வீரத்துடன் விழுந்து கிடந்தவனை
எழுப்பி சாராயத்துடன் படையலிட்டுப்
பார்த்துக் கொள் என்றாக்கால்
அவன் நெய்வாசத்துக்கு ஏங்கிப்
பிணங்களைப் படையலிடக்
கேட்கும் சன்னிதியில்
பரிவாரமாய் நின்று கொண்டு
யானை தரவும்
ஆனை போலவும்
வரும் போகும் மாமிகளைக் கண்டு
நாணி கோணிக் கொண்டிருக்கிறான்
கைநாட்டுப் பேர்வழியான
என் ஏமாளிக் கடவுள்
ஓர் அங்கவஸ்திரம் போல
சாமானைத் தூக்கித் தோளில்
போட்டுக் கொண்டு
ஊர் மேய்ந்து விட்டு வந்து,
இவ்வர்ணாசிரமக் கோட்டையை
வேட்டை நாய் போல
காத்துக் கிடப்பதோடு
பொச்சிக்காப்பு கொண்ட
சாதிமானுக்கு அள்ளக்கையாகவும்,
அன்னார் தம்மில்லத்தில்
தாது புஷ்டி லேகியமாகியும்
குலமகளிர் பொற்புக்குப் பூட்டருளியும்
அருள் பாலிப்பான்
எச்சிக்கலையும் எரப்பாளியுமான
உன் கடவுள்