1
ஆறுதல் பாறையும் தென்படாத
அத்துவானக் கடலில்
சிறு படகு மிதந்துகொண்டிருக்கிறது
காற்றின் துடுப்புகள் பற்றி
நெடுந்தொலைவை
நெடுங்காலமாக கடந்தும்
திசைகள் அழிந்த
எல்லையற்ற பெருவெளியாய்
விரிந்து கொண்டேயிருந்தது கடல்.

2
சிலந்தி வலைகள் துடைக்கப்பட்ட
ஒட்டடை அடித்தலில் தப்பி
வெதும்பித் தவிக்கிறது
தற்கொலை அறியா
வலையான்


நனைதல்

திடீரென மழைப் பிடித்தது
கடைத் திண்ணையில் ஒதுங்கி
மழை விட்டதும் நடந்தேன்
மறுபடி மழை வர
மரத்தடி கிடைத்தது
விடாதுபெய்த அடைமழை அழைக்க
கைகோர்த்து நடந்தேன் மழையாடு
வீடுவரை கொண்டு விட்டும் ஓயாது பொழிந்தது
இப்போது தோன்றுகிறது
ஒதுங்குவதை விட நனைதலே நன்று.

- ஜி.எஸ்.தயாளன்

Pin It