gandhi 483காந்தி காலத்திலிருந்து இன்றுவரை எல்லோராலும் விவாதிக்கப்படும் ஒரு பொருள் எப்படி சர்வோதய சமூகத்தை உருவாக்குவது என்பதைப் பற்றித்தான். உண்மையிலே அப்படி ஒரு சமூகத்தை உருவாக்க முடியுமா அல்லது உருவாகுமா இன்றைய சூழலில் என்பதுதான் பலரின் கேள்வி. ஏனென்றால் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகளும், வித்தியாசங்களும், வேறுபாடுகளும், போட்டிகளும், புறக்கணிப்புகளும், துவேஷங்களும், நிறைந்த உலகில் சமத்துவமிக்க சமூகத்தை உருவாக்குவது என்பது ஒரு கற்பனைதான் என்று வாதிடுவோர்தான் அதிகம். சர்வோதய சமூகங்கள் நாம் வாழும் சமூகத்தில் பல இடங்களில் இருக்கின்றன என்பதை நாம் உணர்வதில்லை அல்லது புரிந்து கொள்வதில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. சர்வோதய சமுதாயம் என்பது என்ன என்பதை நாம் தெளிவுபடுத்தி விட்டால் அதை எப்படி உருவாக்கிக் கொள்ளலாம் என்பது நமக்கு புலப்பட்டு விடும். சமத்துவப் பார்வையுடன், அன்பின் அடிப்படையில், தேவையை மையப்படுத்தி நேசித்தலை நியதியாகக்கொண்ட எளிய வாழ்க்கையை அனைவரும் பின்பற்றி மானுட வாழ்வுக்குத் தேவையான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் அனைவருக்கும் கிடைத்து அமைதியாக வாழ்ந்தால் அதுவே ஒரு சர்வோதய வாழ்வுதான். அந்த வாழ்வை பல குடும்பங்கள் சமூகமாக ஒன்றிணைந்து சிறப்பாக வாழ்வதை நம்மால் பார்க்க முடியும்.

அந்த சமூகங்களில் மிகப் பெரிய பதவிகளில் இருந்தவர்களும், சாதாரண பணிகள் செய்து ஓய்வு பெற்றவரும் எந்த ஏற்றத்தாழ்வுமின்றி ஒன்றாய் வாழ்வதை நம்மால் பார்க்க முடிகிறது. பல சமூகங்கள் செயல்படுகின்றன. வணிகத்தைப் பயன்படுத்தியும் சில சமூகங்கள் செயல்படுகின்றன. ஆன்மீகத்தை மையப்படுத்தி நாகரீக வாழ்க்கை வாழ்வதாக் கூறும் மிகப் பெரிய புறக்கணிப்புக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டிருக்கும் ஆதிவாசிகளின் வாழ்வைச் சற்று உன்னிப்பாகக் கவனித்துப் பாருங்கள். எளிமை, நேர்மை, பாலின சமத்துவம் தேவைக்கு வாழ்தல், இயற்கையுடன் இயைந்து புரிந்து வாழ்தல், பெண்மை போற்றுதல் அனைத்தும் அவர்களிடம் தான் இருக்கின்றன. அவர்கள் நாம் வாழும் நவநாகரீக வாழ்க்கையை வாழவில்லை அவ்வளவுதான். அவர்களிடமிருக்கின்ற வாழ்க்கை விழுமியங்கள் நம்மிடமில்லை.

இன்று நாம் சுயநலம் பேணும் பெரும்பான்மைச் சமூகமாக எளிமையையும், சமத்துவத்தையும் நிராகரித்து எல்லையற்ற ஏற்றத் தாழ்வுகளுடன் ஒருவரையொருவர் சுரண்டி சுகபோக வாழ்க்கை வாழ பழகிக் கொண்டோம். சமூகம் வறுமையில் இருந்த காலத்தில் பெரும்பான்மையான மக்கள் எளிய வாழ்வுதான் வாழ்ந்து வந்தனர். இன்று பொருளாதாரம் எல்லையில் அளவுக்கு வளர்ந்தபோதும், கல்வியறிவில் அறிவியலில், தொழில்நுட்பத்தில் உயர்ந்த போதும், சுயநலத்தில் தோய்ந்து சுகத்திற்கும் போகத்திற்கும் வேண்டிய பொருள் குவித்து நுகர்வு வாழ்க்கை வாழ பழகிக் கொண்டுவிட்டோம். இந்த வாழ்வு முறை இந்திய வாழ்வுமுறை அல்ல, சுயநலம் பேணும் வாழ்வு முறை ஒரு குடிமக்கள் வாழும் வாழ்வு முறையும் அல்ல.

இந்திய வாழ்வு முறை சமூகம் சார்ந்தது. மேற்கத்திய வாழ்வு முறையை நாகரீக வாழ்வு முறை என்று நம்மை எண்ண வைத்ததால் நமக்கு வந்த இந்த சுயநலம் பேணும் ஒரு பார்வை. அதிலிருந்து வெளிவர இயலாமல் சுயநலம் பேணும் மனிதர்களாகவே பணத்தின் மீதும், பதவியின் மீதும், புகழின் மீதும், சொத்தின் மீதும், தங்கத்தின் மீதும், பெண்ணின் மீதும் மோகம் கொண்டு, இவைகளை அடைய அவைகளின் பின் பித்தர்களாக மாறி ஓடிக்கொண்டே­யிருக்கிறோம். இன்று நாம் ஒருவித மன வியாதி பீடித்தவர்களாக வாழ்ந்து வருகின்றோம். நம்மில் இருக்கும் பெரும்பாலான சமூக வியாதிகளுக்குக் காரணம் எந்த வகையிலாது பொருள் ஈட்டி சுயநல சுகபோக வாழ்க்கை நடத்தி நம் வாழ்வின் மகத்தான வாழ்க்கை விழுமியங்களை இழந்து ஆன்மாவை அணு அணுவாக சிதைத்துக் கொண்டிருக்கிறோம். நம் புலன்கள் எல்லையில்லா அளவுக்கு தூண்டப்பட்டு நம்மை நாம் கட்டுப்படுத்த இயலாத மனிதர்களாக வாழ்ந்து கொண்டுள்ளோம்.

நாம் இன்று வாழும் வாழ்க்கை முறையை 5000 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு நாகரீகத்திற்கு சொந்தக்காரராகப் பார்க்கும்போது தான் நாம் எவ்வளவு அறமற்ற வாழ்வை கூச்சமின்றி ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறோம் என்பது புலப்படும், இன்றைய வாழ்வு முறை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த ஐயமுமில்லை. ஆகையால்தான் இது மீண்டும் மீண்டும் விவாதப் பொருளாக்கப்படுகிறது. இதனை விவாதிப்பதே ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில்தான். நமக்கு என்றாவது ஒரு நாள் சமதர்ம சமுதாயம் உருவாகிவிடும் என்று நம்புவதால்தான். அப்படித்தான் நம்பிக்கையுடன் மானுடம் தொடர்ந்து செயல்பட்டு பூவுலகில் எல்லா இல்லா மாற்றங்களை சாத்தியப் படுத்தியிருக்கின்றது. எனவே நாம் கனவை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்த முயன்று கொண்டே­யிருக்க வேண்டும். இன்று இல்லை என்றால் அது நாளை நடக்கலாம், என்ற நம்பிக்கையுடன் நாம் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட நாம் என்னவாக இருக்க வேண்டுமென்றால் நாம் நெஞ்சுரமிக்க குடிமக்களாக இருக்க வேண்டும். இங்கு குடிமக்கள் என்ற சொல்லை ஒரு ஆழமான பொருள் பொதிந்ததாக பயன்படுத்துகிறேன்.

குடிமகனாக செயல்பட நம் ஒவ்வொருவருக்கும் சமூகம் பற்றிய பார்வையும் சமூகத்தின் மீது கரிசனமும் இருக்க வேண்டும். சமூகத்தின் நலனுக்குள்தான் என் நலன் அடங்கி இருக்கிறது என்ற புரிதலுடனும் நம்பிக்கையுடனும் செயல்படும் பார்வை இருக்க வேண்டும். எனவே நாம் எதிர்பார்க்கின்ற சமூக மாற்றங்களை ஒரு பயனாளியாகவோ, ஒரு நுகர்வோராகவோ, ஒரு வாக்காளராகவோ, ஒரு மனுதாரராகவோ மட்டும் இருந்து கொண்டுவர முடியாது. ஆகவேதான் குடிமக்களாக நாம் ஒவ்வொருவரும் மாறி கடப்பாடுடன் இன்று இயங்கிட வேண்டும். சர்வோதய சமூகத்தை உருவாக்க நம் சமூகம் ஒரு புரிதலுடன் தங்கள் செயல்பாடுகளை முதலில் வடிவமைத்து அவரவர் வாழும் இடங்களில் முடிவெடுத்து செயல்பட வேண்டும். இதற்கு தற்போது ஒரு புதிய வாய்ப்பு வந்துள்ளது. அதுதான் புதிய பஞ்சாயத்து அரசாங்கம். அது மக்களின் ஒத்துழைப்போடு தன்னாட்சி பெற்ற அமைப்பாகத் திகழ முடியும்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தேவையான ஒரு தலைமை நம் உள்ளாட்சிகளுக்கு வேண்டும். அந்தத் தலைமை கிடைத்து விட்டால், மக்களைத் தயார் செய்வதன் மூலம் ஒரு புதிய சமுதாயத்தை ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உருவாக்கிட முடியும். இதற்கு முதலில் நாம் ஒவ்வொருவரும் குடிமக்களாக மாற வேண்டும். நாம் குடிமக்களாக செயல்பட நம்மை நெறிப்படுத்தி வாழ முயலவேண்டும். அடுத்து சமூகத்தின் மூலம் நம் அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து ஏற்றத்தாழ்வுகள் குறைந்த, சமத்துவம் மிக்க சமதர்ம சமுதாயத்தை உருவாக்க பல முடிவுகளை அரசாங்கம் எடுத்து செயல்படுத்த வைக்க வேண்டும். நாம் நம்மை மாற்றிக் கொள்ளாமல் சமூகம் மாறிட வேண்டும். அரசியல் மாறிட வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். எனவே நாம் நம்மை மாற்றிக் கொள்வதுடன் அரசாங்கத்தை மாற்றடிவும் செயல்பட்டாக வேண்டும். இந்த இரண்டு பணிகளையும் துவக்க அதற்கான ஆரம்பத்தை எங்கே துவங்குவது என்று சிந்திக்கையில் நம்மிடம் துவங்குவதுதான் மிகப்பெரிய விளைவினைத் தரும் என்ற அடிப்படையில் செயல்பட முனைய வேண்டும்.

காந்தி கூறியதுபோல் எந்த மாற்றம் சமூகத்தில் வர வேண்டும் என்று நாம் எண்ணுகிறோமோ, அந்த மாற்றத்தை முதலில் நம்மிடம் துவங்க வேண்டும். முதலில் நாம் மாற வேண்டும். நம்முடன் வசிப்போர் மாறவேண்டும், அடுத்து நம்முடன் தொடர்பில் இருப்போர் மாற வேண்டும்.

என்ற முனைப்போடு செயல்பட்டாக வேண்டும். இதற்கு முதலில் நாம் நம்முடைய வாழ்வுக்கான தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழத் தயாராக வேண்டும். நம் வாழ்க்கையை எளிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை எளிமைப்படுத்துவது என்பது மிக எளிது. அதில் ஒரு சுகமும் இருக்கிறது. எளிமைப்படுத்துவதை நம் வாழ்வின் அறமாக உள்வாங்கிக் கொண்டால் ஆடம்பரத்தை நம் மனம் புறந்தள்ளி விடும். அந்த வாழ்வு நம் ஆன்ம பலத்தை கூட்டிவிடும். ஆன்ம பலம் அதிகரிப்பதை உணர்ந்து விட்டால் அச்சமற்று வாழ நாம் பழகிக் கொள்வோம். இந்த வாழ்க்கை எளிமைப்படுத்தலையும் எங்கு துவங்க வேண்டுமென்றால் நாம் உண்ணும் உணவில் துவங்க வேண்டும். நாம் பயன்படுத்தும் தண்ணீரில், அடுத்து உடுத்தும் உடையில் நாம் மாற வேண்டும். இதேபோல் நம் வீட்டில் நடத்தும் எல்லா குடும்ப நிகழ்வுகளிலும் எளிமை வெளிப்பட வேண்டும். ஆடம்பரம் தவிர்க்கப்பட வேண்டும்.

இன்று நம் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிகோலியவர்கள் சமூகத்தில் அறமற்று பொருள் ஈட்டியவர்கள், தங்கள் செல்வ வளத்தின் மூலம் சமுதாய அங்கீகாரம் தேடும் ஒரு அசிங்கமான செயல்பாடு. முறையற்ற வழிகளில் தேடிய பொருள்களை செலவழிக்கும்போது அவர்களுக்கு வலி இருக்காது. ஏனென்றால் அதில் அவர்கள் உழைப்பு இல்லை என்பதுதான் அடிப்படை. ஆனால் இந்த ஆடம்பர வாழ்க்கை சாதாரணச் சிந்தனை கொண்ட மனிதர்களை ஈர்த்து விடுகிறது. தேவையை அடிப்படையாக வைத்து நம் செயல்பாடுகளை முடிவு செய்ய ஆரம்பித்தால், நம் செயல்பாடுகள் அத்தனையும் எளிமைப்பட்டுவிடும். தேவைதான் அடிப்படை என்று செயல்பட்டால் வாழ்க்கை உங்கள் கட்டுக்குள் வந்துவிடும். நம் வாழ்க்கைச் செயல்பாடுகள் எளிமைப்பட ஆரம்பித்தால் மனம் பக்குவப்பட ஆரம்பிக்கும். மனம் பக்குவப்பட ஆரம்பித்தால் மனித மாண்பில் நாம் உயர ஆரம்பித்து விடுவோம். ஏழ்மை என்பது அவமானம் அல்ல. எளிய வாழ்க்கை என்பதும் அவமானம் அல்ல. அடுத்தவரை சுரண்டி வாழும் ஆடம்பர வாழ்க்கை தான் அவமானம். அதை சமூகம் ஓங்கி ஒலிக்கவில்லை. எனவே எளிமையில் ஒரு பெருமை இருக்கிறது. மேற்கூறியவைகளெல்லாம் தனிமனிதர்கள் அளவில் செயலாற்ற வேண்டியவைகள்.

அடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க நாம் எப்படி செயலாற்ற வேண்டும் என்று புரிந்துகொள்ள முயல வேண்டும். முதலில் அரசியல் கட்சிகளின் அரசியலை எளிமைப்படுத்த வேண்டும். இன்று நடைபெற்றுவரும் ஆடம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆடம்பர அரசியல் நடத்துவதால்தான் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் செயல்பாடுகளுக்கும் தேர்தலுக்கும் தேவையான பணம் பண்ண ஊழலில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பிம்பம் கட்டுவதற்கு நடத்தும் ஆடம்பரச் செலவுகளை குறைத்திட நம் கட்சிகள் முனைந்திட வேண்டும். அரசியல் கட்சி அலுவலகங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்துவதுபோல் நடத்தாமல் ஏழை எளிய மக்கனும் எளிதாய் வந்து தலைவர்களைச் சந்தித்திட எளிமைப்படுத்த வேண்டும். பெரிய குடும்ப விழாக்கள், திருமணம் போன்ற விழாக்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டை அரசாங்கம் விதித்து அதன்படி உணவுச் சேதம் இல்லாமல் நடைபெற ஆவன செய்ய வேண்டும். பட்டினியால் இரவு படுக்கைக்குச் செல்லும் மனிதர்கள் வாழும் இடத்தில் உணவுச் சேதம் என்பது ஒரு கொடிய குற்றம் என்பதை நம் சமூகத்திற்கு புரிய வைக்க வேண்டும்.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் உலகிலேயே உணவுச் சேதம் இல்லாத நாடு. இதற்குக் காரணம் அங்கு நடக்கும் எல்லா விழாக்களிலும் வழங்கும் உணவுக்கு ஒரு கட்டுப்பாடு அந்த நாட்டு உள்ளாட்சி அமைப்புக்கள் விதிக்கின்றன என்பதால். அடுத்து கிராமங்களிலும் நகரங்களில் வாங்கும் சொத்துக்களுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும். விரைவில் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றால் இன்று நாம் பார்க்கும் எல்லை இல்லா ஏற்றத்தாழ்வு அதிகரித்து நம் கார்ப்பரேட்டுக்கள் மன்னராட்சி கால வாழ்க்கைக்கு நம் சமூகத்தை இட்டுச் சென்று விடுவார்கள். இந்த மாதிரியான செயல்பாடுகளுக்கு தடைகளை உருவாக்க மக்கள் அரசு தன்னைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். மக்கள் நலனை முன்னிறுத்தும் மக்களாட்சியாக இருந்தால் அப்படித்தான் சிந்திக்கும். ஆனால் இன்று கார்ப்பரேட் நலன் சார்ந்து சிந்திக்கும் சூழலுக்கு நம் அரசியலை, ஆளும் வர்க்கத்தை கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றனர் தேர்தல் அரசியல் மூலமாக. இதற்கு முதலில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு நிதிக் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். அதற்கும் ஒரு உச்சவரம்பு இருக்க வேண்டும். அப்படி ஒரு வரையறை இல்லாது இருப்பதால்தான் கட்சிகளெல்லாம் கார்ப்பரேட்டாக மாறி வருகின்றன தங்களின் செயல்பாடுகளினாலே.

அடுத்து ஒரு மிகப் பெரிய கடினமான முடிவை எடுக்க அரசு தயாராக வேண்டும், சந்தை நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு ஒரு உச்சவரம்பு கொண்டுவர வேண்டும். இந்த லாபம்தான் இன்று ஊழலின் ஊற்றுக்கண்ணாய் விளங்குகின்றது. இந்த லாபம் தான் இயற்கை அழிப்பிற்கு அடிப்படை. எனவே லாபம் என்பதற்கு ஒரு உச்சவரம்பை கொண்டுவர வேண்டும். தங்கு தடையற்ற பொருளாதாரத்தை பேசிய ஆடம்ஸ்மித் அறம் பேணும் பொருளாதார வளர்ச்சியைத் தான் வலியுறுத்தி வந்தார். ஆனால் இந்த சந்தைப் பொருளாதாரம் எந்த அற நியதிகளையும் பின்பற்றுவதில்லை லாபம் ஈட்ட. எனவே இந்த லாபத்திற்கு ஒரு உச்ச வரம்பு விதிக்கப்படல் வேண்டும்.

அதேபோல் பெரு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கும், அதன் தலைமைப் பொறுப்புக்களில் இருப்போர்களுக்கும் வருடச் சம்பளம் 30 கோடி 40 கோடி என்று நிர்ணயம் செய்வதற்கும் ஒரு உச்சவரம்பு கொண்டு வரவேண்டும். ஒரு அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கம்பெனியின் தலைவருக்கோ, தலைமை அலுவலருக்கோ எல்லை இல்லா அளவுக்கு தனியார் கம்பெனிகளில் தருவது போல் 20 கோடி 30 கோடி ரூபாய் தருவார்களா? அந்த நிறுவனத்திற்கு ஒரு உயர் அதிகாரியை நியமிப்பார்கள். அவருக்கு அரசுக் கட்டமைப்பில் என்ன சம்பளமோ அந்த அளவு சம்பளம் மட்டும்தான் தருவார்கள்.

அதேபோல் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரின் சம்பளங்களுக்கும் ஓர் உச்ச வரம்பினைக் கொண்டுவர வேண்டும். இவைகளைப் பின்பற்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு எல்லை வகுக்க வேண்டும். ட்ரில்லியன் டாலர் பொருளாதாரச் செயல்பாடுகள் என்று பேசுவது பொருளாதார வளர்ச்சி என்று பேசி, கார்ப்பரேட் கொள்ளையடிப்பதற்கு வழி வகுத்து எதிர்காலச் சந்ததியின் வாழ்வைச் சீர் குலைப்பதாகும்.

இன்று சீர்திருத்தம் என்ற பெயரில் அதிகாரங்கள் குவிக்கப்படுகின்றன சந்தையை வலுவாக்கிட. மக்களை அதிகாரப்படுத்தவோ, அடித்தட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கவோ, இயற்கை வளங்களை பாதுகாக்கவோ, மக்களாட்சியை மாண்புறச் செய்யத் தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவரவில்லை. எனவே இந்தியாவில் சர்வோதய சமூகத்தை உருவாக்க மிகப் பெரிய அளவில் மக்களைத் திரட்டிட வேண்டும். எனவே நாம் மாறுவதும், நம்முடன் இருப்போர் மாறுவதும், அரசை மாறிடச் செய்யவும் மக்களைத் திரட்டி அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வை உருவாக்கி சமூகத்துடனும், அரசுடனும், மக்கள் அரசியல் கட்டமைத்துச் செயல்படுகின்ற கட்சிகளுடனும் இணைந்து போராட நாம் தயாராக வேண்டும்.

க.பழனித்துரை

Pin It