இடப் புள்ளியிலிருந்து வந்து
கண் இமைக்க இமைக்க
வலப் புள்ளிக்குள் நுழையும்
ரயில் ஜன்னலில் எவனாவது
ஒரு காதலன் உனக்கான
சாயல் கொண்டவனாக
இருக்கலாம்
வேகமாய் நகரும் காட்சியில்
கண் வலித்து விரியும்
கற்பனையில் நீ மீண்டும்
அரசியாய் குதிரையேறி
ரயிலேறலாம்
ஆனாலும் நீயாய் நடந்து வந்து
கொண்டிருக்கிறாய்
முகத்தில் வேர்த்திருக்கிறது அழகு
நீ தவற விட்ட பேருந்து
கன்னத்தில் கை வைத்து
காத்திருக்கிறது உனக்கும் ரயிலுக்கும்
யாருக்கு தெரியும் சற்று
தொலைவில் தண்டவாளத்தில்
தற்கொலைக்கு காத்திருந்தவனை
காப்பற்றியிருக்கவும் கூடும்
உன் தாமத தரிசனம்....!

- கவிஜி

Pin It