சிகரெட் நெடி படர்ந்த உதட்டை
என்ன செய்வதென தெரியவில்லை
சுரேஷ் என்பது 80 களின் கரையில்
ஆணி புடுங்கத் தெரியாமல்
அமர்ந்திருக்கிறது
தனக்கு தானே அம்மொழி
வார்த்துக்கு கொண்ட போது
தொங்கு பாலமாயிருப்பினும்
கடந்து விட ஏதுவாகியிருக்கிறது
முதுபகல்
மேல் பட்டன் கழற்றி விட்ட
எப்போதும் போலான உடலை
திறந்து விட்டால்
இன்னும் கொஞ்சம் பளபளப்பாக்கி விடலாம்
அக்கருத்தை பின் மாலை நிழல் வெயில்
ஆமோதித்தது
வேண்டா வெறுப்பாக எம் ஜி ஆர் போல
ஒரு முறை உதடு கடித்துக் கொள்வதால்
அந்த நேர ஆசுவாசம் கடலோடு ஆடலாம்
இளநீர் உறிஞ்சியபடி ஸ்டைலாக
காலை பின்னி நிற்பது
யாருக்காவது பெண் போதை ஏற்றலாம்
போர் அடிக்கையில் சூடேற்றும் சூட்சுமம் அது
அந்நிய தத்துவத்தை இடுப்பொடிய
பெரும் பட்டையில்
ஜாக்கி தூக்கி வளைந்திருப்பது
வல்லின ஆண்மை எனப்படுகிறது
யாரோ அழைக்க யாரையோ
அழைத்துக் கொண்டு அலையும்
அந்தி சாயும் வேளையில்
அந்த கடற்கரை
சற்று நேரத்தில் கடை மூடப்படும்
களைந்தாடும் தலை முடியை
பட்டும் படாமல்
விரல் கோதி பார்க்கும் ஒத்திகைக்கு
ஒருபோதும் முடிவில்லை
அலையிலிருந்து எழும்பும்
இரவு காற்றுக்கு இடுப்பு மீறும் ஆசை
அன்றைய கடைசி கடற்கரைவாசி
வேறு வழியேயின்றி திரும்பி பார்த்து
ஒரு மொழி பெயர்ப்பு கவிதைக்கு தலைப்பிட்டு
நகரக்கூடும்
- கவிஜி