தூறலில் துள்ளி வரும் மழை

தனது தீர்த்தமணிகளால்

தாழ்வாரத்தின் மீது தொடங்குகிறது

தன் இசைமீட்டலை....

அந்த இசைக் குறிப்புகளுடன்

எழுதுகிறேன்

மழை குறித்த எனது பாடல்களை....

வீடே மழையால்

நிரம்பப் பார்க்கிறது

நான் கவிதைகளால்

எனது குறிப்பேட்டை

நிரப்பப் பார்க்கிறேன்...

மழையின் சாயை படர்ந்த கவிதை

கவிதையின் சாயை படிந்த மழை

எது

பேரழகாக்குகிறது இந்த நிமிஷத்தை...

 

தான்

இத்தனை நாளாக

மண் தொடாததற்கு

சமாதானம் சொல்லும் வண்ணம்,

அவள் பாதங்கள் பதிந்த

ஈரச் சுவடுகளைக்

கலைத்து, கலைத்து

விளையாடிக் கொண்டே வரும்

இம்மழைச் செல்வத்தை,

வீட்டிற்குள்

அழைத்துச் செல்ல இயலாமல்

மறுகி நிற்கிறாள்

அந்நகரத்துச் சிறுமி

முற்றம் கூட இல்லாத

தனது அடுக்ககக் குடியிருப்பை

நினைத்து....

 

இக்குளிரிலும், ஈரத்திலும்

தன்னை ஸ்பரிசிக்கும்

மழை பற்றிய பிரக்ஞையற்று

நனைந்தவாறே திரிகிறான் அவன்...

துயர் கொண்ட

தனிமைப் பாலைவனத்தில்

அலைவுறும்

அப் பைத்தியத்தின் மனவானில்

தற்போது உலவுவது

நிலவோ, சூரியனோ....

அவனுலகில்

என்றைக்குப் பெய்யும்

அவனுக்கெனவே கனியும்

ஓர் அற்புத மழை....

 

சேட்டைக் குழந்தையின்

கண்ணில் படாமல்

பாதுகாப்பது போலத்தான்

எடுத்து வருகிறேன்

சாட் அட்டைகளை...

இப்படிப் பொதித்துப் பொதித்து

நான் எடுத்துப்போவது

என்னவாக இருக்குமென்று

குடை மறைப்பையும்

தாண்டிப் பார்க்க

எத்தனிக்கிறது மழை....

பேருந்து ஏறியும் விடவில்லை

அதன் சேட்டை.

காற்றைத் துணைக்கழைத்து வந்து

சாரலாய் விசிறி

எட்டிப் பார்த்தே விட்டது....

பத்திரமாய் கொண்டு வரத்

தெரியாதாவெனப் பாய்கிறார்கள்

வகுப்பறையில்....

துவண்ட அட்டைகளில்

நனைந்த ஓவியங்கள்....

உங்களை முந்திக்கொண்டு

மழை தந்த மதிப்பெண்

இதுவென்று

எப்படிச் சொல்வேன் அவர்களிடம்...

 

மரங்களற்ற சாலைகளைத் தொடுகிற

தண்டனை பெற்றதற்காக

தூறல் விம்மலில் தொடங்கி,

சடசடவென பேரழுகையாய் நீண்டு

தூவான விசும்பலோடு

திரும்பிச் செல்லும் மழையென்று

முன்னறிவிப்பதாய்

இந்த மழைத் தும்பியின் பாடலை

மொழி பெயர்க்கட்டுமா நான்....

 

திடுமென

பரபரப்பும், அவசரமும் பற்ற

ஓட்டமும், நடையுமாய்

ஓடி வந்து

பதுங்குகிறார்கள் எல்லாரும்...

வேறொன்றுமில்லை, அவர்களின் மேல்

விழுந்து கொண்டிருப்பது

மேகங்களின்

சின்ன நீர்த்துளி குண்டுகள்....

 

வகுப்பறை சன்னல் வழியே

தளிர்க்கரங்களை நீட்டி

ஒரு பந்தென

மழையைத் தட்டித்தட்டி விளையாடும்

தன் சின்னஞ்சிறு மாணவிகளுடன்

எதிர்பாரா விதமாக

ஆசிரியையும்

அவ்விளையாட்டில் இணைகிறார்....

இந்த மழை

எவரையும்

வயதை மறந்த குழந்தைகளாக்கி,

தன்வசப்படுத்தி விடுகிறதென

விண்ணதிர பெருமூச்சை எழுப்புகின்றன

இடியும், மின்னலும்....

 

இம்மாமழைப் பொழுதில்....

தோட்டத்துச் சிறு செடிகள்

மண்ணில் சாய்ந்து விடாமல்

பாதுகாக்கும் வேலைகளைத் துவக்கியிருக்கலாம்

அருளாளர்கள் எவரேனும்...

காகிதக் கப்பல்கள் செய்து

களித்த மழை நாளின்,

மிக அழகான நினைவுகளில்

ஒன்றைப் பரிசளிக்க

பால்ய நண்பர்கள் யாராவது

தொலைபேசக் கூடும்...

மழை நாளொன்றில்

காதலைப் பகிர்ந்த இதயங்கள்

உடைப்போ அல்லது உயிர்ப்போ

ஏதேனுமோர் வரலாறை

தனக்குள் எழுதிக் கொண்டிருக்கும்....

வெளியே சென்றவர்கள்

கிருஷ்ணனாக அவதாரமெடுத்து

கோவர்த்தன கிரி விரித்தபடி

வீடு திரும்புவார்கள்...

வறுத்த பொரியோ, வெங்காய பக்கோடாவோ

மழைக்கேற்ற சிறுதீனி தயாரிக்கும்

எங்கேனும் ஓர் அடுக்களை....

மரம் உதிர்க்கும் ஈரக்கவிதைகளைச்

செல்லநாய்க்குட்டியுடன்

சன்னல் வழியே

வாசித்தபடியிருக்கும்

கொடுத்துவைத்த விழிகள் சில...

 

மழை நிரப்பிய

நதியின் நகர்வுகளை

வேடிக்கை காணும் சுகத்திற்காய்

காத்திருக்கும்

குழந்தைமை விலகா மனசுகள் பல...

சில்லிடும் சாத்தியங்களோடு

குளுமை கூடிவிட்ட

இப்பெருமழையில்

மழைப்பலியும், அழிவும்

எத்தனை நிகழ்ந்ததோ என

நடுநடுங்கி விறைக்கும்

கவிஞனொருவனின் கவிதை....