நான் கவிதை எழுதும் காலத்தில் 

பூக்கள் நெருக்கமாக இருந்தன. 

இரவு கரிசனமாக இருந்தது. 

நட்சத்திரங்கள் முன்னறிவிப்பின்றி 

வீட்டிற்குள் நுழைந்திருந்தன. 

போராளியிடம் நட்பிருந்தது. 

அதிகார மையங்களின் மீது 

விமர்சனத்தை துப்பும் ஆற்றலிருந்தது. 

நான் கவிதை எழுதும் காலத்தில் 

கடவுள் என்னைக் கைவிட்டு 

வெகுதூரம் சென்றுவிட்டிருந்தார். 

என் ஞாயிற்றுக்கிழமைகள் 

திருடப்பட்டிருந்தன. 

கொசுக்கள் பிரியமாக இருந்தன. 

தார்ச்சாலைகள் உறங்கும் 

குறட்டைச்சத்தம் கேட்க முடிந்தது. 

தண்டவாளத்தின் இரயில் வண்டியின் 

கதை புரிந்து கொள்ள முடிந்தது. 

நான் கவிதை எழுதும் காலத்தில் 

பெண்களின் அவஸ்தைகளை 

புரியத் தொடங்கினேன். 

வலிக்காமல் பற்களிடையே 

குட்டிகளைத் தூக்கும் லாவகத்தை 

ஒரு பூனை கற்றுக் கொடுத்தது. 

ஒரு சாத்தானை சந்திக்கும் 

துணிச்சலிருந்தது. 

நான் கவிதை எழுதும் காலத்தில் 

விதைகளை 

சேகரிக்கத் தொடங்கினேன் 

வயல்களில் ஓய்வெடுக்கும் கலப்பைகளிடம் 

உரையாடத் துவங்கினேன். 

பூண் மாட்டிய மாடுகளின் 

வலிகளை வார்த்தையாக்கினேன். 

நிலங்களின் தாகம் தெரிந்தது. 

நிலங்களுக்கு உணவுக்குழாய் இருந்தது. 

நிலங்களுக்கு வயிறு இருந்தது. 

நான் கவிதை எழுதும் காலத்தில் 

பிணங்களோடு பேசும் 

பழக்கமிருந்தது. 

அடிப்படை வாதத்தை அறுக்கும் 

கத்தியோடு ஸ்நேனகமிருந்தது. 

ஹிட்லருக்கெதிராக சுவரொட்டி எழுதிய 

வாசகங்களை படிக்கும் பழக்கமிருந்தது. 

கவிதை எழுதும் காலத்தில் 

என் அறை 

ஒரு சிறையாக இருந்ததில்லை. 

எனது அரிவாள்கள் 

எந்த மனிதனையும் 

காயப்படுத்தியதில்லை. 

எந்தப்பெண்ணையும் 

காமத்திற்குள் கொண்டுவரவில்லை 

கவிதை எழுதும் காலத்தில் 

சொற்கள் நண்பனாக இருந்தது. 

ஏனெனில் 

கவிதை எழுதும் காலத்தில் 

நான் கவிஞனாக 

எப்போதும் இருந்ததில்லை. 

Pin It