தெருவெல்லாம் ஊரடங்கின் அமைதி நோன்பு

தீ நச்சு நுண்மியாலே உயிர் போம் என்றே

உருவெல்லாம் வெளியிடாது வீட்டினுள்ளே

ஒடுங்கியுள்ளோம் அச்சத்தின் உச்சத்தாலே!

பெருவெள்ளம் போல்தொற்றுப் புவியில் பாய்ந்து

பிணக்குவியல் கணக்கடுக்கி நடுக்கும்; மாறாய்

ஒருவெள்ளப் பாப்பெருக்கு (தமிழேந்தி) உயிரிழக்க

ஓராண்டாய் எம் நடுக்கம் சாகவில்லை.

பார்ப்பனியப் புதர்களின்று தோப்பாய் ஆடும்.

பேரிடியாய்க் கருவறுக்க நீயின்றில்லை.

ஆர்ப்பரிக்கும் வடமொழிகள் திமிரால் துள்ளும்.

அவைபொசுக்க யாப்புத்தீ நீதான் இல்லை.

ஊர்ப்புறத்தில் கோவில்கள் அடைத்த காட்சி

உயர்பெரியார் பகுத்தறிவின் வெற்றி காண

வேர்ப் பலாவின் பா படைத்த நீயின்றில்லை.

வேகுதடா நீ இல்லை எனும் நினைப்பே!

இடிமின்னல் மழைவெள்ளம் சூறைக்காற்று

எவ்விடரும் எம்நெஞ்சை இடறவில்லை.

‘விடிவெள்ளி’ நீ மறைந்தாய் என நினைக்க

வெறுமைகளின் மிடைஇருட்டில் மனம்வெதும்பும்

மடிகொஞ்சும் மழலை நீ செந்தழலாய் ஓங்கி

மாநிலத்தைப் பாத்திறத்தால் ஆட்சி செய்து

கொடிவிஞ்சிப் பறக்கையிலே உயிர்வேர் காய்ந்தாய்

கொடும் வடுவை எம்நெஞ்சில் அடிவேர் நட்டாய்.

சிந்தனையாளன் இறுதிப்பக்கம் உன்றன்

சித்திரக்கைவண்ணம் காணாக் கண்ணீர்த்தாள்!

முன்தானைப் பகுத்தறிவுப் படையின் முன்னோன்

முத்திரையைக் களவிட்டான் காலக் கள்வன்

செந்தழலின் தமிழேந்திப் புலவன் சீற்றம்

செந்தமிழர் நெஞ்சிலென்றும் புரட்சி தீட்டும்

வண்டமிழின் இன்னிளமைக் கூடல்நீயே

வெஞ்சாவின் கடல்வாயில் மூழ்கினாயே!

கடல்வீச்சின் அலை ஊஞ்சல் அழகில் ஆர்த்தாய்

கலைவீச்சின் எழுத்தலையால் புயலைச் சேர்த்தாய்

கெடல்வீச்சின் பாழ்ங்கொடுமைக் குமுகங்கண்டு

கணைவீச்சின் பாவிடுத்துப் போர்த்தொடுத்தாய்

மடமைவீச்சின் சலசலப்பை நார் உரித்தாய்

மழைவீச்சின் புதுவெள்ளச் செருக்கு நீயே!

உடல்வீச்சின் உயிர்மூச்சின் இறுதி கொண்டாய்

உயர்மூச்சின் புகழ்வீச்சில் காலம் வாழ்வாய்!

பேராசிரியர் இரா. சோதிவாணன்

Pin It