ஜாதிகாத்தானுக்கு வயது 5

தண்ணீர் குடிக்கக் கூடாது. ஒண்ணுக்கு அடிக்க போகக் கூடாது என டார்ச்சர் செய்வதில் உலகப் புகழ் பெற்றிருந்த அழகுமலை சார் வகுப்பில் உட்கார்ந்திருந்த ஜாதிகாத்தானுக்கு தண்ணீர் தாகம் தொண்டையைக் கிழித்தது. நேற்று அதிகாலையில் மாடு மேய்க்கப் போன சூலக் கருப்பனிடம் 2 ரூபாய் கொடுத்து, அவன் மாட்டை அடிப்பதற்காக வைத்திருந்த பிரம்பை வாங்கிக் கொண்டு இன்று பள்ளிக்கு வந்திருக்கிறார் அழகுமலை. அவரிடம் போய் நான் தண்ணீர் குடிக்க வேண்டும், அனுமதி கொடுங்கள் என்று கேட்டால், அழகுமலை தனது சிலம்பாட்டத் திறமையை எல்லாம் தன்மேல் காட்டி விடுவார் என பயந்தார் ஜாதிகாத்தான். சீக்கிரம் சாவு வருவதற்குள் ஸ்கூல் பெல் அடித்து விட வேண்டும் என எல்லைகாத்த கௌமாரியம்மனை வேண்டிக் கொண்டார். கொடூரன் அழகுமலையை சபிப்பதில் நேரத்தை கழித்துக் கொண்டிருந்தார் ஜாதிகாத்தான். அப்பொழுது அருகில் இருந்த கிறிஸ்டோபர் தனது நண்பனின் தண்ணீர் தாகத்தைப் புரிந்து கொண்டு தனது வாட்டர் கேனிலிருந்து சிறிது தண்ணீ்ர் குடிக்கும்படி கேட்டுக் கொண்டான். அப்பொழுது ஜாதிகாத்தான் வானத்தைப் பார்த்தபடி நினைவுகளின் அடுக்குகளில் பின்னோக்கிச் சென்று தனது தாத்தா கூறிய வார்த்தைகளை எண்ணிப் பார்த்தார்.

“நாக்குட்டி நாக்குட்டியோட தாண்டா பழகோணும்

பூனைக்குட்டி பூனைக்குட்டியோட தாண்ட பழகோணும்

அதுபோல ஜாதிகாத்தான் நம்ம ஜாதிக்காரனோட தாண்டா பழகோணும்….

ஜாதிகாத்தான் அந்த தண்ணீரை குடிக்க மறுத்து விட்டார்

ஜாதிகாத்தானுக்கு வயது 14

man cursingநான் 14 வயதில் எவ்வளவு அழகாக இருந்தேன் தெரியுமா? என்று பிற்காலத்தில் அனைவரிடமும் சொல்லிக் கொள்ளக் கூடிய அளவுக்கு பார்ப்பதற்கு சுமாராக இருந்தார் ஜாதிகாத்தான். வரலாற்றில் நடக்கக் கூடாத சம்பவங்கள் என்ற தொகுப்பில் இடம்பிடிக்கக் கூடிய அளவுக்கு ஜாதிகாத்தான் ஒரு பெண்ணை சைட் அடித்தார். காதலை கண்களாலேயே பகிர்ந்து கொண்டார். அது புரியாத அந்தப் பெண் ஜாதிகாத்தானுக்கு ஒன்றரைக் கண் என நினைத்துக் கொண்டாள். அவருக்காக பரிதாபப் பட்டாள். மாற்றுத்திறனாளிகளை மதிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் அவருக்காக தனது தயிர் சாதத்தில் பாதியைக் கொடுத்தாள். தனக்கு தயிர் சாதம் கொடுத்த பெண்ணுக்கு ஏதேனும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்த ஜாதிகாத்தான் முகம்மது பாய் கடையிலிருந்து 4 பஜ்ஜிகளை வாங்கிக் கொடுத்தார். பஜ்ஜி நன்றாக இருப்பதாக கூறிய அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தி விட வேண்டும் என நினைத்த ஜாதிகாத்தான் தான் கடந்த 15 நாட்களாக பல்வேறு கவிஞர்களின் புத்தகங்களைப் படித்து உருகி உருகி வடித்த காதல் (காவியத்தை) கடிதத்தை அவளிடம் கொடுத்தார். அவள் அதில் கையை துடைத்து விட்டு, கசக்கி எறிந்து விட்டு மறக்காமல் தேங்ஸ் என்று சொல்லி விட்டுப் போனாள். ஜாதிகாத்தானின் இதயம் நொறுங்கிப் போனது.

வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை கலிக்கோ டிக்ஸனரி போல் கறுப்பாக இருந்தாலும், மறுபேச்சு பேசாமல் திருமணம் செய்து கொள்ளும் இந்தப் பெண்கள், உருகி உருகி காதலிப்பவனை ஒன்றுமே தெரியாதது போல் வெறுத்து ஒதுக்குவதற்கு காரணம் அப்பன் மேல் உள்ள பயம் தான். இந்த விஷயத்தை நேரடியாக அவளது அப்பனிடம் சென்று தீர்த்துக் கொள்வது என்று ஒரு முடிவுக்கு வந்தார் ஜாதிகாத்தான். குழந்தைத் திருமணம் கூடாது, 18 வயதிற்கு மேல்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மாட்டு வண்டியில் அரசாங்க ஊழியர் பிரச்சாரம் செய்வதை

“கிறுக்குப் பயலுக எதையாவது உளறிகிட்டு இருப்பானுக, ஓரமா போங்கடா நொன்னைகளா” என திட்டியபடி, அன்று அவளது வீட்டுக்குச் சென்றார் ஜாதிகாத்தான்.

விஷயத்தை கேள்விப்பட்ட அவளது அப்பன் அருவாளைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் தப்பி ஓடிவந்துவிட்டார் என்றாலும், அவரால் அந்த அவமானத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. காதலை மறக்க முடியாத ஜாதிகாத்தானிடம் அவரது பாட்டி இவ்வாறு கூறினார்.

“எலேய் அவ என்ன ஜாதி, நாம என்ன ஜாதி… அவளுக்குப் போய் இந்த உருகு உருகுற”

ஜாதிகாத்தானுக்கு அப்போதுதான் மண்டையில் உறைத்தது. தனது தாத்தா கூறிய வார்த்தைகளை நினைத்துக் கொண்டார்.

“சாதிதான் நமது உயிர் மூச்சு”

ஜாதிப் பெருமையை காப்பதற்காக தனது காதலையே தூக்கி எறிந்தார்.

ஜாதிகாத்தானுக்கு வயது 21

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீசில் உலக அழகிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வழக்கம் போல் இந்திய அழகி முதல் 3 இடங்களுக்குள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அழகியைப் பற்றிய தகவல்கள் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. அழகியின் அப்பா தமிழ்நாடு, அம்மா கேரளா அதுவும் மதுரைப் பக்கம். கழிவறையில் அமர்ந்தபடி இத்தகவலை அந்த மு.கொ (முந்திரிக் கொட்டை) சேனலில் கேட்ட ஜாதிகாத்தானுக்கு சர்வமும் அடங்கிப் போனது....

“ என்னது மதுரைப் பொண்ணா?... நம்ம ஊரு பொண்ணா?”

ஆர்வம் மேலிட, அரை குறையாக முடித்துக் கொண்டு அவசர அவசரமாக எழுந்து வந்து மு.கொ. சேனலில் மூழ்கிப் போனார்.

இந்திய அழகியின் 96 வயது கொள்ளுப் பாட்டியை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். மு.கொ. சேனலின் நிருபர். காது கேட்காத பாட்டியிடம் சுமார் 56 கேள்விகளை கேட்டுவிட்டு அதற்கான பதிலையும் நேயர்களுக்கு அவரே கூறிக் கொண்டிருந்தார். அந்த 56 கேள்வியிலும் ஜாதிகாத்தான் எதிர்பார்த்த அந்த கேள்வி இடம்பெறவில்லை.

“இந்த மு.கொ. சேனல்காரனுக்கு மூளையே பத்தாது. எது கேட்கனுமோ அதைக் கேட்க மாட்டான்”

“இதை எப்படி பாக்குறீங்க, எந்த கோணத்துல பாக்குறீங்க, எந்த திசையில பாக்குறீங்கன்னு கேட்டதையே மாத்தீ மாத்தீ கேட்டுகிட்டு இருக்கான்”

“இது கதைக்கு ஆகாது நேரா சோழவந்தானுக்குப் போயிட வேண்டியதுதான்”

ஜாதிகாத்தான் தனது டி.வி.எஸ்.50-யை உதைத்தார். டி.வி.எஸ். கம்பெனிக்காரனே நம்ப மாட்டான், டி.வி.எஸ். 50யில் ஒருவன் 100  கிலோமீட்டர் வேகத்தில் போக முயற்சி செய்கிறான் என்று. ஆனால் ஜாதிகாத்தான் உண்மையில் அந்த முயற்சியை செய்தார். அவர் சென்ற வழியெல்லாம் வீட்டிற்குள்ளிருந்தவர்கள் வெளியில் வந்து என்ன அசம்பாவிதம் நடக்கிறது என்று பார்த்துச் சென்றனர். வண்டிக்கு கையிருந்தால் செருப்பால் அடித்திருக்கும்.

ஜாதிகாத்தான் ஊருக்கு மட்டும் மதுரை மாநகராட்சி கொசு மருந்து அடிப்பதேன் என பல்வேறு எதிர்க்கட்சிகள் மேயரிடம் முறையிட்டாலும், அதற்கான பதில் பலருக்கு இன்றுவரை தெரியாது. ஊருக்குள் கொசுக்களுக்கு ஒரே எமன், ஜாதிகாத்தானின் டி.வி.எஸ். 50 வண்டிதான். இன்றுவரை ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார், டி.வி.எஸ். 50க்கு பெட்ரோல் தான் போட வேண்டும் என்று. மண்ணெண்ணெய்க்கு என்ன குறை என்று அதைதான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக சத்தமில்லாமல் ஒரு புரட்சியை செய்து கொண்டிருக்கும் மனிதன் யாரென்றால் அது ஜாதிகாத்தான்தான். ராமர் பிள்ளையின் முகவரியை எத்தனையோ பேரிடம் கேட்டுவிட்டார். யாருக்கும் தெரியவில்லை.

சோழவந்தானில் இந்திய அழகி பார்வதியின் பூர்வீக வீட்டை தேடிக் கண்டுபிடித்தார் ஜாதிகாத்தான். கூட்டத்தைக் கலைத்துக்கொண்டு உள்ளே புகுந்தார்.

மு.கொ. சேனலின் நிருபர் அந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“உங்கள் பேத்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிட்டார். இதை நீங்க எப்படி பாக்குறீங்க”

“என்னப்பா தம்பி”

“இல்லம்மா… இந்த விஷயத்தை எந்த கோணத்துல பாக்குறீங்க”

“நேரா தாம்பா பாக்குறேன்“

”சரி, உங்க பேத்தி உலக அழகி பட்டத்தை தட்டிப் பறிப்பாங்கன்னு நெனைச்சீங்களா”

“என்னது தட்டிப் பறிச்சிட்டாங்களா, ஐயையோயோ….”

இந்த சூழ்நிலையை சமாளிப்பதில் பி.ஹெச்.டி. வாங்கியிருக்கும் மு.கொ. சேனலின் நிருபர் டக்கென்று கேமராவைப் பார்த்தபடி பேச ஆரம்பித்தார்.

“இன்னும் சற்று நேரத்தில் உலக அழகிப் பட்டத்தை வெல்ல இருக்கும் பார்வதி ஓமனக் குட்டனின் பாட்டி அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்படுகிறார். அவரது கண்களில் நீர் வருவதைப் பார்க்க முடிகிறது.”

கேமராமேன் பாட்டியின் கண்ணீரை க்ளோஸ் அப்பில் காண்பித்தார்.

அப்பொழுதுதான் ஜாதிகாத்தான் அந்த வார்த்தையைக் கேட்டார்.

“பார்வதி ஓமனக்குட்டனா, அப்போ இந்தப் பொண்ணு தமிழ்நாடு இல்லையா, கேரளாவா, ஒரு கேரளா பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது. நம்ம ஜாதி வேற கிடையாது. பார்வதிங்கிற அந்தப் பேரைக் கேட்டு ஏமாந்து போயிட்டோமே…. சே…..”

அந்த நிமிடமே ஜாதிகாத்தான் பார்வதி ஓமனக் குட்டனை தனது மனதிலிருந்து நடராஜ் ரப்பரை வைத்து அழித்தார். தன் ஜாதியைச் சேராத ஒரு பெண் உலக அழகிப் பட்டத்தை வெல்வதில் அவருக்கு சற்றும் விருப்பம் இல்லை. கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெறித்தனமாக வெளியே வந்தார். வெறிகொண்ட வேங்கையாய் தனது மின்னல் ராஜாவை உதைத்தார். அவ்வளவு பெரிய சத்தத்தை திடீரென கேட்டதும் மிரண்டு போன கூட்டம் ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தது. கூட்டத்திலிருந்த ஒருவன் கேட்டான்.

”ராயல் என்ஃபில்டு பைக்கை எப்படா இவ்வளவு சின்னதா செஞ்சு விட்டான்”

ஜாதிகாத்தான் 102ல் டி.வி.எஸ்.50 யை விரட்டினார். நேராக எல்லைகாத்தான் கோயிலுக்குச் சென்றார். அங்குதான், போன வருடம், ஒரு பெண்ணான ஹிலரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் ஜெயிக்கக் கூடாது என காசு வெட்டி போட்டார் ஜாதிகாத்தான். காசுவெட்டிப் போடுவதின் மகிமை தெரியாத அமெரிக்க தேர்தல் அதிகாரிகள் அப்பாவியாய் தேர்தலை நடத்தினார்கள். மிக மோசமாக தோல்வியடைந்த ஹிலரி கிளிண்டன் இன்று வரை தான் எதற்காக தோல்வியடைந்தோம் என்ற காரணம் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய ஜாதியைச் சேராத ஒரு பெண் உலக அழகி பட்டத்தை வெல்வதில் சற்றும் விருப்பம் இல்லாத ஜாதிகாத்தான், பார்வதி ஓமனக் குட்டன் வெற்றி பெறக்கூடாது எனக்கூறி 3 முறை காசின் மேல் எச்சிலைத் துப்பி, 3 முறை தலையை சுற்றி அதன்மேல் காசுவெட்டி சுத்தியலை வைத்து ஒரு போடு போட்டார். ஒரு ரூபாய் நாணயம் இரண்டாக சிதறியது. இதற்கு மேலும் ஓமனக்குட்டன் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையில் இந்தியாவே மனப்பால் குடித்துக் கொண்டிருந்ததை நினைத்து ஜாதிகாத்தான் மனதிற்குள்ளாகவே ஒரு குறுஞ்சிரிப்பை சிரித்துக் கொண்டார்.

ஜாதிகாத்தானுக்கு வயது 29

ஜாதிகாத்தானுக்கு கல்யாண வயது வந்து விட்டதால் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதோடு 30 பெண்ணை நிராகரித்து விட்டார். ஜாதிகாத்தானின் அப்பா கூறினார்.

“இந்த பொண்ணையும் வேண்டாம் என்று கூறினால் உன்னை ராமகிருஷ்ண மடத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவேன்” என மிரட்டினார்.

அடர் கருப்பு நிறத்துடன். குண்டாக, சிரித்தால் வெண்ணிறப் பற்கள் இரண்டு கிலோமீட்டருக்கு அந்தப்புறம் இருக்கும் நபருக்கு சிக்னல் கொடுக்கக் கூடிய வகையில், மொத்தத்தில் கவுண்டமணியின் லுல்லாவைப் போல் காணப்பட்ட அந்தப் பெண்ணை ஜாதிகாத்தான் அந்த ஒரே காரணத்துக்காக பெருமிதத்துடன் ஓ.கே. செய்தார்.

சிலர் ஆச்சரியப்பட்டனர். சிலர் அதிர்ச்சியடைந்தனர். சிலர் ஆவேசப்பட்டனர். ஆனால் ஜாதிகாத்தான் பெருமிதப்பட்டார். ஜாதி, கிளை ஜாதி, உள் ஜாதி, ஒன்றிய ஜாதி, மாவட்ட ஜாதி, பஞ்சாயத்து ஜாதி வரை புலனாய்வு செய்து கடைசியில் அந்த பெண் ஒரு சுத்தமான கருப்புத் தங்கம் என்பதைக் கண்டுபிடித்தார். இந்த மாசற்ற தங்கத்தை தனக்காகவே கடவுள் படைத்துள்ளார் என்பதை மனப்பூர்வமாக நம்பினார் ஜாதிகாத்தான்.

ஆனால் அடிக்கடி அவர் மனதை சற்று பிசைந்த விஷயம் என்னவெனில் அப்பெண்மணி சிரிக்கும் பொழுது மட்டும் சற்று கண்கள் கூசின. அதை வெளிப்படையாக கூறி அந்த பெண்ணின் மனதைப் புண்படுத்த வேண்டாம் என நினைத்த ஜாதிகாத்தான் நாசூக்காக இவ்வாறு கூறினார்.

“பார்வதி உன் சிரிப்பை விட உன் புன்னகைதான் அழகாக இருக்கின்றன. எனவே நீ லேசாக புன்னகைத்தால் மட்டும் போதும்.” எனக்கூறி சமாளித்தார். அதற்கும் புரியாமல் அந்த பெண்மணி விசாலமாக சிரிக்க தன் பாக்கெட்டிலிருந்த கருப்புக் கண்ணாடியை அந்த இரவு நேரத்தில் எடுத்து போட்டுக் கொண்டார் ஜாதிகாத்தான். அப்பொழுது ஒரு வயதான பெண்மணியின் பஞ்ச் டயலாக்கை கேட்டு ஜாதிகாத்தான் கண்ணீர் விட்டது யாருக்குமே தெரியாது.

“மாப்பிள கண்ணாடி போடுற ஸ்டைல பாத்தா ரசினிகாந்த் மாதிரில இருக்கு”

ஜாதிகாத்தானுக்கு வயது 32

3 வருட போராட்டத்திற்குப் பிறகு ஜாதிகாத்தானுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அதைக் கேள்விப்பட்டு மருத்துவமனைக்குள் புயலென நுழைந்த ஜாதிகாத்தான்,

“எங்கே எனது குழந்தை…. எங்கே எனது குழந்தை“ என அரையிருட்டு அறைக்குள் வெகுநேரமாகத் தேடினார். கடைசியில் செவிலியப் பெண் ஒருவர் ஜாதிகாத்தானின் கையைப் பிடித்து குழந்தை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். தனது கண்களை கசக்கிக்கொண்டு வெகு நேரமாக குழந்தையைப் பார்க்க முயற்சித்தார்.

“தயவு செய்து அந்த லைட்டை போடுங்க“ எனக் கத்தினார்.

விளக்கு போடப்பட்டது. வெகுநேரமாக குழந்தையைப் பார்த்தார். என்ன பெயர் வைப்பது என யோசித்தார். தலையை சொறிந்து கொண்டார்.

“நெல்சன் மண்டேலா, என பெயர் வைத்தால் சரியாக இருக்குமா?“ என யோசித்தார். அது ஆண் பெயர் என்பது கூட பிரச்னை இல்லை. ஆனால் மிஸ்டர் நெல்சன் என்ன ஜாதியோ, என்ன குளமோ…. எனவே அந்தப் பெயரை நிராகரித்தார்.

ஜாதிகாத்தான் தனது குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக ஒரு விஞ்ஞானியைப் போல் யோசித்தார். கடைசியில் அந்த பெயரைக் கண்டு பிடித்தார்.

”எல்லை காத்த கௌமாரியம்மாள்“ பிற்காலத்தில் ஜாதிகாத்தான் குடிக்கும் பாலில் பாலிடாயிலை கலக்க கௌமாரியம்மாளைத் தூண்டி விடக்கூடிய செயலைத்தான் ஜாதிகாத்தான் செய்திருக்கிறார் என்றாலும், அது தனது ஜாதிக்கேத்த அழகான பெயர் என மீண்டும் மீண்டும் பெருமிதம் கொண்டார்.

கௌமாரியம்மாளின் அவமானங்கள்

அவளை யாருமே கௌமாரி என கூப்பிடவில்லை… கெலமாரி என்றே கூப்பிட்டனர். அதிலும் ஒரு வாலு பையன் கெழவி மாரி என்றே கூப்பிட்டான். கெளமாரி அப்பொழுதெல்லாம் அமைதியான பெண் என்பதால், அந்தப் வாலு பையனின் மூக்கை மட்டுமே உடைத்தாள். கௌமாரி நன்றாக சாணி தட்டுவார் என்பதால், ஒருமுறை கெலமாரி என தெரியாமல் கூப்பிட்டுவிட்ட தமிழாசிரியரை கன்னத்தில் லேசாகத்தான் தட்டினாள். 5 விரல் பதிந்தால் பரவாயில்லை உள்ளங்கையும் சேர்த்தல்லவா பதிந்து விட்டது. அது என்னவோ வறட்டியைப் போல் அவரது முகம் மாறிவிட்டது. அது முதல் வறட்டி வாத்தியார் என அன்புடன் அனைவரால் அழைக்கப்பட்டார். அதுமுதல் கௌமாரியம்மாளின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தமிழாசிரியர்.

மற்றொரு நாள் மாடு மேய்க்கும் மாரிமுத்து அவளைக் கிண்டல் செய்து கரெக்ட் செய்வதாக நினைத்துக் கொண்டு கௌமாரியை, சோமாரி, சோமாரி என்று அழைத்து சிரித்தான். குருதிப் புனல் படத்தில் கமல்ஹாசன் கிளைமாக்ஸ் காட்சிக்காக குறைந்த பட்சம் 3 மணி நேரமாவது மேக்அப் போட்டிருப்பார். ஆனால், கௌமாரியோ 3 நிமிடத்தில் அந்த மேக்கப்பை மாரிமுத்துவுக்கு போட்டு விட்டாள். வாய் ஒதுங்கி, பற்கள் திசைமாறிப்போன மாரிமுத்து அன்று முதல் கௌமாரி அக்காவுக்கு தம்பியாக ஆகிப் போனான். மாரிமுத்து வாய் குளறியபடி சாரி சொன்னான். பெரிய மனது செய்து மன்னித்து வழியனுப்பி வைத்தாள் கௌமாரி.

ஜாதிகாத்தானுக்கு வயது 46

பாலில் பாலிட்டாயில் கலந்தது கூடத் தெரியாமல் எருமை மாடு கழனித்தண்ணீரைக் குடிப்பது போல், ஜாதிகாத்தான் குடித்தாரென்றால் அவருக்கு எவ்வளவு தாகம் எடுத்திருக்கும் என்று நினைத்துக் கொள்ளலாம்.

மருத்துவர் அய்யாசாமி, (வாயில் நுரை தள்ளிய போதும், அந்த மருத்துவரிடம் தான் தன்னை கூட்டிச் செல்ல வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருந்தார் ஜாதிகாத்தான்.)

அய்யாசாமி ஒரு பின்குறிப்பு

அய்யாச்சாமிக்கு எம்.பி.பி.எஸ். எஃப்.ஆர்.சி.எஸ். போன்ற படிப்புகளை படித்து விட்டுத்தான் இந்தியாவில் மருத்துவத் தொழில் பார்க்க வேண்டும் எனத் தெரியாது. ஆனால் அது தெரிய வந்தபோது மிகவும் வருத்தப்பட்டார். கடந்த 4 பரம்பரையாக மருத்துவம் பார்க்கும் தனது குடும்பப் பெருமையை பாதுகாப்பதுடன், தனது மருத்துவத் திறமையை நவீனப்படுத்த எண்ணிய அய்யாச்சாமி, ஒரு எம்.பி.பி.எஸ். எஃப்.ஆர்.சி.எஸ் படித்த மருத்துவரிடம் வார்டு பாய் வேலை கேட்டு கிடைக்காததால், வாட்ச் மேன் வேலைக்கு சேர்ந்து, படிப்படியாக, நட்சத்திர மாத்திரை, பழுப்புமாத்திரை, சிவப்பு கலர் உருண்டை மாத்திரை, வட்ட வடிவ மாத்திரை, ரோஸ் கலர் மாத்திரை போன்றவை எந்தெந்த நோய்களுக்கு கொடுக்கப்படுகின்றன என்பதை சிரத்தையுடன் கற்றறிந்து, 2 வருட கடும் உழைப்பிற்கு பிறகு ஒரு ஏகலைவனாக வெளியே வந்தார்.

அடுத்த நாள் அய்யாச்சாமி எம்.பி.பி.எஸ் என 10க்கு 14 அடி உயரத்தில் ஒரு கட்அவுட் ஒன்றை செய்து தனது வீட்டு வாசலில் வைத்தார். அந்த கட்அவுட்டில் ஒரு ஓரமாக கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை சுற்றிக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் அய்யாச்சாமி. அருகில் சிகிச்சை மன்னன் அய்யாச்சாமி என எழுதப்பட்டிருந்தது. அந்த போஸுக்கே கூட்டம் அலைமோதியது. அடித்தட்டு மக்களின் நாடித் துடிப்பை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார் அய்யாசாமி. ஊருக்குள் உண்மையிலேயே எம்.பி.பி.எஸ். படித்திருந்த 4 பேர் தொழில் நன்றாக நடக்காததால் ஊரைக் காலி செய்து விட்டு பட்டணம் போய் விட்டனர். குறிப்பாக அய்யாச்சாமி தனது ஜாதிக்காரர்களுக்கு 50 பெர்சண்ட் டிஸ்கவுண்டில் மருத்துவம் பார்த்தார். இதனால் பிரபலமடைந்த அய்யாச்சாமிக்கு போன தேர்தலில் 98 ஓட்டுக்கள் கிடைத்திருந்தன. அவர் தேர்தலில் நிற்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(அய்யாச்சாமி குறிப்பு ஓவர்)

தனது உயிலில் ஜாதிகாத்தான் இவ்வாறு எழுதி வைத்திருந்தார்.

“தன்னை யாராவது குத்திப் போட்டால் கூட தன்னை அய்யாச்சாமியிடம் தான் தூக்கிச் செல்ல வேண்டும்“ என எழுதி சிவப்பு பேனாவால் அடிக்கோடிட்டிருந்தார்.

அவரது வழக்கறிஞர்,

“இப்டில்லாம் உயில்ல எழுதக்கூடாதுங்க“ என எவ்வளவோ சொல்லியும் ஜாதிகாத்தான் கேட்கவில்லை.

அதன்படி, பாலிடாயிலை 10 விநாடிகளில் குடித்து காலி செய்த ஜாதிகாத்தான் நுரைதள்ளிய வாயுடன் அய்யாச்சாமியிடம் எடுத்துச் செல்லப்பட்டார்.

போன வாரம் நெட்டுத் தெரு வயிரவன் வீட்டு எருமை மாட்டுக்கு பிரசவம் பார்த்த அய்யாசாமி, அப்பொழுது யூரின் போவதற்கு சிரமப்பட்ட மாட்டுக்கு ஃபிரியாக யூரின் போவதற்காக உபயோகப்படுத்திய 3 அடி நீள ட்யூப் ஒன்றை, அவசரத்திற்கு வேறு எதுவும் கிடைக்காத ஒரே காரணத்திற்காக தனது நான்காம் தலைமுறை மருத்துவர் மூக்காண்டி…. மேல் பாரத்தை போட்டு, கதறக் கதற ஜாதிக்காத்தான் வாயில் நுழைத்தார்.

அப்பொழுது ஜாதிகாத்தான் அடிவயிற்றிலிருந்து பேசிய கெட்ட வார்த்தை அந்த ட்யூப் வழியாக மருத்துவர் அய்யாச்சாமி காதில் மட்டும் விழுந்திருந்தால்… அய்யோ கடவுளே இன்று ஜாதிகாத்தான் உயிரோடு இருந்திருக்க மாட்டார்.

என்ன நினைத்தாரோ, தெரியவில்லை ஜாதிகாத்தான் போன வாரம் சாப்பிட்ட கோழிக் குழம்பையும், பரோட்டாவையும் கூட வாந்தி எடுத்தார். உடனடியாக 5 கிலோ எடை குறைந்தார். கௌமாரியம்மாளின் திட்டம் தவிடுபொடியானது. அவர் இன்னொரு வாய்ப்புக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்.

நிலைமை சீரானவுடன் அய்யாச்சாமி ஸ்டெதஸ் கோப்பை காதில் மாட்டிக்கொண்டு மறுமுனையை ஜாதிகாத்தானின் நெஞ்சில் வைத்தார்.

டொக். டொக் என்று சத்தம் கேட்டது.

இதயம் துடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இன்னும் ஜாதிகாத்தான் சாகவில்லை என்ற முடிவுக்கு வந்த மருத்துவர் அய்யாச்சாமி, சிவப்பு கலர் உருண்டை மாத்திரை, ரோஸ் கலர் வட்ட வடிவமாத்திரை மற்றும் பல வண்ண கலர் ட்யூப் மாத்திரை என குத்து மதிப்பாக ஒரு 15 மாத்திரையை அள்ளி ஜாதிகாத்தான் வாயில் போட்டு தண்ணீரை ஊற்றினார். அதன் நோக்கம் என்னவெனில் அடுத்த 2 நாட்களுக்கு ஜாதிகாத்தானுக்கு பேதி போக வேண்டும் என்பதே. ஒரு சொட்டு பாலிடாயிலைக் கூட வயிற்றில் மிச்சம் வைக்க்க் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட காரியமாகத்தான் இதைப் பார்க்க வேண்டுமே ஒழிய, மருத்துவர் அய்யாச்சாமியை தவறாக நினைக்க்க் கூடாது.

முரட்டு வைத்தியத்திற்குப் பெயர் போன அய்யாச்சாமியின் புகழ், அப்பல்லோ கைவிட்ட நோயாளிகளைக் கூட எழுந்து குடுகுடுவென ஓட வைத்து விடுவார் என மலேசியா வரை பரவியிருந்த்து. ஒரு முறை ரிச்சர்ட் பீலே கூட

“யாருய்யா அந்த அய்யாச்சாமி, எனக்கே பார்க்கணும் போல இருக்கு“ எனக் கேட்டதாக செவி வழிச் செய்தி ஒன்று வெளியானது.

உயிர் பிழைத்த ஜாதிகாத்தான் மருத்துவர் அய்யாச்சாமிக்கு 101 ரூபாய் ஃபீஸ் கொடுத்தார். அனது ஜாதிகாரனாகிய ஜாதிகாத்தான் தன்னைப் பற்றி தெரியாமல் 101 ரூபாய் கொடுத்ததற்காக கடுமையாக கடிந்து கொண்ட அய்யாச்சாமி மீதி 51 ரூபாயை வலுக்கட்டாயமாக ஜாதிகாத்தானின் பாக்கெட்டில் திணித்தார்.

50 ரூபாய்க்கு உயிர்காத்த அதிசயம் இனிமேல் இந்த உலகத்தில் நடக்காது. இதுவே கடைசி.

ஜாதி காத்தானுக்கு வயது 52

கறுப்பு கஜோலைப் போல காணப்பட்ட கௌமாரியம்மாளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார் ஜாதிகாத்தான். மேட்டுத் தெரு சிவனாண்டியின் மகன் கார்த்திகேயன் ஐ.டி.ஐ., எம்.எஸ். ஆபிஸ், எக்செல், ஃபோட்டோஷாப், கோரல்ட்ரா, பேஜ் மேக்கர் என பல்வேறு கம்யூட்டர் படிப்புகளை படித்திருக்கிறான் என ஊருக்குள் புகழ்பெற்றிருந்தார். அவனைப் பற்றி விசாரிக்கலாம் என ஜாதிகாத்தான் முடிவெடுத்தார். ஊருக்குள் உயிரோடு இருந்த 98 வயது கிழவிகளையெல்லாம் துருவி துருவி விசாரித்ததில் சிவனாண்டியின் கொள்ளுப் பாட்டி ஒரு தெலுங்கு நாடோடி என்பது தெரிய வந்தது. கடுமையான கோபத்திற்கு உள்ளான ஜாதிகாத்தான், சிவனாண்டியின் வீடு தேடிச் சென்று ஜாதியிலிருநது விலக்கி வைப்பதாகக் கூறி தீர்ப்பு கூறிவிட்டு வந்தார். 20 பேர் கொண்ட ஜாதிகாத்தானின் சங்கத்தில் தற்பொழுது 19 பேர் ஆனதால் கடுமையான நிதிச் சிக்கலுக்கு உள்ளானது சங்கம்.

கௌமாரியம்மாள் இப்பொழுதெல்லாம் ஜாதிகாத்தானை ஒரு மாதிரியாக முறைத்துப் பார்த்துக் கொண்ருந்தாள். அதற்கு அர்த்தம்…. அடேய் அடேய் அறிவு கெட்ட அப்பனே எனக்கு ஒரு மாப்பிள்ளையை சீக்கிரம் பார் என்பதாகும். ஜாதிகாத்தானும் தன் ஜாதி சார்ந்த வரன் பார்க்கும் அலுவகத்தை அணுகினார். அவரிடம் சுமார் 22 உத்தரவுகளைப் பிறப்பித்தார். குலம், கோத்திரம், ஜாதி, துணைஜாதி, உட்பிரிவு, மூத்த குடிமக்கள் உறவு வழிவந்தவர்கள், பரம்பரை, பாரம்பரியம், உடன்பிறந்தவர்கள், மனைவியுடைய ஜாதி என பட்டியல் நீண்டது. அப்ளிகேஷனுக்கு அடிஷனல் ஷீட் வாங்கி எழுதிய ஒரே நபர், மேட்ரிமோனியல் வரலாற்றிலேயே ஜாதிகாத்தான் ஒருவராகத்தான் இருப்பார்.

பாகிஸ்தானில் ஒளிந்திருக்கும் மும்பைதாதா தாவூத் இப்ராஹிம்மை மாப்பிள்ளையாக கேடட்லும் தேடிக்கண்டுபிடித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிடுவேன் என பெருமையடித்துக் கொண்டிருக்கும் மேடரிமோனியல் மஹாதேவனே சற்று குழப்பத்தில் ஆழ்ந்து போனார் என்றால் ஜாதிகாத்தானின் கோரிக்கைகள் எவ்வளவு பயங்கரமானவை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும், கோரிக்கைகளைப் பார்த்த மகாதேவனுக்கு நெற்றியில் முத்து முத்தாக வேர்த்தது, வாய் வறண்டு போனது, கால்கள நடுங்கின. ஜாதிகாத்தானிடமிருந்து தப்பிக்கத் திட்டம் தீட்டினார் மஹாதேவன், தன்னை நோக்கி வந்த அம்பை அப்படியே சன் டி,வி, பக்கம் திருப்பிவிட்டார், ஞாயிற்றுக்கிழமை காலை சன் தொலைக்காட்சியில் வரன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது பற்றியும், அந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுமை மிகுந்த மனிதரைப பற்றியும் எடுத்துக் கூறினார். அவரால் இந்த 22 கோரிக்கைகளையும் பொறுமையாக படித்துப் பார்க்க முடியும் என்று கூறி வழியனுப்பி வைத்தார். ஜாதிகாத்தானுக்கும் அது சரியாகப் பட்டது, மேலும் தனது ஜாதி பாரம்பரியப் பெருமையை தொலைக்காட்சி வாயிலாக உலகம் முழுவதும் எடுத்துக் கூறக்கூடிய வாய்ப்பும் ஏற்படும் அல்லவா? ஆஹா அருமையான யோசனை என முதுகில் தட்டிக்கொடுத்தார் ஜாதிகாத்தான்,

சனி தனது பார்வையை சன் தொலைக்காட்சியை நோக்கி திருப்பினார்.

சுமார் 19 பேர் அடங்கிய ஜாதிக்குழுவினர் வேன் மூலம் சென்னைக்கு கிளம்பத் தயாராயினர், பாதியாக வெட்டிய எலும்பிச்சை பழத்தை குங்குமத்தில் தேய்த்து வேனின் நான்கு டயருக்கும் அடியில் வைத்து சாமி கும்பிட்டனர். ஊர் பூசாரிக்குள் கருப்பன் இறங்கி மிக நீண்டதொரு வசனத்தைக் கூறி வாழ்த்து தெரிவித்தார்.

மறுநாள் காலை தினத்தந்தி முதல் பக்கத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

“சன் டி.வி அலுவலகம் தீக்கிரை, வேனில் வந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம். நக்சலைட்டுகளாக இருக்குமோ என போலீசார் சந்தேகம்“

ஜாதிகாத்தானும் அவருடன் சென்ற 25 பேரும் ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம் ஒடிசா, பீஹார், மேற்குவங்கம் என சுற்றிவிட்டு சுமார் 6 மாதங்களுக்குப்பிறகு ஊர் திரும்பினர். வந்ததும் வராததுமாக மஹாதேவனை தேடிச்சென்ற அக்குழுவுக்கு மஹாதேவன் மலேசியா சென்று 6 மாதங்கள் ஆகிவிட்டதாக தகவல் கிடைத்தது.

ஊருக்குள் ஓடிக் கொண்டிருந்த ஒரே தனியார் பேருந்து நடத்துனர் சக்திவேலுவைப் பிடித்து கத்தி முனையில் அந்த வியத்தகு கேள்வியைக் கேட்டனர் ஜாதிகாத்தான் குழுவினர்.

“மலேசியாவுக்கு டிக்கெட் எவ்வளவுடா?.“

அதிர்ச்சியில் உயிர் போகவில்லை என்றாலும் சக்திவேலுவுக்கு மூச்சு முட்டியது. 98 ரூபாய் 50 பைசா என்று சாமர்த்தியமாகக் கூறி உயிர்தப்பினார் சக்திவேல்.

ஜாதிகாத்தான் தனது வேட்டியை தூக்கி அண்டர்வியரிலிருந்து (ஆறு மாதங்களுக்கு முன் வைத்திருந்த) ஆடு வித்த பணம் 50 ஆயிரத்திலிருந்து அனைவருக்கும் டிக்கெட் கொடுக்குமாறு மிரட்டல் விடுத்தார்.

சக்திவேல் கொட்டாம்பட்டி செல்லும் பயணிகளுக்காக வைத்திருந்த பயணச்சீட்டை கிழித்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தார். மேலும் நாளை காலை 5 மணிக்கெல்லாம் வந்துவிடுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

போகும் போது ஜாதிகாத்தான் குழுவினரில் ஒருவன் கூறினான்.

“டிக்கெட் விலை கொஞ்சம் அதிகமா தெரியல?”

அப்பொழுதுதான் மயக்கமடைந்தான் சக்திவேல்.

மயக்கம் தெளிந்ததும் சக்திவேல் தனது மனைவிக்கு ஃபோன் செய்தார்.

“உடனே அனைத்துப் பொருட்களையும் எடுத்துவை. நாம் இன்று இரவு ஊரைவிட்டுக் கிளம்புகிறோம்.”

ஜாதிகாத்தான் பொண்ணுக்கு வயது 29

ஊர் முழுவதும் ஜாதிகாத்தான் வீட்டில் கூடியிருந்தது. ஜாதிகாத்தான் தூக்கில் தொங்கியே தீருவேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தார். சுமார் 4 பேர் சேர்ந்து காளையை அடக்குவது போல் ஜாதிகாத்தானின் தற்கொலை முயற்சியை தடுத்துக் கொண்டிருந்தனர். ஜாதிகாத்தான் 3 முறை மயங்கி மயங்கி எழுந்தார். பெண்கள் அனைவரும் சேலைத்தலைப்பை வாயில் வைத்தபடி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆண்கள் அனைவரும் சீக்கிரம் கலவரம் ஏதேனும் நடந்தால் நன்றாக இருக்கும் என கையில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் தயாராக காத்திருந்தனர்.

ஜாதிகாத்தானின் மனைவி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார். ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை பாவி மகளே என ஜாதிகாத்தானை (பாவியை) திட்டிக் கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து லிட்டர் கணக்கில் கண்ணீர் வடிந்தது. அடிக்கொரு தரம் சேலைத் தலைப்பால் மூக்கை சிந்தினார். அதே சேலைத்தலைப்பால் கண்ணீரையும் துடைத்தார். அதே சேலைத்தலைப்பால் ஜாதிகாத்தானையும் சமாதானப்படுத்தினார்.

சானை பிடிக்காத மொன்னை அரிவாளை எடுத்துக் கொடுத்து வெட்டிக் கொள்ளுமாறு ஜாதிகாத்தானுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆவேசமடைந்த ஜாதிகாத்தானுக்கு பி.பி. 200 ஐத் தாண்ட (யாருக்கும் தெரியாமல்) மயக்கமடைந்தார். ஒரு குடம் தண்ணீரை எடுத்து வந்து நடு முற்றத்தில் நின்று

“இனிமேல் நமக்கு மகளே கிடையாது” எனக் கூறியபடி தன் தலையில் பாதி தண்ணீரையும், மொன்னை அருவாளுடன் உட்கார்ந்திருந்த ஜாதிகாத்தான் தலையில் பாதி தண்ணீரையும் ஊற்றினார். ஜாதிகாத்தான் மயக்கத்திலிருந்து தெளிந்தார். (யாருக்கும் தெரியாமல்)

இவ்வளவு கலவரங்களுக்கும் நடுவில் …. கழுத்தில் மாலையுடன் கல்யாணக் கோலத்தில் நின்றிருந்தாள் கௌமாரியம்மாள்.

கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர் கேட்டார், மாப்பிள்ளை பெயர் என்னவென்று. ஜாதிகாத்தானின் கைகள் முறுக்கேறின.

மணமகன் கூறினார். ”டேவிட் ரொசாரியோ”

“ஐயோ” என்று கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு கிழவியின் சத்தம் வந்தது.

ஜாதிகாத்தான் மீண்டும் 200ஐத் தொட்டார். அவர் கம்பீரமாக உட்கார்ந்தபடி யாருக்கும் தெரியாமலும், ஜாதிகாத்தானின் மனைவி அனைவருக்கும் தெரிந்தபடியும் மயக்கம் போட்டு விழுந்தனர்.

ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். வேறு ஜாதி என்றால் கூட பரவாயில்லை. வேறு மதத்தைச் சேர்ந்தவனை ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டாளே இந்தப் பாவி, இவளை என்ன செய்வது எனப் புலம்பினர். அவர்களது சோகம் தாங்காமல் வருணபகவானே கண்ணீர் விட்டான். மழை சோ…..வென பெய்தது. மழைத்தண்ணீர் பட்டு ஜாதிகாத்தான் யாருக்கும் தெரியாமல் மயக்கம் தெளிந்தார். அப்பொழுது கூட்டத்திலிருந்த ஒருவர் கூறினார்.

“என்னதான் இருந்தாலும் இரும்புநெஞ்சம்யா ஜாதிகாத்தானுக்கு“

அவர் புரியாமல் விழித்தார்.

ஜாதிகாத்தானின் மனைவி லேட்டாக கண்விழித்தார். அவர் மீண்டும் அதே டயலாக்கை கூறி அழுதார்.

“வேறு ஜாதி என்றால் கூட பரவாயில்லை. வேறு மதத்தைச் சேர்ந்தவனை ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாளே இந்தப் பாவி“

ஜாதிகாத்தானின் சம்பந்திகள் இருவரும் காருக்குள் அமர்ந்திருந்தனர். காரைச் சுற்றி வேல்கம்பு, வீச்சரிவாளுடன் கிராமத்தினர் காவல்காத்து நின்றனர். ஒருவனுக்கு மட்டும் அந்த பளபள காரை அடித்து நொறுக்க கைகள் பரபரத்தன. ஜாதிகாத்தானின் ஆணைக்காக காத்திருந்தான் அவன்.

காருக்குள் இருந்து இறங்கிய மாப்பிள்ளை டேவிட் ரொசாரியோவின் தந்தை, ஜாதிகாத்தானின் சம்பந்தி…. கிறிஸ்டோபர்……..இரண்டு கைகளையும் விரித்தபடி ஜாதிகாத்தானைச் சென்று கட்டிப்பிடித்தார்.

கிறிஸ்டோபர் உரிமையோடு “அடேய் ஜாதிகாத்தான்” எனக் குறிப்பிட்டது அனைவரையும் அமைதியில் ஆழ்த்தியது.

“அடேய் நான்தாண்டா உன் கிறிஸ்டோபர், ஒண்ணாவது படிக்கையில் 2 பேரும் ஒரே வாட்டர்கேன்ல தண்ணி குடிச்சோமே…..நியாபகம் இல்ல“

இப்பொழுது ஜாதிகாத்தான் எல்லோருக்கும் தெரியும்படி 3 முறை சுழன்று கண்கள் சொருகி மயங்கி விழுந்தார். ஊருக்குள் ஒப்பாரி வைப்பதில் நம்பர் ஒன் கிழவியான பொன்னுத்தாயி தனக்கு வேலை வந்து விட்டது என உணர்ந்தபடி சேலைத்தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகியபடி, மைக் இல்லாமலேயே மொத்த ஊருக்கும் கேட்கும்படி ஒப்பாரி வைத்தார். ஜாதிகாத்தான் மயக்கம் தான் போட்டிருக்கிறார், அவர் உயிரிழக்கவில்லை என்பதை பொன்னுத்தாயி கிழவிக்கு விளக்க ஒரு மணி நேரமும், பொன்னுத்தாயி கிழவியின் அசிஸ்டெண்ட் கிழவிகளுக்கு விளக்க முக்கால் மணி நேரமும் ஆனதால், ஜாதிகாத்தானை மருத்துவமனைக்கு காரில் தூக்கி செல்ல 2 மணி நேரம் ஆகிவிட்டது.

அந்த ஒருவன் மட்டும் தூரமாக சென்று கொண்டிருந்த பளபள காரை வெறித்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

இன்றைக்கு எப்படியும் அந்த காரை அப்பளம் நொறுக்குவது போல் அடித்து நொறுக்க வேண்டும் என்ற அவனது நெடுநாள் கனவு நனவாகாமலேயே போய்விட்டது.

“இனி அடுத்த கலவரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்” என அவன் அலுத்துக் கொண்டான்.

ஜாதிகாத்தான் பேரனின் வயது 5

(டிசம்பர் 25- சர்ச் வளாகம்)

ஓசன்னா பாடுவோம்….

ஏசுவின் நாமமே…

ஓ…. ஓசன்னா…. ஓ. ஓசன்னா…..

ஜாதிகாத்தான் ஏசுவின் நாமத்தில் கரைந்து கொண்டிருந்தார். 

- சூர்யா

Pin It