gowshaliya sankar 350வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் 12.12.2017 அன்று, உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு அய்ந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அளித்து, தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் 8 பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்ன லட்சுமி உட்பட மூவர் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழகத்தைவிட வடஇந்தியாவில் சாதி ஆணவப் படுகொலைகள் அதிக அளவில் நடக்கின்றன. இந்தியாவிலேயே ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இப்போதுதான் முதன்முறையாக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எத்தகைய கொடிய குற்றத்துக்கும் மரணத் தண்டனை விதிக்கக்கூடாது என்பதே நம் நிலைப்பாடாகும். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இவற்றுள் தமிழக அளவில் முதன்முதலாகப் பேசப்பட்டது முருகன்-கண்ணகி இருவரின் ஆணவப் படுகொலையாகும். இருவரும் விருத்தாசலத்தைச் சேர்ந்தவர்கள். தலித் வகுப்பைச் சேர்ந்த முருகன், வன்னியர் சாதியைச் சேர்ந்த கண்ணகியைத் திருமணம் செய்துகொண் டார். சாதி ஆதிக்க வெறியர்கள் இருவரையும் வெட்டிக் கொன்றனர். இது 2003ஆம் ஆண்டில் நடந்தது. இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.

2012இல் தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞரான இளவரசன், அதே ஊரின் வன்னியர் சாதியைச் சேர்ந்த திவ்யாவைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் மூண்ட சாதிப் பகையால், தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. உடை மைகள் சூறையாடப்பட்டன. 2013 சூலை 4 அன்று தருமபுரி தொடர்வண்டி நிலையம் அருகில் இளவரசன் இறந்து கிடந்தார். இளவரசனுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று திவ்யாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு. இளவரசன் சாவு தற்கொலையே என்று காவல்துறையினர் இந்த வழக்கை முடித்து வைத்தனர். ஆயினும் இளவரசன் கொலை செய்யப் பட்டார் என்று பலர் கூறினர்.

சேலத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞரும் ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். 2015 சூன் 24 அன்று ஈரோடு அருகில் இரயில் தண்டவாளத்தின் பக்கத்தில் தலைத் துண்டிக்கப்பட்ட நிலை யில் கோகுல்ராஜ் உடல் கிடந்தது. கோகுல்ராஜ் கொலை தொடர்பாக, கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் யுவராஜ் என்பவர் நீண்ட தேடுதலுக்குப்பின் கைது செய்யப்பட்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்துவந்த தலித் வகுப்பைச் சேர்ந்த, காவல் துறைத் துணைக் கண் காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துகொண் டார். ஆதிக்கச் சாதிவெறியர்கள் அவருக்குக் கொடுத்த நெருக்குதல் காரணமாகவே விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்று கருதப்படுகிறது.

gowshaliya 600இந்தப் பின்னணியில் சங்கர் கொலை செய்யப்பட்ட 19 மாதங்களுக்குள் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய தாகும். திருப்பூர் மாவட்டம், உடுலைப்பேட்டை அருகில் உள்ள குமரலிங்கம் ஊரைச் சேர்ந்த பொறியியல் மாணவரான சங்கரும் பழனியைச் சேர்ந்த கவுசல்யாவும் எதிர்ப்பு களை மீறி 2015 சூலை 11 அன்று சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். சங்கர் தாழ்த்தப்பட்ட பள்ளர் சாதியினர். கவுசல்யா தேவர் சாதியில் ஒரு பிரிவான அகமுடையவர் சாதியைச் சேர்ந்தவர். திருமணத்துக்குப்பின் கவுசல்யா, சங்கர் வீட்டில் வாழ்ந்து வந்தார். கவுசல்யாவின் பெற்றோர் வழியாக சங்கர் - கவுசல்யா இணையருக்குப் பலவகையான அச்சுறுத்தல்கள் விடப்பட்டன.

சங்கருக்குச் சென்னையில் வேலை கிடைத்து, அங்குச் செல்லவிருந்த நிலையில், 2016 மார்ச்சு 13 அன்று உடுமலைப் பேட்டையில் பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த சங்கரைச் சாதிவெறிக் கும்பல் தாக்கியது. தடுத்திட முயன்ற கவுசல்யாவும் அரிவாளால் தாக்கப்பட்டார். சங்கர் அங்கேயே இறந்தார். கவுசல்யாவின் தலையில் 18 தையல்கள் போடப்பட்டன. இவர்கள் தாக்கப்பட்ட நிகழ்ச்சி அருகில் இருந்த கடையின் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பட்டப் பகலில் இக்கொலைவெறித் தாக்குதலை நடத்தும் அளவுக்குச் சாதிவெறி அவர்களை ஆட்டிப் படைத்தது. படக்கருவியில் பதிவாகியிருந்த இக்கொலையின் கொடிய காட்சிகள் கைப் பேசிகள் வாயிலாகத் தமிழகம் முழுவதும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

2015ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சங்கர் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வாதாட தமிழக அரசு நான்கு மூத்த வழக்குரைஞர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத் தது. காவல் துறையும் நெகிழ்வுப் போக்கிற்கு இடந்தராத வகையில் செயல்பட்டது. அதனால் குற்றவாளிகள் தங்களைப் பிணையில் விடுவிக்குமாறு திருப்பூர் நீதிமன்றத்திலும். உயர்நீதிமன்றத்திலும் 58 தடவைகள் விண்ணப்பித்த போதிலும், வெளிவர முடியவில்லை.

கண்ணெதிரிலேயே தன் கணவன் கொல்லப்பட்டதால் கவுசல்யா நீதிமன்றத்தில் தன் பெற்றோருக்கு எதிராக உறுதியுடன் வாதாடினார். சமூக ஆர்வலர்களும் அமைப்புகளும் கவுசல்யா அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவும், துணிவுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளவும் உறுதுணை யாக இருந்தனர். குறிப்பாக மதுரையில் உள்ள ‘எவிடன்ஸ்’ (Evidence) என்ற அமைப்பு, கவுசல்யாவுக்கு அரசு மாதந் தோறும் ரூ.11,500 வழங்கிட ஏற்பாடு செய்தது. சங்கர் கொலைக்கு எதிராகச் சமூகத்தில் ஏற்பட்ட எழுச்சியால், அரசு சங்கர் தம்பியின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. ஒரு அறை மட்டும் கொண்டதான சங்கரின் வீட்டைப் புதுப்பித்து விரிவுபடுத்திக் கொடுத்துள்ளது.

முற்போக்கு இயக்கங்களும், தோழர்களும் அளித்த ஊக்கத்தால் கவுசல்யா, பெரியாரின் அம்பேத்கரின் கருத்துகளை உள்வாங்கி, தீண்டாமைக்கும் சாதி அமைப்புக்கும் எதிரான போராளியாகச் செயல்பட்டு வருகிறார். கவுசல்யா வின் துணிவும் முயற்சியும் போற்றத்தக்கனவாகும்.

தீண்டாமைக்கும் சாதி ஆதிக்கத்திற்கும் எதிரான போராட்டங்களை வலிமையாக முன்னெடுப்பதன் மூலமே சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க முடியும்.

Pin It