அரசமரத்தின் காற்றுத் தாக்கிய இலையாக
மனம் ஓய்வில்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு பறவையின் வருகைக்காக!
வந்து பழகிய உனது குரலும்
வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனமும்
ஏமாற்றத்தின் உச்சம் இன்று
வாழை மரத்தின் இலைகளைத் துழாவி
தூரத்து மின் கம்பிகள் பழக்கப்பட்டு விட்டன கண்களுக்கு
உன்னைத் தேடி!
நீ இட்டுச் சென்ற முட்டைகள்
என்னையும் அந்நியப்படுத்துகின்றன
குரல் கேட்க எத்தனிக்கும் முயற்சிகளும்
வந்தமர்ந்து சிறகு கோதும் உனதன்பும்
உனது தற்காப்பும் போராட்டமும் சற்று
வாழ்ந்து பார்க்கத் தூண்டுகிறது
எல்லா ஏமாற்றங்களுக்குப் பிறகும்!
- முனைவர் ம இராமச்சந்திரன்