ஏமாந்து கொள்வதில் ஒரு சுகம் உண்டு
அது சோம்பேறியாகும் கலை
அது ஆன்ம திருப்தி என்றொரு வளையத்தை
ஒவ்வொரு அணுவிலும் மாட்டி இருக்கிறது

வண்ணத்துப் பூச்சிக்கு வண்ணம் கூட சுமை தான்
பசித்திருக்கையில் உற்றுப் பாருங்கள்

எனது உலகை என்னால் கவிதைக்குள் சுற்றி விட முடியும்
எனது கவிதையைத் தான் என்னால்
ஒரு உலகுக்குள் சுழல விட முடியவில்லை

இருட்டுக்குள் இசைக்கும் குறைவாக
அமர்ந்திருக்கிறேன்
மோதி விட்டு மன்னிப்பு கேட்பதை விட
மன்னிப்பு கேட்டு விட்டு மோதாமல் சென்று விடுங்கள்

மிகச்சிறு மீந்த உடலை என்ன செய்வதென தோன்றவில்லை
மிச்சமென தினம் ஒரு தேடல் தினம் ஒரு கூடல்
திகட்ட திகட்ட தின்ற பிறகும்
தீரா பசிக்கு தேகம் என்று பொருள்

தொடர்பற்று நிகழ்த்தி பார்க்கும் வல்லமையை
தாராயோ தருவேனோ
தகிப்பின் ஜொலிப்பை சலசலக்கும்
ஓடையின் தூரங்களில் கால் அசைத்து
கவனிக்கிறேன்

அருகே
எல்லாம் மறந்த தனித்த பாறை ஒன்று
உருவத்துக்கு காத்திருக்கிறது

-கவிஜி