கண்டிப்பாக அவருக்கு மூத்திருக்க வேண்டும்
இளையோன் என்றால்
இன்குலாப் ஜிந்தாபாத் சொல்ல வேண்டும்
அவரை போற்றுதல்
அவரும் போற்றுதலுக்கு வழி வகுக்கும்
ஜைஞ்சக்கா தட்ட தெரியாவிடினும்
கெக்கபிக்கவென
உடன் சேர்ந்து சிரித்து பழுகுதல் நலம்
எல்லாவதற்கும் மாற்று மார்க்சியம் என்பார்
மாற்றி யோசிக்கும் மகனை வெளுத்தெடுப்பார்
கண்முன்னால் வளர்வோரை கண்டு கொள்ளாதது
தற்காப்பு அவருக்கு
காதல் மற்றும் காமம் சார்ந்த
விவாதத்திற்கு முண்டியடித்து வந்து
கண்கள் சிரிப்பார்
வண்ணநிலவனோடு இந்த கவிதை உலகம்
நின்று விட்டதாக ஆழமாக நம்புவார்
வறுமை கோட்டை அழிப்பதை செல்பி எடுத்து
குழந்தை சிரிப்பில் போட்டுக் கொள்வார்
போட்டுக்கொடுப்பதில் அசுரத்தனம்
அதையே சாணக்கியம் என்று முழங்குவார்
குறுக்கு கேள்விகளுக்கு
தன் பெயரை பழக்கி விட்டிருப்பார்
இன்னமும் 80 களின் மொக்கைதான்
பெரும்பாலும் கேள்விகள்
எல்லாவற்றை விட அவரைப் பற்றி சொல்ல
இன்னொன்று இருக்கிறது
சிவப்பு வட்டம் போட்டு சேகுவேராவுக்கு அருகே
அமர்ந்து கொள்ளும் அவருக்கு
பாவம்
முடியுமில்லை முடியவுமில்லை

- யுத்தன்

Pin It