இந்த இரவை எப்படி கடந்து செல்வேன்
இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை நான்
விவாகரத்து கோரி
நீ தாக்கல் செய்த மனுவின்
இறுதி விசாரணை
நாளையெனத் தெரிந்தும்
நம்பிக்கை இழக்கவில்லை நான்...

ஊரறிய விலைபேசித்தான்
மணம் முடித்தாய் எனை...
பெற்றவைகள் போதாதென
இலட்சங்களை கேட்டு வெளியில் தள்ளினாய்....
மிச்சமின்றி துடைத்தபிறகு
வீதிக்கு விரட்டியடித்துவிட்டாய்...

மனம் பதறுகிறது
இரகசியமாய் நான்கு சுவற்றுக்குள்
கட்டியெழுப்பிய நம் இல்லற பந்தத்தத்தை
உடைத்தெறிந்து யாரோவென
எதிரும் புதிருமாய்
குடும்ப நல நீதிமன்றத்தில்...

நீதிமன்றத்தில் கேட்கும்
கேள்விகளுக்குப் பதிலுரைக்காமல்
கேட்டுவிட்டார்களே என்பதற்காய் பொய்யுரைக்காமல்
உண்மையைச் சொல்லிவிட்டுப்போ
இளைப்பாறிக் கொள்ளட்டும் என் மனம்...

விவாகரத்து கொடுப்பேனோவென்கிற பயத்தில் மறந்தும்
தகாத உறவு வைத்திருக்கிறாளென
என் பெண்மைக்கு
களங்கம் கற்பித்துவிடாதே
தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதியற்றவளென
என் தாய்மையைக்
கொச்சைப்படுத்திவிடாதே

உறங்க மறுக்கிறது விழிகள்
எப்படி கடந்து செல்வேன்
உன்னால் இழந்த வாழ்க்கையையும்
உன்னால் தொலையப்போகும் எதிர்காலத்தையும்

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It