யாரோ யாரையோ
சொல்லும் அம்மு
அவ்வளவாகப் பிடிப்பதில்லை

நித்யாகுட்டிகள் அதிசயம்
செய்கிறார்கள்
அனிதா பாப்பாக்கள்
பூனைகளாகிறார்கள் என்பதில்
அபத்தம் தான் காண்கிறேன்

பொமரேனியன் நாய்க்கு
புஜ்ஜி என பெயரிட்டு
மூஞ்சி நக்குவதெல்லாம்
ஒவ்வாது எனக்கு

பூக்களோடு பேசிக் கொண்டு
கூந்தல் விரிய புகைப்படம் போட்டு
106 லைக்ஸ் வாங்கும் யாரையும்
நான் வெறுக்கிறேன்

மரங்களோடு தியானித்துக் கொண்டு
தனித்திருத்தலே தவ வாழ்வு
என்போருக்கு
என் கடைக்கண் பார்வை கூட
கிடையாது

மாயாக்களுக்கு ஜால்ரா அடித்து
ஒரே சாயலோடு எவர்
எழுதுவதையும்
ஒதுக்குவது தான் சரி எனக்கு

நெடுஞ்சாலையில் பசித்து நிற்கும்
கிழவிக்கோ கிழவனுக்கோ
ஐம்பது ரூபாய் மட்டுமே தர முடிந்த
நான் இப்போதெல்லாம்
இப்படித்தான் இருக்கிறேன்...!

- கவிஜி

Pin It