திப்பு சுல்தானுக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையேயான போர்களில் பாலக்காட்டுக் கணவாயும் அதன் அருகிலிருந்ததன் காரணமாக கோவையும் முக்கிய இடம் வகித்தன. அப்படி ஒரு போரின்போது இப்போது தண்டு மாரியம்மன் கோவில் இருக்கும் இடத்தைச் சுற்றி திப்பு சுல்தானின் படை முகாமிட்டிருந்ததாம். அங்கே தங்கியிருந்த வீரர்கள் சமைப்பதற்கு அடுப்பு மூட்டுவதற்காக ஒரு கல்லை எடுத்தபோது ஒரு வீரனுக்கு சாமி வந்து “நான் அம்மன் என்னையா அடுப்புக் கல்லாக்குகிறாய்?” என்றதாம். அந்த வீரர்கள் அங்கேயே சுல்தானின் ஒப்புதலோடு ஒரு மாரியம்மன் கோவில் கட்டினார்களாம். தண்டு அதாவது படை முகாம் இருந்த இடத்தில் கட்டபட்டதால் தண்டு மாரியம்மன் கோவில் என்று அந்தக் கோவில் பெயர் பெற்றது என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கோவில் இன்று பெரும் வளர்ச்சி பெற்றுவிட்ட நகரின் மையத்திலிருக்கிறது.

heera 270மேலே சொன்ன கதை எவ்வளவு தூரம் உண்மை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மறுக்க முடியாதது என்னவென்றால் திப்புசுல்தானின் படைகளில் இருந்த இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்தே ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது மக்கள்மீது பிற்காலங்களில் திணிக்க இருந்த பெரும் பெரும் பஞ்சங்களையும், கொள்ளை நோய்களையும் தடுக்கத்தான் அவர்கள் போரிட்டனர். நமது உழைக்கும் மக்களை உலகம் முழுவதும் பலவந்தமாகக் கொண்டு சென்று காபி, தேயிலை, கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வதைக்க இருந்ததைத் தடுக்கத்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தினர். இதன் காரணமாகவே அவர்கள் விதிவிலக்கில்லாமல் ஆங்கிலேயர்களால் வேட்டையாடவும் பட்டனர்.

பத்தொன்பதான் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கோவை தொழில் நகரமாக உருவெடுத்தபோது இங்கே எலிகளும், மக்களும் சம அளவில் வாழ்ந்தனர். இந்த நகரை பிளேக் நோய் பத்துமுறை தாக்கிச் சூறையாடியது. காலராவும், பெரியம்மையும் அதே அளவுக்கு மக்களைப் பலி கொண்டன. மரணமடைந்த மகனைத் தாயும், தந்தையை மகனும் தொடத் தயங்கிய காலம் அந்தக் காலம். இந்த மாபெரும் நகரத்தை நிர்மாணிக்க கூட்டம் கூட்டமாக கிராமங்களிலிருந்து கொண்டு வந்து குவிக்கப்பட்ட மக்கள்தான் இந்தக் கொள்ளைநோய்களுக்கு முதல் பலியானார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை அல்லவா?

ஆனால் உழைக்க மட்டுமல்ல, போராடவும் தெரிந்த மக்கள் - இந்துக்கள் முஸ்லீம்கள் உள்ளிட்ட எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றாய் இணைந்துப் போராடித்தான் கொள்ளை நோய்களை முறியடித்தனர். அருந்ததிய மக்களும், ஆலைத் தொழிலாளர்களும், அபீஸ் சையது போன்ற அதிகாரிகளும் இணைந்து நின்றுதான் இந்த நகரத்தை மரணத்தின் கோரப் பிடியிலிருந்து மீட்டனர்.

அந்தக் காலத்தில் கோவைப் பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் பிரம்பால் அடிக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். ஒரு நாளைக்கு பனிரெண்டு மணிநேரம் உழைத்து அற்ப கூலியையோ, சோளத்தையோ, கம்பையோ ஊதியமாகப் பெற்ற மக்கள் சோர்வறியாத போராட்டங்களின் மூலமே தங்கள் உரிமைகளை நிலைநாட்டினர். அந்தப் போராட்டங்களின்போது கோவையின் ஒவ்வொரு தெருமுனையிலும் ரத்தம் சிந்தப்பட்டது. அந்த வீரஞ்செறிந்த தொழிலாளர்கள் புரிந்த எண்ணற்ற தியாகங்களின் விளைவாக துயரங்களின் உறைவிடமாக இருந்த இந்த நகரம் வந்தாரை வாழவைக்கும் நகரமானது. அமைதிக்கும், மரியாதைக்கும் பெயர் பெற்றதாகக் கருதப்பட்டது.

உயிரைத் துச்சமாக மதித்து இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட மக்களுக்குத் தங்கள் எதிரிகள் யார் என்று தெரிந்திருந்தது. நண்பர்களையும் அவர்கள் நன்கு அறிந்தே இருந்தனர்.

அப்படிப்பட்ட இந்த நகரம் ஒரு காதலர் தினத்தில் வெடித்துச் சிதறியது. அதற்கு முன்னும் பின்னும் நடந்த கலவரங்கள் சில ஆயிரம் மக்களின் வாழ்வைச் சின்னாபின்னமாக்கின. தெருக்களில் பிணங்கள் கிடந்தன. தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருக்க நேர்ந்தவர்கள் குத்திச் சாய்க்கப்பட்டனர். ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமருத்துவமனை வளாகத்தில் எரித்துக் கொல்லபட்டனர். அதே மருத்துவமனையில் குண்டு வெடித்ததில் செவிலியர் உட்பட அப்பாவிகள் கூட்டமாகக் கொல்லப்பட்டனர்

துணைராணுவப் படையினரின் வாகனங்கள் வெறிச்சோடிய வீதிகளில் சுற்றி வந்தன. நீலச்சீருடை அணிந்த படையினர் தெருமுனைகளில் காவல் இருந்தனர். எட்டு மணிக்கெல்லாம் நகரம் வெறிச்சோடியது. வியாபார நிறுவனங்கள் பெரும்நட்டத்தைச் சந்தித்தன. வழக்குகளில் சிக்கிய இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். சிறையிலிருந்து பல ஆண்டுகள் கழித்து வெளியே வந்தவர்கள் உலகமே மாறிப்போயிருப்பது கண்டு திகைத்துப்போயினர்.

இது வேறு கோவை.

ஒருநாள் கோபத்தில் தற்செயலான மோதலில் ஏற்பட்டதல்ல இந்தக் கலவரமும் குண்டு வெடிப்பும்.

மௌனத்தின் சாட்சியங்கள் சம்பவங்களை உணர்வுப்பூர்வமாகப் பார்ப்பதோடு நில்லாமல் தவிர்க்க முடியாத விதத்தில் கலவரங்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் கொண்டு போய்விட்ட பின்னணியை நேர்மையுடன் அலசுகிறது, பதிவு செய்கிறது.

ஒரு கழுகுப் பார்வையாக சம்பவங்களின் கோர்வையை நம்முன் வைக்கிறது. அந்த விதத்தில் இந்த நாவல் ஒரு நம்பகமான ஆவணமாகவும் இருக்கிறது.

குண்டு வெடிப்புக்குப் பலகாலம் முன்பே இஸ்லாமியர் வாழும் பகுதிகள் திறந்தவெளிச் சிறைகளாக மாற்றப்பட்டதையும், அதன் காரணமாக தீவிரம் பெற்ற இயக்கங்களையும் துல்லியமாக நம் முன்வைக்கும் அதேநேரத்தில் குண்டு வெடிப்பால் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்ட அப்பாவி இந்துக்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது மௌனத்தின் சாட்சியங்கள்.

சிறையிலிருந்து விடுதலையாகி வரும் யாசர் எதிர்கொள்ளும் வெறுமையும் விரக்தியும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் பதிவு செய்யபட்டுள்ளன. அந்தப் பக்கங்கள் ‘இதெல்லாம் நாம் ஒரு ஈ, எறும்புக்குக்கூடத் தீங்கு செய்யாமல் ஒழுங்காக மின்சார, தண்ணீர் வரிகளைக் கட்டி அமைதியே உருவாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டிலா இப்படியெல்லாம் நடந்தது?’ என்ற திகைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

போரும் அமைதியும் நாவலில் டால்ஸ்டாய் சொல்வதுபோல சம்பவங்கள் தவிர்க்க முடியாத சமூக விதிகளின் அடிப்படையில் நகர்கின்றன. தனிநபர்கள் அதை முழுமையாகத் தீர்மானிப்பதில்லை. கோவையில் ஜுரவேகத்தில் பத்தாண்டுகளுக்கும் குறைவான ஒரு காலப் பகுதியில் மதவெறி உச்சகட்டத்தை அடைந்து வீழ்ச்சியையும் சந்தித்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களின் அரசியல் பொருளாதாரப் பின்னணி குறித்து ஆய்வு நூல்கள் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. அந்தப் பணியில் வருங்காலத்தில் ஈடுபட உள்ளவர்களுக்கு இந்நாவல் வரப்பிரசாதமாக இருக்கும்.

நாவலின் நடையும் விறுவிறுவென்று நம்மை இழுத்துச் செல்கிறது. ஒண்டுக் குடித்தனத்தில் வாழும் கடின உழைப்பாளியாக, பகல் முழுவதும் வேலை செய்து விட்டு இரவில் விஜய் படத்துக்குப் போகும் சராசரி இளைஞனாக கதையின் நாயகனை அறிமுகப்படுத்தும்போது மிக இயல்பாக நாவல் தொடங்குகிறது. பின்பு அடிக்கும் புயலில் சின்னாபின்னமாகும் அப்பாவிகளின் வாழ்க்கையையும், உக்கிரமும் மூர்க்கமும் கொண்ட கலவரங்களையும் நூற்றுக்கணக்கானவர்கள் மோதிக் கொண்ட தெருச் சண்டைகளையும் வருணிக்கும்போது, கோவையின் இருண்ட சந்து பொந்துகளிலும் சேரிகளிலும் பயணிக்கும்போது, ஹீராவின் நடை உண்மையிலேயே தேகத்தைச் சிலிர்க்கச் செய்கிறது.

சமகால வரலாற்றைப் பதிவு செய்வது மிகக் கடினமானது. சிக்கலானதும்கூட. அதுவும் கோவைக் கலவரங்களின் அரசியல் சமூக பொருளாதாரப் பின்னணி குறித்து ஆய்வு நூல்கள் இல்லாத நிலையில் ஒரு நாவலாசிரியனின் பணி இன்னும் கடுமையானதாகிவிடுகிறது. ஆசிரியர் கத்தி மேல் நடப்பதைப் போன்ற நிதானத்துடனும், நுட்பத்துடனும் நேர்த்தியாக இந்தப் பணியைச் செய்துள்ளார். ஹீராவுக்கு இது முதல் நாவலும் கூட.

அற்புதமான இந்தப் புதினம் சமகால வரலாற்றைப் பேசும் நாவல்களில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

மௌனத்தின் சாட்சியங்கள்

ஆசிரியர்: சம்சுதீன் ஹீரா
பக்கங்கள்: 456
விலை : 350

வெளியீடு: பொன்னுலகம் பதிப்பகம்
4/413 பாரதி நகர், 3-வது வீதி
பிச்சம்பாளையம் (அஞ்சல்)
திருப்பூர்-641603, பேச- 94866 41586

Pin It