இன்று போனதும் ஒரு முத்தம் கொடுத்து விட வேண்டுமென்ற தவிப்புடனேயே வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன்.

பஸ் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பியிருந்தது. அதிகாலை வேளை என்பதால் இதமான குளிர் எல்லா இடமும் வியாபித்திருந்தது. பஸ் திரும்பும் போது, சற்று முன்பு நான் குளித்த 'கடல்' பார்வைக்குக் கிடைத்தது. வடசேரி சந்தைக்கு வேலைக்குச் செல்வோரைத் தவிர, வெகு சிலரே பஸ்ஸில் இருந்தனர். வீட்டுக்குச் செல்ல எப்படியும் ஒரு மணிநேரம் ஆகுமென மனது கணக்கிட்டு, கூடவே இன்று போனதும் ஒரு முத்தம் கொடுத்துவிட வேண்டுமென்று ஆசை, மனதை அல்லோலப்படுத்தியது.

ஐம்பத்தியிரண்டு வயதில் திடீரென்று வந்த ஆசை. எந்த உந்துதலில் இந்த ஆசை இப்போது துளிர் விட்டது என்பதை விளக்க இயலவில்லை. இருந்தும் அவளை முத்தமிட வேண்டும் என்ற நினைப்பு மட்டும், அடங்கி ஆர்ப்பரிக்கும் கடலலை போல் மீண்டும், மீண்டும் வந்து கொண்டே இருந்தது. நினைவுகள் ஒரு மனிதனின் ஜீவாதாரம். நன்றாக சிந்தித்தால் காதல், காமம், இன்பம் என்ற அனைத்து சுகத்தையும், உடம்பு அனுபவிப்பது மணித்துளிகளில்தான். ஆனால் அந்த பரவச நினைவுகள் இருக்கிறதே... அப்பப்பா... நேரம் கிடைக்கும் போதெல்லாம் நினைத்து, நினைத்து ஆனந்தப் படலாம். இன்பத்தின் உச்சம் என்பது, அது இடைவிடாமல் நினைக்கப்படும்போதுதான். இனிய நினைவுகளின் சேர்க்கை ஒரு முதிர்ந்த மனிதனையும் இளமையாக்குகிறது. அந்த 'நினைப்பு' பரவசத்தின் உந்துதல் கூட 'இந்த முத்த ஆசைக்கு' ஒரு காரணமாக இருக்கலாம். எதுவாய் இருப்பினும் இன்று அவளை முத்தமிட வேண்டும் என்ற உறுதி மட்டும், நெஞ்சமெங்கும் தங்கி இருந்தது..

எத்தனை நாளாயிற்று. நெற்றியை சுருக்கி, கன்னப்பரப்பில் வளர்ந்திருந்த நாலைந்து நாள் தாடி அழுத்தமாய் தேய்த்துக் கொண்டே யோசித்தேன். கடைசியாய் அவளுக்கு முத்தம் கொடுத்து எத்தனை நாளாயிற்று. மனதிற்குள் நாட்களை நிலை நிறுத்தி எண்ணினேன். கைவிரல்கள் தன்னிச்சையாய் ஆடி 'எண்ணுவதற்கு' உதவியது. அன்றொருநாள் ஏதோ ஒரு கல்யாணத்திற்கு கிளம்பும் போது, புத்தாடையில் மல்லிகை பூ வைக்க, கண்ணாடியின் முன் நின்று, அவள் கையை உயர்த்தும் போது, எனக்குள்...ஒரு சின்ன ஆர்ப்பரிப்பு. மல்லிகைப்பூ வசமா? அல்லது அவள் குளித்த வாசமா? எதுவென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஓன்று 'முத்தடா' அவளை என்று கட்டளை பிறப்பித்துக்கொண்டே இருந்தது. ஓடிச்சென்று ஒரு முத்தம்.. அதுவும் கன்னத்தில் இல்லை. கன்னத்திற்கும், காது மடல்களுக்கும் இடைப்பட்ட இடத்தில். பட்டென்று சிரித்து, விலகி ஓடினாள். முத்தக்குறி தவறிவிட்டதை சரி செய்யும் நோக்கில், மீண்டும் படையெடுத்தேன்.

“என்ன இது... வயதான நேரத்தில்....” - என்றாள்.

“உனக்கு வயசாகலையே” – என்றேன்.

“பாருங்க... எனக்கும் வயசாயிட்டு..”- என்று காதோர நரை முடிகளைக் காட்டினாள்.

“எங்க... காட்டு.. வா.. வயசாயிட்டான்னு பாக்குறேன்னு..”- அழகுகளைத் தீண்டினேன்.

“மீசை நரைத்தாலும், ஆசை நரைக்காது என்பது உண்மைதான்” - என்றாள்.

“அதான்.... உன் மீசை நரைக்கலையே” - என்றேன்.

“எனக்குதான் மீசையே இல்லை...”- என்று தப்பி ஓடினாள்..

பின்புறமாய் சென்று “ஒன்றே ஓன்று” - என்றேன்..

“அய்யோ.. நேரம் காலம் தெரியாம விளையாடிட்டு....குட்டிம்மா இப்ப வருவாள்” - என்றாள்..

“அவள் இப்போதுதான் குளிக்கச் சென்றாள்...” -என்று நெருங்கினேன். சுற்றம் முற்றும் பார்த்து யாரும் இல்லையென்று ஊர்ஜிதம் செய்த பின்பு முத்தமிட அனுமதித்தாள். என் உலகிற்குள் அவளைச் சுற்றி வளைத்து முத்தமிட எத்தனித்த போது தான், குளியலறையிலிருந்து மகள் வெளிப்படும் சப்தம்.

அரைகுறையாய் ஒரு முத்தம் வாங்கி அப்படியே ஓடினாள் யமுனா.. இம்ம்... அதுதான் கடைசியாய் கொடுத்த முத்தம்.. ஒரு இரண்டு, மூன்று வருடம் இருக்கும். இன்று எப்படியும் முத்தமிட வேண்டும்.

வயதான காலத்தில் காதலிப்பதும், காமம் செய்வதும் கஷ்டமாகத் தோன்றியது. நான் கூறுவது உடலளவில் ஏற்படும் இயலாமையைப் பற்றி அல்ல. காமமும், காதலும் சரிவிகிதத்தில் மனதினுள் கலக்கப்படும்போது எல்லோருக்கும் உடல் ஒத்துழைக்கும். ஆனால் அவ்வாறு கலப்பதற்குரிய 'சூழ்நிலை' உருவாவதில் இருக்கிறது சிக்கல். மீண்டும் மீண்டும் கூடி, ஆடிகளித்த உடம்பானது, குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு, காதலுக்கும், காமத்திற்கும் சரி வர உதவுவதில்லை. ஒரு மாதம் 'ரசகுல்லாவை' மட்டும் ஒருவனுக்கு உணவாய் கொடுத்து, பின்வரும் நாட்களில் 'ரசகுல்லாவை' ரசனையோடு பார்க்க முடியாத ஒரு திகட்டுச் சலிப்பு வருமே. அது மனித உடம்பிற்கும் பொருந்தும். அதே உடலும் அதே உடலும், மீண்டும் மோதுவதால் வரும் சலிப்பு. அதே உதடும், அதே உதடும், மீண்டும் முத்துவதால் வரும் சலிப்பு. வயதாக, வயதாக வரும் சலிப்பு. உடம்பின் உரசல்களால், உணர்ச்சிகளை எழுப்ப முடியாத ஒரு சலிப்பு.

அந்த நிலையில்தான், அந்தரங்கத் தேவை ஏதுமில்லா 'ஒரு மனம் சார்ந்த காதல்' மெதுவாக மலரத் தொடங்கும். அம்மாதிரியான காதலுடன், 'ஒத்திசைந்த மனங்கள்' நினைத்தால், வயோதிகம் 'காதல் விளையாட்டி'ற்குத் தடையே இல்லை.

எனக்கும், யமுனாவிற்கும் உள்ள ஈர்ப்பு அம்மாதிரியானது. நாற்பதைக் கடந்த பின்பும், என் இதய வீட்டின் தேவதை அவளே. காதோர சில நரைமுடிகளும், கழுத்தோர ஆரம்ப சுருக்கங்களும், என் ஆண்மையை இப்போதும் உயிர்ப்புடனேயே வைக்கின்றன. காதலித்த நாள் தொடங்கி, இன்று வரை என் நீள, அகலங்களை நிர்ணயம் செய்பவள் அவளாகவே இருக்கிறாள்.

யமுனா... யமுனா... யமுனா... எப்படி என் வாழ்வுக்குள் வந்தமர்ந்தாய் நீ.....

கல்யாணமான ஆரம்ப நாட்களில், முத்தமிடும் போதெல்லாம் அவள் கண்கள் சிலந்தி வலையில் சிக்கிய பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும். பின் சிறிது நேரத்தில் முத்தச் சுகத்தில் கரு விழி மேல்நோக்கி மறைந்து, இமை மூடும். கையகல மார்பு செழிப்பில், கழுத்தோர காது மடல்களில் புதைந்து கிடக்கிறது, அவள் புலன்களைத் திறக்கும் சாவி.

இளமையில் நடந்தவை இம்சையாய் இதயத்தை வருடியது. காதலித்த நாட்கள், புதுவீட்டில் இருவராய் குடியேறிய மணித்துளிகள், கட்டிப்பிடித்த தருணங்கள், உடைகள், உலகம் மறந்து இயங்கிய கட்டில் பொழுதுகள், மகள் பிறந்த நிமிடங்கள், மகள் கல்யாணம் முடிந்த தருணங்கள் – என எல்லாவும் மனக்கண்ணில் காட்சிகளானது. காதல் நிரம்பி, காமம் போங்கிய நிமிடங்களேன அடுத்தடுத்து காட்சிகள், கண் முன்னே நிறைந்தது..

யமுனாவின் நினைப்பாகவே இருந்தது.

என்னவளை இன்று எப்படியும் முத்தமிட வேண்டும்.

நாகர்கோவில் தாண்டிச் செல்லும் பஸ், பறந்து செல்லாதா என்று தோன்றியது.

எப்படியல்லாமோ தவிர்க்க நினைத்தும், அழையாய் விருந்தாளியாய் அந்த 'முத்த நினைப்பு' மட்டும் மீண்டும், மீண்டும் வந்து கொண்டே இருந்தது. கண் முன்னே நடக்கும் காட்சிகளாய் 'பழைய நினைவுகள்' என் முன்னே தெரிந்தது..

யமுனா, அப்படியொரு அழகுப் பதுமையெல்லாம் இல்லை. இருந்தும் பத்து பெண்கள் நிற்குமிடத்தில், அவளை மட்டும் கவனிக்க வைக்கும் ஒரு வித கவர்ச்சி ஈர்ப்பு, அவள் உடல் மொழியில் இருந்தது. எதேச்சையாய் பார்த்துக் கடந்தாலும், ஏதோ ஓன்று, மீண்டும் அவளை பார்க்க வைக்கும். அவள் பார்வையின் வீரியம், பேசும் தொனி, உடல் அசைவுகள் என அத்தனையும், அவளைப் பார்த்தவர்களை, பத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஆக்ரமித்துக் கொண்டேஇருக்கும். சின்னதாய் சிரித்து, பார்ப்பவர் மனதை பெரிதாய்ப் பதம் பார்க்கும் வல்லமை அவள் பார்வைக்கு இருந்தது.. யமுனா... யமுனா..

இன்று எப்படியும் அவளை முத்தமிட வேண்டும்.

எப்போதும் யமுனா சலிப்பு தட்டாத ஒரு சாஷ்டாங்க அழகு. காதலித்த நாட்களில் கடற்கரையில், முன்னால் அவளை நடக்க விட்டு, பின்னால் அவள் “பின்னங்கால்” திரட்சியை பார்த்து ரசித்துக் கொண்டே நடந்து, நான் அனுபவித்த ஒரு வித பேரானந்தத்தை...என்னால் இப்போதும் உணர முடியும். அதற்குப் பிறகு, காமத்தை விட மேலாக காட்சிகளாலேயே ஒரு பெண் அதிகம் சுகம் தருவதாக எனக்குள் ஒரு எண்ணம். ரப்பரால் தேய்த்து அழித்தும், மிச்சமிருக்கும் பென்சில் எழுத்துக்களைப் போல, அத்தனை நிகழ்வுகளும் அழுத்தமாய் மிச்சமிருந்தது.

யமுனா... யமுனா... யமுனா... எப்படி என் வாழ்வுக்குள் பிரவேசித்தாய் நீ.

உன்னை ஆசை தீரக் காதலித்து, கல்யாணமாகி, குழந்தைகளாகி.. பேரன் பேத்திகளாகி... நாட்கள் ஏன் இத்தனை வேகமாகச் செல்கிறது.

இம்ம்ம்... என்பதற்குள் முடிந்து விட்ட 'இருபத்தியாறு வருடங்கள்'. ஆச்சரியம் மேலோங்கியது. மனித வாழ்வே ஒரு ஆச்சரியம்தான். அடிப்படைத் தேவைகளை விட, இன்ன பிற இத்யாதிகளை தேடித் தேடி ஓடிக்கொண்டிருக்கும் இம்மனித வாழ்வு ஒரு ஆச்சரியம் தான். எதற்காக இத்தனை ஓட்டம். சொந்த துணையைக் கூட முத்தமிட மறந்த ஓட்டம்.

ஒருவழியாக பஸ் ஊரைச் சென்றடைந்திருந்தது. வேகமாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

வீட்டு விசேஷங்களுக்கு வாழை இலை ஏற்பாடு செய்யும் முருகேசன் எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும், சைக்கிளிலிருந்து இறங்கி இருந்தான்.

“என்ன முருகேசா... இலை கொண்டு வந்திட்டயா?”

“ஆமாய்யா....நீங்க சொன்ன மாதிரி அறுவது இலை வச்சிருக்கேன்... ஒரு எழுபத்தஞ்சு பேருக்குப் போடலாம்...”

“சரி.. சரி... ராத்திரி ஒரு எட்டரை மணிக்கு வா... ரூபா தந்திடுகேன்..”

“சரிய்யா,, நான் வரேன்...” – என்று கூறிக்கொண்டே சைக்கிளை மிதித்து கிளம்பலானான்.

மீண்டும் வீட்டை நோக்கி நடக்கலானேன். கொஞ்சமாய் மூச்சு வாங்கியது.

வீட்டு வாசலில் நாலைந்து ஜோடி செருப்புகள் இருந்தன. வீட்டுக்குள் நுழைந்ததும் மகள் ஓடி வந்தாள். குளித்து முடித்த முகத்தில் சோகம் இருந்தது. அதிகாலை வானமென கண்கள் சிவந்து பனித்திருந்தது.

“காப்பி எடுக்கட்டப்பா?”

“வேண்டாம் மக்கா.. விரதம்லா... ஐயரு வந்திட்டாரா?”

“ஆமாப்பா..பின்னாடி உக்காந்து வேண்டியதுல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்காரு...”

“சரி, சரி...எல்லாரும் இப்பம் வந்துருவாங்கல்லா மக்கா.. நடக்க வேண்டியதைப் பாப்போம்..”.

“கன்னியாரில எல்லாம் முடிஞ்சா பா... இவங்களையும் கூட கூடிட்டு போயிருக்கலாம்லா...”

“அஸ்தியை கரைக்க மாப்பிளைலாம் எதுக்கம்மா... நானே போயி கடல்ல கரைச்சிட்டு... இப்ப சீக்கிரமா வந்திட்டேன்லா மக்கா..”

--- என்று கூறிக்கொண்டு சட்டையைக் கழற்றிக் கொண்டே, திண்ணையை தாண்டி என் அறைக்குச் சென்றேன். வெப்ராளமும் இயலாமையும் கலந்த ஒருவித அசாதாரண மன நிலைமையில் இருந்தேன். அழத் தோன்றவில்லை. படுக்கையின் வலப்புறத்தில் இருந்த போட்டோவில் என்னோடு சிரித்த முகத்தோடு இருக்கும் யமுனாவை, ஆசை தீர முத்தமிட்டு, முத்தமிட்டு, முத்தமிட்டு ஆசை தணிந்தேன். துக்கம் தாளாமல் வழிந்த கண்ணீரை, துண்டால் துடைத்துக் கொண்டே, அவளின் ஐந்தாம் நாள் காரியம் செய்ய 'ஐயரை' நோக்கி நடந்து கொண்டிருந்தேன். என் எச்சில் முத்தத்தால் ஈரமாகிய எங்கள் போட்டோ, கொஞ்சம் கொஞ்சமாய் காயத் தொடங்கியிருந்தது.

- சிவந்தபெருமாள்

Pin It