடியமர்த்துவதாக புனைவில் வருகிறது.

ஆனால் அம்பேத்கர் தனது தீண்டத்தகாதார் ஆய்வில் இதன் தோற்றுவாய் மூன்று அடுக்காக முதலில் பிரியும் பார்ப்பனர்கள், நான்காம் அடுக்கான கலப்பின மற்றும் பூர்வகுடி மக்களை இணைத்து, பிறப்பு சார்ந்து சூத்திரர்களாக நான்காம் வர்ணத்தை உருவாக்கும் போது அதனை ஏற்க மறுப்பவர்களை விலக்கம் செய்யும் முறை தோன்றியதையும், மௌரியர் வீழ்ச்சிக்கு பிறகு மீண்டெழும் பார்ப்பனியம் அதனை ஏற்காத இந்த நான்கு வர்ணத்தை சேர்ந்தவர்களை பெருமளவு ஊர்விலக்கம் செய்ததினால் உருவானவர்களே தீண்டத்தகாதார் எனவும் நிறுவுகிறார். 

அப்படி என்றால் சோழர்களின் காலத்தில் இங்கே எழும் பார்ப்பனியம் அதனை ஏற்க மறுத்தவர்களை கொலைசெய்வது, ஊரைவிட்டு விலக்குவது என்ற வடக்கில் கைக்கொண்ட அந்த முறையையே கடைபிடித்திருக்க வேண்டும்.

அவர்களின் வளர்ச்சியே எல்லா ஊர்களின் வெளியிலும் இருக்கும் சேரிகளாக வளர்ந்திருக்க முடியும். எனில் ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழுவை வென்று அடிமைபடுத்தி வேளாண் உற்பத்திக்கு எல்லா இடங்களிலும் கொண்டு சென்று அமர்த்துவது என ஐரோப்பிய சமூகங்களில் நடந்ததைப் போலவே இங்கும் நடந்தது என்ற பார்வையில் இதனை பார்க்க வாய்ப்பில்லை.

அந்த பார்வையில் செட்டி பறையடிமையை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்துவதாகவும் அதன் வளர்ச்சியில் அந்த அடிமையிடம் நெருங்குவதாகவும் கட்டமைக்கபடுவது கற்பனையாகவே கருத வேண்டி இருக்கிறது.

உண்மையில் அப்படியான வளர்ச்சிக்கு அவர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டது ஆங்கிலேயேர்கள்தானே. அவர்களின் உற்பத்திமுறை தானே அவ்வாறான இணைவை கோரியது. 

ஐரோப்பிய வாளர்ச்சியுடன் ஒப்பிட இயலாது 

விளைச்சலை அதிகரிக்க காடுகளை அழித்து புதிய கழனிகளை உருவாக்குவதாகவும், செட்டியின் தொழில்வளர்ச்சி வேளாளர்களுடனான போட்டியில் கொண்டுபோய் விடுவதாகவும் வருகிறது. இங்கே உற்பத்தியை பெருக்க இரண்டு காரணங்கள்தான் இருக்க வேண்டும்.

  1. மக்கள்தொகை பெருக்கம்
  2. சந்தை தேவை. இங்கே தானிய தேவை அரசனிடம் இருந்தே எழ முடியும். ஏனெனில் கிராம கட்டமைப்பில் சந்தையில் இருந்து வாங்குவது என்பது சமீப காலம் வரை இல்லை.

சுருங்கி வரும் சோழ பேரரசு பல போர்களில் ஈடுபடும் வாய்ப்பில்லை ஆதலால் இப்படியான தேவை அங்கே எழமுடியாது. அதேபோல நிலத்தின் உடைமையாளன் அரசனே. உற்பத்தி செய்த விளைச்சலில் மக்கள் உண்டு உயிர்வாழ கொஞ்சம் கொடுத்துவிட்டு மீதியை அரசனும் அவனுடைய நிர்வாகமும் வரியாக எடுத்து சென்றுவிடும். 

உண்மையில் இப்படி ஒரு வளர்ச்சி நடதிருந்தால் அது செட்டிக்கும் அரசனுக்குமான நேரடி மோதலில்தான் கொண்டுபோய் விட்டிருக்க வேண்டும். அதோடு செட்டியின் சந்தை மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக எழுந்தது. அது முடியும்போது இவன் யாரிடம் விற்பான்.

இவனுடைய கொல்லர்கள் அரசனுக்கு ஆயுதம் செய்து தரவேண்டியது கடமை. அது கூலி பெற்றுக்கொண்டு செய்யும் வேலை அல்ல. ஆதலால் உள்ளூரில் சந்தை என்பதே இருக்க முடியாது அல்லவா. அதன் அடிப்படையில் பார்த்தால் செட்டிபடை, வேளாளர் படை சித்தரிப்பும் ஐரோப்பிய நிலப்பிரபுத்துவம், முதலாளிய வளர்ச்சி என்ற பார்வையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதாகவே காண வேண்டி இருக்கிறது.

உண்மையில் சோழனின் வீழ்ச்சி என்பது அந்த கட்டமைப்பின் வீழ்ச்சி. சாதியாக கட்டமைக்கப்பட்டதிலேயே இந்த உருக்கு தொழில்நுட்ப வளர்ச்சி நின்று போனது. ஒரு குறிப்பிட்ட குழுவுக்குள் அதனை முடக்கும்போது அந்த அறிவியல் வளர்ச்சி குன்றிப் போகிறது.

அந்த வகையில் செட்டி சாதியில் பிறந்ததாலேயே இந்த தொழில் அவனுக்கு கிடைத்தது. அவனுக்கான தொழில் இங்கே உறுதிபடுத்தப் பட்ட நிலையில் அரசனும் செட்டியும் செல்வத்தை பகிர்ந்து கொண்டு செட்டி அரசனின் அங்கத்தவன் ஆன நிலையில் எந்த ஆற்றல் அவனை புதுமைகள் செய்ய தூண்டும்.

வெளியில் இருந்து வரும் அதற்கான தேவை புத்தாக்கங்களை நோக்கி இட்டு செல்லுமா? ஆங்கிலயர் தொடங்கி பலரும் வந்துள்ள நிலையில் உலகத்துடன் நாம் இன்று ஒன்று கலந்துள்ள நிலையிலும் அப்படியான ஒன்று இங்கே இன்னும் நிகழவே இல்லையே. ஆனால் சப்பான், கொரியா, சீனாவில் மட்டும் ஏன் நடக்கிறது.

தேடலின் மூலம் எது?

இதனை கொண்டு பார்க்கும் போது அது ஒரு நாட்டின் அகநிலை வளர்ச்சியில் மட்டுமே சாத்தியம் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. அப்படியென்றால் அது முற்கால சோழன் காலம்தொட்டு பிற்கால களப்பிரர் காலத்தில் பெருமளவு வளர்ச்சி அடைந்த நீர்பாசன முறைகள், அதன்மூலம் வளர்ந்த வேளாண்மை, அதன் வளர்ச்சியில் வரும் சிலப்பதிகார கோவனிடம் தான் இந்த தேடல் இருந்திருக்க முடியும்.

அதன் வளர்ச்சியில் தோன்றிய சோழ பேரரசின் தொடக்க காலம் இப்படியான உருக்கு உருவாவதற்கான எல்லா அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது. அதன் வளர்ச்சி தடைபட்டு உடைந்து கொண்டிருக்கும் காலத்தில் அதனை செட்டி தேடி அலைவதற்கும், ஆய்வு செய்து வளர்த்து எடுப்பதற்கும் சாத்தியம் இல்லை. 

இந்த வளர்ச்சி போக்குடன் பொருந்திவராத இடங்களில் ஆசியரின் கற்பனைகள் அதனை இட்டு நிரப்புகின்றன. செட்டியின் வீழ்ச்சி பொருந்தாத காதலால் வீழ்ந்தது என காட்டப்படுவது அப்படியான ஒன்று. அதன்பிறகு கோயிலில் தேவடியாராக விற்கப்பட்ட பெண்ணின் மீது காதல் கொள்ளும் கொல்லன் இந்த நுட்பத்தை தேடி அலைவதாக கதை செல்கிறது.

அந்த கற்பனையின் வளம் பிரம்மிக்க வைத்தாலும் கதையோடு ஒட்டி செல்ல தேவையான உயிர் இல்லாத உணர்வைப் பெறுகிறது. கடைசியாக நாம் வீழ்ந்ததற்கான காரணம் நமது அறிவியல் நுட்பத்தை இழந்தது. அதற்கான தேடலில்தான் நமக்கான முன்னேற்றம் இருக்கிறது என்பதை சரியாக புனைவு முன்வைக்கிறது. ஆனால் அப்படியான தேடல் எங்கு விடுபட்டது பின்பு எப்போது வெளிப்பட்டது அல்லது வெளிப்படும் என்பதை அது சொல்லவில்லை. 

பார்ப்பனியம் உற்பத்தியின் அங்கம் 

சாதியை மலையில் வாழும் சமணர்களின் உருவத்தை ஒத்த பகுத்தறிவுவாதியான மருத்துவனின் வழியாக புனைவு சாடுகிறது. நாம் நமது அறிவியலை எழுதி வைக்காமல் மனப்பாடமாக எல்லா அறிவியலையும் வைத்திருந்ததன் விளைவு என்பதாக காரணம் கூறுகிறது.

சாதியுடன் இணையாத சமண சார்புடைய செட்டியிடமும், சாதியை மறுத்த மருத்துவனிடமும்தான் இந்த தேடல் இருக்கும் என்பதை சரியாக கட்டமைக்கிறது. ஆனால் தேடல் இன்றி சாதியாக நின்றுவிட்ட சாதிய பார்ப்பனிய சமூகத்துக்கும், உற்பத்தி தேக்கத்துடன் அது கொண்டிருக்கும் உறவைவையும் பார்க்க மறுத்து வெறும் பண்பாட்டுக் கூறாக அனுகுகிறது. 

மார்க்ஸ் - ஏங்கல்சின் பார்வை 

இந்த பார்வை ஆசிரியரின் பார்வை மட்டுமல்ல இந்திய கம்யுனிஸ்டுகளின் பார்வையும் கூட. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவை பார்க்கும் மார்க்ஸ் இந்த உறவை முதன்மையாக எடுத்து விவாதிக்கிறார்.

கொல்லனும் தச்சனும் சுதந்திரமான தொழிலாளிகள் அல்ல; சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். இதற்கு வெளியில் அவர்களுக்கு சந்தை என்ற ஒன்று இல்லை என்கிறார். அவரின் சரக்கு(commodity) குறித்த வரையறையின்படி இவர்கள் உற்பத்தி செய்வது பயனுள்ள பொருட்கள் மட்டுமே. அதனடிப்படையில் அரசியல் பொருளாதார வளர்ச்சியின்றி இந்தியா இரண்டாயிரம் வருட மோன நிலையில் இருந்தது என்கிறார். 

அவரை மறுக்கும் இந்திய கம்யுனிஸ்டுகள் இல்லையில்லை அவருக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டுவிட்டன. இந்தியா ஏனைய நாடுகளைப் போல இயல்பான வளர்ச்சி அடைந்தது என்கிறார்கள். அதற்கு ஆதாரமாக இந்தியாவில் நிலவிய வாணிபம், புழங்கிய பணம் ஆகியவற்றை சொல்கிறார்கள்.

அவர் இந்தியா என்ற பரப்பை ஆய்வு செய்ய அந்த பெரும்பரப்பின் ஒரு பொது அலகான(unit) கிராமத்தை தனது ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார். அதற்கு பதிலளிக்கும் கம்யுனிஸ்டுகள் இந்த பெரும்பரப்பில் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் ஒன்றை ஆதாரமாக முன் வைக்கிறார்கள்.

அவர்கள் சொல்வது உண்மைதான். இந்த வாணிபம் புனைவில் வருவதைப் போன்று வெளிநாட்டவர்களுடன் நடக்கிறது. ஆனால் இந்தியாவுக்குள் ஏன் அது வளரவில்லை என்று யாரும் விளக்க முற்படுவதில்லை. 

ஒரு நாடும் அந்த நாட்டு மக்களும் எந்த வளர்ச்சிக்கட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை முடிவுசெய்வது உழைப்பின் வளர்ச்சியும், குடும்பத்தின் வளர்ச்சியும் என்கிறார் ஏங்கெல்ஸ்.

பொருட்களின் மதிப்பு குறித்த பகுதியில் மார்க்ஸ் ஒரு பொருளை உற்பத்தி செய்ய தேவையான உழைப்பின் அளவை அந்த நாட்டின் சராசரி உழைப்பாளியின் திறனை கொண்டு அளவிட வேண்டும் என்கிறார்.

எனில் நமது நாட்டு தொழிலாளியின் சராசரி உழைப்பு வளர்ச்சி என்ன? உலகமயம் அறிமுகமான தொண்ணூறுகளுக்கு பிறகு தான் தமிழ்நாட்டில் நிலவிய பலதாரமணம் வழக்கிழந்தது.

கூட்டுக் குடும்பங்கள் தனிக்குடும்பங்கள் ஆனது என்ற எதார்த்தத்தை புறம்தள்ளிவிட்டு இந்தியா இயல்பான வளர்ச்சி அடைந்தது என்ற முன்முடிவுக்கு வரும் கம்யுனிஸ்டுகளின் முடிவை ஆசிரியரும் ஏற்றுக் கொள்கிறார்.

அதன் அடிப்படையில் இந்த சமூகத்தை பொறுத்த முயற்கிறார். அது உழைப்பும், குடும்பமும் மற்ற நாடுகளைப் போல வளராத எதார்த்தத்துடன் பொருந்தாமல் விலகி செல்கிறது. வாசகனும் அவரின் எழுத்தில் ஒன்ற முடியாமல் விலகி செல்கிறான். 

கம்யுனிஸ்டுகளிடம் இருந்து மாறுபடும் அம்பேத்கரும் பெரியாரும் 

மார்க்சுக்கு பிறகு இந்திய சமூகத்தை ஆய்வு செய்யும் அம்பேத்கர் சமூக எதார்த்தமாக விளங்கும் சாதியில் இருந்து தொடங்குகிறார். இந்த சாதிய  சமூக உருவாக்கத்துக்கான காரணம் மௌரியர் காலத்திற்கு பிறகான பார்ப்பனிய மீட்சி என கண்டறிகிறார்.

அதே போல கம்யுனிஸ்டுகளைப் போல ‘இந்தியா’ என்ற ஒற்றை கண்ணாடி அணிந்து கொண்டு இந்த நிலப்பரப்பை அணுகாத அவரின் ஆய்வு தமிழர்கள் வரை நீள்கிறது. அதனை தவிர்த்தவர்களின் பார்வை வடக்கிலேயே தங்கிவிடுகிறது.

இவர்கள் இருவரையும் உள்வாங்கிய பெரியார் பார்ப்பனியத்தை முதன்மை எதிரியாக வரையறுத்து அதனை உடைக்க சுயமரியாதை அரசியலை தமிழ்நாட்டில் கட்டமைக்கிறார். இதனை மறுத்த கம்யுனிஸ்டுகள் நிலவுடமைக்கு எதிரான வர்க்க அரசியலை இந்தியா முழுக்க முன்னெடுக்கிறார்கள். 

மௌனமும் சரிவும்; மாற்று என்ன?

இதன் பின்னணியில் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் அந்த சுயமரியாதை அரசியலுக்கு மலிவுவிலை உணவு, கல்வி, இடஒதுக்கீடு, என பொருளாதார வடிவம் கொடுகின்றனர். இன்றும் ஆட்சியில் தொடர்கின்றனர். பார்ப்பனியத்தை மறுத்த கம்யுனிஸ்டுகள் இந்தியா முழுக்க பின்னடைவை சந்திக்கிறார்கள்.

அன்று இந்தியா என்ற தேசத்தின் உருவாக்கம் பார்ப்பன ஆதிக்கத்தின் உருவாக்கமாக பார்த்தார் பெரியார். இன்று ஒன்றியம் பிராந்திய முதலாளிகளை ஒடுக்கி தற்சார்பு என்ற பெயரில் பச்சையாக பனியா சார்புடன் பார்ப்பனிய அரசாக செயல்படுகிறது. அதனை எதிர்க்கும் தமிழ்நாடு ‘சுயசார்பு சுயாட்சி’ என முழங்குகிறது. கம்யுனிஸ்டுகளும் இந்த ஒன்றியத்தின் கொள்கைகளை எதிர்கிறார்கள். 

அப்படி என்றால் இந்த இந்திய தேசியம் என்பது ‘பார்ப்பனிய தரகு முதலாளித்துவ தேசியம்’ என்று ஒப்புக் கொள்கிறார்களா? அதனை எதிர்க்கிறார்கள் என்றால் மாற்றாக எந்த தேசியத்தை முன்வைக்கிறார்கள்? சோசலிசம்தான் தீர்வு என்றால் இன்றைய இந்திய சூழல் குறித்த பார்வை என்ன? இருக்கும் முதலாளிகளைக் கொண்டே அடுத்து சோசலிசத்தை நோக்கி பயணிப்பதா? இல்லை மாற்றை உருவாக்கி முன்னேற திட்டமா? இந்த முனைபாவை போன்று இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளிப்படும் முயற்சிகள் குறைந்தபட்சம் ஒரு உரையாடலையாவது ஏற்படுத்தி இருக்க வேண்டும். மாறாக எங்கும் மரண அமைதி நிலவுகிறது. இந்த மௌனத்திற்கும் கம்யுனிஸ்டுகளின் சரிவிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

- பாஸ்கர் செல்வராஜ்

Pin It