கத்திக்குத் தெரியவில்லை
புத்திக்குமா....
காதலைத்தானே நீட்டினார்கள்
கழுத்தறுத்ததில் என்ன நீதி...
கண்ட கனவையெல்லாம்
ரத்தமாக்கிட
முடிகிற உங்களால் நீங்கள்
சுத்தமானவர்களென்று
நிரூபிக்க முடியுமா...
உட்கார்ந்து பேச அத்தனை
ஞானம் இருக்கும்
என் தேசத்தில்
இன்னும் ஆத்திரக்கார
அடிமுட்டாள்கள் அவமானம்...
சப்பாத்தி சுட்டு பார்சல்
அனுப்பிய அன்பும்
அரவணைப்பும் எங்கே...
அத்தனையும் விளம்பரமென்று
சொல்லி விட்டது உங்கள்
பட்டப்பகல்
பகிரங்க பந்தயம்...
ஆண்மை தவறேல்
இதுவா....மீசை பூனைக்கும்
உண்டே...
ஆதிக்க வெறியின்
சாதனைக்கு பலிகடாக்கள்
பிஞ்சுகளா.... அதே நேரம்
பிணங்களைப் போல
வேடிக்கை பார்க்க
மனிதர்கள் எதற்கு... கேமராக்கள்
போதுமே...
நரிகளின் வஞ்சம்
தன்னை நிரூபிக்க புலி வேஷம்
போடுகிறது...
பலியான ஆன்மாக்கள்
தங்களை நிரூபிக்க
காதலையே நடுகிறது...
இடையில் கூலிப்படை
எவனோ உதைத்த பந்தாகவே
வழி தெரியாமல் அல்லாடுகிறது...
காதலறுத்த ரத்தக் கரைகளில்
மூத்த இனம் இந்த தமிழினமே
பாவம் சுமக்கிறது.....
உங்கள் குழந்தைகள் உங்களிடமிருந்து
வரவில்லை.... முட்டாள்களே
உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்...
இன்னும் எத்தனை பேரை
அறுப்பீர்கள்..
உங்கள் கைகள் ஓய்ந்த பின்னும்
காதலிப்போமே...
காழ்ப்புணர்ச்சியில்
கழுத்தறுத்துக் கொண்டு
சாவீர்களா...
அழியாத வடுக்களையும் காயாத
பச்சைக் குருதியையும் தெளித்து
விட்டுச் செல்வதில்தான் உங்கள்
பூமி சுவாசிக்க வேண்டுமா....

அட போங்கடா...

நொடியில் பூமி பிறழ்ந்தால்
சாதி சாமி ரெண்டும்
பொட்டல சோற்றுக்கு கை ஏந்தும்...

- கவிஜி