உனதறை
மின் விசிறி கவனி
என் றெக்கை

*
உன் பெயரில்
ஒரு முறையாவது
கையொப்பம் இட்டு விட வேண்டும்

*
உன் குட்டைப் பாவாடை ஏறி
ராட்டினம் சுற்றும்
கட்டெறும்பு நான்

*
நிழலைச் சுருட்டி
கொண்டையிடுகிறாய்
வெயிலாய் வந்து பூச்சூடுகிறேன்

*
வண்ணம் பூசி விசிறி வீசும்
உனது விடுமுறை நாட்கள்
நான்

*
மலை விட்டு இறங்கின
படிகள்
பாதங்கள் சாட்சி

*
நதிக்குள்ளிருந்து முளைத்த
கல் என்றே இருக்கட்டும்
சொல்வதற்கும் கேட்பதற்கும்
எத்தனை அழகாய் இருக்கிறது

*
கிட்டத்தில் நடக்கும் யுத்தங்களை
சமாளித்துக் கொள்கிறேன்
தூரத்தில் மிதக்கும் உன் முத்தங்களை
என்ன செய்வது

*
காலேறிக் கிடக்கும் புடவையை
கீழ் இழுத்துப் போகிறது
அழுக்கு கையொன்று

*
மரம் ஒரு கிலுகிலுப்பை
கலகலவென
குலுங்கும் இலைகள்

*
இருசக்கர வாகனத்தில்
நந்தவனம் நகர்கிறது
புது பூ மடியில்

- கவிஜி

Pin It