சென்ற இதழின் தொடர்ச்சி...
உருவமும் உள்ளடக்கமும்
இலக்கியம் பற்றிய மார்க்சிய விவாதமையங்களுள் உருவம், உள்ளடக்கம் குறித்த பிரச்சினையும் ஒன்றாகும். இலக்கியத்தின் உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்குமான உறவுநிலை குறித்தும், ஊடாட்டங்கள் குறித்தும் பெரும் விவாதங்கள் நடந்துள்ளன. உருவம் முதன்மையானதா? அல்லது உள்ளடக்கம் முதன்மையானதா? எது எதனைத் தீர்மானிக்கிறது? வடிவமைக்கிறது? என்பன போன்ற விவாதங்கள் மிக முக்கியமானவை.
மார்க்சியத் திறனாய்வு மரபாகவே இலக்கியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் குறைத்து அதனை வெறும் அழகியல் விளையாட்டாகக் கருதும் எல்லாவிதமான உருவவியல் வாதங்களையும் எதிர்க்கின்றது. ஜார்ஜ் லுக்காச், ‘இலக்கியத்தில் உண்மையாக இடம்பெறும் சமுதாயக்கூறு உருவமே ஆகும்’ என்கிறார் (மேற்கோள்: டெர்ரி ஈகிள்டன், ப.19).
உருவவியல்வாதிகள், உள்ளடக்கத்தை வெறும் உருவத்தின் ஒரு செயல்பாடாகவே பார்த்தனர். அவர் களைப் பொறுத்தமட்டில், கவிதையின் உள்ளடக்கம் என்பது கவிதையைக் கட்டமைக்கும் உத்திக்கூறுகளுள் ஒன்றாகும். உருவத்தை முதன்மைப்படுத்தும் இப் போக்கிற்கு நேர்மாறாக, உள்ளடக்கத்தை முதன்மைப் படுத்தும் மார்க்சியவாதிகள் உள்ளனர்.
அவர்களைப் பொறுத்த அளவில், கலையில் உருவம் என்பது, வெறுமனே செயற்கைத்தன்மை கொண்டது; புற நிலையில் திணிக்கப்படுவது; புகழ்வாய்ந்த பிரிட்டிஷ் மார்க்சிய விமர்சகரான ‘கிறிஸ்டோபர் கால்டுவெல்’ என்பவர், ‘மரணிக்கும் பண்பாட்டின்மீதான ஆய்வுகள்’(Studies in Dying Culture) என்ற நூலில், ‘சமுதாய இருப்பான உள்ளடக்கம் இயல்பிலேயே உருவமற்றது.
உள்ளடக்கத்தின் உள்ளியல்பாகவே உருவம் என்பது தடைசெய்யப்பட்டுள்ளது’ என்று விளக்கியுள்ளார். இப்பார்வையினைக் கிறிஸ்டோபர் கால்டுவெல்லைப் போல, அன்றைய பிரிட்டிஷ் மார்க்சியத் திறனாய் வாளர்கள் பலரும் கொண்டிருந்ததாகவும் இந்தப் பார்வை மலினப்படுத்தப்பட்ட மார்க்சியப்பார்வை என்றும் உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்குமான இயங்கியல் உறவைச் சரியாகப் புரிந்துகொள்ளாததன் விளைவே இதற்குக் காரணம் என்றும் இலக்கியப்படைப்புகளில் காணப்படும் கருத்துநிலையிலான உள்ளடக்கத்தை நேரடியாக வர்க்கப் போராட்டத்துடனும் பொருளாதாரத் துடனும் இணைத்துப்பார்ப்பதன் விளைவு என்றும் டெர்ரி ஈகிள்டன் மதிப்பிடுகின்றார் (மேலது, ப.63). மேலும் அவர், மார்க்ஸ் உருவம் மற்றும் உள்ளடக்கத்தின் ஒருமையை இலக்கியம் வெளிப்படுத்துகின்றது என நம்பியதாகவும் இது அவருடைய தொடக்ககாலத் தன்னுணர்ச்சிப்பாக்களில் தென்படுவதாகவும் குறிப்பிடு கின்றார். மேலும், உருவம் மற்றும் உள்ளடக்கத்தின் ஒருமையைக் குறித்த இயங்கியல்பார்வையை மார்க்ஸ், ‘ஹெகலிய’ மரபிலிருந்து பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார்.
தமிழ்ச்சூழலில் பேராசிரியர் நா.வானமாமலை, உருவம் மற்றும் உள்ளடக்கத்திற்கான இயங்கியல்உறவை மிகச்சரியான புரிதலுடன் உடலுக்கும் உயிருக்குமான உறவாக விளக்குகின்றார். “உள்ளடக்கம் உயிர்; உருவம் உடல். இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்புபோல், உள்ளடக்கமும் உருவமும் தொடர்புகொண்டவை. உள்ளடக்கம் இல்லாத உருவம் உயிரற்ற உடல் போன்றது. உருவமற்ற உள்ளடக்கம் உடலற்ற உயிர்போன்றது”. எனவே உருவமும் உள்ளடக்கமும் இயங்கியலான உறவுடையன.
எழுத்தாளனும் சார்புநிலையும்
மார்க்சியத்திறனாய்வு, எழுத்தாளன் அவனது படைப்பைப் பாட்டாளிக்குச் சார்பானதாகப் படைக்க வேண்டும் எனப்பெரிதும் வலியுறுத்தியது. குறிப்பாக, ருஷ்யப்புரட்சிக்குப் பிந்தைய சோவியத்இலக்கியத்தின் வளர்ச்சியில் - சோஷலிச யதார்த்தவாதத்தின் உருவாக்கத்தில் - எழுத்தாளனின் சமுதாயக்கடப்பாடும் கட்சிசார்புநிலையும் பெரிதும் வலியுறுத்தப்பட்டது. 1934ஆம் ஆண்டில் நடைபெற்ற, மக்சீம் கோர்க்கி போன்றோர் கலந்துகொண்ட சோவியத் எழுத்தாளர்கள் மாநாட்டில், இப் பாட்டாளி வர்க்கச்சார்பு, தத்துவமாக முன்வைக்கப்பட்டது; புரட்சிகரமான முன்னேற்றத்திற்கு யதார்த்தத்தை உண்மையாகவும் வரலாற்றுஅடிப்படை கொண்டதாகவும் படைக்கவேண்டியது எழுத்தாளனின் கடமை எனவும், இலக்கியம் கட்சி மனோபாவத் துடனும் நம்பிக்கை ஒளியுடனும் வீரப்பண்புடனும் குறிக்கோளுடையதாகவும் உருவாக்கப்படவேண்டும் எனவும் அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இத்தத்துவம், ‘புரட்சிகரப்புனைவியலு’க்கு அடித்தள மிட்டது. லெனினும் எழுத்தாளனின் கட்சிச் சார்பு நிலையைக் ‘கட்சி நிறுவனமும் கட்சி இலக்கியமும்’ (1905) எனும் கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ப்ளக்னோவ், கோர்க்கியின் படைப்புகளில் காணப்படுகின்ற அதிகமான பரப்புரைத்தன்மையை விமர்சித்ததைக் கண்டனம் செய்தார். மிக வெளிப் படையாக வர்க்க - கட்சிசார்பு இலக்கியத்திற்கு அறைகூவல் விடுத்தார். மேலும் இலக்கியம், ‘சோஷலிச ஜனநாயக இயந்திரத்தின் பற்சக்கரமாகவும் திருகாணியாகவும் திகழவேண்டுமென’ அறிவித்தார்; எழுத்தின் நடுநிலைமைத்தன்மை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினார். ருஷ்யப்புரட்சியின் இரண்டாவது முதன்மைச்சிற்பியான ‘லியோன் ட்ராட்ஸ்கி’ இலக்கியமும் புரட்சியும் என்ற நூலில், லெனினைப்போலவே சோஷலிசப் பண்பாட்டின் தேவையை வலியுறுத்தினார். சோஷலிசக் கலையானது யதார்த்தமாக இருக்கவேண்டும்; கலைவடிவம் சமுதாய உள்ளடக்கத்தின் உற்பத்திப்பொருளாகத் திகழவேண்டும் எனக்கூறினார். அதே சமயத்தில், கலையின் உயர்நிலையிலான தன்னாட்சித் தன்மையினையும் வலியுறுத்தினார்; ஒரு கலைப்படைப்பானது, அதன் சொந்த விதிகளின் அடிப்படையில் மதிப்பிடப்படவேண்டும் எனவும் கூறினார். மார்க்ஸ§ம் ஏங்கல்சும் கலை, இலக்கியத்தின் சமூகச்சார்புநிலைகளைக் கடந்து, படைப்பின் மேன்மை களைப் பாராட்டியுள்ளனர். சான்றாக மார்க்ஸ், மில்டனின் ‘துறக்க நீக்கத்தை’ப்பற்றிக் குறிப்பிடும் பொழுது, மில்டன் துறக்கநீக்கத்தைப் படைத்த காரணத்தைப்போலவே பட்டுப்பூச்சியும் பட்டினை உற்பத்தி செய்கின்றது. இது அதன் இயற்கைச் செயல் பாடு என விளக்குவார்.
தமிழ்ச் சூழலில் மார்க்சியத் திறனாய்வின் உருவாக்கம்
தமிழ்ச் சூழலில் மார்க்சியம், பாரதி எனும் மாபெரும் கவிஞன்வழி அறிமுகமாகிறது. ருசியப் புரட்சி, அதனால் விளைந்த ‘சோஷலிஸம்’ பாரதியால் வரவேற்கப்பட்டது. சோஷலிஸத்திற்கு இணையாகப் ‘பொதுவுடைமை’ என்ற சொல், தமிழில் முதன் முதலில் பாரதியாரால் ஆளப்படுகிறது. லெனினின் பெயரும் கொள்கைகளும் ‘இந்தியா’ பத்திரிகை கட்டுரைகள் வழி பாரதியாரால் விமர்சிக்கப்பட்டன.
இவ்வாறான மார்க்சிய எழுத்துக்கான சூழல் உருவாக்கத்தின் பின்னணியில் 1930களின் உலக அளவில் முற்போக்கு இலக்கிய அமைப்பு செல்வாக்குப் பெற்றது. 1935இல் பாரிஸ் நகரத்தில் உலக முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நிகழ்ந்தது. அதனையட்டி, 1936இல் இந்திப் புனைகதையாளர் பிரேம்சந்தின் தலைமையில் லக்னோவில் இந்திய முற்போக்கு எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது.
1937இல் ‘வாழ்க்கை இலக்கியப் போக்கும்’ (ஜீவன்ஸாஹித்ய ப்ரஸ்தானம்) 1944இல் ‘முற்போக்கு இலக்கியப் போக்கும்’ (புரோகமன ஸாஹித்யம்) மலையாளத்தில் உருப்பெற்றன. 1945ஆம் ஆண்டினை ஒட்டி வங்கத்தில் நஸ்ரூல் இஸ்லாமைத் தலைமையாகக் கொண்டு டாக்காவில் ‘கல்லோல்’ எனும் முற்போக்கு இலக்கியம் உருப்பெற்றது. தமிழில் 1937இல் பொதுவுடைமை இயக்க இதழான ‘ஜனசக்தி’ மலர்ந்தது; பாரதிதாசனின் ‘புதியதோர் உலகம் செய்வோம்’ கவிதை அதில், வெளியிடப்பெற்றது. 1938இல் பாரதிவிழாவை ஜீவா அறிவிக்கிறார். 1948இல் ‘புதுமை இலக்கியம்’ இதழ், இரண்டு இதழ்கள் வந்துபோகிறது; அதில் பாரதியைப் பற்றி விமர்சனங்கள் நிகழ்ந்தன.
1949-இல் குயிலன் ‘முன்னணி’ பத்திரிகையைத் தொடங்கினார்; ரகுநாதனின் ‘இலக்கிய விமர்சனம்’ நூல் வெளிவந்தது. 1951இல் ‘விடிவெள்ளி’ இதழில் ‘முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன?’ என்பதை தொ.மு.சி ரகுநாதன் வரையறுத்து எழுதுகிறார். இதற்கிடையில், 1930களில் தொடங்கப்பட்ட ‘இந்திய மக்கள் நாடக மன்றம்’ (இப்டா) தமிழில் செல்வாக்குப் பெறுகின்றது. 1959இல் இடதுசாரி இயக்கத்தின் இலக்கிய இதழான ‘தாமரை’ மலர்ந்தது. அவ்விதழ், ஏராளமான கவிஞர்களுக்கும் களமானது. 1970இல் ‘செம்மலர்’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இதழாகப் பூத்தது. தாமரையும் செம்மலரும் ஏராளமான புதிய முற்போக்குக் கவிஞர்களை, சிறுகதையாளர்களை, நாவலாசிரியர்களைத் தமிழ் இலக்கியவுலகிற்கு அறிமுகப்படுத்தின. இவ்வளர்ச்சிக் கிடையில், தமிழில் மார்க்சியத் திறனாய்வு வளர்ச்சி பெற்றது.
தமிழில் மார்க்சியத் திறனாய்வு பாரதியை மையப்படுத்தியே தொடங்கியது. 1930களில் பி.ஸ்ரீயும் இராஜாஜியும் வேதாந்தச் சிமிழுக்குள் அடக்க முற்பட்ட போது - அவரை மகாகவி இல்லையென்று சொன்ன போது - அக்கருத்துக்களோடு எதிர்வினைசெய்து பாரதியை பொதுவுடைமைக் கவிஞராக - மகாகவியாக - நிறுவிய ப.ஜீவானந்தத்தின் பாரதி பற்றிய ஆய்வுகளே தமிழில் மார்க்சியத் திறனாய்வுக்குக் கட்டியம் கூறியது. ஜீவாவைத் தொடர்ந்து ஆர்.கே.கண்ணன், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோர் பாரதியை மையப்படுத்தியே மார்க்சியத் திறனாய்வை வளர்த்தெடுத்தனர்.
தொடர்ந்து ரகுநாதன் இடைக்கால இலக்கியங்கள் (சமுதாய இலக்கியம்), காப்பிய இலக்கியங்களை (இளங்கோவடிகள் யார்) மார்க்சியக் கண்ணோட்டத்தில் ஆய்வுக்குட் படுத்தினார். பேராசிரியர் நா.வானமாமலையின் நெல்லை ஆய்வுக்குழுவும் ஆராய்ச்சி இதழும் கல்விப் புலத்திற்குள் மார்க்சியத் திறனாய்வைக் கொண்டு சென்றன. பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் (நாட்டார் இலக்கியம்), கா.சுப்பிரமணியம் (சங்க இலக்கியம்), பேராசிரியர் தி.சு.நடராசன், தோதாத்ரி (நவீன இலக்கியம்), வெ.கிருஷ்ணமூர்த்தி (மார்க்சிய தத்துவம்) எனப் பெரும் மார்க்சிய ஆய்வாளர்படையை பேராசிரியர் நா.வானமாமலை உருவாக்கினார். நாட்டார் இலக்கியம் மட்டுமல்லாது சங்க இலக்கியம், திருக்குறள், காப்பியங்கள் எனத் தமிழின் மிக முக்கியமான இலக்கியப் பரப்புக்களில் மார்க்சியத் தடம்பதித்தவர், பேராசிரியர் நா.வானமாமலை.
இதே காலப்பகுதியில் (1970களில்) ஈழத்துப் பேராசிரியர்களான க.கைலாசபதியும், கா.சிவத்தம்பியும் கல்விப்புலம் சார்ந்த மார்க்சியப்புலமை விமர்சகர்களாக உருப்பெற்று காத்திரமான ஆய்வுகளை நிகழ்த்தினார். திராவிட இயக்கம் முன்வைத்த தமிழ்ப் பெருமிதம் சார்ந்த தமிழ் மீட்டுருவாக்க அரசியலுக்கு மாறாகத் தமிழ் இலக்கியங் களை அறிவியல் அடிப்படை சார்ந்து ஆராய்வதற்கு இவர்களது ஆய்வுகள் பெரிதும் துணைபுரிந்தன. இதே கட்டத்தில் மார்க்சியத்தை ஆன்மிக ஒளியில் தரிசித்து ஹெகலியப் பார்வையில் தமிழ் இலக்கியத்தை அணுகியவர்கள் எஸ்.என்.நாகராஜனும், கோவை ஞானியும் ஆவர். இவர்களது புறவய கருத்து முதல்வாத பார்வைகளுக்கு எதிராக தணிகைச் செல்வனும் கோ.கேசவனும் கறாரான விமர்சனங்களை முன்வைத்தனர்.
1980களில் அமைப்பியல் பின்னை அமைப்பியல் பின்னை நவீனத்துவம் தமிழ்ச் சூழலில் அறிமுகமான போது அதனை மார்க்சிய கண்ணோட்டத்துடன் எதிர் கொண்டவர்களுள் அ.மார்க்ஸ், தி.சு.நடராசன், ந.முத்து மோகன் ஆகியோர் முதன்மையானவர்கள். இக்கால கட்டத்தில் அல்தூர், லுக்காச் போன்ற புதிய மார்க்சியர்கள் தமிழுக்கு அறிமுகமானார்கள். 1990களில் மிகைல் பக்தீனும் கிராம்ஸ்கியும் வெகுவாகப் பேசப் பட்டார்கள். மார்க்சியம் புதிய திறனாய்வுக் கோட் பாடுகளுடன் உரையாடி அதனைக் கடந்துசெல்ல வேண்டியதன் அவசியத்தைக் கா.சிவத்தம்பி பின் வருமாறு வலியுறுத்தினார். “மார்க்சியம் என்பது மேலே மேலே பாயும் நதி; அது பின்னோக்கிப் பாய்வதில்லை. பின்நவீனத்தின் இயல்பைக் கண்டதன் பின்னர் நாம் எங்கே நிற்கிறோமோ அங்கிருந்து மேலே செல்லல் வேண்டும். அதுதான் Progress முற்போக்கு. வரலாற்றில் தேவையில்லாது எதுவும் தோன்றாது. அவற்றின் உண்மைத் தன்மையைக் கண்டு, அவற்றுக்கு முகங் கொடுத்து மேலே செல்வதிலேயே முற்போக்குவாதம் தங்கியிருக்கிறது” (2010:பக்.207-208).
மார்க்சியம் ஓர் அணுகுமுறையே தவிர வாய்ப்பாடு அன்று என அறுதியிட்டுக் கூறும் கா.சிவத்தம்பி, “இவ் அணுகுமுறை நமக்குப் பிரச்சினையின் தன்மை, மையம், வெளிப்பாட்டு முறைமை பற்றிய ஓர் அறிக்கையைத் தரும்... இது ஒரு பிரச்சினையை அதன் சூழமைவுப் பின்புலத்தில் - உரிய இடத்தில் - இட்டு வைக்கிறது” என மார்க்சிய அணுகுமுறையின் சாராம்சத்தை விளக்குகின்றார். மார்க்சியம், இயங்கியலை அடிப் படையாகக்கொண்ட படைப்பாக்கத் தன்மைமிக்க
ஓர் அறிவியல் சட்டகமாக இருப்பதால், காலத் தொடர்ச்சியில் புதிது புதிதாக உருவாகும் இலக்கியங் களையும் தத்துவங்களையும் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வதற்கும் மதிப்பிடுவதற்கும் திறன்மிக்கதாகத் திகழ்கின்றது.
துணைநூற்பட்டியல்
- கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழிலக்கியத்தில் முற்போக்கு வாதம், சென்னை புக்ஸ், 1977.
- கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி..., மக்கள் வெளியீடு, சென்னை - 2, முதல் பதிப்பு, டிச. 2003
- கார்த்திகேசு சிவத்தம்பி, பாரதி மறைவு முதல் மகாகவி வரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட், சென்னை, 1984.
- கார்த்திகேசு சிவத்தம்பி, இலக்கியமும் கருத்துநிலையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட், முதல் பதிப்பு, ஏப்ரல் 2011.
- கார்த்திகேசு சிவத்தம்பி, நவீனத்துவம் - தமிழ் - பின்நவீனத்துவம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட், சென்னை, 2010.
- தோதாத்ரி, எஸ்., பிரதிபலித்தல் கோட்பாடும் அழகியலும், நாவாவின் ஆராய்ச்சி, இதழ் 38 & 39, 1991.
- முத்துமோகன், ந., வரலாற்று பொருள்முதல்வாதமும் மார்க்சிய அழகியலும், நாவாவின் ஆராய்ச்சி, இதழ் 38&39, 1991.
- ரகுநாதன், தொ.மு.சி., இலக்கிய விமர்சனம், ஸ்டார் பிரசுரம், சென்னை, மூன்றாம் பதிப்பு, பிப். 1964.
- ரகுநாதன், தொ.மு.சி. சமுதாய இலக்கியம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, இரண்டாம் பதிப்பு, டிசம்பர். 1980.
- ரகுநாதன், தொ.மு.சி., இளங்கோவடிகள் யார்? மீனாட்சி புத்தக நிலையம், முதற்பதிப்பு, டிசம்பர், 1984
- ரகுநாதன், தொ.மு.சி., பாரதி காலமும் கருத்தும், மீனாட்சி புத்தக நிலையம், முதற்பதிப்பு, டிசம்பர், 1980.
- Dmitry Markov, Socialist Literatures Problems of Development, Progresss, Moscow, 1984.
- Maxim Gorky, Collected Works, On literature, Vol. X, Progress, Moscow, 1982.
- Terry Eagleton, Marxism and Literary Criticism, Routledge Classics, London, 2002.