என் மீது இந்த நாளில்
அவளின் ஒரு துளி இரக்கம்கூட கசியவில்லை
ஒரு சொல் ஒன்றைக்கூட எழுதவில்லை
மருகிய கண்களுள் அவளில்லாமல்
விழிக்கும் அவளுள் எரியும் காடாகிறேன்
வெறிச்சோடிய தெருக்களின் கானலில்
அவள் வெள்ளை ஒளியில் அலைவுறுகிறேன்
பாறைப் பிளவு இடுக்குகளில் கசியும்
அருவியின் கீழ்
நீரே அவளாய் விழ
உடலே விரல்களாய் பிடித்து
நழுவவிடுகிறேன்
மின்னல் தாக்கும் ஒளிக் கண்களால்
ஊடுருவும் அவளின் ஆற்றலில்
சிக்குண்டு சாம்பல் மேடாகிறேன்
இதயம் சோர்ந்து மெலிய
நினைவுகள் அரவங்களாய் தீண்ட
நகர வழியற்று மரத்து சரிகிறேன்
அதோ என் கண் மீது ஊர்ந்து அவள்
இமைமூடி வளைவில் புகுந்து
குருதியாய் விரைகிறாள்
திடீரென சிறுமியாய்
பச்சைகிளியின் குரலை
என் வெளியெங்கும் வரைகிறாள்
எங்கிருந்தாள் இவ்வளவு நாளாக
இவ்வளவு தாமதமாக
என் திசை உதிக்கும் ஞாயிறென
மஞ்சள் பூத்து வந்திருக்கிறாள்
அவளும் காலமும் நெய்கிற
விநோத வலையில்
என் உயிர் சிக்கிவிட்டது
உணர்வுகளில் மந்திரத்தவனின் பச்சைஇலை
வாசனையின் கிறக்கம்
கண் தீண்டா கன்னியின் கலவியில்
உயிர்த்தெழும் பள்ளியறையின்
என் தனிமையில்
அவளைக் கற்பனைத்திருக்கிறேன்
அவள் வார்த்தைகளில்
என் மீதான ஞாபகத்தை
அவள் பூட்டியிருப்பதில்
திறந்து சுரக்கும்
என் காதல் முலைகள்
கற்களாகிக்கொண்டிருக்கின்றன.

(சிந்துவிற்கு)

- அய்யப்ப மாதவன்