முந்தைய சமூக முறையைக் காட்டிலும்
சந்தையின் உற்பத்தி பலப்பல மடங்கே
உலகில் இனிமேல் பஞ்சம் மனித
குலத்தை அண்டா தென்ற நினைப்பு
சடுதியில் மறைந்தது மட்டும் அல்ல
கொடுமைகள் பலவும் புதிதாய் வந்தன
ஏங்கி நின்றோம் அரசது முனைந்து
ஓங்கும் கொடுமை களையும் என்றே
சந்தை அரசு பொதுநலன் ஏற்கா
தென்றே அறிய உள்ளம் வாடுதே

(முந்தைய (அடிமை மற்றும் நிலப் பிரபுத்துவ) சமூக அமைப்புகளைக் காட்டிலும் (சந்தையை மையமாக வைத்து இயங்கும்) முதலாளித்துவ அமைப்பில் பல மடங்கு பொருட்கள் உற்பத்தி ஆவதால், இனி மனித குலத்தைப் பஞ்சம் அண்டாது என்ற எதிர்பார்ப்பு (இச்சமூகம் உருவான) சிறிது காலத்திலேயே மறைந்து விட்டது. அது மட்டுமல்ல; (உற்பத்தி அதிகமாவதால் தான் பஞ்சமே ஏற்படுகிறது என்ற) முந்தைய சமூகத்தில் இல்லாத (விநோதமான) கொடுமைகள் பல புதிதாகவும் தோன்றி உள்ளன. இக்கொடுமைகளை (அனைவருக்கும் பொதுவானது என்று சொல்லிக் கொள்ளும்) அரசு தன் நடவடிக்கைகள் மூலம் களையும் என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்தோம். (ஆனால்) முதலாளித்துவ அரசு (முதலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே இயங்கி) பொது மக்களின் நலன்களுக்காக நடவடிக்கை எடுக்காது என்பதை அறிய உள்ளம் வாடுகின்றதே!)

- இராமியா

Pin It