space timeதமிழகத்தில் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த தத்துவம் மற்றும் மதங்களில் ஒன்று ஆசீவகம். ஆசீவக மதம் சாங்கியம், சமணம், சார்வாகம் மற்றும் பௌத்தம் போன்று இறை மறுப்புக் கொள்கையை உடையது. ஆனால் சமணம் மற்றும் பௌத்தம் போன்று இல்லாமல் வினை மறுப்புக் கொள்கை கொண்டது.

அதே நேரத்தில் சார்வாகம் போல முழுமையாக இல்வாழ்க்கையை மட்டும் நோக்கும் உலகாயுத மதமும் அன்று. இந்த மதம் ஊழ் மற்றும் தியானங்கள் அடிப்படையிலான மதம் ஆகும். இதன் கொள்கைகள் ஓரளவுக்குச் சமணத்தின் கொள்கைகளோடு ஒத்து உள்ளது.

உலகம் தோன்றியது எப்படி? உலகை கடவுள் படைத்தாரா? முதற்பொருள் எது என்பது குறித்த ஆராய்ச்சிகள் தத்துவ ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் தனித் தனியே பன்னெடுங்காலமாக உலகெங்கிலும் நடைபெற்று வந்தன.

அறிவியல் ரீதியாக ஆராய்பவர்கள் முதலில் அவர்கள் காலத்தில் உறுதி செய்யப்பட்ட அறிவியற் உண்மைகள் அல்லது அடிப்படைக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளை முன் வைத்து, பிறகு அவை அறிவியற் வளர்ச்சியால் பிற்காலங்களில் வெளி வரும் உண்மைகள் மற்றும் தற்கால அறிவியல் மேற்பட்டால் கிடைக்கப்பட்ட கருவிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.

தத்துவ ரீதியாக விடை காண முயன்ற தமிழ் மரபினர், "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற அடிப்படையில் உள் நோக்கிய சிந்தனையில் ஆழ்ந்து அது பற்றிய தனது அறிவுத் தேடல்களைத் தொடர்ந்தனர். அவர்களின் கருத்தும், அவர்கள் வாழ்ந்த பிறகு பல்லாண்டு காலம் பிறகு தோன்றிய அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்போடு சில இடங்களில் ஒத்துப் போவது ஆச்சரியமே. அதன் அடிப்படையில் பரத்தால் ஆசீவக மதத்திலிருந்த கோட்பாடுகளுக்கும், தற்போதைய அறிவியற் கோட்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்..

ஆசீவக மதத்தின் தத்துவ நூல்கள் அனைத்தும் அழிந்து விட்டாலும் அது பற்றிய கருத்துகளை மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் (பரபக்கம்) போன்ற பிற மதங்களைச் சார்ந்த நூல்களில் இருந்து தான் பெருமளவு அறியப்படுகிறது.

தொகுதி அண்ட கோட்பாடும் (Block Universe), நியதிக் கொள்கையும்

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் வெளிப்படுத்தும் ஒரு அறிவியற் கோட்பாடு தொகுதி அண்டக் கோட்பாடு (Block universe). நாம் நினைத்து கொண்டிருப்பது போல் நீளம், அகலம் மற்றும் உயரம் என்ற முப்பரிமாணங்கள் தனியாகவும், காலம் என்ற பரிமாணம் தனியாகவும் இருப்பது உண்மை அல்ல என்று உறுதிப்படுத்தி உள்ளது ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம். முப்பரிமாணங்களை உள்ளடக்கிய வெளி மற்றும் காலம் இணைந்த நான்கு பரிமாணங்களைக் கொண்டது இந்த பேரண்டம் என்று விளக்குகிறது.

பிளாக் யுனிவர்ஸ் கோட்பாடு படி உலகில் நிகழ்காலம், இறந்த காலம் மற்றும் எதிர்காலம் என்று இல்லை. அனைத்து நிகழ்வுகளுமே முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு நடந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் கார்ட்டூன் படத்திற்காக வரையப்பட்ட வரிசையான எண்ணிலடங்கா நிகழ்வுகளின் தொகுப்பு போன்றதே.

இந்தக் கொள்கையின் படி ஒருவருடைய முடிவெடுக்கும் திறன், வாய்ப்புகள், தனிப்பட்ட செய்கையினால் நிகழ்வுகள் மாற்றம் பெறுவது இல்லை. அவை அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை. ஒருவருடைய செயல்பாடுகள் மூலம் நடக்க இருக்கும் நிகழ்வை மாற்ற முடியாது.

இனி ஆசீவக தத்துவத்திற்கு வருவோம். செயல்கள் நிகழும் முன்னரே அவ்விதம் நிகழ்வதனை சக்தியையே இந்த வரையறுக்கும் ஆற்றல் ஒன்றுண்டு. அவ்வாற்றலே ஊழ் என்று அழைத்தனர். ஆசீவகக் கொள்கையில் மிக முக்கியமானது நியதிக் கொள்கை ஆகும் சங்க காலத்தில் இவற்றை ஊழ் என்றும் தெய்வம் என்றும் அழைத்தனர்.. ஆசீவகர்களின் நியதி கொள்கையை நான்கு கோட்பாடுகளாக வரையறுப்பர். அவை

1. ஆவது ஆகும் - எப்பொருள் எங்கனம் ஆக்கம் பெறுமோ, அப்பொருள் அவ்வாறு ஆக்கம் பெறும்.
2. ஆம் ஆங்கு ஆம் - ஆகும் முறைப்படி ஆகும்
3. ஆந்துணையாம் - ஆகும் அளவு ஆகும்.
4. ஆம் பொழுது ஆம் - எவ்வளவு முயன்றாலும் ஆகும் காலத்தில் தான் ஆகும்.

இதை நீலகேசியின் பாடலில் கீழ் வருமாறு கூறப்பட்டுள்ளது

அதுவா வதுவு மதுவாம் வகையு
மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்
சதுவா நியதத் தனவா வுரைத்தல்
செதுவா குதலூஞ் சிலசொல் லுவன்யான்
-(704)

எனவே ஆசீவகக் கொள்கைபடி எல்லா நிகழ்வுகளும் நியதிக்கு உட்பட்டவை. ஆதலின் எதிர்காலத்தில் நடைபெற உள்ள நிகழ்வுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. இதன் அடிப்படையில் Bock Universe கோட்பாடு விளக்கும் கீழ்காணும் கருத்துகளை படித்து பாருங்கள். ஆசீவக கோட்பாட்டிற்கும், சார்பியல் தத்துவம் சார்ந்த Block Universe கோட்பாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும் The future is predetermined and therefore there can not be any thing as free will.

நாம் அடிக்கடி கூறும் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!" என்ற பாடல் ஆசீவக தத்துவத்தை விளக்கும் பாடலே. அந்தப் பாடலின் பிற்பகுதியை காணுங்கள்

வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

அதன் பொருள்

"மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை."

ஆற்று நீரில் அடித்து செல்லும் தெப்பம் போன்றது நமது வாழ்க்கை. தெப்பத்தின் பாதை ஆற்று நீர் கையில் உள்ளது போல், நமது வாழ்க்கை பாதை முன்பே தீர்மானிக்கப்பட்ட நியதி அடிப்படையில் ஆனது. எனவே அருஞ்செயல் செய்தார் என்று பெரியோர் என்று வியத்தலும் தேவை இல்லை. திறமை இல்லாதவர் , சிறியோர் என்று இகழ்தலும் தேவை இல்லை என்று கூறுகின்றது.

திருக்குறளில் ஊழ் என்ற அதிகாரத்தில் இருக்கும் குறள்கள் ஆசீவகம் கூறும் நியதிக் கொள்கையை விளக்குவதாகவே உள்ளன.

காலம் என்று உண்டா?

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை மேலும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் விஞ்ஞானிகள் நிறுவுவது இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் என்று வேறுபட்ட காலங்கள் இல்லை. காலம் என்பது முப்பரிமாண உலகில் கடந்து போகாது. எனவே காலம் என்பது இயற்பியல் அடிப்படையில் உண்மை அல்ல. அது ஒரு மாயை என்று பல்வேறு அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

(Huw Price, professor of philosophy at Cambridge University, claims that the three basic properties of time come not from the physical world but from our mental states: A present moment that is special; some kind of flow or passage; and an absolute direction. …)

நியதி கொள்கையின் அடிப்படையில் ஆராய்ந்த ஆசீவக ஞானிகள் அதே முடிவிற்கு வருகிறார்கள். காலம் என்று ஒன்று இல்லை என்பதை அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள். கீழ் காணும் நீலகேசி பாடல் அதை விளக்குகிறது.

கணமே யெனினும் மொருகா லமிலை
--------------------------------நீலகேசி 677

அதன் பொருள் கணம் என்ற கோட்பாடு இருந்தாலும் ஒரு காலம் என்ற கோட்பாடு இல்லை என்பதாகும். அனைத்து நிகழ்வுகளும் முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்டவை என்பதால் எதிர்கால நிகழ்வு, கடந்த கால நிகழ்வு, நிகழ் காலம் என்பது கற்பனையே என்று கூறுகின்றனர். இங்கும் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தோடு ஆசீவகம் ஒத்துப் போகிறது. ஐன்ஸ்டீன் 1955ம் ஆண்டு இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் கூட நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர் காலம் என்பது மாயையே என்று கூறியுள்ளார்.

பெருவெடிப்பு உலகத் தோற்றமும் மெய்மையின் மாறாத்தன்மை கோட்பாடும்

தற்கால அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் இந்த பேரண்டம் தோன்றக் காரணமான பெரு வெடிப்பு இயற்கையாக நிகழ்ந்தது. ஆசீவக அடிப்படை தத்துவத்திலும் பொருளின் ஆக்கத்திற்கு காரணம் என்பது வேண்டாம் என்று ஆசீவக பிரிவினர் கருதினர். நீலகேசியில் ஆசீவக குருவான பூராணன் என்பவனை அறிமுகப்படுத்தும் போது கீழ்வருமாறு கூறுகின்றனர்.

காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்
பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்
(668)

அதற்கு ஒப்பீடு இல்லாத கல்வி நிலையை உடையவனும், செயலுக்கு காரணம் உண்டு என்பதை விரும்பாத கூட்டத்திலிருந்து வந்தவன் என்பது பொருள். "காரணம் வேண்டாக் கடவுட் குழாம்" என்று ஆசீவகர்கள் கூறுவது அவர்கள் காரணத்தால் காரியம் நிகழ்கிறது என்று ஏனைய பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் இந்து மதத்தினர் கூறும் கருத்தை ஏற்றுக் கொள்ளாமையினாலும்.

ஆசீவகர்களின் தத்துவத்தில் முக்கியமானவற்றில் ஒன்று அவிசலித நித்தியத்துவம் அல்லது மெய்மையின் மாறாத்தன்மை கோட்பாடு அதன் படி ஆசீவகத்தில் அணுக்களையும் அவை தொடர்பான மூலப்பொருட்களையும் பற்றிக் குறிப்பிடும் போது அவை நிரந்தரமானவை என்று கூறுகின்றனர். (அவர்கள் தான் முதலில் அக்கொள்கை பற்றியும் கூறி உள்ளனர். அதை அடுத்துப் பார்ப்போம்).

இதனை நீலகேசியில் கீழ் வருமாறு கூறுகின்றனர்.

"எப்பாலும் தான்கெடா இவ்வளவும் தோன்றா" (696)
"இல்லாது தோன்றா கெடாஉள் என"(698)0

அடிப்படை அணுக்கள் மாற்றம் அடைதலன்றி என்றும் நிலை பெற்றிருக்கும் என்பது பொருள் இதனை "உள்ளது கெடாது இல்லது தோன்றாது" என்றுரைக்கின்றனர்.

ஆசீவகத்தைப் பற்றி மணிமேகலையில் சமயக் கணக்கர்- தம் திறம் கேட்ட காதையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.

ஆதி யில்லாப் பரமா ணுக்கள்
தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா (126)

என்று கூறுகின்றனர். அதன் பொருள் தொடக்கமில்லாத , அடிப்படையான அணுக்கள், சிறிதுங் கெட்டு அழியாதவை என்பது ஆகும்.

தற்போதைய வான் இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்துப்படி இன்று உலகத்தில் இருக்கும் பொருட்கள் யாவும் (மனிதன், விலங்கு, தாவரம், அண்டம் என அதிலும் இருக்கும் அடிப்படை பொருட்கள்) பெருவெடிப்பின் முதலில் காலம் தோன்றிய போது தோன்றிய பொருட்கள் தான். இடையில் புதிய அடிப்படை பொருட்கள் தோன்றவோ அழியவோ இல்லை என்கிறார்கள் அவை அழிவின்றி மாற்றமடைகிறது என்கிறார்கள்.

(According to most astrophysicists, all the matter found in the universe today -- including the matter in people, plants, animals, the earth, stars, and galaxies -- was created at the very first moment of time, thought to be about 13 billion years ago.

அவிசவித நித்தியத்துவம் தத்துவத்தையும் , தற்போதைய வானியல் அறிவியலையும் ஒப்பீடு செய்து பாருங்கள்.

மூலப்பொருட்கள்

உலகம் தோன்றுவதற்குத் தேவையான மூலப்பொருட்கள் குறித்த குறிப்புகள் தொல்காப்பியத்திலேயே உள்ளன. பெரும்பான்மையான இந்தியத் தத்துவங்கள் மற்றும் தொல்காப்பியம் , நீர், காற்று, நெருப்பு ஆகாயம், நிலம் ஆகிய ஐந்து பொருட்களையும் மூலப் பொருட்களாகக் குறிப்பிடுகிறது. ஆனால் ஆசீவகத்தினர் மூலப்பொருட்களில் நிலம், நீர், காற்று மற்றும் தீயை மட்டுமே குறிப்பிடுகின்றனர்.

“நிலநீர் தீக்காற் றென நால் வகையின”
-- (மணிமேகலை - 116)

கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் வானத்தில் ஈதர் என்ற ஊடகம் இருப்பதாக அனைத்து விஞ்ஞானிகளாலும் கருதப்பட்டது. நியூட்டன் கூட தனது ஆய்வு நூலில் இது பற்றி எழுதி உள்ளார். ஆனால் மைக்கல்சன் - மோர்லி ஆய்வு ஈதர் என்ற பருப்பொருள் இருப்பதை நிராகித்து உள்ளது.

வானத்தை மூலப்பொருட்கள் வரிசையில் சேர்க்காமல் இருக்கும் ஆசீவகத்தை இந்த அறிவியற் பின்னணியில் நோக்க வேண்டும்.

அணுக்கொள்கை

இந்தியாவில் தோன்றிய தத்துவங்களில் முதன்முதலில் அணுக்கொள்கையினை அறிந்துரைத்த சிறப்பு ஆசீவகத்திற்கு உரியது. இது பற்றி ஆசீவகம் கூறுவதைக் கீழே காணலாம்.

ஆதி யில்லாப் பரமா ணுக்கள்
தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்தொன் றென்றிற் புகுதா

குலாமலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்துதந் தன்மைய வாகும்
மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமுமாம்
வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
(மணிமேகலை 126)

அதன் பொருள் பின்வருமாறு. தொடக்கமில்லாத அடிப்படை அணுக்கள், சிறிதும் கெட்டு அழியாதவை. இவை புதிதாகத் தோன்றி ஒன்றனுள் ஒன்று உள் நுழைவதில்லை. ஓரணு இரண்டாகப் பிளவுறாது. இவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பெயர்ந்து செல்லவல்ல. ஒன்றின் தொகுதியாகவோ, மலை போன்ற பிற அணுக்களுடன் சேர்ந்த தொகுதியாகவோ சேர்க்கையுறும். சேர்ந்த அவைகளே பின்பு பிரிந்து தத்தம் தன்மையை அடையும்.

இவை சேர்ந்து வயிரமாகிச் செறிந்து வலிமை பெறும். மூங்கில் போல உள்ளே துளையுள்ள பொருளாக முளைக்கும். (அணுக்களைப் பிளக்க முடியாது என்ற கொள்கை சென்ற நூற்றாண்டில் தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது). டால்டனின் அணுக்கொள்கை மேற்கூறிய அணுக்கொள்கையோடு பல இடங்களில் பொருந்தி போவதை காணலாம்.

இன்று அறிவியல் அறிஞர்கள் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கொண்டு கண்டு பிடிக்கப்பட்டு நிரூபிக்கபட்ட அறிவியல் கோட்பாடுகளை , 2500 ஆண்டுகளுக்கு முன் "மெய்ப் பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவரின் அறிவுசார் கொள்கையின் அடிப்படையில், தங்களது உள் நோக்கிய பார்வையில் கண்டுபிடித்தவற்றோடு ஒப்பிடுகையில் இடைக்காலத்தில் அறிவு சார் சிந்தனைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு இல்லாதிருந்தால் தமிழகத்திலே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்றைய "நவீன தொழிற்புரட்சி" நடைபெற்றிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இக்கட்டுரை நோக்கம் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளை 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஆசீவகத்தில் கண்டுபிடிக்கபட்டது என்று உறுதி செய்வது அல்ல. 2500 ஆண்டுகளுக்கு முன்பான மெய்யியல் சிந்தனைகளுக்கும், இன்றைய அறிவியற் கண்டுபிடிப்புகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கோடிட்டு காட்ட மட்டுமே..

ஆசீவகம் மற்றும் அறிவியற் கருத்துக்கள் கொண்ட ஒரு சில தரவுகளை இணைத்துள்ளேன். இந்த தலைப்பு பற்றி உங்களுக்கு உள்ள ஐயங்களை தீர்த்து கொள்ள தொடர்ந்து உங்களது தேடலை தொடர உதவியாக இருக்கும்.

இந்த கட்டுரையை படித்து ஆசீவகம் சார்ந்த கருத்துக்களில் பிழை (கருத்துப்பிழை மற்றும் சொற்பிழை) இல்லாமல் திருத்தம் செய்து கொடுத்த முனைவர் ர.விஜயலட்சுமி அவர்களுக்கும், அறிவியற் கருத்துக்களுக்கு விமர்சன கருத்து (Critical Comments) கொடுத்த பேராசிரியர்.ரங்கராஜன் அவர்களுக்கும் நன்றி.

Reference

1. பேராசிரியர் ர.விஜயலட்சுமி - தமிழகத்தில் ஆசீவகர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
2. முனைவர் சோ.ந.கந்தசாமி - இந்தியத் தத்துவக் களஞ்சியம், மெய்யப்பன் பதிப்பகம்
3. https://www.bbc.com/reel/video/p086tg3k/the-physics-that-suggests-we-have-no-free-will
4. https://www.exploratorium.edu/origins/cern/ideas/bang.html
5.https://en.wikipedia.org/wiki/Michelson%E2%80%93Morley_experiment#Most_famous_%22failed%22_experiment
6. https://www.space.com/29859-the-illusion-of-time.html
7. https://www.quantamagazine.org/does-time-really-flow-new-clues-come-from-a-century-old-approach-to-math-20200407/
8. https://en.wikipedia.org/wiki/Conservation_of_mass

- சதுக்கபூதம்

Pin It