சாதிவெறியும் மதவெறியும் கரம்கோர்த்து அரசியலில் களம்காணும்போது அது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அதற்குப் பிணங்கள் தேவைப்படுகின்றது. ஒரு பிணந்தின்னி கழுகுவைப் போல சாதியவாதியும், மதவாதியும் பிணத்தைத் தேடி அலைகின்றான். அவனுக்கு அவசர அவசரமாக பிணங்கள் தேவைப்படுகின்றது. அரசியலில் பொறுக்கித் தின்பதற்கும், முதலாளிகளின் காலை நக்கிப் பிழைப்பதற்கும், ஆண்ட பரம்பரை ஒப்பாரி வைப்பதற்கும், தலித்துகளின் ரத்தம் குடிப்பதற்கும், சிறுபான்மையினரின் கருவறுப்பதற்கும் அவனுக்குப் பிணங்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. பிணங்களுக்குப் பொதுவாக எந்த மரியாதையும் இல்லை என்றாலும் அது விழும் இடத்தைப் பொருத்து அதற்கான மதிப்பு கூடுகின்றது. தலித் பிணங்கள் இந்துப் பிணங்களாய் மாறுவதற்கும், இந்துப் பிணங்கள் தலித் பிணங்களாய் மாறுவதற்கும், ஒரு இஸ்லாமியனின் பிணம் தீவிரவாதியின் பிணமாய் மாறுவதற்கும், ஒரு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியின் பிணம் தேசபக்தனின் பிணமாய் மாறுவதற்குமான வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளும்போது பிணங்களின் மதிப்பு நமக்குத் தெரிய வரும்.

hraja and ramadossசாதி வெறியர்களின் குரலும் மதவெறியர்களின் குரலும் காலந்தோறும் ஒத்திசைவாகவே ஒலித்து வந்திருக்கின்றது. பன்றியின் குணம் மலம் தின்பது என்பது எப்படி எப்போதும் மாறுவதில்லையோ அதே போல பிணங்களை வைத்து அரசியல் செய்யும் பிணந்தின்னிகளின் குணமும் காலந்தோறும் மாறுவதில்லை. அவர்களின் இருத்தல் என்பதே பிணங்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் போது அவர்களால் எப்படி தங்களை மாற்றிக் கொள்ள முடியும்? அதனால் தான் அவர்கள் ஒரே போல சிந்திக்கின்றார்கள், ஒரே போல பேசுகின்றார்கள், ஒரே போல செயல்படுகின்றார்கள். உங்களுக்கு அதில் சந்தேகம் இருந்தால் ஒரு தீவிர சாதிவெறியனின் பேச்சையும், தீவிர மதவெறியனின் பேச்சையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இதைத் தெரிந்து கொள்ளலாம். அதற்காக நீங்கள் மெனக்கெட எல்லாம் தேவையில்லை, தமிழ்நாட்டில் பிணத்தை வைத்து அரசியல் செய்வதில் கைதேர்ந்த இருவர் யார் என்று கேட்டால் தன்மானமும், சுயமரியாதையும் உள்ள அனைவரும் சொல்லி விடுவார்கள் அது ராமதாசும், எச்.ராஜாவும் என்று. இவர்கள் இருவரின் பேச்சை ஒப்பிட்டுப் பார்த்தாலே இதைத் தெரிந்து கொள்ளலாம்

சமீபத்தில் விருத்தாசலத்தில் ஆகாஷ் என்ற தலித் இளைஞரால் வன்னிய சாதிப் பெண்ணான திலகவதி கொல்லப்பட்டது அனைவருக்கும் தெரியும். கொலை செய்த ஆகாஷ் காவல்துறையிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை ‘நல்ல உள்ளம்’ படைத்த தமிழக காவல்துறை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டது. அதில் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற போதிருந்தே திலகவதியும் தானும் காதலித்ததாகவும், இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி விட்டதாகவும் அவரே தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கின்றார். இந்தக் கொலையில் எந்த இடத்திலும் சாதியும் இல்லை, சதியும் இல்லை. விட்டேத்தித்தனமாக, சீரழிந்த நிலையில் தன் சிந்தனையை வைத்திருந்த ஆகாஷ், தான் காதலித்த பெண்ணை கொல்வதற்குரிய உரிமை தனக்குள்ளது என்ற ஆணாதிக்க பார்ப்பன இந்துமத சிந்தனையால் தான் திலகவதியைக் கொன்றிருக்கின்றான். திலகவதியின் இடத்தில் வேறு எந்தப் பெண் இருந்திருந்தாலும் அவன் இதையேதான் செய்திருப்பான். நிச்சயம் இந்தக் கொலையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதுதான். சம்மந்தப்பட்ட கொலையாளி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அப்படி சும்மா விட்டுவிட்டால் பிணங்களை வைத்து அரசியல் செய்யும் பிணந்தின்னிக் கழுகுகள் எப்படி பிழைக்க முடியும்?

பொன்பரப்பி சம்பவத்தில் தமிழக மக்களிடமும் குறிப்பாக வன்னிய சாதி மக்களிடமும் முற்று முழுதாக அம்பலப்பட்டுப் போன ராமதாசு தனக்கு அரசியல் செய்ய ஒரு பிணம் கிடைத்திருக்கின்றது என்றால் சும்மா விடுவாரா? பிண அரசியல் நடத்தியே பழகிய ராமதாசுக்குத் தானாகவே அதுவும் தன்னுடைய ‘நாடகக் காதல்’ என்ற கண்டுபிடிப்பை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கின்றது என்றால் சும்மாவா கேட்க வேண்டும்? திலகவதியின் பிணத்தின் சூடு அடங்குவதற்குள் ராமதாசின் சாதிவெறி மூளையில் இருந்து ஒரு பெரும் சாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டு, பிணங்களை விழ வைப்பதற்கான சதித் திட்டம் உற்பத்தியாகி இருக்கின்றதுது. பிணங்கள் கிடைத்தது என்றால் சாதிவெறிக் கழுகுகளுடன் மதவெறிக் கழுகுகளும் இணைந்து கொள்வது தானே வரலாறு

“கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் காதலிக்க மறுத்ததற்காக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். காதலிக்க மறுத்ததற்காக அப்பாவிப் பெண்ணை கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது; கடுமையாக தண்டிக்கத்தக்கது.

திலகவதி எந்தப் பாவமும் செய்யவில்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் படித்தால் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் செய்வதையும், அதையே முதலீடாகக் கொண்டு பணம் பறிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் கும்பலைச் சேர்ந்த ஆகாஷ் தம்மைக் காதலித்தே தீர வேண்டும் என்று திலகவதியை கட்டாயப்படுத்தி இருக்கிறான். அதற்கு திலகவதி மறுத்து விட்டதால், அவரை வெறித்தனமாக கொலை செய்திருக்கிறான். இத்தகைய குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கும்பல் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பது தான் இத்தகைய குற்றங்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றன.

பெண்களைப் படிக்க வைக்க முடியாமலும், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாமலும் தடுக்கும் வகையில் நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கடுமையான சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்”

என்று சாதிவெறி ராமதாசும்,

“விருத்தாசலம் அருகில் கருவேப்பிலங்குறிச்சியில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காரணத்தால் திலகவதி என்கிற கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்களுக்கு திருமாவளவன், சுப.வீரபாண்டியன் போன்றவர்கள், இளைஞர்கள் மத்தியில் சாதி மறுப்புத் திருமணம் என்கிற பெயரில் பாலியல் வக்கிரத்தை வளர்ப்பதே காரணம்.

இதில் நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். இம்மாதிரி சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் ஜாதியைப் பார்க்க வேண்டாம். சென்னையில் ஸ்வாதி, விழுப்புரத்தில் நவீனா, கரூர் பொறியியல் கல்லூரியில் கொல்லப்பட்ட சோனாலி தற்போது திலகவதி.

இவர்கள் அனைவரும் வெவ்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் இக்கொலைகள் நடப்பதற்குக் காரணம் விசிக, திக போன்ற இயக்கங்களின் தலைவர்களின் பாலியல் வக்கிரத்தை இளைஞர்கள் மத்தியில் தூண்டும் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான பேச்சும் ஜாதி மோதல்களை உருவாக்கி மதமாற்றத்தை ஊக்குவிக்கும் சதித் திட்டமுமே.

கரூரில் பொறியியல் கல்லூரியில் கொல்லப்பட்ட சோனாலி தேவேந்திர குல சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாயாரின் நிலை பரிதாபகரமானது. சோனாலியின் படுகொலைக்கு 45 நாட்களுக்கு முன்புதான் அவருடைய தந்தை காலமானார். கூலிவேலை பார்த்து வந்த அந்தத் தாயின் ஒரே நம்பிக்கை தன் ஒரே மகள்தான். ஆனால் தங்களை தலித்திய தலைவர்களாக காட்டிக் கொள்ளும் அல்லது பட்டியல் சமூக மக்களின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளும் யாராவது சோனாலியின் கொலையைக் கண்டித்தார்களா? அவரது தாயாருக்கு ஆறுதல் சொன்னார்களா? மாட்டார்கள்.

சற்றே யோசித்துப் பார்ப்போம். பொன்பரப்பியில் நடந்தது அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட மோதல், குற்றம் யார் பக்கம் இருந்தாலும் அரசு, காவல்துறை பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் திருமாவளவன் ஒருபக்கம் திமுகவின் TKS இளங்கோவன் மறுபக்கம் இருக்க தன் மதமாற்ற தந்திரத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார் பாதிரி எஸ்ரா சற்குணம்.

பாதிக்கப்பட்டவர் எந்த சமுதாயமாக இருந்தாலும் குற்றத்தை குற்றமாகப் பார்க்க வேண்டும். ஆனால் ஊடகங்கள் கூட ஜாதி உணர்வைத் தூண்டும் வகையில் செய்திகளைப் பிரசுரிப்பது வெட்கக்கேடானது. சமீபத்தில் லாட்டரி மார்ட்டினின் கணக்காளர் காலமானார். அவரது மனைவி அதுகுறித்து விசாரணைக்குக் கோரியுள்ளார். ஆனால் அச்செய்தியின் சுருக்கத்தை முதல் பக்கத்தில் இந்து ஆங்கிலப் பத்திரிக்கை wife of Dalit accountant of Martin demands inquiry என்று பிரசுரித்து தன் ஊடக தர்மத்தை நிலைநாட்டியது.

திலகவதி கொலையில் குற்றவாளி எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். திலகவதிக்கு நியாயம் தேவை”

என்று மதவெறியன் எச்.ராஜாவும் விஷத்தைக் கக்கி இருக்கின்றார்கள்.

சாதிவெறியும் மதவெறியும் திருமாவளவன் மீதான காழ்ப்புணர்வும்தான் ராமதாசையும் எச்.ராஜவையும் இப்படி எல்லாம் வெறிபிடித்த மிருகங்களைப் போல பேச வைத்திருக்கின்றன. திலக‌வதியின் வீட்டில் இருந்து காவல்துறை கைப்பற்றிய தடயங்களில் அவர் ஆகாஷைக் காதலித்தற்கான எல்லா ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. அப்படி இருந்தும் திலக‌வதியின் பிணத்தை வைத்து எப்படியாவது தன்னுடைய சாதிவெறி அரசியலையும் மதவெறி அரசியலையும் தமிழகத்தில் வேறூன்ற வைத்திட வேண்டும் என்று அலையும் இந்தக் கும்பல் திட்டமிட்டே இந்தப் பிரச்சினையை திசைமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் சட்டம் ஒழுங்கைப் பாதுக்காக்க வேண்டிய காவல்துறை இந்தப் பொய்யர்களை இதுவரை கைது செய்யாமல் ஆளுங்கட்சியின் கைக்கூலியாக செயல்பட்டு வருகின்றது. ஆகாஷிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி அந்த வீடியோவை அவசர அவரசமாக வெளியிட்ட காவல்துறை, திலகவதி ஆகாஷை காதலித்ததற்கான ஆதாரத்தை ஒருபோதும் வெளியிடப் போவதில்லை. ஒருவேளை வெளியிட்டால் சாதிக்கலவரத்தை தூண்ட முயற்சித்ததற்காக ராமதாசையும், எச்.ராஜாவையும் கைது செய்ய நேரிடலாம் என்பதால்தான் அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தாலும் அதைக் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது. தமிழக காவல்துறை ஏதோ பெரிதாக நடக்க வேண்டும் என்று திட்டமிட்டு எதிர்ப்பார்த்துக் காத்திருப்பது போலத்தான் தெரிகின்றது.

தமிழ்நாட்டு மக்களால் அரசியல் அநாதைகளாய் மாற்றப்பட்ட இரண்டு பாசிச சக்திகளும் தங்களை அரசியல் களத்தில் நிலைப்படுத்திக் கொள்ள கேடுகெட்ட கீழ்த்தரமான சாதிய மதவாத அரசியலை கையில் எடுத்திருக்கின்றன. ஆளுங்கட்சியின் ஆதரவோடு காவல்துறையின் ஆசியோடும் இனி தமிழ்நாட்டில் சாதிக் கலவரங்களும் மதக்கலவரங்களும் நடப்பதற்கான சமிக்ஞைதான் இதுவரை ராமதாசும் எச். ராஜாவும் கைது செய்யப்படாமல் இருப்பதைக் காட்டுகின்றது. அவர்களது இலக்கு திருமாவளவனோ, சுப.வீரபாண்டியன் அவர்களோ அல்ல, அவர்களது இலக்கு ஓட்டுமொத்த முற்போக்கு இயக்கங்கள். அவர்கள் முன்னெடுக்கும் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு, முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு அரசியலை மடைமாற்றுவது என்பதை நாம் புரிந்துகொண்டு இந்தக் கழிசடை கும்பலுக்கு எதிரான தீவிரமான காத்திரமான கருத்தியல் யுத்தத்தை அனைத்து தளங்களிலும் நடத்த வேண்டும்.

- செ.கார்கி

Pin It