பெண்ணெழுத்து -13

வெண்ணிற உப்பாகியது
அவள்உடல்
மண்ணில் வேராகப் புதைந்தன
அவள் கால்கள்
- அக்மதோவா

மாலதிமைத்ரி சங்கராபரணி, (2001) நீரின்றி அமையாது உலகு (2003) நீலி (2005) எனும் மூன்று கவிதைத் தொகுப்புகளையும், விடுதலையை எழுதுதல் எனும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார். பறத்தல் அதன் சுதந்திரம் நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவர். அமீபா என்ற சிற்றிதழை நடத்தியவர். அணங்கு என்கிற இதழின் தொகுப்பாசிரியர். அணுசக்தி எதிர்ப்பியக்கம், மக்கள் கல்வி இயக்கம் போன்ற வற்றில் பங்களிப்பை நிகழ்த்தியவர். தொடர்ந்து இலக்கிய, சமூகத்தளங்களில் இயங்கி வருபவர்.

பெண்கவிஞர்களில் மாலதிமைத்ரி தனித் தன்மை வாய்ந்தவர். மாலதி மைத்ரியின் கவிதை களில் பெண் உடல் எல்லையற்றதாகி மிதக்கிறது. இயற்கையின் கூறாக விளங்குகிறது. பெண் உடல் மீது சமூகம் கட்டமைத்த நிர்பந்தங்களை உடைத்துப் பார்ப்பது. பெண்மையின் பெண்ணின் ஆகச் சிறந்த உணர்வான தாய்மையைக் கொண் டாடுவது. உடல் உடைமையாகவும் வணிகமாக வும் முன்வைக்கப்படுவதை எதிர்ப்பது.

முதல் தொகுப்பான சங்கராபரணியின் முன்னுரையில் தாய்சேய் உறவு என்பது இயற்கை யானது. “மனிதர்கள் உருவாக்கியுள்ள சமூகக் கலாச்சார நிறுவனங்களால்தான் தாயிடமிருந்து குழந்தை அபகரிக்கப்படுகிறது. பெண்விடுதலைச் செயல்பாடுகளில் ஒன்றாக தன் குழந்தையை தனக்கேயானதாக உரிமைகோர வேண்டும் என்று பெண்ணுக்கான பலமான இனப்பெருக்கத் தொடர்ச்சியைக் கையகப்படுத்த வேண்டும் என்றும் இது அரசியல் செயல்பாடு மட்டுமல்ல ; கலாச்சார செயல்பாடாகும்” என எழுதியதால் கூர்ந்து கவனிக்கப்பட்டவர்.

இவரது கவிதைகளில் படிமங்களும் உருவ கங்களும் எல்லைகள் தாண்டி விரிந்த பரந்த உலகை கண்முன் கொண்டுவந்து நிறுத்துபவை. விண்மீன்கள் ஒளிர்வதையும் மீன்கள் நீந்துவதையும் பேசுமிவர் மொத்தத்தில் இயற்கையின் கூறுகளை ஆற்றலை பெண்ணாகவே கருதுபவை. பெண்ணை இயற்கையின் மாபெரும் சக்தியாக வரிப்பவை. இவரது தொகுப்புகளில் முதலிரண்டு தொகுப்பு களில் சங்கராபரணி என்ற ஆற்றின் பெயரும் நீரின்றி அமையாது உலகு என பெண்ணை நீராகப் பார்க்கும் தலைப்பையும் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கையோடு நெருங்கிய தொடர்புடைய பெண்ணுடல் குழைவுத் தன்மை உடையது இயற்கையின் சூட்சுமங்களைக் கொண்டது. கருவறையின் ஆற்றல், இயக்கம் இனப்பெருக்கத் தொடர்ச்சியின் காரணமாக இவரது கவிதைகளில் நிலமாக நீராக இயற்கையின் பேருருவாக எழுவது. பெண்ணின் உடலே நுரைத்துப் பொங்கிப் பாய்ந்து நிரம்பி பேய் மழையாட்டம் போடுகிறது.
இவர் பார்த்து வளர்ந்த சங்கராபரணி ஆறு பெண்களின் கண்ணீர் ஆறாய் ஓடுவதாக சிறு கூழாங் கல்லாய் பெண் நழுவுவதாகப் பாடுகிறார். காலை எழுந்தது முதல் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஆற்றை விவரிக்கிறது. அதே ஆற்றின் ஏற்ற இறக்கங்களோடு மனமும் உடலுமாய் அமைகிறது.

மறைமுக அரங்கம் என்கிற கவிதை வித்தியாசமானது. ஒரு நாடக அரங்கின் காட்சி ஒத்திகைக்கான அனைத்து ஆயத்தங்களையும் கொண்டிருக்கிறது. உடலளவிலோ மனதளவிலோ வன்முறையைச் சந்திக்கும் பொழுது இரு காட்சி களை முன்வைக்கிறார். முதல்காட்சியில் ஆண் குறியைத் தாக்கச் சொல்கிறார். இரண்டாவது காட்சியில் காலடியில் மல்லாந்து துடிக்கிறான். திரை விழுவதைக் காட்டுகிறார். வெளிப்படை யாகவே அமைந்துள்ள இக்கவிதை இயலாமை யைக் களைந்து கோபங்களால் கட்டமைகிறது. பெண்ணின் ஆற்றல் அடக்கப்படுவதற்கு காரண மான அடக்கியாளும் ஆணாதிக்கத்தைக் கண்டிக்க முயலுபவர் மீட்டுக்கொள்ள வன்முறையைக்கூட செலுத்தலாம் என்கிறார். பெண் தன்னை மீட்டுக் கொள்ள, தற்காத்துக் கொள்ள கலாச்சார அரசியல் நசுக்குதல்களில் இருந்து மீண்டெழ முன்வைக்கப் படும் கருத்துகளுக்கு இடமில்லா நிலையில் உடலுக்குள் ஒரு காடு, ஆறாகி நின்றபொழுது தன்னை அவிழ்த்துக் கொள்ளும் உடல், அருட்பெருஞ்ஜோதி, கடவுளைச் செய்பவள் எனும் கவிதைத் தலைப்புகள் பல்வேறு அர்த்த லயங்களுக்கு இட்டுச் செல்பவை.

உடலளவிலோ மனஅளவிலோ வன்முறை யை சந்திக்கும் பொழுது பொறுத்துக் கொண்டிருக் காமல் பதிலுக்கு தாக்குதலை மேற்கொள்ளச் சொல்கிறார். பெண் அடங்குவதும் அடங்கிக் கிடப்பதும் போதும் என்கிற மன எழுச்சியே இக்கவிதையாகிறது.

இவரது கவிதைகள் பெண்உடலை அள்ளி வீசுகிறது. கைகள் காடுகளாகவும் நா சிறுபறவை யெனவும் உருமாறுகிறது. உலகம் வாழ்வா தாரங்களை மறுத்து உடல்களை மிகப்பெரிய கேள்விக்கு உட்படுத்துகிறது. மனித உடல் இயற்கையோடு இயைந்தது. இதிலிருந்து விலக்கி உடலை கண்ணுக்குத் தெரியாத தளைகள் கட்டுப் படுத்துவதில் இருந்து தப்பமுடியாத நிலையில் வண்ணங்கள் மறைந்து வெண்திரை எழும் சூனியப்புள்ளியை அடையாளப் படுத்துகிறது. ஊஞ்சல் எனும் கவிதையில் பெண்ணுடல் வெளியெலாம் தனது விசையைக் காணுகிறது. ஊசல் பலகை முன்னும் பின்னும் ஆடுவதற்கு ஏற்ப இவ்வெளியில் பெண் விசை முன்னும் பின்னும் மேலும்கீழுமாக உந்திக் கலக்கிறது.

இரும்புத் தொப்பி கவிதை சிப்பாய்கள் பெண் உடல்மீது வன்முறை நிகழ்த்துவதைப் பேசுகிறது. ஏமாற்றப்பட்ட பெண்மனதின் துடிதுடிப்பு பேய்பிசாசு அடித்திருப்பதாக நம்பப் பட்டு விரட்டிப்பார்க்கின்றனர். அறையில் அடைக்கப் படுகின்ற பெண் தப்பி மூன்றாவது வீட்டுக் கிணற்றில் விழுந்து பிழைக்கிறாள். மனம் பிறழும் பெண் பித்தேறி அலைகிறாள். அப்பெண் கருவுற்றவள் எனத் தெரியும் நிலையில் அவளும் அவள் தாயும் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து கேள்வியை எழுப்புகிறது.

மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்களே பெண்ணை உடலாகப் பார்த்து கொத்திக் கிழித்து சிதறடித்து பெண்ணின் உளவியலைச் சிதைக்கின்றனர். பெண்ணைப் பண்டமாகப் பார்க்கும் மனநிலை அவள்மீது தொடுக்கப்படும் வன்முறைக்கான காரண மாகிறது. இரும்புத் தொப்பிகள் பாதிப்பின்றி வளர்ந்து கொண்டேயிருக்கிறது. தொப்பி வளர்ந்து கொண்டே இருப்பதற்கு நேர்மாறாக பெண் உடல் நசுக்கப்படுவது குறைவறாமல் அதிகரித்த வண்ணம் இருப்பதைக் காட்டுகிறது. இப்படி தொடர்ந்து நசுக்கப்படுவதும் ஒடுக்கப்படுவதுமாக இருக்கும் உடல் சந்தைக் கலாச்சாரத்தின் பெயரால் வெடிக்கும் வன்முறையைக் காட்டுகிறது. அவசிய மானவைகள்கூட பழைய பொருட்கள் கடைக்கு விற்பனைக்குச் செல்கிறது. அப்புறப்படுத்தப்படக் கூடியது குறித்தோ சந்தைக்கு அனுப்ப வேண்டிய வற்றைத் தரப்படுத்துதல் குறித்த பிரக்ஞையோ இன்றி எதுவும் சந்தைப்படுத்தப்படும் என்கின்றன கவிதைகள். இந்த சந்தைக் கலாச்சாரம் மனிதர் களிடத்தில் வன்முறையை நிகழத்துகிறது.

காதல் கடிதம் எனும் கவிதையின் அங்கதம் நடைமுறையைக் காட்சிப்படுத்தி பெண்வாழ்வின் பதற்றத்துடனான அனுபவத்தைப் பகிருகிறது. இதுபோன்ற எத்தனை எத்தனைத் துன்பங்களை வன்முறைகளை பெண்ணாகப் பிறந்ததால் மட்டுமே அனுபவிக்க நேர்கிறது. பெண் உடல்மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு மறுப்பேதும் சொல்ல முடியாமல் வாயடைத்து விதிர்த்து நிற்கிற பெண்களை சமூகம், மதம், அரசு முதலான அனைத்தும் வளர்த்தெடுக்கிறது. அன்பின் பெய ரால் நிகழ்த்தப்படும் வன்முறை, புகழ்வதன் மூலம் செலுத்தப்படும் அடக்குமுறை எனும் முரண்களை வலுவான ஆயுதமாகக் கொண்டிருக்கிறது.

ஆணை அரவணைத்துப் பாதுகாக்கிறாள் பெண். ஆயுள் முழுவதும் ஓரு ஆணிற்காகக் காத்துக்கிடக்கிறாள். ஆண்கள் மோசமானவர்களாக தீமையை சுமந்து கொண்டிருக்கும் பட்சத்திலும் பெண்கள் ஆண்களைக் கைவிட்டுவிடுவதில்லை ; ஆண்கள் புணர்வதன்மூலம் பூமியை வளர்க் கின்றார்கள் பெண்களையல்ல ; காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை. இங்கு பெண்வீடாகிற பெண் சராசரிப்பெண், வீடாகாத பெண் சராசரி பெண்ணிலிருந்து மாறுபட்டிருக்கிறாள். இவ்வாறு இக்கவிதையின் பெண் ஆளுமை எல்லாமாக இருக்கும் பெண் தன்னிடம் இருப்பவற்றை உணராதவளாக பிறரை அண்டிவாழுகிற சார்புத்தன்மையோடு இருப்பதை சுட்டிக்காட்டி அதிலிருந்து மீட்டுக்கொள்ள விழைகிறது. மனித இனம் பெண்களால் ஆனது என்றும் பெண்ணால் ஆன உயிர்த் தொடர்ச்சியை முன்வைக்கிறது.

உடலுலகு என இவர் பயன்படுத்தும் சொல் இவர் முன்வைக்கும் கருத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது. பெண்ணிலிருந்து தீ பிறந்தது ஒவ்வொரு துளி நெருப்பிலும் பெண் தெரிகிறாள். அத்தீ அழிக்கும் தீயல்ல ஆக்கும் தீ ; உயிர்த் தொடர்ச்சியை உருவாக்கும் தீ ; அத்தீயை இறக்கி வைத்துவிடாமல் சுமந்த வண்ணமிருக்கிற பெண் உடல் தகித்துக்கிடக்கிறது என நீராக இருக்கிற பெண் தீயாகவும் விளங்குகிற சூட்சுமத்தைக் கூறுகிறது.

வேம்பாயி எனும் கவிதை பெண்வாசனை வேம்புக்குரியதாக இருப்பதையும் காற்றில் கலந்த மணமாக பூத்துக்குலுங்கும் வேம்பின பூரிப்பையும் கண்முன் நிறுத்துகிறது. கொண்டிருக்கிற வேம்பின் வயிற்றைத் தொட்டுப்பார்த்தால் உயிர் அசையும் முனகல் கேட்டது என சூழல் சார்ந்த இயற்கையைப் பெண்ணாக பாவிப்பதோடு வேம்புமுதலான மருத்துவப் பொருளோடு தொடர்புபடுத்தி இயற்கையான பெண்ணிடத்தில் உள்ள ஆக்கும் தன்மையை உணர்த்துகிறது.

மழை என்கிற படிமம் மூலம் இவர் கவிதைகள் நிகழ்த்தும் சஞ்சாரம் அளவற்றது. வெளியில் பெய்கிற மழையையும் உள்ளே பெருக்கெடுக்கிற மழையையும் காட்சிப்படுத்தி கடலாய்ப் பெருகி பெண்ணாய்மாறும் ஜாலத்தை நிகழ்த்துகிறது. ஒளவை பலவித உடல்களினூடாகக் காலங்களையும் வெளிகளையும் கடந்து சென்று கொண்டிருப்பதாக திசையெல்லாம் ஒளவை மொழி வெளிச்சம் பொருந்தியிருப்பதாக வெளிப் படுகிறாள்.

குண்டுவிழுந்த இடத்தின் தாய்க்குருவி படும்பாட்டை, வீறலை, பதற்றத்தை இரைதேடிப் பறந்த இடமெலாம் நகர இடிபாடுகளுக்கிடையில் ரத்தக் கசிவு ஏற்படுவதை என இயந்திரப் பறவை ஆயுதம் முதலானவை குருவியின் பறத்தல்போல இலகுவாக பறந்து வீட்டை நாசம் செய்கிறது. வன்முறை தீவிரவாதம் எனும் பதங்களும் ஆயுதங் களும் பெண்கள்மீது அவளது உயிர்த் தொடர்ச்சி மீது பாதிப்பைப் ஏற்படுத்துகின்றன.

தமிழ் இலக்கிய உலகு பெண்ணை தெய்வ மாகப் பார்ப்பதும் பேயாகப் பார்ப்பதுமாகத் தானே இருக்கிறது. தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்ள தெய்வத்தை மணம்புரிய துணிவது அல்லது பேயாகித் திரிவது என்கிற பரப்பளவு பெண்ணுக்கானதாக இருக்கிறது. பெண்ணுக்கான ஆளுமை என தாய்மை விருந்தோம்பல் தவிர வேறெதும் குறிப்பிடப் படவில்லை. இந்நிலையில் மாலதி மைத்ரியின் நீலி எனும் கவிதைத் தொகுப்பின் பெயர் பெண் எனும் மாய உருவை காரைக் காலம்மையின் பேயுருவைக் குறிப்பு மொழியில் முன்வைக்கிறது.

தெருவில் மாடுகள் சானிடரி நாப்கினைமென்று, சாக்கடை ஓரங்களில் காலி கோக் டப்பிகள் கிடக்க, வாழ்க்கை தொலைக் காட்சிப் பெட்டிகளோடு சேர்ந்து அலறிக் கொண்டிருக்க, குண்டு மழை, இரும்பு மிருகமென உலவும் டாங்கிகள், சிதறும் உடல்கள் ஊனமுற்ற குழந்தைகளின் ஓலம், மண் தரைபடும் ஒலி இவற்றோடு மண்டைக்குள் ஊர்ந்து கொண்டிருக் கும் இரும்பு மிருகங்களை வெளியேற்ற முடிய வில்லை என்ற ஆதங்கங்களை உயிரின் சிதைவைக் குறித்து கலவரப்படுகிறார். ஆக்கும் சக்தியான தாய்மை அதன் உயிர்க்கூறுகள் பறிக்கப்படும் பொழுது சகிக்கமுடியாத மனநிலையை அடைகிறது.

வணிகத்தை முதன்மையாகக் கொண்டு உலகம் ஒரு குடையின்கீழ் அடக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அங்கதமாக்குகிறது மேட் இன் யுஎஸ்ஏ எனும் கவிதை. வெள்ளை மாளிகைகள் வெண்கொற்றக் குடையாக மாற யத்தனிக்கும் அதீத ப்ரியத்தின் வெளிப்பாட்டில் கடவுளுக்கு அதிக பட்சமாக பிணங்களைப் படையலிடுகிறது. தானியங்களில் மட்டுமல்ல சடலத்திலும் மேட் இன் யுஸ்ஏ என்பதுதான் பொறிக்கப்பட்டிருக்கிறது எனும் கவிதை இன்றைய உலக அரசியலை மறைமுக மேலாதிக்கத்தை வெளிப்படையான ஆயுத கலாச்சாரத்தை முன்வைக்கிறது.

வயல்களை டாங்கிகள் உழுவதும் ஏவுகணை கள் விதைக்கப்படுவதையும் கந்தகம் குமைந்து போன வெளிகளையும் பச்சைபிடிக்க சாத்தியமற்ற இயலாமையையும் பால்வார்த்து முளைப்பாரிக்க ஆயத்தமாகும் உலக அரசியல் நடவடிக்கைகளில் முன்னேற முடியாத நிலையையும் பேசுகிறது.

உலகில் உயிர் வளர்க்கப்படுகிறதோ இல்லையோ, பயிர் வளர்க்கப் படுகிறதோ இல்லையோ, ஆயுதங்களின் உற்பத்தியும் பயன் பாடும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. வல்லரசுக் கனவுகளோடு குட்டித்தீவுகளும் கூட முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. மக்களின் உயிர் முக்கியத்துவம் அற்றதாக மதிப்பற்றதாக ஆகிக் கொண்டிருக்கிறது. பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்றது போல டிராக்டர்களுக்குப் பதில் டாங்கிகளையும் விதை நெல்களுக்குப் பதில் ஏவுகணைகளையும் கைக் கொண்டு அறிவியல் ஆராய்ச்சிகளில் முன்னேறி விட்டதாக பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.

பெண் உடல் நுகர்பொருளாகப் பார்க்கப் படுவதையும். பெண் உடலை வைத்து உருவாக்கப் பட்டிருக்கிற அப்பட்டமாக நடைமுறையில் இருக்கும் இக்கலாச்சாரத்தை எதிர்க்கத் துணி யாமல் அதைப் பெண்களும் ஏற்றுக் கொள்ளும் அவலத்தைப் பேசுகின்றன.

ஃபேர் அண்ட் லவ்லி முகம், க்ளினிக் ப்ளஸ் கூந்தல், லக்ஸ் பட்டு போன்ற சருமம், ஐடெக்ஸ் கண்கள், இமாமி இதழ்கள், லக்மே நகங்கள். என்பவற்றை அறியாது வீதியோரம் அமர்ந்து பேன் உதிர்க்கும் பைத்தியக்காரியை பிரியாணி பொட்ட லத்துடன் பின்னிரவில் சந்திப்பவர் களைப் பற்றிய நுகர்பொருள் எனும் கவிதை விதி விலக்கின்றி செலுத்தப்படும் நுகர்வின் பொருட்டான வன் முறையைக் கூறுகிறது. இரும்புத் தொப்பி கவிதை யில் வன்முறையால் மனைநலம் பாதிக்கப்படும் பெண்ணைக் காட்டுகிறார். நுகர் பொருள் கவிதை யில் மனநலம் பாதிக்கப் பட்டாலும் துரத்தப் படுகிறாள் பெண். இவ்வாறு பெண்கள் ஆணாதிக்கத்தாலும் சொத்தாகப் பார்க்கப்படுவ தாலும் வன்முறைக்கு உள்ளாகிறாள். உலக அரசியலிலோ அரசுகள் தன் திறமையை வலுப் படுத்த முதன்மையை நிலைநாட்ட வணிகத்தை தக்கவைக்க போரை ஆயுதமாக்குகிறது. உயிர்கள் மதிப்பற்றதாக மிதிபடுகிறது.

அரேபியர்களின் குருதிபாய
டாலர்களைப் பயிராக்கும் வெள்ளைமாளிகை
கந்தகம் விதைக்க அரபு வெளியெங்கும்
முளைக்கும் சவங்கள்
வரவு செலவுப் பேரேடுகள்
எப்போதும் உடல்களின் அறுவடையை
கணக்கு வைப்பதில்லை.
.........................................
வர்த்தகமும் போரும்
ஒரு உறையில் இருவாள்கள்
அவை எப்போதும்
உலக அமைதிக்காக நேசத்துடன்
மரணத்தைக் கொடையளிக்கின்றன

வர்த்தகமும் போரும் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் அரசியலை முன்னிலைப் படுத்து பவை மாலதியின் கவிதைகள். பெண் உடலைக் கட்டுப்படுத்தும் சக்திகளிடத்திலிருந்து மீண்டு பறத்தலை சாத்தியப்படுத்த துடிப்பன. கடலின் ஓயாத துடிப்பை பெண்ணாகப் பார்ப்பது. தாய்மையைக் கொண்டாடுவது. பெண்ணிய அரசியலையும் உலக அரசியலையும் ஒருங்கே பேசுபவை இவரது கவிதைகள்.

Pin It