மான் கொம்பில் உன் விரல்கள்
தேன் அடையில் உன் இதழ்கள்
யானை கால்களில் உன் கொலுசு
தேகம் உறுமுகிறது உன் நகத்தில்
யாவும் தனதென சிங்கப்பெண்ணே உன் கூந்தல்
அந்தி சாய்ந்தால் அடியாத்தி உன் கண்களில் ஆந்தை
வனம் கலைக்கிறேன் வந்து பார் முயலாக
மரம் சிலிர்க்கிறேன் நீ புருவம் கொண்ட பாம்பாக
பட்டாம் பூச்சி உன்னை பறந்து காட்டும்
வனப்பூச்சி உன்னை வரைந்து காட்டும்
தொடுவானத்திலிருந்து வந்த கரடி நீ
தொடும் தூரத்திலிருந்த வண்டுக் குவியல் நீ
கனவுக்கன்னி நீ கொழுத்த காட்டுப்பன்னி நீ
நரி சொன்ன கதைக்கு வண்ணவரிக் குதிரை நீ
புறா சொன்ன கவிதைக்கு பஞ்சவர்ணக் குதிரை நீ
ஆகாயம் திறந்து மூடும் ஆகா வகை கழுகு வரம் நீ
அந்திசாயும் நேரத்திலே அழகு கூடும் மெழுகு மரம் நீ
சிறுத்தை சிரிப்பு உனக்கு கூட பருத்த மாட்டு வனப்பு
கறுத்த வனக் குயிலே நீ மருத நாட்டு மயிலே
காட்டு மாடின் கால்களிலே உன் கன்னச் சதை கிளுகிளுக்கும்
கருஞ்சிறுத்தை கடை பல்லில் உன் திருஷ்டி பொட்டு பளபளக்கும்
நதியோரம் நின்று உன்னை அசைபோடும் நான் கன்று
வரிவரியாய் புல் நுனியில் நீ அசைந்தாடு எனைத் தின்று
வர்ணனை தீர்ந்தது என் கள்ளிப்பழமே
வந்து முகம் காட்டி சேர்ந்திடு கள்ளிக் காட்டு நிலமே......!

- கவிஜி

Pin It