பெரியாரா இவர்தாமா எனக்கேட்போர்க்குப்
பெரியாரே இவர்தாமே என்றுரைப்பீர்
நரியாரே எலியாரே எவரென்போர்க்கு
நறுக்கென்று பார்ப்பனர்கள் என்றுரைப்பீர்!
பெரியாரே எவ்வாறு பெரியார் என்றால்
பிராமணரின் தருப்பைப்புல் நம்மைமேய
விரித்தமாயம் வெங்காயம் என்றுகாட்டி
விழிப்பறிவை விதைத்தமையால் பெரியார் என்பீர்!
வறுமைக்கும் வளமைக்கும் முற்பிறப்பின்
வழிவந்த விதிப்பலனே எனப்பூணூலான்
சிறுமைக்குப் பொன்முலாமே பூசி ஏய்த்தான்
சிற்றெறும்பாய் உனைக்காலால் மிதித்து மாய்த்தான்!
குறுமைக்கும் கொடுமைக்கும் வேர்வை உப்பின்
குறியீடும் (உழைப்பு) மதிமுதலீடும் இல்லா
வெறுமைகளே காரணமாம் என்றே உன்றன்
விடியலுக்குப் புதுப்பாடம் பெரியார் சொன்னார்!
ஆரியம்தான் பெரியாரின் ‘அடியால்’ வீழ
‘அழுத்தி வைத்த அடிவேர்கள்’ தலைதூக்கிற்றே!
வீரியமாய் பகுத்தறிவு பாய்ந்ததாலே
விலக்கிய வீதிகளில் மானுடத்தின் கால்கள்!
மாரியொத்துப் பார்நலமே பெரியார் ஊட்ட
மறையெல்லாம் (வேதங்கள்) வினாக்குறியால் வாயடைக்கும்!
காரியத்தால் (உழைப்பால்) குமுகத்தின் ஏற்றம் காட்டும்
கீழ்சாதி மேலெழுந்து வானம் ஏறும்!
‘வெள்ளருவி’ முகத்திருந்து மார்பில் வீழும்
விழியிரண்டில் அரிமாவின் நோக்குப் பாயும்
சொல்லறிவின் பேரருவி வாய்ப் பிறக்கும்
தூயதான செம்மேனி ‘கருப்பு’டுத்தும்!
கொள்ளுங் கைத்தடி ‘மனுவின்’ தலைநொறுக்கும்
கோடிவகை எதிர்ப்புகளைக் கைகள் தடுக்கும்
கள்ளருவி போல் ‘மதக் கள்’ ஊற்றி ஏய்க்கும்
கயவரையே பெரியாரின் வாழ்வு தீய்க்கும்!
குமுகத்தின் அழுக்கெல்லாம் சேர்ந்தே இங்குக்
கொடுநாற்ற அரசியல் சாக்கடைகள் ஓடும்!
குமுகத்தின் அழுக்கெல்லாம் நீக்கினால்தான்
குறித்தமாற்றம் மலருமென அரசியல்தன்
கமுக்கத்தை ஒதுக்கி முழுநேர மக்கள்
குமுகத்தைச் சீர்திருத்தும் சிற்பி ஆனார்!
அமுக்கும் பல்துன்பம் ஏற்றுக்கொண்டும்
அஞ்சாத சிங்கமாகப் பெரியார் வென்றார்!
- பேராசிரியர் இரா.சோதிவாணன்